வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
பிப்ரவரி மாதம் மத்திய அரசு புதிதாக வரி போடுமா...போடாதா...என்று சிந்திக்க வைக்கும் மாதமாக முன்பு இருந்தது. ஆனால் சமூக வலைத்தளங்கள், தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் அதிகமான பிறகு நிலைமை மாறி அது காதலுக்கு வாரி வாரி செய்திகளை வழங்கும் மாதமாக உருவெடுத்தது.
எல்லாம் சரி பிப்ரவரி 14 தான் 'காதலர் தினம்' பின்னர் எதற்காக தலைப்பு 'பிப்ரவரி 15' என்று வைத்துள்ளீர்கள்...?
கேட்க நினைப்பவர்களுக்காக சில வரிகள்...
"காதல் என்பது எதுவரை...?
கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எதுவரை
கழுத்தினில் தாலி விழும்வரை...
60 களில் வெளிவந்த 'பாதகாணிக்கை' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. நம்மிடையே சில கேள்விகளை எழுப்பி விடையை நம்மை கண்டுபிடிக்க சொல்லி உள்ளார் கவியரசு கண்ணதாசன்.
காதலில் விழுந்தவர்கள் கல்யாண பந்தத்தில் இணைந்ததும் காதலுக்கு 'முற்றும்' போடப்படுமா...? இல்லை...இல்லை....
அது தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் இல்லறம் இனிய அறமாக இருக்கும்.
ஒருவேளை திருமணத்திற்கு பிறகு காதல் விடைபெற்றால் பாதை தவறும் கால்கள் நீதியின் படிக்கட்டுகளை மிதிக்க நேரிடும்.

அது போலத்தான் பிப்ரவரி 14 ஐ தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். மறுநாள் பிப்ரவரி 15...முதல் நாள் வாங்கிய ரோஜாப் பூக்கள் அனைத்தும் குப்பைத்தொட்டிக்கு சென்று விடும். கண்டு கொள்ள ஆள் இல்லாமல் காதல் மட்டும் அனாதையாக நிற்குமா...?
ஆண்டுக்கு ஒரு முறை தான் பொங்கலும் தீபாவளியும் வரும். காதலர் தினம் அது போல அல்ல. அன்பை பரிமாற தெரிந்தவர்களுக்கு தினம் தினம் காதலர் தினம் தான்.
"சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோரமா பூ பூத்தது
மழை சுடுகின்றதே அட அது காதலா...
தீ குளிர்கின்றதே அட அது காதலா...
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா...?
இயக்குனர் விக்ரமன் அவர்களின் 'பூவே உனக்காக' படத்தில் இடம்பெற்ற எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களின் இனிமையான இசையில் உருவான என்றும் பசுமையாக நெஞ்சில் நிற்கும் காதலை போற்றும் பாடல்.
மிகச் சாதாரணமாக இருந்த ஒரு கதாநாயகனை 'இளைய தளபதி' என்று போற்றும் அளவுக்கு தூக்கி நிறுத்தியது 'பூவே உனக்காக' திரைப்படம் தான். அந்த படத்தின் கிளைமாக்ஸ் இன்றளவும் பேசும் பொருளாக இருக்கிறது.
அடுத்ததாக 'காதலுக்கு மரியாதை' படத்தைப் பற்றி சொல்லாமல் விட்டால் யாராவது அவதூறு வழக்கு போட்டு விடுவார்கள். அந்த அளவுக்கு எல்லாரையும் கவர்ந்த படம். 'பூவே உனக்காக' படம் விஜய்யை இமயமலை போல உயர்ந்து நிற்க வைத்தது என்றால்...'காதலுக்கு மரியாதை' அதற்கும் மேலே வானத்தை தொட்டு விடும் தூரத்தில் கொண்டு போய் வைத்தது. இரண்டுமே காதலை போற்றும் படங்கள். ஒன்றில் இணைந்தும் ஒன்றில் இணையாமலும் வெவ்வேறு கோணங்களில் காதலை சொல்லிய படங்கள். ஒரு மாஸ் ஹீரோ உருவாக அடித்தளம் இட்டது காதல் படங்கள்தான்.
"என்னைத் தாலாட்ட வருவாளா... நெஞ்சில் பூமஞ்சம் தருவாளா..."
காதலிலும் தாலாட்டை கொண்டு வந்தார் கவிஞர் பழநி பாரதி இனிமையான இசையால் செல்போன் இல்லாத காலத்தில் நம் காதுகளில் நிலையான ரிங் டோன் ஒலிக்க வைத்தவர் இசைஞானி அவர்கள்.
அதில் காதல் தொடர்பான பாடல்கள் நிறைய உள்ளன. அனைவராலும் போற்றப்படும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. குறுந்தொகையில் 40 ஆவது பாடல்
"யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"

