என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர்!

கனவுக் கிராமம்!

##~##

''ஒரு கிராமம்னா இப்படித்தான்யா இருக்கணும்னு எல்லார் மனசுலயும் ஒரு கனவுக் கிராமம் இருக்கும்ல... பசுமையான வயல்கள், திரும்பின பக்கம் எல்லாம் குளங் கள், பிரமாண்டமான ஏரி, ஊருக்கு நடுவே கோயில்னு. எங்க ஊர் அந்தக் கனவுக் கிராமம்!'' - ஊர்க் கதை கேட்டதும், வடுவூருக்குத் தோரணம் கட்டுகிறார் 'பந்தல்’ சிவா. பந்தல் அமைக்கும் தொழி லுக்கு மரியாதை சேர்த்தவர்!

''வடபாதி, தென்பாதி, அடிச்சேரி, அக்கரை, சாத்தனூர், புதுக்கோட்டை, நெய்வாசல், கொண்டையூர், புள்ளவராயன்குடிக்காடுனு ஒன்பது கிராமங்களை உள்ளடக்கிய நடுநாடாக அந்தக் காலத்தில் விளங்கி இருக்கு வடுவூர். எங்க ஊர் கோதண்டராமர் கோயில் ராமர் சிலை அவ்வளவு அழகு. சீதாப் பிராட்டியை மீட்டுக்கிட்டு கோடியக்கரை வழியாக அயோத்திக்கு ராமர் திரும்பியபோது, அவரைத் தங்கள் கூடவே

என் ஊர்!

இருக்கச் சொல்லிக் கேட்டாங்களாம் அந்த ஊர் மக்கள். அவங்களோட ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாத ராமர், அவங்களோட பாசத்துக்குக் கட்டுப்பட்டு தன்னைப் போலவே ஒரு சிலையைச் செய்து அவங்களுக்குத் தந்தாராம். ஒரு பிரளயத்தில் அந்தச் சிலை பூமிக்கு அடியில் புதைந்து போக, தஞ்சாவூரை ஆண்ட மன்னன் கனவில் வந்த ராமர், அந்தச் சிலையை மீட்டு வரச் சொல்லி சொன்னாராம். மன்னர் சிலையை மீட்டுக்கிட்டு வர்ற வழியில் இங்கு இருந்த கோதண்டராமர் கோயிலில் ஓய்வு எடுத்து இருக்கார். அப்ப அந்த ராமர் சிலையைப் பார்த்த மக்கள், 'எங்க ஊர் கோயில்லயே இந்தச் சிலையை வைங்க’னு  சொல்லிக் கேட்க, சிலையையும் வெச்ச இடத்தில் இருந்து நகர்த்த முடியலையாம். அற்புதமான அந்தச் சிலை, எங்க ஊர் சொத்தான கதை இது. வடுவூர்னா வடிவழகுனு பெயர் வர, ராமர் செஞ்ச ராமரும் ஒரு காரணம்.

ஒரு காலத்தில் மூலிகை வனம் சூழ இருந்து இருக்கு எங்க ஊர். கோவில்வெண்ணிப் போரில் ஜெயிச்ச கரிகாலச் சோழன் தஞ்சாவூர் திரும்பினப்ப,  போரில் அடிபட்ட வீரர்களுக்கு இங்கே வைத்தியம் பார்த்தாங்களாம். வடுக்களை ஆற்றின ஊர்ங்கிறதாலும் வடுவூர்னு பெயர் வந்ததாச் சொல்வாங்க.

மன்னர் ஆட்சிக் காலத்திலேயே படை வீரர்கள் பலரைத் தந்த ஊர் இது. சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி படையில் எங்க ஊர்க்காரங்க கணிசமானவங்க இருந்து இருக்காங்க. நேதாஜிக்கு நெருக்கமாக இருந்த ராஜகோபால் எங்க ஊர்க்காரர்தான். சுதந்திரத்துக்குப் பிறகு, எங்க ஆளுங்க கவனம் விளையாட்டில் திரும்பி டுச்சு. விளையாட்டுக் கிராமம்னு அடைமொழியே உண்டு. 1964-ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் எங்க ஊரைச் சேர்ந்த ராஜசேகரன் பங்கெடுத்துகிட்டார். அவரில் இருந்து தொடங்கி பல தேசிய, மாநில அளவிலான சாம்பியன்களை உருவாக்கி இருக்கு வடுவூர். கபடிக்கு ராஜராஜேந்திரன், கைப்பந்தாட்டத்துக்கு ராமமூர்த்தி, பாண்டியன், தடகளத்தில் தமிழ்ச்செல்வன், பெண்களில் செல்வராணி, கவிதானு ஏகப்பட்ட சாம்பி யன்ஸ் இங்கே இருக்காங்க. 'ஸ்போர்ட்ஸ் கோட்டா’ மூலம் மட்டும் எங்க ஊரில் இதுவரை சுமார் 250 பேர் அரசுப் பணியில் சேர்ந்து இருக்காங்க.

என் ஊர்!

ஊரைச் சுத்தி ஏகப்பட்ட நாடகக் குழுக்கள் உண்டு. சரித்திர நாடகம், சமூக நாடகம்னு நாடகங்கள் நடந்துகிட்டே இருக்கும். எந்த நாடகம் நடந்தாலும் 10 ஆயிரம் பேர் பார்க்க வர்றது எங்க ஊர் அதிசயம். பூபாளம் சேண்டப்பிரியர்ங்கிற பெரியவர் வளர்த்துவிட்ட மரபு இது.

வடுவூரோட அடையாளம் ஏரி. எங்களுக்கு முக்கிய மான பொழுதுபோக்கு இடமே அதுதான். பெரியபறவை கள் சரணாலயம் இது. எந்தெந்த நாட்டில் இருந்தோ வரும் ஆயிரக்கணக்கான பறவைகளை இங்கே பார்க்க லாம். ஏரிக்கு நடுவில் ஓர் அய்யனார் கோயில் உண்டு. அய்யனாரின் தலையைத் தண்ணீர் தாண்டினால் அணை உடைஞ்சுடும். தண்ணீர் தாண்டாமப் பார்த்துக்கணும்.  

என் ஊர்!

பல இனத்துக்காரங்க இருந்தாலும் ஒற்றுமைக்குப் பேர் போன ஊர் வடுவூர். இங்கு உள்ள புகழ்பெற்ற வேதப் பாடசாலையில் திருவாய்மொழி தமிழ்லயும் பயிற்று விக்கறதை அவசியம் குறிப்பிடணும். ஊர் பஞ்சாயத்தையும் அவசியம் குறிப்பிடணும். எந்தப் பிரச்னை வந்தாலும் எங்களுக்குள்ள பேசித் தீர்த்துக்குவாங்க.

வெளியூர் ஆளுங்க எங்க ஊருக்கு வந்தா நாங்க கூட்டிட்டுப் போற முக்கியமான இன்னோர் இடம் ஜெகதீஸ் அய்யர் ஹோட்டல். அங்கே கிடைக்கும் கேசரி யின் ருசி... சில விஷயங்களைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. இது அந்தக் கேசரிக்கும் பொருந்தும், எங்க வடுவூருக்கும் பொருந்தும்!''

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்