Published:Updated:

நல்ல சோறு - 12

நல்ல சோறு
பிரீமியம் ஸ்டோரி
News
நல்ல சோறு ( ராஜூமுருகன் )

ராஜமுருகன், படங்கள்: தி.விஜய்

ணவுப் பொருட்களின் மீதான அக்கறையும் அச்சமும் ஒருசேர அதிகரித்துவரும் காலம் இது. இதனால்தான், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்க அனைவரும் மெனக்கெடுகிறோம்; குறைந்த தீங்குள்ள பொருட்களை நாடுகிறோம். பெரும்பாலானோர் 'கீரை நல்லது’ என அதைத் தேடிச் செல்கின்றனர். ஆனால், கீரையிலும் கவனிக்கவேண்டிய பல அம்சங்கள் இருக்கின்றன. கீரை சமையலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை... 

விதைத்ததில் இருந்து கீரை விளைந்து பயன்தர, சராசரியாக 30 நாட்கள் ஆகும். இந்தக் குறுகிய காலத்தில் கீரையின் வளர்ச்சிக்காகவும், பூச்சி பிடிக்காமல் இருக்கவும், பச்சைப் பசேலென இருக்கவும், குறைந்தது மூன்று முறையாவது பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கிறார்கள். இந்த ரசாயனங்களின் வீரியம் குறைவதற்கு முன்னரே, கீரைகள் சந்தைக்கு வந்துவிடுகின்றன. சொல்லப்போனால், கீரையை அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பும் கடைசி நேரம் வரையிலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு தொடர்கிறது. இதனால் ஆரோக்கியம் என்ற நோக்கத்தில் நாம் வாங்கும் கீரையிலும் நஞ்சு கலந்துவிடுகிறது.

மற்ற காய்கறிகளைப்போல் அல்லாமல், கீரையில் மட்டும்தான் வேரைத் தவிர மற்ற அனைத்துப் பாகங்களையும் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். எனவே, கீரை வாங்கும்போது ரசாயனம் கலக்காமல் இயற்கையான முறையில் விளைந்த கீரைகளையே தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

நல்ல சோறு - 12

அதை எப்படிக் கண்டுபிடிப்பது? இயற்கையாக விளைந்த கீரையில் பூச்சி கடித்த ஓட்டை இருக்கும். அப்படியான கீரைகளைத் தயக்கமின்றி வாங்கலாம். பூச்சி கடித்திருந்தால், அதில் தவறு இல்லை. கீரைக் கட்டில் பூச்சி இருந்தால், அந்தக் குறிப்பிட்ட இலையை மட்டும் பயன்படுத்த வேண்டாம். அதேபோல அழுகிய, பழுப்பு நிறத்திலான இலைகளையும் அகற்றிவிட வேண்டும். கீரை மீது பச்சை வாசனை வந்தால், அது நல்ல கீரை. பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட கீரையில் வேதிப்பொருட்களின் வாசனை தூக்கலாக இருக்கும்.

கீரையை, தண்ணீரில் நன்றாக அலசிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். மறுநாள் சமையலுக்காக இன்றே கீரையை நறுக்கி வைக்கக் கூடாது. கீரையைப் பொறுத்தவரை நறுக்கியவுடனே பயன்படுத்திவிட வேண்டும். அப்போதுதான் அதன் இயல்பு மாறாமல் இருக்கும். கீரையைச் சமைக்கும்போது குறைந்த நீரில், குறைந்த தீயில், பாத்திரத்தை மூடிவைத்து சமைக்க வேண்டும். தண்ணீரில் கரையும் விட்டமின்கள் நிறைய கீரையில் இருக்கின்றன. எனவே கீரை சமைத்த தண்ணீரை வீணாக்காமல், சூப்பாகவோ ரசமாகவோ பயன்படுத்தலாம். கீரை சமைக்கும்போது, எந்தக் காரணத்துக்காகவும் அதனுடன் சமையல் சோடா பயன்படுத்தவே கூடாது. இது கீரையின் தன்மையை மாற்றி, அதன் நல்லியல்புகளையும் கெடுத்துவிடும்.

ஏராளமான கீரை வகைகள் இருப்பினும் நாம் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கீரைகளையே பயன்படுத்துகிறோம். அதுவும் ஒருசில கீரைகளை 'நோய் வந்தால்தான் பயன்படுத்த வேண்டும்’ எனத் தவறாக நினைத்து, விலக்கிவைத்துவிடுகிறோம். அனைத்து கீரைகளிலும் உடம்புக்குத் தேவையான ஏதோ ஒரு சத்து இருக்கிறது. தகுந்த இடைவெளிகளில் கீரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவரும்போது, அது உடலில் சரிவிகிதச் சத்துக்களைத் தக்கவைக்கிறது. மூக்கிரட்டை, முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி, பிரண்டை, அப்பக்கோவை இலை, பால் பெருக்கி, துத்தி, புளியாரை, திருநீற்றுப்பச்சிலை, சோம்புக் கீரை, வெங்காயத் தாள், தூதுவேளை, தவசிக் கீரை, கல்யாண முருங்கை, நெருஞ்சில், வாரநாராயணன், கண்டங்கத்திரி, சுக்கான், காசினி, குத்துப் பசலை, கொடிப் பசலை... என எத்தனையோ கீரைகள் இருக்கின்றன. அனைத்து கீரைகளிலும் 'விட்டமின் - ஏ’ சத்து நிரம்பியிருக்கிறது.

