என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

ஸ்ரீபவாசுரர் பிறவி மருந்தீசர் ஆன கதை!

##~##

''திருத்துறைப்பூண்டி என்றால், அந்நாளில் ஸ்ரீபவாசுர தேவஸ்தானம். அது மட்டும்தான். கோயிலின் 60 வேலி நிலம், சொத்துகளைப் பராமரிக் கவும் கோயில் நடைமுறைகளுக் காகவும்தான் ஊரே இருந்தது. அது சம்பந்தமான ஆட்கள் மட்டும்தான் ஊரில் இருந்தார்கள். கோயிலைச் சுற்றி அந்தணர்கள். வேறு யாருக்கும் இடம் இல்லை!'' - அந்தக் கால திருத்துறைப்பூண்டிக்கு அழைத்துச் செல்லக் கைப் பிடித்தார் பழனிச்சாமி. திருத்துறைப்பூண்டி தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர்!

 ''கோயிலுக்குத் தொலைவில் நாலாபுறமும் குப்பங் கள் இருந்தன. ரொக்ககுத்தகை, அரியலூர், அபிஷேககட்டளை, மானைக்கால், இரும்படையான் என்று பல குப்பங்கள். மக்கள் அங்குதான்

என் ஊர்!

வாழ்ந்தார்கள். கோயில் பண்ணைதான் இங்குள்ள பெரும்பாலானோருக்கு வேலை அளித்தது. தவிர, நிலப் பிரபுக்கள் இருந்தார்கள். 1947-ல் நாடு சுதந்திரம் அடைந்த எட்டாம் நாளில் ரொக்ககுத்தகையில் நான் பிறந்தேன். கோயிலில் தரும் உருண்டை சாதம்தான் அப்போது எல்லாம் உணவு. அதுவும்கூட என் தந்தை கோயிலில் வேலை பார்த்ததால் எனக்குக் கிடைத்தது. ஏனையோருக்கு அதற்கும் வழி இல்லை. நாட்டில் கடும் பஞ்சம் நிலவிய காலம் அது. மக்கள், பெற்ற பிள்ளைகளை நிலப் பிரபுக்களிடம் அடிமைகளாக விற்று கஞ்சி குடித்தார்கள்.

அப்போது படிப்பதற்கு இருந்த ஒரே பள்ளிக்கூடம் சத்திரம் நடுநிலைப் பள்ளி. தத்தித் தப்பி எட்டாவது வரை படித்துவிட்டு விவசாய வேலைக்குப் போனேன். அரையாள் கூலி ரெண்டனா. அதையும் எந்த முதலாளியும் கையில் கொடுக்க மாட்டார்கள். மணியக்காரர் மூலமாகத் தூக்கிப் போடுவார்கள். ஆண்கள் இரண்டு கைகளையும் நீட்டி அதை ஏந்திக் கொள்வார்கள். பெண்கள் தங்கள் முந்தானையை ஏந்தி கூலியை வாங்கிக்கொள்வார்கள். நெல்லாக இருந்தால் அரைப்படி நெல். அதையும் முந்தானையில்தான் வாங்க வேண்டும். மக்கள் விளைவித்த நெல் மூட்டை மூட்டையாகக் கோயிலுக்குள் போகும்போது, அதை விளைவித்தவர்கள் மட்டும் வெளியே தேரடியில் நின்று கூலி வாங்கிச் செல்வார்கள். ஒரு நாள் வேலைக்கு வராவிட்டாலும் முதலாளிமார்கள் தொழிலாளியைக் கட்டி இழுத்து வந்து வாயில் சாணிப்பால் ஊற்றி சவுக்கடி கொடுப்பார்கள். அப்படி ஒரு கொடுமையான காலகட்டம் அது!

என் ஊர்!

