
ராஜமுருகன், படங்கள்: தி.விஜய்
நண்பர் குடும்பத்துடன் கோடை விடுமுறையில் அவருடைய பூர்வீகக் கிராமத்துக்குச் சென்றிருந்தோம். நகரத்திலேயே வளர்ந்த நண்பரின் குழந்தை, அங்கு மாட்டிலிருந்து பால் கறப்பதை முதன்முதலாக அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்தப் பாலைக் காய்ச்சி ஆற்றிக் குடிக்கக் கொண்டு வந்தால், 'அய்யே... இந்தப் பால் அழுக்கு. நான் பாக்கெட் பால்தான் சாப்பிடுவேன். அது வாங்கிட்டு வாங்க!’ என அடம்பிடித்தாள். 'அடக் கொடுமையே..!’ என அங்கலாய்க்க முடியவில்லை. ஏனென்றால், நண்பரின் மனைவி, 'அவ ரொம்ப சுத்தக்காரி. எப்பவும் ஹைஜீனிக்!’ எனச் சிரித்ததுதான் எனக்குக் கொடுமையாக இருந்தது. அந்தக் குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தால், தக்காளி எதில் விளைகிறது... செடியிலா, கொடியிலா, மரத்திலா எனத் தெரியவில்லை! 'தக்காளி, ஷாப்பிங்மால் பஜாரில் தானாக உருவாகிறது’ என நினைத்துக்கொண்டிருக்கிறாள். இப்படி நாம் சாப்பிடும் பொருள் எங்கிருந்து வருகிறது, அதை யார், எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதே இல்லை. விளைவு... ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெறும் எந்தக் குழந்தையும் 'நான் விவசாயம் படிப்பேன்’ எனப் பெருமிதமாகச் சொல்வது இல்லை. 'டாக்டர், கலெக்டராகி சமூகத்துக்கு நல்லது செய்வேன்’ என்கிறார்கள். ஏன், விவசாயி ஆகி சமூகத்துக்கு நல்லது செய்ய முடியாதா?
நாம் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் உழவுத் தொழிலின் மேன்மை அபரிமிதமாகவும்,
நஞ்சில்லா வேளாண்மையின் வளர்ச்சி ஏறுமுகமாகவும் இருக்கும் என்கின்றன பொருளாதார அறிக்கைகள். உழவின் வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டே நாட்டின் வளர்ச்சி கணக்கிடப்படுமாம். அதனால் விவசாயம் என்ற தொழிலின் மேன்மைக்காக இல்லாவிட்டாலும், அது லாபகரமான ஒரு தொழில் என்பதற்காகவாவது குழந்தைகளிடம் உழவுத் தொழிலின் பெருமையையும் அவசியத்தையும் உரக்கச் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம். உழவு இல்லையேல் எதுவும் இல்லை என்ற உண்மையை ஒவ்வொரு குழந்தையும் உணரச் செய்ய வேண்டும். அதற்கு முதலில், விவசாயம் லாபம் தராத, யாரோ கிராமத்து மனிதர்கள் செய்யவேண்டிய ஒரு தொழில் என்கிற நம் மனப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மில்லியன்கள், கோடிகளில் பணத்தை தண்ணீராகச் செலவுசெய்து நிலவுக்கும், செவ்வாய்க்கும் ராக்கெட் விடும் நம் விஞ்ஞானம், இயற்கையின் உதவியோடு விவசாயியின் பல மாத உழைப்பில் விளையும் அரிசி, காய்கறிகளின் வளர்ச்சிக்கும் சந்தைப்படுத்துதலுக்கும் ஆபத்து இல்லாத நவீன உத்திகளைக் கண்டுபிடிக்காதது ஏன்? வெளிநாட்டுப் பூச்சிக்கொல்லி கம்பெனிகளுக்கும், மரபணு கம்பெனிகளுக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் நம் அரசு, உள்ளூர் உழவனின் கோவணத்தைப் பிடுங்குவது ஏன்? பருப்பு விளைய மிகச் சரியான நில அமைப்பும், பருப்பு அதிகம் உண்ணும் மக்கள் நிறைந்த பகுதியாகவும் நம் நாடு இருக்கையில், உலக அளவில் அதிகம் பருப்பை நாம்தான் இறக்குமதி செய்கிறோம். எள்ளும் நிலக்கடலையும் நன்கு விளையும் நம் நாட்டில்தான் பாமாயிலின் இறக்குமதி சக்கை போடு போடுகிறது.
'உழவனே உணவு படைப்பவன்’ என்ற உண்மை உணர்ந்து, இயற்கை வழி வேளாண்மையை மதித்து, நுகர்வோர்கள் சரியான பொருளைத் தேடி சரியான மதிப்புக்கு வாங்கும்போது மட்டுமே சுமுக நிலை உருவாகும். குழந்தைகளிடமும் மற்றவருக்காக உழைக்கக் கற்றுத்தருவதைவிட, நமக்காகவும் நம் உணவுக்காகவும் உழைக்க கற்றுத்தருவதே சிறந்த கல்வியாக அமையும்.