நிறைய நார்ச்சத்தும் குளிர்ச்சியும் நிரம்பிய கீரையை இரவு நேரங்களில் சாப்பிடும்போது, செரிமானம் ஆவதில் சிரமம் இருக்கலாம். அதேபோல தயிருடன் கீரையைச் சேர்த்து உண்ணும்போது குளிர்ச்சி அதிகமாகி, அஜீரணம் உருவாகலாம். கீரையுடன் இறைச்சி, மீன், பயறு போன்றவற்றைச் சமைப்பதைத் தவிர்க்கவும். கீரை உணவுக்குப் பின், ரசம் சாதம் அல்லது வெண்ணைய் எடுத்த மோர் சோறு எனச் சாப்பிட்டால் ஜீரணம் எளிதாகும். குழந்தைகளுக் கும் வயது முதிர்ந்தவர்களுக்கும், கீரையை நன்கு கடைந்தோ, சூப்பாகவோ, அரைத்துக் கலந்த சாதமாகவோ தரலாம். கீரையை தோல் நீக்கி, பருப்பு வகைகளுடன் சேர்த்துச் சமைக்கும்போது செரிமானம் எளிதாவதுடன் புரதம் முழுமையாகக் கிரகிக்கப்படும். கீரையில் மிளகாய்க்குப் பதில் மிளகு சேர்த்துச் சமைப்பது மருத்துவப் பலனை அதிகரிக்கும்.

சித்த மருத்துவம் குறிப்பிடும் 4,448 நோய்களில், 96 வகையான கண் நோய்களைப் போக்க, பொன்னாங்கண்ணி கீரை மிகச் சிறந்தது. இதில் நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி, சிவப்புப் பொன்னாங்கண்ணி என மூன்று வகை உண்டு. இதில் நாட்டுப் பொன்னாங்கண்ணி மற்றும் 'லயன் கீரை’ எனப்படும் சிவப்புப் பொன்னாங்கண்ணிக்கு மருத்துவக் குணங்கள் அதிகம். பார்வைக் குறைபாட்டைத் தவிர்க்க, வாரம் மூன்று முறைகளுக்கு மேல் இந்தக் கீரையை (சமைத்து) குழந்தைகளுக்குத் தரலாம். பொரியல், கூட்டு, சூப், ஜாம்... எனப் பலவிதமான முறைகளில் பொன்னாங்கண்ணியைச் சமைக்க முடியும்.

பரவலான கவனம் பெறாத மூக்கிரட்டை கீரை, உடல் சுத்திகரிப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நம் உடலில் ஓடும் தசவாயுக்களில் ஒன்று ஆபாணன் வாயு. இந்த வாயு, உடலின் கழிவுகளை வெளியேற்ற உதவி செய்கிறது. மூக்கிரட்டை கீரையைப் பிரட்டலாகவோ, கூட்டாகவோ, கஷாயமாகவோ சாப்பிடும்போது ஆபாணன் வாயு சமநிலைபட்டு உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. அதனால்தான் குழந்தை பெற்ற பெண்ணுக்கு முதல் உணவாக, மூக்கிரட்டை கீரையில் நல்லெண்ணெய் விட்டு வதக்கி, சோற்றுடன் பிசைந்து நாள் ஒன்றுக்கு மூன்று கவளங்கள் என மூன்று நாட்களுக்குக் கொடுப்பார்கள். இப்படிக் கொடுப்பதால் கருப்பைக் கழிவுகள் வெளியேற உதவுகிறது. இந்தக் கீரை, வாயுப் பிடிப்புக்கும் சிறந்த மருந்து.

'விட்டமின் கீரை’ எனப்படும் தவசி கீரை, அனைத்து அத்தியாவசியச் சத்துக்களும் கொண்டது. இதைப் பொரியல் செய்தோ, பாசிப் பருப்புடன் கூட்டாகவோ சமைக்கலாம். இதன் குச்சியை, வீட்டுத் தோட்டத்தில் நட்டுவைத்து வளர்க்கலாம். வாரம் ஒருமுறை இந்தக் கீரையை உண்ணும்போது, உடலில் நோய்எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதுடன் வளர்சிதை மாற்றமும் முறையாக நடக்கும்.