இப்பாடலின் பொருள் என் தாயும் உன் தாயும் எத்தகைய உறவினர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்கள். நானும் நீயும் எவ்வழியில் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம். இது மூன்றும் இல்லாமல் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் எப்படி அம்மண்ணோடு ஒன்றாக கலந்து பிரிக்க முடியாதவாறு ஆகிவிட்டதோ அதே போல அன்பினால் ஒன்று பட்ட நம் நெஞ்சங்கள் ஒன்றாக கலந்து விட்டன.
இப்பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திரைப்பாடல்களில் ஒன்று...
"நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ காணும் வரை நீ எங்கே நான் எங்கே கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே குறுந்தொகை பாடலின் மையக்கருவை அடிப்படையாக வைத்துவெளிவந்த மிகப்பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற படம் அகத்தியன் அவர்கள் இயக்கிய 'காதல் கோட்டை'.
மூன்று தேசிய விருதுகள் . (சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர்) வாங்கிய படம் அது.
கதாநாயகியின் சர்டிபிகேட்கள் ரயிலில் தொலைந்து போக...அது கதாநாயகனின் கைக்கு கிடைக்கிறது. கடிதம் மூலம் தொடங்கும் நட்புஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இருவரும் நேரில் சந்தித்து கொள்ளாமலே காதலைத் தொடர்கின்றனர். சூர்யா, கமலி என்ற அந்த காதலர்கள் எப்படி சந்தித்து இணைந்தார்கள் என்பதை பரபரப்பான கிளைமாக்ஸில் சொல்லி இருப்பார் இயக்குனர்.
தமிழ் சினிமாவின் காதல் படங்களில் இன்று வரையில் நம்பர் 1 இடத்தில் இதுதான் உள்ளது. உண்மையான காதலர்கள் 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்று இன்றும் இனிமையாக பாடும் தேவகானத்தை தந்தார் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்கள்.

"LOVE AT FIRST SIGHT" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒருவரை ஒருவர் பார்த்த முதல் பார்வையிலே காதல் வந்தது என்று அர்த்தம்.ஆனால் கவிப்பேரரசு "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்றே அர்த்தம்..அர்த்தம் என்கிறார்.
கம்பராமாயணத்தில் ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் முதல் பார்வையிலே பார்த்ததும் காதல் கொண்டனர் என்கிறார் கம்பர். ராமாயணம் பால காண்டத்தில் மிதிலை காட்சி படலம் பாடல் 35 ல்
"எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் "
எண்ணில் அடங்கா நல்ல குணங்கள் கொண்ட சீதையும் ராமனும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன. அவர்கள் உணர்வுகள் ஒன்று பட்டது.. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். ராமன் மிதிலை நகர் வீதியில் வருகிறான். அரண்மனை மாடத்தில் சீதை தன் தோழிகளுடன் பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறாள். கை தவறி பந்து வீதியில் செல்லும் ராமன் மேல் விழுந்து விடுகிறது.மாடத்தில் இருந்து சீதை எட்டிப் பார்க்கிறாள். பந்து எங்கிருந்து வந்தது என்று ராமன் மேலே பார்க்கிறான். அந்த வினாடியில் அவர்கள் பார்வை ஒன்றாக கலந்து விடுகிறது.

