வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
``பொண்ண கூட்டிட்டு வாங்க" பெண் பார்க்க வந்தவர்கள் கூறிய இந்த முதல் அழைப்பில் இருந்து ஆரம்பித்தது என்னை மணப்பெண்ணாக உணர்ந்த தருணம்.
மாப்பிள்ளை வீட்டார் வீடு முழுதும் அமர்ந்திருக்க அறையில் இருந்து நான் வெளியே வர யார் முகத்தையும் பார்க்கும் தைரியம் இல்லாமல் (மாப்பிள்ளை முகத்தையும்) குனிந்த தலை நிமிராமல் போட்டிருந்த ஜமகாளத்தின் மேல் பார்த்துப் பார்த்து கால் வைத்து அனைவரும் முன்னிலும் நின்று வணக்கம் வைத்து விட்டு அமர்ந்தேன். அமரும் முன்பே அவரை பார்த்து விட்டேன் யாரும் அறியாமல்.
அவர் அம்மா எனக்கு பூ வைத்தார். பின் எங்கள் இருவரையும் அமர வைத்து மஞ்சள் குங்குமம் வைக்க உறுதியானது எங்கள் திருமணம்.
'பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன்' வீடெங்கும் திருமண பாடல்கள் ஒளிப்பதாய் ஒரே கல்யாண ஓசை
இப்போ இருந்தே புடவை எடுத்து வைங்க என்று சொந்தங்கள் சொல்லும்பொழுது..

பரண் மேல் இருக்கும் பாத்திரங்கள் உனக்கு சீரா குடுக்க தான் என்று அம்மா சொல்லும் பொழுது.. கோவிலில் மஞ்சள் கயிரோடு வரும் புதுமண பெண்ணைப் பார்க்கும் பொழுது.. எட்டிப் பார்க்கும் சிலிர்ப்பெல்லாம் சேர்ந்து இப்பொழுது நானும் மணப்பெண்ணாய்..
முதல் வேலையாய் திருமண தேதியை முடிவு செய்து மண்டபத்தை பதிவு செய்தனர்.
மண்டபத்திற்காக தேதியையும் தேதிக்காக மண்டபத்தையும் சரிபார்த்து ஒருசேர முடிவெடுத்து தேதி குறித்து மண்டபம் முடிவானது.
புரட்டாசி முடிந்து ஐப்பசியில் திருமணம்.
இனி வரப் போகும் நாள் எல்லாம் என் திருமண நாளை எண்ணி எண்ணியே...
பத்திரிக்கை வேலை தொடங்கியது.
இரு வீட்டாரும் இணைந்து பத்திரிக்கையில் யார் பெயரெல்லாம் போட வேண்டும் என ஆலோசித்து பேப்பரில் எழுதி வைத்தோம்.
அதை வைத்து பத்திரிக்கை நகல் ஒன்று கொடுத்தார்கள். அதில் என்னென்ன சேர்க்க வேண்டும் எதை நீக்க வேண்டும் என்னென்ன வடிவமைப்புகள் வேண்டும் என்பதை திட்டமிட்டோம்.
மணமகன் மணமகள் இடத்தில் எங்கள் பெயர்.. குஷியில் இரண்டு மூன்று முறை தொட்டு பார்த்துக் கொண்டேன்.

மற்றவர்கள் திருமண பத்திரிக்கையில் திருமண நாள் மற்றும் இடம் எங்கே என்று பார்ப்பதோடு சரி. பெரிதாக வரி வாரியாக படித்த நியாபகம் இல்லை. என்னுடையதை சரிபார்க்கும் பொழுது ஒரு புள்ளி விடாமல் எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.
இதில் என் பெயருக்கு முன் திருவளர்ச் செல்வி என்றும்.. அவர் பெயருக்கு முன் திருநிறைச் செல்வன் என்றும் இருந்தது. விசாரித்ததில் என் வீட்டில் நான் மூத்த பெண் என்பதால் திருவளர்ச் செல்வி என்றும் அவர் இளையமகன் என்பதால் திருநிறைச் செல்வன் என்றும் தான் குறிப்பிட வேண்டும் என்றனர். இதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாள் இதை கவனித்ததே இல்லையே!
யாவையும் சரி செய்து அனுப்பி வைத்தோம். இறுதியான பத்திரிக்கை தேர்வை என்னை சரிபார்க்க சொல்லி அவரிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. நானோ அப்பொழுது அலுவலகத்தில் முக்கியமான ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தேன்.
பின் என் தங்கைக்கு அனுப்பி அவளை சரிபார்க்க சொல்லிய போது சற்று வருத்தம். என்னுடைய திருமண நிகழ்வில் கூட முழுவதும் என்னால் ஈடு பட முடியாமல் இருக்கிறேனே என தோன்றினாலும் அதே பத்திரிக்கையில் பெருமையாக தன் பெயருக்கு கீழ் வேலையை குறிப்பிட்டு இருக்கிறோமே அதற்கு இந்த உழைப்பு தேவைதான் எனத் தோன்றியது.

