தஞ்சையில் மகளிர் மட்டும் ஆச்சர்யம்
##~## |
''தஞ்சை பர்மா காலனி மீன் சந்தைக்கு வாங்க.... ஆச்சர்யம் நிச்சயம்!'' - வாசகர் ராஜப்பா தகவல் சொன்னார். மீன் சந்தையில் என்னஆச்சர் யம் காத்திருக்கும் என்று யோசித்துக்கொண்டே நுழைந்தால், உள்ளே பெண்களே கடைகளில் மீன் விற்றுக்கொண்டு இருந்தார்கள். சுற்றுமுற்றும் பார்த்தால் மீன் வெட்டிக்கொண்டு இருந்தவர்களும் பெண்களே!
கத்தியால் மீன்களைத் துண்டுபோட்டுக் கொண்டு இருந்தார் சுமதி. சும்மா சொல்லக் கூடாது. கைகள் கத்தியோடு விளையாடுகின்றன. ''நல்லா படிச்சு இருந்தா நல்ல வேலைக்குப் போய் இருக்கலாம். படிப்பு இல்லையே. அதான் மீன் வெட்ட வந்துட்டேன். காலையில் 5 மணிக்குக் கத்தியை எடுத்தா 11 மணி வரைக்கும் கூட்டம் இருக்கும். இது ஆவணி மாசங்கிறதால் டல் அடிக்குது. மீனுக்குத் தகுந்த மாதிரிதான் வெட்டுக் கூலி. கிலோவுக்கு 10 ரூபாய்ல இருந்து 30 ரூபாய் வரை வாங்குவோம். 'பொம்பளை ஆளுங்க சுத்தம் பண்றதால குழம்புப் பக்குவத்தில் இருக்கும்னு தேடி வந்து வாங்குறாங்க. இந்தக் காலத்தில் ஒருத்தர் சம்பாதிக்கற வருமானம் புள்ளைங்க படிப்புக்கே பத்த மாட்டேங்குது. மீன் வெட்டுறதில் தப்பு ஒண்ணும் இல்லையே. அதான் துணிஞ்சு கையில கத்தியை எடுத் துட்டேன்!'' என்கிறார்.

''நான் என்ன ஐஸ் மீனா விக்கிறேன்? மீனைக் கையில் வாங்கிப் பாரு. உயிர் இருக்கா இல்லை யானு தெரியும்!' என்று சீரியஸாக வியாபாரம் பேசிக்கொண்டு இருந்த சிவமணி லட்சுமிக்கு வயது 66. 'கீழவாசல் சந்தைக்குப் போய் விலை கேட்டுட்டு வா. அங்க விக்கிற விலைக்கு ஒரு பைசா கூட இருந்தாலும் இந்த மீன் உனக்கு இனாம். பொம்பளைங்க வியாபாரம் நேர்மையா இருக்கும்பா!'' என்று தில்லாகப் பேசிக்கொண்டு இருந்தவரிடம் அவருடைய கதை கேட்டேன்.
''வீடு வீடாகப் போய் மீன் வித்துக்கிட்டு இருந் தேன். இங்கே சந்தை ஆரம்பிச்சதும் வந்துட்டேன். ஒரு காலத்தில் இந்த ஏரியாவில் ரவுடிங்க ஜாஸ்தி. அதனால இங்கே வரவே வெளி ஆளுங்க பயப்படுவாங்க. இந்தச் சந்தை ஆரம்பிச் சப்பக்கூட தொடக்கத்தில் வரத் தயங்குனாங்க. அப்புறம் பொம்பளைங்கதான் சந்தை நடத்து றோம்னு தெரிஞ்சதுக்குப் பிறகுதான் கூட்டம் வர ஆரம்பிச்சுது. என் வீட்டுக்காரர் காலமாகி 10 வருஷமாயிடுச்சு. புள்ளைகளை எல்லாம் நல்லா படிக்கவெச்சு கட்டியும் கொடுத்துட்டேன்!'' என்கிறார்.
சின்ன வயதில் இருந்தே மீன் வெட்டும் சமீர் பானுவின் வீட்டுக்காரர் டிரைவராம்.''கல்யா ணத்துக்கு முன்னாடி இருந்தே மீன் வெட்டிக் கிட்டு இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச நாள் விட்டு இருந்தேன். விலைவாசி யாரை விட்டுச்சு? திரும்ப வந்துட்டேன். புள்ளைங்க இப்ப இந்தக் காசுலதான் படிக்குதுங்க. மீன் நாறலாம். மீன் வித்த காசு நாறாதுப்பா'' என்கிறார் சமீர்பானு முத்தாய்ப்பாக!
- க.ராஜீவ்காந்தி, படங்கள்: ந.வசந்தகுமார்