அந்த நாட்களில் திருத்துறைப்பூண்டியில் கடைத்தெரு என்று ஒன்று கிடையாது. பண்டரி செட்டியார் மளிகைக் கடையும் ராமசாமி செட்டியார் ஜவுளிக் கடையும் தான் அன்றைய கடைகள். அங்கேயும் யாரும் உள்ளே போகவோ துணிகளை, பொருட்களைத் தொட்டுப் பார்க்கவோ முடியாது. கையால் காட்டினால்,  எடுத்துத் தருவார்கள், காசைக்கொடுத்து வாங்கி வர வேண்டியதுதான். தாலிக்குத் தங்கம் வாங்க வேண்டும் என்றால் தஞ்சாவூருக்குத்தான் போக வேண்டும். பழைய சந்தைப் பேட்டை தெருவில் ஒரு டீக்கடையும் ரயிலடியில் ஒரு டீக்கடையும் இருந்தன. அங்கே வெளியில் குச்சியில் டம்ளர் மாட்டிவைத்து இருப்பார்கள். அதை எடுத்து நாமே கழுவி நீட்டினால் அதில் டீயை ஊற்றுவார்கள். டீயைக் குடித்துவிட்டு, கழுவி திரும்பவும் குச்சியில் மாட்டிவிட வேண்டும். இந்தக் கொடுமைகள் வெளியே தெரிய ஆரம்பித்த 1960-களில்தான் பி.சீனுவாச ராவ் இந்த மக்களை மீட்க களம் இறங்கினார். சென்னையில் இருந்த அவர் திருத்துறைப்பூண்டியில் குடியேறினார். அவரால்தான் கம்யூனிஸ்ட் கட்சி இங்கே தோன்றியது, வளர்ந்தது.  அவரோடு இணைந்து தோழர்கள் காத்தமுத்து, வெள்ளைக்காரனை எதிர்த்து தீரத்தோடு போராடிய மணலி கந்தசாமி, வீரப்பன், எம்.பி.கண்ணுசாமி, பி.எஸ்.தனுஷ்கோடி என்று பலர் மக்கள் விடுதலைக்காகப் போராடினார்கள். இயக்கம் இங்கே இப்படித் தான் வளர்ந்தது!

என் ஊர்!

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் வளர்ந்தது. சென்னையை அடுத்து ரயில் பாதை போடப்பட்ட ஊர் எங்கள் திருத்துறைப் பூண்டிதான். பூம்புகாரில் இருந்து காரைக்குடிக்குப் போக வர செட்டியார்கள் வசதிக்காக ரயில் பாதை போடப்பட்டது. வாசு அய்யர் என்று ஒரு மருத்துவர் இருந்தார். ஆர்.ஐ.எம்.பி. படித்தவர்தான்.  ஆனால், இந்த ஊரையே அவரது வைத்தியம் குணமாக்கியது. வெள்ளி சந்தை கூடும் நாளில் சுற்றுவட்டார மக்கள் அவ்வளவு பேரும் கூடுவார்கள். கோயில் தேரோட்டம் பெரும் கொண்டாட்டமானது. சத்திரம் பள்ளிக்கூடத்துக்கு எதிரே ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அப்புறம் பிரகந்நாயகி திரை அரங்கம். இவை இரண்டும்தான் பொழுது போக்குக் கூடங்கள்.

இப்படி வளர்ந்த ஊரில் இன்றைக்கு இல்லாத கடைகளே இல்லை.  கால மாற்றத்துக்கு ஏற்றாற்போல் ஸ்ரீபவாசுர தேவஸ்தானம் பிறவி மருந்தீஸ்வரராக மாறி இருக்கிறார். சந்தைப்பேட்டை மருத்துவமனையாக மாறி இருக்கிறது. எல்லா வசதிகளும் கொண்ட ஊராக மாறி இருக்கிறது. முக்கியமாக எல்லா மக்களுக்கும் எல்லா உரிமைகளும் இருக்கின்றன. இந்த மாற்றங்களின் பின்னணியில் நானும் ஒரு மூலையில் இருக் கிறேன்!''

-கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்