பத்திரிக்கை அடித்தாயிற்று. பத்திரிக்கையில் மஞ்சள் வைக்கும் மணமும் யார் யார்கெல்லாம் பத்திரிக்கை வைக்க வேண்டும் என்ற பேச்சும் தாம்பூலமும் வீடு முழுக்க பரவியிருந்தது..
கல்யாணத்திற்கு முன் பெரிதாக அழகு நிலையம் சென்றதில்லை. புருவ முடி திருத்தம் செய்து கொள்வதோடு சரி.
இப்பொழுது திருமண அலங்காரத்திற்கு பதிவு செய்யப் போனோம்.
அவர்கள் பேசும் வார்த்தைகளே இனிய மயக்கத்தை ஏற்படுத்தியது இன்றிலிருந்தே பயன்படுத்த கிரீம்கள் செய்ய வேண்டிய பேசியல்களை பட்டியலிட்டு கொடுத்துவிட்டனர். அன்று போட வேண்டிய நகைகளை தேர்வு செய்து விட்டு எனக்கேற்ற அலங்காரத்தை முயன்று பார்த்து முடிவு செய்து விட்டு வந்தேன்.
இரு வீட்டாரும் இணைந்து ஒவ்வொன்றாக பதிவு செய்யத் தொடங்கினர்.. சமையல்காரர்கள், புகைப்பட கலைஞர், அய்யர், மேள காரர்கள், மேடை அலங்காரம், பூ மாலை.
எங்கே இதெல்லாம் தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என்று எனக்கு அவ்வப்பொழுது பயம் ஏற்பட்டாலும் எப்படியோ இறுதியில் விட்டுக் கொடுத்து ஒவ்வொன்றையும் முடிவு செய்து வருகின்றனர்
சில முடிவுகளை எடுக்கும் பொழுது நானும் அதில் கலந்து கொண்டேன். "பூ மாலை இரண்டு வேலையும் ஒரே மாதிரி ரெட் கலர் வேண்டாம். காலைல சிவப்பு கலர் மாலை.. நைட்க்கு வித்தியாசமா சொல்லலாமா.. லைட் கலர்ல பூ வித்தியாசமான மாலை அப்படி எதாவது.." அவரும் ஏற்றுக்கொண்டார்.
இப்படி நானும் என்ன நடக்கிறது என்பதிலும் என்ன தேர்வு செய்கிறார்கள் என்பதிலும் கவனமாக இருந்தேன். இது நன்றாக இருக்குமா.. அதுவா என்பதை இருமுறை சிந்தித்து முடிவு செய்தேன். செலவுகளில் கவனம் கொண்டேன்.

என்னுடைய பூப்புனித நீராட்டு விழாவெல்லாம் வீட்டில் சொன்னது தான் புடவை, நகை, மாலை அலங்காரமெல்லாம். பெண்ணாக வந்து நின்றால் மட்டும் போதும். அதில் கூட எத்தனை நிம்மதி.
இப்பொழுது அதிகம் ஈடுபடுவதும் சில சமயங்களில் வாக்குவாதங்களை ஏற்படுத்தும். நாம் ஏன் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட தோன்றும். இந்த அலைபேசியும் இணையமும் நமக்குள் பல ஆதிக்கங்களை செலுத்திவிட்டதே.
சந்திரனும் சூரியனும் அஞ்சல் காரர்கள் என நினைத்து கடிதம் போட ஆசையாக தான் இருக்கும். ஆனால் தோன்றுவதை அந்த நொடியிலேயே குறுந்செய்தியாக அலைபேசியில் அனுப்பாவிட்டால் அடுத்த வேலை நடக்காது. இதனால் ரகசியங்கள் பெரும் அளவில் குறையும். என்னவன் என்னை பார்க்க வருகிறான் என்பதை முன்பே சொல்லிவிடும் கைப்பேசி
ரகசியத்தையும் ஆர்வத்தையும் அடுத்து நடக்க போகும் ஆச்சர்யத்தையும் முன்பே சொல்லி சுவாரஸ்யத்தை கெடுக்கிறது.
அடுத்த வேலையாக பட்டு புடவை எடுக்கச் சென்றோம். ஒற்றை படை இலக்கில் தான் செல்ல வேண்டுமென அத்தை வீட்டு குட்டியையும் சேர்த்து பதினோரு பேர். அவர்கள் வீட்டில் இருந்து அடுத்த ஒற்றை படை எண்ணில் வந்திருப்பதாக ஆட்களை பார்த்து ஒரு கணிப்பு
மொத்தமாக அனைவரும் கடைக்குள் செல்ல புடவைகளை எடுத்துக் காட்ட ஆரம்பித்தார்கள்.
அங்கிருக்கும் ஒவ்வொருவரும் அவரவர் கருத்தைக் கூற ஆரம்பித்தனர்.
'உனக்கு இந்த பார்டர் நல்லாருக்கும்'
'கெம்பு கலர் புடவை நல்லாருக்கும்'
இந்த பரிந்துரைகளையெல்லாம் தாண்டி மனதிற்கு பிடித்ததை தீர்மானிக்க கொஞ்சம் கடினமாக இருந்தது.
அப்பா என் காதருகே வந்தார். "மாமியார்க்கு எது பிடிச்சிருக்குனு பாத்து எடு"
எனக்கு பிடித்த புடவை ஒன்றை எடுத்து காண்பித்து மற்றவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்ற யோசனையோடு திரும்பிப் பார்த்தேன்.
"உனக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்கோ" என்றனர் ஒருமனதாக!
இரண்டு புடவைகள் எடுக்கப்பட்டன.
"இதுக்கு மேட்ச்சா என்னென்ன வேணுமோ எல்லாமே வாங்கிக்கோ.. நைட் பெரிய புடவை சிகப்பு கட்டிக்கோ.. காலைல கூரை புடவை தான். கொஞ்ச நேரம் தான மாத்து புடவை அப்போ அந்த பச்சை புடவை கட்டிக்கோ" என்றார் என் மாமியார்.

