என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஒல்லி லூசியா, குண்டு செல்வியின் நல்லூர் லக லக!

ஒல்லி லூசியா, குண்டு செல்வியின் நல்லூர் லக லக!

##~##

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகில் இருக்கிறது நல்லூர் கிராமம். அன்று ஊரே களை கட்டி இருந்தது. ஆடி மூன்றாம் வெள்ளியில் நடந்த மாரியம்மனின் தீ மிதித் திருவிழாவை முன்னிட்டு அன்றைக்கு  'களபம் செல்ல.தங்கையா குழு’வின் நாட்டுப்புறப் பாட்டுக் கச்சேரி.

 திறந்தவெளி மேடையில் இரண்டே இரண்டு ஃபோகஸ் லைட்டுகள் இருபுறமும் வெளிச்சத்தை வாரிக் கொட்ட... இரவு 10 மணிக்கு சிவப்பு கலரில் சட்டை போட்டு  மேடை ஏறுகிறார்கள் இசைக் குழுவினர். நாகஸ்வரம், தவில், கீ-போர்டு, தபேலா, வாத்தியக்காரர்கள் சுதி சேர்த்துக் கொண்ட பின் கீ-போர்டில் 'மாரியம்மா, மாரியம்மா...’ என்று கரகாட்டக்காரன் பாடலை இசைக்க ஆரம்பித்தார் சுரேஷ். அவரோடு சேர்ந்து உச்சஸ்தாயியில் அலற ஆரம்பிக்கிறது தவிலும் தபேலாவும். பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் ஒட்டுமொத்த ஊரும் கூடுகிறது.

படாரென்று மேடை ஏறுகிறார் குழுவின் முன்னணிப் பாடகர் செந்தில் கணேஷ். ''வணக்கம் வணக்கம் நாம் பொறந்த பூமிக்குத்தான் வணக்கம்!'' என்று ஆரம்பிக்க... கூட்டத்தில் இருந்த சிறிய சலசலப்பு கள் காணாமல் போயின. அவரைத் தொடர்ந்து பாடகி தேன்மொழி வந்து அம்மன் பாடலைப் பாட கடவுள் வணக்கம் முடிந்து இளைஞர் ஜமா களை கட்ட ஆரம்பித்தது.

ஒல்லி லூசியா, குண்டு செல்வியின் நல்லூர் லக லக!

ஒல்லியான லூசியா, கொஞ்சம் குண்டான செல்வி என்று இரண்டு பெண்களும் கண்டாங்கி சேலையை முழங்கால் அளவுக்குத் தூக்கிக் கட்டி குதித்தோடி வந்தார்கள். தவிலின் இசைக்கு இருவரின் இடுப்பும் லயம் தவறாமல் ஒடிகின்றன, வளைகின்றன, அசைகின்றன. இளைஞர்களின் பக்கத்தில் இருந்து விசில் ஒலி பறக்கிறது. இப்படி இரண்டு பாட்டுக்கு ஒருமுறை இடையில் ஆடல் மங்கைகள் வந்து கூட்டத்தைக் குதூகலப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்!

நாட்டுப்புறப் பாட்டு என்றால் வெறும் பாட்டு மட்டும் பாடினால் போதாது என்று தெளிவாகத் தெரிந்துவைத்து இருக்கிறார் செல்ல.தங்கையா. இடையிடையே மயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என்று கிராமியக் கலைகள் அத்தனையும் அவர்களது குழுவினரால் மேடை ஏற்றப்படுகின்றன.

மூன்று மணி நேரத்தையும் தாண்டி நேரம் ஓடிக்கொண்டு இருக்க... கச்சேரியை முடிக்கலாமா என்று கண் ஜாடையில் விழாக் குழுவினரைக் கேட்கிறார் செல்ல.தங்கையா. அனுமதி கிடைத்ததும் கிராமத்துக் காவல் தெய்வம் கருப்புசாமி  மேடைக்கு வந்து அருள் வந்து ஆடப் போவதைக் கூட்டத்துக்கு அறிவிக்கிறார். அச்சு அசலாகக் கருப்புசாமி உருதரித்து கூட்டத்தின் மத்தியில் நிற்கிறார், அதுவரை ஆடல் மங்கைகளோடு குதியாட்டம் போட்டுக்கொண்டு இருந்த ராசு. செந்திலும் செல்ல.தங்கையாவும் தங்கள் பாட்டின் மூலமாகக் கருப்பை மேடைக்கு அழைக்கிறார்கள். கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஆடி மேடை ஏறுகிறது கருப்பு.    ஆவேச ஆட்டத்தின் மத்தியில் ஒரு சேவல் கொடுக்கப்பட... அதன் குரல்வளையைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது கருப்பு. பாடல் முடிவடையும் நேரத்தில், 'ஊரு செழிக்க வேணும், உழவு மழை பெய்ய வேணும், நாடு செழிக்க வேணும் நல்ல மழை பொழிய வேணும்’ என்று கிராமிய மரபுப்படி வேண்டுகிறார்கள் பாடகர்கள். கருப்பு மலையேறுகிறது. கச்சேரி நிறைவுறுகிறது!

- கரு.முத்து