Published:Updated:

அவர்கள் மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன? - இப்படிக்கு ஏழை இளைஞன்

Representational Image

என் கரத்தை பிடித்து வீட்டருகே உள்ள மயில்கள் உறங்கும் பழைய வீட்டிற்கு அழைத்துச் சென்று மயிலுக்கு அரிசி போட சொல்கிறாள்... நான் வரலன்னாலும் நீயே தினமும் என் நியாபகமா மயிலுக்கு அரிசி போடு என்கிறாள்...

Published:Updated:

அவர்கள் மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன? - இப்படிக்கு ஏழை இளைஞன்

என் கரத்தை பிடித்து வீட்டருகே உள்ள மயில்கள் உறங்கும் பழைய வீட்டிற்கு அழைத்துச் சென்று மயிலுக்கு அரிசி போட சொல்கிறாள்... நான் வரலன்னாலும் நீயே தினமும் என் நியாபகமா மயிலுக்கு அரிசி போடு என்கிறாள்...

Representational Image

நம்ம ஊர் பாத்ரூம் நாகரிகம்தான் நமக்கு தெரியுமல்லவா? சில நேரங்களில் பட்டம் படித்துள்ள நாம் கூட முறையான நாகரிகத்தை பின்பற்றுவது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை...

சிறுநீர் கழிக்கும் தொட்டியில் நிரம்பிக் கிடக்கும் பீடித் துண்டுகள்... பக்கெட்டில் தண்ணீரோடு கலந்திருக்கும் பலரது மஞ்சள் சிறுநீர்... அவசரமாக வந்ததால் தெரியாத்தனமாக அன்று ஒரு பொதுக்கழிவறையை உபயோகித்துவிட்டு கழிவு உறுப்புகளை அந்த பாத்ரூம் பக்கெட்டில் உள்ள தண்ணீரை கொண்டு சுத்தப்படுத்தினேன்...

அடுத்த சில நாட்களில் கழிவுறுப்பு அருகே தொற்றுக்கிருமியால் அழையா விருந்தாளியாக வந்தது ஒரு கட்டி... உட்கார முடியவில்லை... ரொம்பவே சிரமப்படுத்திய அந்தக் கட்டியை அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற முடிந்தது...

பைல்ஸ் ஆப்ரேசனுக்கு தேவையான கருவிகளை வாங்கி வாருங்கள் என்று நர்ஸ் சொன்னதை வைத்து எனக்கு பைல்ஸ் என்று நினைத்துக்கொண்ட அம்மா... ஏன் இவ்வளவு நாள் பைல்ஸ் இருக்கறத எங்ககிட்ட சொல்லல முன்னாடியே இது தெரிலயா இப்ப பாரு இது எவ்வளவு செலவு வைக்குதுனு என்று எரிந்து விழுந்த அப்பா...

ஐய்யய்ய அந்தப் பையனுக்கு பைல்ஸ்ஸாம் என்று அருவருப்பாய் பேசிய ஊர்க்காரர்கள்...

அத்தனை பேருக்கும் "பைல்ஸ்லாம் இல்ல... சின்ன கட்டி... அவ்வளவு தான்..." என்று உரக்க பதில் சொன்னார் நர்ஸ் அக்கா...

அந்த கட்டி தந்த வேதனையை விட சுற்றம் பார்த்த அருவருப்பான பார்வை என்னை பாடாய்படுத்தியது... சிலர் த்தூ என்றுகூட சொன்னார்கள்...

Representational Image
Representational Image

அறுவை சிகிச்சை முடிந்து கட்டி ஆறும்வரை அத்தனை பேரிடமிருந்தும் என்னை காப்பாற்றித் தேற்றியவர் அந்த நர்ஸ் அக்கா ஒருவர் தான்... அவருக்கு இன்றுவரை நான் நன்றி சொல்லவில்லை... நான் செய்ததெல்லாம் நர்ஸ் அக்காவுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டுமென்ற பிரார்த்தனை மட்டுமே...

அவருக்கு அழகாகப் பிறந்தது ஒரு பெண் குழந்தை... அவருடைய வளைகாப்புக்கும் நான் செல்லவில்லை... குழந்தை பிறந்தபோது மருத்துவமனையிலும் சென்று பார்க்கவில்லை... ஆதலால் அவருக்கு என் மேல் கொஞ்சம் கோபம்...

நான் கொஞ்சம் அமைதியானவன் என்பதால் அவரது குடும்பத்தினர் அந்தக் குழந்தையை முதலில் என்னிடம் கொடுக்க தயங்கினார்கள்... குழந்தையுமே முதலில் வர தயங்கினாள்...

செல்போனில் "மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூ செண்டாலே" பாடலை ஓடவிட்டேன்... அவ்வளவுதான் குழந்தை என்னிடம் ஒட்டிக்கொண்டாள்... டைல்ஸ் தரையில் தலையணையை வைத்து அதன்மேல் அவளை உட்கார வைத்து சர்ரென்று வழுக்கிச் செல்லும் வாகன விளையாட்டு விளையாடினேன்... கட்டிலை சுற்றிச்சுற்றி ஓடிவந்து துரத்திப்பிடித்து விளையாடினேன்... டேபிளுக்கடியில் ஒளிந்துகொண்டு மாமா பிடி என்று சொல்வாள்... அவளை பார்க்காதது போல் பாவனை செய்து மழலையாக மாறி விளையாடினேன்...

சில வருடங்களில் வேறுபக்கம் சொந்த வீடு கட்டி குடிபெயர்ந்தார்கள்... இனி என்னை அவள் மறந்துவிடுவாள் என பயந்தேன்... பல மாதங்கள் நானும் அவளை பார்க்கவில்லை அவளும் என்னை பார்க்கவில்லை...

அன்று ஒருநாள் என் வீட்டிற்கு வந்தவள் என்னை பார்த்ததும் சட்டென்று ஓடிவந்து என் முன் கைகளை விரித்து நின்று தூக்கு மாமா என்கிறாள்... மடியில் ஏறி படுத்துக்கொண்டு கிச்சுகிச்சு மூட்டு மாமா என்கிறாள்... என் கரத்தை பிடித்து என் வீட்டருகே உள்ள மயில்கள் உறங்கும் பழைய வீட்டிற்கு அழைத்துச் சென்று மயிலுக்கு அரிசி போட சொல்கிறாள்... நான் வரலன்னாலும் நீயே தினமும் என் நியாபகமா மயிலுக்கு அரிசி போடு என்கிறாள்...

அவர்கள் மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன? நான் மாறிவிட்டேன்... மாற்றிவிட்டாள் அந்தக் குழந்தை... காயம்பட்ட மனதிற்கு ஆகச்சிறந்த மருந்து மழலைகள் மட்டும்தானே!

ஊர்க்காரர்கள் மாறவில்லை... ஏனோ இன்றுவரை என்னை அருவருப்பாகவே பார்க்கிறார்கள்... நான் ஏழை என்பதாலா, கூலிக்காரன் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாலா, தெரியவில்லை...

அவர்கள் மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன? நான் மாறிவிட்டேன்... மாற்றிவிட்டாள் அந்தக் குழந்தை... காயம்பட்ட மனதிற்கு ஆகச்சிறந்த மருந்து மழலைகள் மட்டும்தானே...

மயிலுக்கு தினமும் அரிசி போடுகிறேன்... ஒவ்வொரு முறை மயில் அகவும்போதும் அது அந்தக் குழந்தையின் சத்தமாகவே கேட்கிறது... கடவுளும் குழந்தையும் ஒன்று என சொல்வார்கள்... அவள் என்னிடம் மாமா என்று ஓடி வரும்போதெல்லாம் கடவுளின் உள்ளத்தை வென்றவனாகவே நான் நினைக்கிறேன்...!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.