தற்போதைய சூழலில் சொல்வதென்றால் அந்த முதல் பார்வையிலே அவர்கள் ஒருவருக்கொருவர் LOVE PROPOSE பண்ணிக் கொண்டார்கள். அந்த ஒரு வினாடி அவர்களை திருமண பந்தத்துக்குள் இழுத்து சென்றது.
"தம் தன தாளம் வரும் புது ராகம் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்..." 70 களின் முடிவில் தொடங்கி 80 களில் பயணித்து இன்றுவரையில் முதன் முதலாக காதல் வரும் போது நம் மனசுக்குள் இளையராஜாவும் பாரதிராஜாவும் கங்கை அமரனும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ள இப்பாடலே காரணம். இப்படி சிறப்பான பாடல்கள் பின்னாளில் வருவதற்கு அன்றே முன்னுரை எழுதியவர் கவிச்சக்ரவர்த்தி கம்பர்.
நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பான 'நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஒரு பகுதியாக விளங்குகிறது இந்நூல்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். பெரியாழ்வார் தனது தோட்டத்தில் கண்டெடுத்த குழந்தை இவள்தான். அவளுக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்.

இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தி உணர்வு கொண்டவராக இருந்து வருகிறார். பக்தி காதலாக மாறி தன்னை கண்ணனின் மணப்பெண்ணாக பாவனை செய்து கொள்ள ஆரம்பிக்கிறார். இறைவனுக்கு அணிவிப்பதற்காக பெரியாழ்வார் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்கு தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக நாம் இருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் கொண்டு போய் வைத்து வந்தார்.
இதனால் கோதை சூடிய பிறகு இறைவனுக்கு மாலை சூடப்பட்டு வந்தது. ஒரு நாள் பெரியாழ்வாருக்கு தெரிய வந்த போது மகளை கடிந்து கொண்ட அவர் அம்மாலையை விடுத்து புதிய மாலை ஒன்றை தொடுத்து இறைவனுக்கு அதை சூடினார். அன்றிரவு இறைவன் அவர் கனவில் வந்து ஆண்டாள் சூடிய மாலைகள் தான் தனக்கு உகந்தவை என்றும் அவற்றையே தனக்கு சூட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனால்தான் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும் இறைவனையே ஆண்டவள் என்பதால் 'ஆண்டாள்' என்றும் அழைக்கப்பட்டார். இவரது 'நாச்சியார் திருமொழி' 10 பாடல்கள் கொண்ட 14 தலைப்புகளில்எழுதப்பட்டது. இந்நூல் இறைவனை நினைத்து உருகிப் பாடும் காதல் சுவை மிகுந்த பாடல்களின் தொகுப்பு ஆகும். இதில் 6 வது பத்துப் பாடல்கள் கண்ணனை தான் திருமணம் செய்து கொண்டது போல் கனவு கண்டதாக தோழியிடம் சொல்லும் தொகுப்பு ஆகும். அதில் இடம்பெற்ற பாடல் ஒன்று..
"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி.. "
இதன் பொருள் : ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர அவற்றின் நடுவே என் தலைவனாகிய கண்ணன் நடந்து வந்து கொண்டு இருக்கிறான். அவனை எதிர்கொண்டு வரவேற்கும் வகையில் நகர் முழுவதும் பூரண கும்பம் வைத்த தோரணக் கம்பங்கள் நடப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட காட்சியை கனவில் கண்டு மகிழ்ந்தேன் தோழி..என்று தோழியிடம் கூறுகிறாள் கோதை.
ஆண்டாள் போல கடவுள் மேல் காதல் கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை. இறைவன் மேல் காதல் ரசம் சொட்ட சொட்ட பாக்களை இயற்றி உள்ளார். அதில் ஒன்று...
"கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.."
பெருமாள் திருவமுதம் (எச்சில்) பச்சைக் கற்பூரம் போல
வாசனையுடன் இருக்குமா... அல்லது தாமரை மலர் போல மென்மையாக இருக்குமா என்று வெண் சங்கிடம் கேட்கிறாள்.

கண்ணனை உருகி உருகி காதலித்து அவனை தவிர வேறு ஒருவனை நினைக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்து இறைவனின் உத்தரவின் படி மணக்கோலத்தில் பெரியாழ்வார் கோதையை திருவரங்கம் அழைத்து வர அங்கே இறைவனோடு ஐக்கியமாகிறார் ஆண்டாள்.
"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல...
அதையும் தாண்டி புனிதமானது...புனிதமானது..."
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் 'வாலி' அவர்கள் எழுதிய 'கண்மணி அன்போடு காதலன் நான்' பாடலின் இடையில் வரும் வரிகள் ஆண்டளோடு ஒத்துப்போவதை கவனியுங்கள்.
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் 5 ஆம் பாகத்தில் குந்தவையும் வந்தியத்தேவனும் உரையாடும் அத்தியாயம் 90 க்கு 'பொன்மழை பொழிந்தது' என்று தலைப்பு வைத்திருப்பார். அந்த அத்தியாயத்தில் தான் இருவரும் முதன் முதலாக காதலை சொல்லிக்கொள்வார்கள். அதை மிகச் சிறப்பாக சொல்லி இருப்பார் கல்கி.
அந்த உரையாடல்கள் :
வந்தியத்தேவன் : "தங்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது தற்செயலாக தங்கள் விழிகளை பார்க்கிறேன்...அது என்னை திகைத்து நிற்க செய்கிறது..."
குந்தவை : "என் கண்களில் தங்கள் உருவத்தை பார்த்திருப்பீர்கள் அதுதான் திகைப்படைந்திருப்பீர்கள்..."
வந்தியத்தேவன் : "ஈழம் முதல் வேங்கி வரையில் ஒரு குடை நிழலில் ஆளும் மன்னர் மன்னனின் மகளை தனக்கு மணம் செய்து கொடுக்கும்படி ஊரும் பேரும் இல்லாத ஒரு அனாதை வாலிபன் எப்படி துணிந்து கேட்க முடியும்...?".
குந்தவை :"ஐயா என் தந்தை சுயம்வரம் நடத்தினால் அரச குமாரர்களுக்கு மத்தியில் என்னை சந்தித்த அந்த அனாதை வாலிபன் இருக்கிறாரா என்று தேடி அவருடைய கழுத்தில்தான் சுயம்வர மாலையை போடுவேன்..."

காதல் எந்த ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காது என்பதை இந்த வரலாற்று காதல் நிரூபித்துள்ளது. மிகப்பெரிய சோழ சாம்ராஜ்யத்தின் மிகச் சிறந்த அறிவாளியாகவும் சோழப் பேரரசின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜ ராஜ சோழன் புகழ் அடைய காரணமாகவும் இருந்த குந்தவை நாச்சியாரின் காதல் போற்றத்தக்கது.
காதலென்று வரும் போது இதயங்கள் புலம் பெயர்ந்து விடும்.ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணும் என்று இதயங்கள் மாறுவதால் புலம்பெயர்தல் என்று குறிப்பிட்டேன். இதைதான் கவிஞர் பழநி பாரதி பூவே உனக்காக படத்தில் இடம்பெற்ற
"இதயங்கள் நழுவுது இது என்ன மாயம் சுகமாய் வலிக்குது இது என்ன காயம்.. காதல் இங்கே அதிசய உலகம் உள்ளங்கையில் பூமிகள் சுழலும்..."
விஜய் மற்றும் அவர் காதலிக்கும் பெண்ணாக நடித்த அஞ்சு அரவிந்த் இடையே நடைபெறும் சம்பவங்களின் போது பின்னணியில் இப்பாடல் ஒலிக்கும். என்ன ஒரு அழகான கற்பனை. இதில் வருத்தமான ஒரே ஒரு விஷயம் எந்த தொலைக்காட்சிகளிலும் இப்பாடலை போட மாட்டார்கள். பூவே உனக்காக படம் ஒளிபரப்பாகும் போது மட்டுமே இப்பாடலைக் கேட்க முடியும்.

காதல் என்பது ஒரு நாள் கூத்துக்கு மீசையை வைப்பது போலவோ வேடம் போடுவதோ...இல்லை. அது ஒவ்வொரு வினாடியும் நம்முடனே பயணிப்பது.
"காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது..."
வெட்டி வேரு வாசம் வெடலப்புள்ள நேசம் பாடலில் கவிப்பேரரசு சொல்லி இருப்பார். இயக்கத்துக்கு காரணமாக காதல் இருக்கிறது.
காதலே...
"உன்னை நீங்கி எந்நாளும்...
எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு
ஜென்மம் ஒன்று போதாது...
காற்று நின்று போனாலும்
காதல் நின்று போகாது..."
காதலர் தினம் பிப்ரவரி 14 அன்று மட்டும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று அல்ல. பிப்ரவரி 15,16...என தொடர்ந்து ஆண்டு முழுவதும் ஆயுள் முழுவதும் கொண்டாட வேண்டும். அது நமது சந்ததியை வளர்க்கும்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.