பசலைக் கீரையில் குத்துப் பசலை, பச்சைக் கொடிப் பசலை, சிவப்புக் கொடிப் பசலை... எனப் பல வகை இருந்தாலும், சிவப்பு வண்ணத்துக்கு சற்றுக் கூடுதல் மருத்துவக் குணம் உண்டு. இது கருவில் உள்ள சிசுவுக்கு நரம்பு தொடர்பான வியாதி வருவதைத் தடுக்கிறது. தாய்மார்களுக்கு, இரும்புச்சத்தைக் கொடுத்து, ரத்தச்சோகை வராமல் பாதுகாக்கிறது.

இத்தனை நன்மைகள் நிரம்பிய கீரையில், பூச்சிக்கொல்லி இல்லாத கீரையைத் தேர்ந்தெடுத்து வாங்கிச் சாப்பிடுவோம்!

- பரிமாறலாம்...

கீரை ஜாம்

தேவையான பொருட்கள்:

சிவப்பு முளைக்கீரை - 1 கட்டு

பொன்னாங்கண்ணி கீரை - 1 கட்டு

பசலைக் கீரை - 1 கட்டு

வெல்லம் - 3 கப்

நல்ல சோறு - 12

செய்முறை:

மூன்று வகை கீரைகளின் வேர்களையும் நறுக்கிவிட்டு, நன்றாக அலசிக் கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும். அதனுடன், சரி பங்கு  துருவிய வெல்லம் சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் வைத்து, மிதமான தீயில் கை படாமல் கிளறவும். நீர் வற்றிச் சுருண்டு, கரண்டியில் எடுக்கும்போது வெண்ணைய் பதத்துக்கு வந்ததும் இறக்கிவிடலாம். வெப்பம் குறைந்ததும் ஈரமற்ற ஜாடியில் சேமித்துவைத்து, சப்பாத்தி, ரொட்டி, தோசை என அனைத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் உணவுகளில்  இந்தக் கீரை ஜாமும் ஒன்று!

கம்பு சாலட்

தேவையான பொருட்கள்:

கம்பு (முளைகட்டியது) - 1 கப்

கேரட் துருவல் - 2 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் பூசணி (துருவியது) - 2 மேசைக்கரண்டி

இஞ்சி (துருவியது) - 1 தேக்கரண்டி

எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 4 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி (நறுக்கியது) - சிறிது

நல்ல சோறு - 12

செய்முறை:

முளைகட்டிய கம்பை, கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்களுக்கு வேகவைக்கவும். எலுமிச்சைச் சாற்றுடன் மிளகுத் தூள், உப்பு, இஞ்சி, வெங்காயம், கேரட், பூசணி ஆகியவற்றை ஒவ்வொன்றாகக் கலக்கவும். அதில் கம்பு சேர்த்துக் கலந்து, நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவினால், ஆரோக்கியமான சாலட் ரெடி!

கீரையின் நன்மைகள்!

நல்ல சோறு - 12

பெருங்காயம், பூண்டு பயன்படுத்தாதவர்கள், மூக்கரட்டை கீரையின் வேரை சிறிது தட்டி சாம்பாரில் போட்டுக்கொள்ளலாம். இதனால் சாம்பாரின் சுவை மாறாததோடு, வாயுத்தொல்லையும் நீங்கும்!

நல்ல சோறு - 12
நல்ல சோறு - 12

வல்லாரை கீரையைச் சமைக்கும்போது, புளி சேர்க்கக் கூடாது.

நல்ல சோறு - 12

புரதம் அதிகமாக உள்ள கீரைகள்... முருங்கை, அகத்தி.

நல்ல சோறு - 12

அகத்திக் கீரையில், பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் தேவையான சுண்ணாம்புச் சத்து நிறைந்திருக்கிறது.

நல்ல சோறு - 12

 உடைந்த எலும்புக் காயங்கள் விரைவில் குணமாக, பிரண்டைத் துவையல் உதவும்.

நல்ல சோறு - 12

 பருப்புக் கீரையில் ஒமேகா-3 நிறைந்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் குழந்தைகளும், இந்தக் கீரையை மிகக் குறைந்த அளவில் உண்ண வேண்டும்.

நல்ல சோறு - 12

 சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க, வெந்தயக் கீரை உதவும்.

நல்ல சோறு - 12

 அகத்திக் கீரை, உடலில் உள்ள நிக்கோட்டின்... போன்ற நச்சுக்களை நீக்கும்; குடல் புண்ணைச் சரிசெய்யும்.

நல்ல சோறு - 12

 முடக்கத்தான் கீரை, முடக்குவாதம் வராமல் தடுக்கும்.

நல்ல சோறு - 12

 கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்துக்கொண்டால், அது புற்றுநோய்க்குத் தடுப்பாக இருக்கும்; ஈரல் தொடர்பான நோய்களையும் தடுக்கும்.

நல்ல சோறு - 12

 திருநீற்றுப் பச்சைக் கீரை, நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கும்.

நல்ல சோறு - 12

 காமாலையால் உடல் இளைத்தவர்களுக்கு, பசலைக் கீரையை தினமும் சமைத்துத் தரலாம்!