தவறே செய்யாமல் 18 ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறேன்... வேலை இழந்த மாற்றுத்திறனாளியின் புகார்!

சம்பந்தப்பட்ட புகார் குறித்து நானும் கேட்டறிந்தேன். அது தொடர்பான ஆவணங்களை காவல்துறை தரப்பில் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். எந்தவித ஆவணமும் தற்போது எங்களிடம் இல்லை
‘‘நான் செய்யாத தப்புக்காக, 17 வருஷமா அரசாங்க வேலையை இழந்து தவிக்கிறேன்...” என மாற்றுத்திறனாளி ஒருவரின் புகார்க் கடிதம் நமக்கு வர, அவரைத் தொடர்புகொண்டு விசாரித்தோம்.
சேலம் மாவட்டம், கீரைக்காடு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இடது கை செயலிழந்த மாற்றுத்திறனாளியான இவர், வாழவந்தி கிராமத்தின் ஊராட்சியில் எழுத்தராகப் பணியாற்றிவந்திருக்கிறார். 2005-ம் ஆண்டு நடைபெற்ற தணிக்கையின்போது, ஊராட்சி நிதியில் கையாடல் நடைபெற்றதாக அப்போதைய ஊராட்சித் தலைவர் வெள்ளையன் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், வரதராஜன் மீதும் புகார் பதிவானதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, இப்போதுவரை வேலையைத் திரும்பப் பெற முடியாமலிருக்கிறார்.
அது குறித்து வரதராஜன் நம்மிடம் பேசும்போது, “என்மீது எந்தத் தவறும் இல்லை. இதை நிரூபிக்கவும், இழந்த வேலையைத் திரும்பப் பெறவும் கடந்த 2005 முதல் தொடர்ந்து 18 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். பி.டி.ஓ., விஜிலென்ஸ், கலெக்டர், முதலமைச்சர் தனிப்பிரிவு, நீதிமன்றம் என அனைவரிடமும் மனு கொடுத்துப் பார்த்துவிட்டேன். பணியிடை நீக்கம் செய்யப்பட்டபோது, ‘போலீஸ் விசாரணை முடிந்தால்தான் வேலை திரும்பக் கிடைக்கும்’ என்றார்கள். ஆனால், என்மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பான ஆவணங்கள் எதுவுமே மாவட்டக் குற்றப்பிரிவிலோ, நீதிமன்றத்திலோ சமர்ப்பிக்கப்படவேயில்லை. இதனால் யாரும் விசாரணை செய்யவுமில்லை. ஒருவேளை, நான் தவறு செய்து தண்டிக்கப்பட்டிருந்தால்கூட இந்நேரம் விடுதலையாகியிருப்பேன். இப்படி வேலை இழந்து, வருமானமின்றி தவித்திருக்க மாட்டேன்” என்றார் வேதனையுடன்.

ஏற்காடு பி.டி.ஓ குணசேகரனிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட புகார் குறித்து நானும் கேட்டறிந்தேன். அது தொடர்பான ஆவணங்களை காவல்துறை தரப்பில் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். எந்தவித ஆவணமும் தற்போது எங்களிடம் இல்லை. நாங்களே போலீஸாரிடம் இந்த வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்று கேட்டு, தபால் அனுப்பியிருக்கிறோம்” என்றார்.
இதையடுத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி இளமுருகனிடம் பேசியபோது, “இந்த வழக்கில் யார் வழக்கு பதிவுசெய்தார்கள் என்பது உள்ளிட்ட எந்த ஆவணமும் எங்களிடம் இல்லை” என்றார் சுருக்கமாக.
மாவட்ட எஸ்.பி சிவக்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, “இந்தச் சம்பவம் குறித்த தகவல் இப்போதுதான் என் கவனத்துக்கு வருகிறது. எஃப்.ஐ.ஆர் மட்டும் போட்டு விசாரணை ஏதும் செய்யாமல் இருந்தது தவறு. இது தொடர்பாக அப்போது பணியிலிருந்த அதிகாரிகளை அழைத்து விசாரிக்கிறேன்” என்றார்.
குற்றவாளியோ... நிரபராதியோ... ஒருவரின் வாழ்க்கையோடு அரசு இயந்திரம் இவ்வளவு மெத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது!