வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
"உங்க வீட்ல (உங்ககிட்ட) கொஞ்சமாவது மனிதாபிமானம்" இருக்கா... இருந்தா கண்டிப்பா இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யவே மாட்டீங்க? அப்படி என்ன வேலைன்னு யோசிக்கிறீங்களா? வேற ஒண்ணும் இல்லைங்க. எல்லார் வீடுகளிலும் இப்பொழுது வீட்டு வேலை செய்வதற்கு பணிப்பெண்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களையும் சக மனுஷியாக எத்தனை பேர் பார்க்கிறார்கள்?
சமைத்த பாத்திரங்களை விளக்க போடுவதையே எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்ட தட்டில் அப்படியே மிச்சம் மீதி வைத்த குழம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இப்படி எல்லாம் காய்ந்து போய்..
சோறு வைத்த பாத்திரத்தைக் கேட்கவே வேண்டாம் .. காய்ந்து போய்.. ஆங்காங்கு பருக்கைகள் ஒட்டிக்கொண்டு.. அதேபோல் தான் பால் பாத்திரங்களும் அடி பிடித்து போய் ... அதிலும் கொஞ்சம் கூட தண்ணீர் ஊற்றி வைக்காமல்... எப்படி கழுவுவார்கள்? கொஞ்சமாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் ஒரு நாள் வரவில்லை என்றால் அந்த பாத்திரங்களை நம்மால் கழுவ முடியுமா? எத்தனை கோபப்படுவோம். எல்லார் மீதும் எரிந்து எரிந்து விழுவோம்.

அப்படி இருக்க அவர்களும் நம்மை போலவே ரத்தமும் சதையும் உள்ள மனிதர்கள் தானே! சாப்பிட்ட தட்டில் இருக்கும் வீணான பொருட்களை குப்பைத் தொட்டியில் போட்டு ஒரு அலசு அலசி அதை விளக்குவதற்கு போடலாம்... சோறு சமைத்த/ பால் வைத்த பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம்... அவர்கள் கழுவுவதற்கு சுலபமாக இருக்கும். அதே போல் கரண்டி மற்றும் ஸ்பூன்களை எல்லாம் மூலைக்கு ஒன்றாக தூக்கி போடாமல் எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு நீர் நிரப்பி வைத்தால் அவர்கள் கழுவுவதற்கும் சுலபம். நாம் திரும்ப எடுத்து வைப்பதற்கும் சுலபமாக அல்லவா இருக்கும்.
அடுத்தது துணி துவைப்பது .சாயம் போகும் துணி சாயம் போகாத துணி வெளியில் போட்டு செல்லும்/ அணிந்து செல்லும் புடவை, இன்ன பிற சட்டைகள் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டால் அவர்கள் தனித்தனியே பிரித்து துவைக்க எவ்வளவு சிரமம். அது மட்டுமல்ல சிலர் வீடுகளில் (அதுவும் குறிப்பாக மாதாந்திர நேரங்களில்) உள்ளாடைகளைக் கூட அப்படியே கழற்றி போட்டிருப்பர். (அந்த உள்ளாடைகளையாவது சற்றே அலசி பிறகு துவைக்கும் துணிகளில் போடலாமே..).காலை உணவை எடுத்துக் கொள்ளாத பலரும் காபியை அருந்தாமல் விட்டதில்லை.

அப்படியிருக்க கூட ஒரு டம்ளர் காஃபி போட்டு அவர்களுக்கும் சுடச்சுட கொடுக்கலாமே..!
அந்த ஒரு கப் காபி ஓராயிரம் நன்றிகளை பார்வையின் மூலம் சொல்லுமே!
அந்தஸ்தை விட மனிதாபிமானம் உள்ள மனிதமே உயர்ந்தது!
அதேபோல் வீட்டில் ஏதேனும் விசேஷம் விருந்து என்று இருக்கும் பொழுது சமைத்த உணவுகள் சற்று மீதமாகிவிட்டால் அதை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கெட்டுப்போய் மறுநாள் கொடுப்பதற்கு பதில்... அவர்களை வரவழைத்து அப்போதைக்கு அப்போதே கொடுத்து விடலாமே! நம் வீட்டில் மிச்சமான சோறு இன்னொரு வீட்டின் பிள்ளைகளுக்கு பசியாற உதவுமே ! அவர்களுக்கோ/ அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கோ பிறந்த தினம் என்றால் ஏதோ நம் கையால் முடிந்த பணமோ/ பொருளோ கொடுத்து உதவலாமே...
இப்படி சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனத்தை செலுத்தி பணிப்பெண்களையும் சக மனிதராக மதி(பாவி)த்து அவர்களின் உள்ளத்தைப் புரிந்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
பி.கு(இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல...)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.