அய்யோ இது என்னடா புது பிரச்சனை. எனக்கு இரவில் கல் நகைக்கு போட பச்சை புடவையையும்.. முகூர்த்த புடவையாகத் தானே சிகப்பு புடவையையும் மனதில் நினைத்து தேர்ந்தெடுத்தேன்.
எப்படியோ அம்மாவிடம் பேசி என் மாமியாரிடம் அலைபேசியில் பேச வைத்து ஒத்துக் கொள்ள வைத்தேன்.
அவருக்கு இரண்டு மனதாகத் தான் இருந்திருக்கும் போல.. இருந்தாலும் நாங்கள் கேட்பதற்காக ஏற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வேலையாக நடக்க நடக்க சில மாற்று கருத்துகள்.. பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள்.. சில விஷயங்களை நாங்கள் விட்டுக் கொடுத்தும் சிலவற்றை அவர்கள் விட்டுக் கொடுத்தும் போனோம்.
சில நண்பர்களை திருமணத்திற்கு அழைக்க நானும் நேரில் சென்றேன். என் கல்யாணத்திற்கு நானே அழைப்பது கூச்சமாகவும் புது வித அனுபவமாகவும் இருந்தது.
திருமணத்திற்கும் அதற்கு பின்பும் தேவையானதை பட்டியலிட்டு வாங்க தொடங்கினேன்.
ஒரு முறை நானும் அம்மாவும் கடை வீதி வரை சென்றிருந்தோம். அங்கே ஒரு கடையில் எங்களுக்கு அருகே நின்றிருந்த மூன்று வயது குழந்தை என்னை அத்தை என்றது.
நான் சட்டென திரும்பிப் பார்க்க அந்த குழந்தையும் அவர் அம்மாவும் என்னையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
நான் அவர்களை புரியாமல் பார்க்க.. "நல்லா இருக்கியாம்மா... கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு" என்னிடம் கேட்டார்.
"ம்ம்.. நல்லா போய்ட்டு இருக்கு"
"நான் பாலாஜிக்கு மாமா பையனோட மிஸ்ஸஸ். நிச்சயத்தில பார்த்துருப்ப.. நியாபகம் இருக்காது"
எனக்கு உடனே வெட்கம் மேலிட்டது. அவர் சொந்தம் என்னை கண்டறிந்து பேசுகின்றனர். அந்த குழந்தை என்னிடம் வர கை நீட்டிக் கொண்டு வந்தது.

"இப்போவே அத்தை கிட்ட போணுமா.. அடுத்த மாசம் நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்க.. அப்போ போய்க்கலாம்"
நான் சிரிப்பையும் வெட்கத்தையும் மட்டும் பதிலாக தந்து கொண்டிருந்தேன். என் அம்மா அவரிடம் பேசிகொண்டிருந்தார்.
அவள் என்னை அத்தையென அழைத்ததில் வித்தியாசமான சந்தோசம். அவர் மூலம் எனக்கு வந்த உறவுகள் அல்லவா இவர்கள்!
நாட்கள் சென்றதே தெரியவில்லை. ஐந்து மாதங்கள் இருக்கு.. மூன்று மாதங்கள் இருக்கு.. இப்பொழுதோ இன்னும் ஏழு நாட்களே இருக்கின்றன.
திடீரென ஒரு பயம் நமக்கு நிஜமாவே கல்யாணமா!
வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல நான் தயாராகிவிட்டேனா!
(தொடரும்)
-ரேவதி பாலாஜி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.