நம்மாழ்வார் ஐயாவின் கடின உழைப்புக்குப் பலனாக இன்றைக்கு பல இளைஞர்கள் விவசாயத்தை முழு நேரத் தொழிலாக எடுத்துச் செய்ய முன்வந்திருக்கிறார்கள். அப்படி ஐ.டி தொழிலை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் செய்துவரும் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். தன் பத்து வருட உழைப்பைச் சேமித்து நிலத்தில் முதலீடு செய்திருக்கிறார். அந்த நிலம் பல வருடங்களாக ரசாயனப் பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்ட நிலம். அதில் உடனடியாக இயற்கை விவசாயம் செய்வது சாத்தியம் இல்லாதது. ஆனால், 'எத்தனை வருடங்களானாலும் அங்கே இயற்கை விவசாயம் செய்வேன்’ எனக் காத்திருக்கிறார் அந்த நண்பர்.
இதை நினைத்து ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் மண்ணை மலடாக்கி வைத்திருக்கிறோமே என வருத்தமாகவும் இருந்தது. அப்படியும் அந்த விவசாய நிலங்கள் கடுமையான விலைக்குத்தான் விற்கப்படுகின்றன. ஏனென்றால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், விவசாய நிலங்களை வீட்டு மனையாக்கி விற்றுத் தீர்த்துவிடுகிறார்கள். அப்புறம் எங்கிருந்து விவசாய நிலத்தை மீட்டெடுப்பது? ஒரு ஏக்கர் நிலத்தை 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குவது எல்லோராலும் முடியாத ஒன்று. ஆனால், இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அரசாங்கமோ, இருக்கிற விளைநிலங்களையும் விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தர முனைப்பாக இருக்கிறது.
உழவு இல்லையேல் உலகம் இல்லை. இதைப்போன்ற உண்மை வேறு எதுவும் இல்லை. அதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்!
- பரிமாறலாம்...
பனிவரகு பால் பணியாரம்
தேவையான பொருட்கள்:
பனிவரகு அரிசி - 150 கிராம்
உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
பால் - 300 மி.லி
வெல்லம் - 100 கிராம்

செய்முறை:
* பனிவரகு அரிசியை ஆறு மணி நேரமும், உளுந்து மற்றும் வெந்தயத்தை அரை மணி நேரமும் ஊறவைத்துக் கொள்ளவும்.
* இவற்றை இட்லிமாவுப் பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்து புளிக்கவைத்து பணியாரக் கல்லில் சுட்டெடுக்கவும்.
* பாலை நன்கு காய்ச்சி வெதுவெதுப்பாக இருக்கும்போது, வெல்லத்தைக் கரைத்து பணியாரத்தை ஊறவிடவும்.
எலும்பை வலுப்படுத்தவும், செல்களைப் புதுப்பிக்கவும், ஜீரணத்தை ஓழுங்குபடுத்தவும் ஹார்மோன் சுரப்பிகளைச் சமநிலைப்படுத்தவும் உதவும் பாஸ்பரஸ் இதில் நிறைந்திருக்கிறது. நார் சத்து, புரதம், இரும்புச்சத்து என எல்லா சத்துக்களும் கலந்த உணவு இது.
சாமை தயிர் சோறு
தேவையான பொருட்கள்:
சாமை பச்சை அரிசி - 150 கிராம்
பால் - 1 டம்ளர்
தயிர் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:
* சாமை அரிசியை சுத்தம்செய்து மூன்று டம்ளர் நீர் சேர்த்து நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
* சோறு குளிர்ந்த பிறகு, பால் மற்றும் தயிர், பெருங்காயம் சேர்த்து கையால் நன்கு கலக்கி உப்பு சேர்க்கவும்.
* கொத்தமல்லி, மாதுளை, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்துப் பரிமாறவும்.
இரும்புச்சத்து அதிகம் உள்ள சிறுதானியம் இது. ரத்தசோகையைக் குறைக்கும் என்பதால், பெண்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். கோடையில் தயிரின் குளிர்ச்சியும் சுண்ணாம்புச்சத்தின் பயனும் ஒருசேரக் கிடைக்கும்.
ஹோம்மேடு வெந்தயக் கீரை!

ஸ்வீட் பாக்ஸ் போன்ற டப்பா ஏதேனும் தேர்ந்தெடுத்து, அதன் அடிப்பக்கம் நான்கு மூலையிலும் ஓட்டை போட்டுக்கொள்ளவும். அதில் மண்ணுடன் தேங்காய்நார்க் கழிவு, மண்புழு உரம், இலைதழை மக்கு, மக்கிய சமையலறைக் கழிவு என கிடைக்கும் உரங்களைப் போட வேண்டும். அதன் மேல் ஓரு கைப்பிடி வெந்தயத்தைத் தூவி கையால் கிளறி சமப்படுத்தி, பால்கனியில் வைத்து, தினம் தினம் கைப்பிடி தண்ணீர் தெளித்துவந்தால்,
15 நாட்களில் குளிர்ச்சியான, ரத்தசோகையை அண்ட விடாத வெந்தயக்கீரை வளர்ந்து நிற்கும். புளிக் குழம்பு, பொரியல், சப்பாத்தி, கூட்டு... என வகை வகையாக ஆர்கானிக் வெந்தயக் கீரையில் பைசா செலவு இல்லாமல் சமைக்கலாம்!