லிம்கா பூங்கொடி
##~## |
திருச்சி உறையூர் ஏரியாவில் பூங்கொடியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மாருதி 800 காரில் 49 பேரை ஏற்றிக்கொண்டு மலைக்கோட்டையை ரவுண்ட் அடித்து லிம்கா சாதனை படைத்த பூங்கொடி, அடுத்து கின்னஸ் சாதனைக்குத் தயாராகி வரு கிறார்!
''வசதி வாய்ப்புகள் இல்லாத சாதாரணக் குடும்பம் என்னோடது. படிச்சது பத்தாவது வரைதான். வீட்ல இருந்தது ஒரே ஒரு சைக்கிள். அதுலதான் ஸ்கூலுக்குப் போயிட்டு வருவேன். அண்ணனுக்கு வேற ஊர்ல வேலை கிடைக்கவும், அந்த சைக்கிளை எடுத்துட்டு போயிட்டாரு. எனக்கு ரொம்ப ஏமாற்றமாயிடுச்சு. 'படிச்சு பெரிய ஆளானதும் சொந்தமா கார் வாங்க ணும்’னு அப்ப தோணுச்சு. அந்த எண்ணம்தான் பிற்காலத்தில் விஸ்வரூபம் எடுத்து, என் குடும்பத்துக்கே சோறு போடப் போகுதுனு அப்பத் தெரியலை.
திருமணம் ஆனதும் திருச்சியில் செட்டில் ஆனேன். கணவர் சுப்ரமணி ஒரு மில் மெக்கானிக். ரெண்டு பெண் குழந்தைகள் பொறந்தாங்க. அவர் வேலைக்குப் போய் வர டி.வி.எஸ். 50 வெச்சு இருந்தாரு. அதை ஓட்டக் கத்துகிட்டேன். 'கார் ஓட்டணும்னு ஆசையா இருக்கு’னு அவருகிட்ட சொன்னேன். 'சரி கத்துக்கோ’னாரு. எங்க ஹவுஸ் ஓனர் கார்களை வாங்கி விற்கிற தொழில் செஞ்சுகிட்டு இருந்தாரு. அவருகிட்ட கார் ஓட்டப் பழகினேன்.

அந்தச் சமயத்தில் என் மூத்தப் பொண்ணு அபிராமி ஒன்பதாவது படிக்க வேற ஸ்கூல் போனா. அவளை டூ-வீலர்ல கொண்டுபோய் விட்டுட்டு வந்தேன். பக்கத்தில் உள்ளவங்களும், 'என் குழந்தையையும் கொண்டுபோய் விடுங்க. பெட்ரோல் காசை ஷேர் பண்ணிக்குறோம்’னு சொன்னாங்க. அப்ப ஒரு கார் வாங்கிட்டா, இன்னும் நிறையப் பேரைக் கொண்டுபோய் விடலாமேனு ஒரு ஃபியட் காரை குறைச்ச விலைக்கு வாங்கினேன். டிரைவிங் லைசென்ஸுக்காக ஆர்.டி.ஓ. ஆபீஸுக்குப் போயிருந்தப்பதான், பெண்கள் பலரும் கார் ஓட்ட ரொம்ப ஆர்வமா இருக்குறதையும், அவங்களுக்குச் சொல்லித் தர சரியான ஆட்கள் இல்லைங்கிறதையும் தெரிஞ்சு கிட்டேன். என் பொண்ணு பேர்ல, 2005-ல் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிச்சேன். நானே எதிர்பார்க்காத அளவுக்குக் கிடுகிடுனு பிக்-அப் ஆகிடுச்சு!'' என்று சாமான்ய பெண்மணி சாதனைப் பெண்மணியான கதையை விறுவிறுப்பாகச் சொன்னார்.

அடுத்து அவரது வாழ்வில் நடந்ததுதான் எதிர்பாராத திருப்பம். ''டிரைவிங் ஸ்கூல் நல்லா போய்க்கிட்டு இருந்த சூழ்நிலையில் என் வீட்டுக்காரருக்குக் கட்டாய வி.ஆர்.எஸ். கொடுத்துட்டாங்க. நல்ல வேளை டிரைவிங் ஸ்கூல் தொழில் இருந்ததால் பிரச்னை இல்லாம தப்பிச்சோம். அவரும் தொழிலுக்குத் துணையா வந்தாரு.
எங்ககிட்ட இருந்த நாலு காரையும் வாட்டர் சர்வீஸ் செய்ய வெளியேதான் கொடுப்போம். அப்போதான் என்னோட பொண்ணு, 'ஏன் வெளியே கொடுக்கணும். நாமே வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் ஆரம்பிச்சா என்ன?’னு கேட்டா. நல்ல ஐடியாவா இருக்கேனு அதையும் ஆரம்பிச்சாச்சு. சில பெண்கள் என்கிட்ட வாட்டர் சர்வீஸ் செய்யக் கத்துகிட்டு, தனியா தொழிலும் தொடங்கி இருக்காங்க.
''இந்த வேலைகள் எல்லாம் ஒரு பக்கம் நடந்துகிட்டு இருந்தாலும், எதாவது சாதனை படைக்கணும்னு மனசுக்குள்ள ஓர் எண்ணம் ஓடிக்கிட்டே இருந்துச்சு. 1995-ம் வருஷம் சென்னையைச் சேர்ந்த கிரிபக்ரிங்குறவரு, தன் காரில் 43 பேரை ஏத்தி ஓட்டினதுதான் லிம்கா சாதனையா இருந்துச்சு. அதை முறியடிக்கணும்னு தோணுச்சு. அதைவிட அதிகமான ஆட்களை கார்ல ஏத்திகிட்டு ரவுண்ட் அடிக்க முடிவு செஞ்சேன். என்கிட்ட டிரைவிங் கத்துக்கிட்ட பலரும் என்னை நம்பி காரில் ஏறினாங்க. மாருதி 800 காரில் 49 பேரை ஏத்திகிட்டு மலைக்கோட்டையை ரெண்டு ரவுண்ட் அடிச்சேன். அந்த நிமிடங்களை இப்ப நினைச்சாலும் உடம்பு சிலிர்க்குது. இப்போ அடுத்து கின்னஸ் சாதனைக்கு தயாராகிட்டு இருக்கேன். என்ன சாதனைனு வெளியில் சொன்னா அதை வேற யாராவது காப்பி அடிச்சுடுவாங்க. அதனால் அது பரம ரகசியம்!'' என்று சிரிக்கிறார் பூங்கொடி.
- ஆர்.லோகநாதன், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்