வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
அன்று... ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை..
முன்பெல்லாம் வார விடுமுறை என்றால் காலை 10 மணி வரை நன்றாக உறங்கி விட்டு எழும் சேது ...
புதிய ஸ்மார்ட்போன் வாங்கி முகநூல், வாட்ஸ் அப் அக்கௌன்ட் தொடங்கியதில் இருந்து காலை எட்டு மணிக்கெல்லாம் எழுந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வழக்கமாகி விட்டது ..
இப்போதெல்லாம் இரவில் தூக்கம் வந்தாலும் அவனது செல்போன் முனகுவதைக் கேட்டதும்...
எழுந்து அதனை தடவி தனது நண்பர்கள் என்ன ஸ்டேட்டஸ் போட்டு இருக்கிறார்கள் என்று பார்ப்பதும் தாம் பதிவிட்ட ஸ்டேடஸ்க்கு எத்தனை லைக்ஸ் கெடைச்சிருக்கு என பார்ப்பதும் வழக்கமாகிவிட்டது....

அப்படித்தான் அன்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் இன்று நிறைய நேரம் கிடைக்கும் முகநூலிலேயே உட்கார்ந்து விடலாம்...
காலை எட்டு மணிக்கு எழுந்தவன் மணி 11 ஆகிவிட்டிருந்தது ...
அப்போதுதான் அவன் கடிகாரத்தையே பார்க்கிறான்...
அவனுக்கே தெரியாமல் அவனது நேரங்கள் தின்று தொலைக்கப்பட்டிருந்தது..
பசி வேறு வயிற்றைக் கிள்ளியது... இத்தனை மணியாகி இவள் பசியாற எதுவும் தராமல் என்ன செய்கிறாள்? என தம் மனைவியின் மீது கோபம் கொண்டு கத்தினான்...
“ ஜானு ...மணி எத்தனை ஆகுது இன்னும் பசியாற எதுவும் இல்லையா? அங்க என்ன பண்ற...”
“அட! ஏன் வால் வால்னு கத்துறீங்க! இவ்ளோ நேரமா இந்த மொபைல தான் பார்த்துகிட்டு இருந்தீங்க இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டே இருந்தால் ஒரே வேலையா மத்தியானம் சாப்டலாம்ல..?..”
“இப்போ பாத்து தான் நல்ல சீரியலா போடுவான் இந்த வெளங்காத பய! கொஞ்சம் லேட்டாவாவது போடலாம்ல” என டிவிய பாத்தவாறே பொருமினாள்..
“சோத்தவிட ஒனக்கு சீரியல் பெருசா போச்சா?”.. என கடுகடுத்த வாறே?
“ஆமாமா இங்க மட்டும் என்ன வாழுதாம்! விடிஞ்சா போச்சு இந்த மொபைல கட்டி புடிச்சிட்டு கெடக்குறீங்க?//”..
“ஒன்ன அப்றமா கவனிச்சிக்கிறேன் எங்கடி போனான் இந்த பய ரமேஷ் இன்னும் சாப்பிட வராம?” என மகனைக் கேட்டான்..

“ம்ம்ம்... ஆமாமா அப்பனை மாதிரித்தானே புள்ளயும் இருப்பான்.. ஒங்களுக்கு ஒரு லாப்பு டாப்பு மாதிரி அவனுக்கு ஒரு டாப்லாட்டு ...”
“ஒங்களுக்கு முன்னாடியே காலையில அத எடுத்துட்டு அறைக்கி போனவன்தான் இன்னமும் வெளியவே வரலை..”
“எல்லா கூட்டாளிப் பயலும் கூப்டு பாத்துட்டு போயிட்டானுக.. இவன் உள்ளயே தான் கெடக்குறான்...”
“இப்போதாவது தன்னட புள்ளைய கேக்க நேரம் கெடச்சிச்சே ஹ்ம்ம்...” என சினுங்கியவாறே அடுப்பங்கரைக்குச் சென்று விட்டாள்...
“என்னது காலைல போனவனா? இன்னும் விளையாடுறான்.. இந்த வரேன்.. அவன என்ன செய்றேன் பாரு இப்ப...”
வேகமாக அவன் இருக்கும் அறைக்குச் சென்றான்...
“டேய்! ரமேஷ், லீவு நாள்ல காலைல இருந்து வெளிய போகாம என்னடா இங்க பண்ற..”
இவனது குரலைக் கேட்டதும்..பதறியடித்து... முகம் வெளிரியவனாக நாற்காலியை விட்டு எழுந்தான் ரமேஷ்...
போன வேகத்தில் அவனது முதுகில் ரெண்டு சாத்திவிட்டு ...
“அப்டி என்னடா காலைல இருந்து இத கட்டிக்கிட்டு கெடக்குற ...
அப்பிடி என்ன பொல்லாத வெளாட்டு உனக்கு...”
என அவனது கையிலிருந்த டேப்லட்டை பார்த்தவன் ..
அதிர்ந்தே போனான்..
குரல் நடுங்கியது....
"அடக்கடவுளே!.. என்ன இது?
"இததான் டெய்லி பேப்பர்லயும், டிவிலயும் போட்டு காட்டுறானே! அந்த விளையாட்டா இது..."

அந்த டேப்லட்டில் நீலத் திமிங்கலம் ஒன்று வாயைப் பிளந்தபடி வேகமாக நீந்துவது அவனையே விழுங்கி விடுவது போன்று இருந்தது அவனுக்கு...
ஒருகணம் செய்வதறியாது திகைத்து போய் நின்றவன்..
பின்னர் சுதாரித்தவாறே.. மகனைப் பார்த்தான்...
அங்கே! கை கால்கள் உதற கண்கள் சிவந்த நிலையில் நின்றான் ரமேஷ் ..
அவனைப் பார்த்து கத்தினான்.. இது எப்படிடா உனக்கு கிடைச்சுது.. யாரு சொல்லிக் கொடுத்தா?.. இது என்ன விளையாட்டு தெரியுமா உனக்கு??..
“இதுவும் ஒரு விளையாட்டு தானே அப்பா?”
ரொம்பவும் கூலாகச் சொன்னான் ரமேஷ் ...
“அடப்பாவி பயலே! இது சாதாரண வேளையாட்டாடா இது உன் உசுரே போய்டும்டா படுபாவி?..”
“உசுருன்னா என்னப்பா அது”...
அவனது பதிலைக் கேட்டவுடன் திடுக்கிட்டு நின்றான் சேது !...
அவனைப் பார்த்து மேலும் கேட்டான் ரமேஷ்....
“பின்ன என்னத்த தான் அப்பா நான் செய்யிறது..?"
"முன்னெல்லாம் லீவு நாள்னா நீங்க என்னைய பைக்ல, கடற்கரைக்கு கால்பந்து விளையாட கூட்டிட்டு போவீங்க,”
“அப்புறமா கடைத்தெருவுக்கு அழைச்சிட்டு போய் தின்பண்டம் லாம் வாங்கித்தந்து சாப்பிட சொல்வீங்க”
“இப்ப இந்த லேப்டாப் வாங்கினதில இருந்து எங்கேயும் நீங்க கூட்டிட்டு போறது இல்ல”...
“தோ! நான் இத விளையாடுற மாதிரி நீங்களுந்தான் எப்ப பாத்தாலும் பேஸ்புக்கு, வாட்ஸ்ஆப்புன்னு தெனம் ஆபீஸ் முடிஞ்சு வந்து அத்துலையே கெடக்குறீங்க?”...
“அப்போ உங்கள யாருப்பா கேக்குறது”..
ரமேஷ்! கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சேதுவின் சிந்தையை பதம் பார்த்தது...

“அப்பாவும் தப்புதாண்டா பண்ணிட்டேன் கண்ணா சாரிடா?..”
மகனை வாரி அணைத்து நெஞ்சோடு அள்ளிக்கொண்டு வாசலுக்கு ஓடினான்..
அங்கு! அவனுக்காக காத்து நின்றது அவனது ஹோண்டா பைக்....
மகனை முன்னால் வைத்து கடற்கரையை நோக்கி கிளம்பினான்..
அங்கு! ரமேஷ் மிக ஆனந்தமாய் கண்டுகளித்தான், நிஜத் திமிங்கலங்கள்
நீந்தும் கடலை ஆனால் இப்போது சேதுவுக்கு பயமில்லை...
கடலை ரசிக்கும் அந்த சிறு கண்களை.. நெஞ்சினிக்க பார்த்து ரசித்தான் சேது...
மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்...
மகனை உயிர்கொல்லி விளையாட்டிலிருந்து காத்த நான் ..
இனி ஒருபோதும் உறவுகொல்லி வலைத்தளங்களை அதிகம் பார்ப்பதில்லை என முடிவெடுத்தான்...
எண்ணமும் எழுத்தும்
பாகை இறையடியான்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.