என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

மாதா உன் கோவிலில்...

வேளாங்கண்ணி புனித விழா!

##~##

சின்ன தேர், அதில் மாதாவின் படம், ஒலிபெருக்கியில் மாதாவின் மகிமைகளைச் சொல்லும் பாடல்கள்... வேளாங்கண்ணிக்கு நடைப்பயணமாகச் செல்வது அவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்தது!

 காலை 4 மணிக்கு நடக்கத் தொடங்குகிறார்கள். 11 மணி வரை இடைவிடாத நடை. கிட்டத்தட்ட 10 கி.மீ. நடந்த பின் கிடைக்கும் இடத்தில் ஓய்வு. மர நிழலோ, கடை வாசலோ, வீட்டுத் திண்ணையோ... எதுவாக இருந்தாலும் அங்கே ஓய்வு. மாலை 3 மணிக்கு மீண்டும் பயணம் தொடங்குகிறது. இரவு 10 மணி வரை நடக்கிறார்கள்.

''கொல்லிமலையில் இருந்து கிளம்பி ஆறு நாளில் இங்கே வந்து சேர்ந்துட்டோம். நாங்க 150 பேர் வந்தோம். ஆறு நாளில் எங்களுக்கு வெறும்

மாதா உன் கோவிலில்...

500-தான் செலவாகி இருக்கு. தண்ணீர், நீர் மோர், உணவு என்று எல்லாமும் வழியில் பொதுமக்கள் தருகிறார்கள். சில ஊர்களில் தேவாலயங்கள் போன்ற இடங்களில் தங்கவும் வழி செய்து கொடுக்கிறார்கள்!'' என்கிறார் கொல்லிமலையில் இருந்து வந்து இருக்கும் கர்ணா.

மாதா உன் கோவிலில்...

''இது வெறும் மத நம்பிக்கை மட்டும் அல்ல; ஆரோக்கியப் பயணம். செல்வச் செழிப்போடு இருப்ப வர்கள் சாலையில் பாதசாரியாக நடந்து, கிடைக்கும் இடத்தில் கிடைத்த உணவைச் சாப்பிட்டு, கிடைத்த இடத்தில் படுத்து எழுந்து எதுவும் இல்லாத நாடோடிகளாக வாழ்கிற வாழ்க்கை இதில் இருக்கிறது. எதுவும் நிலை இல்லை, வெறும் உடம்பு மட்டும்தான் நம்முடையதுங்ற நெனைப்பை விதைக்கிறது இந்தப் பயணம். இதை மாதாவின் மகிமையாகக் கொண்டாலும் சரி, பாத யாத்திரையின் பலனாக நினைச்சாலும் சரி'' என்று பயண நோக்கம் சொல்கிறார் திருச்சி பாலு.

மாதா உன் கோவிலில்...

சாதி, மதப் பாகுபாடு இல்லாமல் பல தரப்பின ரும் வருகிறார்கள். வயது வேறுபாடோ, ஏழை, பணக்காரர் வித்தியாசமோ இல்லை.  இப்படி தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகிறவர்களைத் தவிர இதர மாநிலங்களில் இருந்து கார், பஸ், ரயில் என்று பல வழிகளிலும் எல்லா மார்க்க மாகவும் வந்து குவிகிறார்கள் பக்தர்கள். நிரம்பி வழிகிறது வேளாங்கண்ணி. குட்டைப் பாவாடை, டி-ஷர்ட், ஜீன்ஸ்-பேன்ட், முண்டா பனியன், ஜிகுஜிகு புடவை, சுடிதார், ஸ்கர்ட் என்று எல்லா விதமான ஆடை அலங்காரங்களோடும் காணப்படுகிறார்கள் பெண்கள். கலரிங் தலை, அரைக்கால் சட்டை, காதில் வாக்மேன் சகிதம் முற்றிலும் ஊருக்குச் சம்பந்தம் இல்லாத உடைக் கலாசாரத்தில் காணப்படுகிறார்கள் ஆண்கள். ஸ்டுடியோக்களில் மாதாவின் படத்துக்கு அருகில் குடும்பம் சகிதமாகப் படம் எடுத்துக்கொள்கிறார்கள். தேவாலயக் கடையில் 'பொருத்து தேங்காய்’ (உடல் நல குறைபாடுகள் நீங்க பொருத்தனை செய்து வாங்கப்படும் தேங்காய்) வாங்கி அதை மாதாவின் பாதத்தில்வைத்து எடுத்துச் செல்கி றார்கள் குடும்பத் தலைவிகள். அப்படியே மறக்காமல் பொரி வாங்கிக்கொள்கிறார்கள். தேங்காய்க் கீற்றும் பொரியும்தான் ஊரில் எல் லோருக்கும் கொடுக்க வேண்டிய பிரசாதங்கள்.

நகரத்தின் சரிபாதியைக் கடைகள் ஆக்கிரமித்து இருக்கின்றன. மாதா சிலைகள், மெழுகுவத்தி, பனை ஓலைப் பொருட்கள், ஆடைகள் என்று சகலமும் கிடைக்கின்றன. எதை எடுத் தாலும் ஐந்து ரூபாய் கடைகள், பொரி, கீ-செயின், கேசட் என்று கலந்துகட்டி விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன. கடற்கரையில் உயரமான பரண் அமைத்து அதில் அமர்ந்துகொண்டு ''எப்பா அங்கெல்லாம் போகாதீங்க, ஆழம் அதிகம். சிவப்புக் கொடி கட்டி இருக்கும்இடத்தைத் தாண்டி போகாதப்பா'' என்று எச்சரிக்கை விடுத்து பக்தர்களைப் பாதுகாக்கிறார்கள் காவல் துறையினர். மோட்டார் படகில் வலம் வந்து மக்களை எச்சரிக்கிறது கடலோரக் காவல் படை. அதை மதித்தும், புறக்கணித்தும் குளித்து முடித்த பக்தர்கள், சுடச்சுட பொரித்த மீனை வாங்கி உண்டுவிட்டு, ஈர உடையோடு மாதாவை வணங்கச் செல்கிறார்கள்!

- கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்