Published:Updated:

தமிழன் 2.0

அப்டேட்டிங்...அதிஷா, ஓவியங்கள்: எம்.ஜெயசூர்யா

பீட்சா சாப்பிடுவான், பீர் குடிப்பான், பிள்ளைகளை சைட் அடிப்பான், மக்களுக்கு ஆபத்து என்றால் அரைபாடி லாரி பிடித்து அப்போதே கிளம்புவான்... இவன்தான் `ட்யூட்' தமிழன். ஹமாம் சோப், ஸ்ப்ளெண்டர் பைக், முட்டை பரோட்டா, நோக்கியா போன் என தனக்குன்னு ஒரு தனி ரூட்டு, தனி டேஸ்ட் வெச்சிருப்பான். தமிழனின் இந்த நிறம், குணம், மனம் எல்லாம் எப்படி மாறியிருக்கின்றன?

உணவு

பொழுதன்னிக்கும் திங்கிறது அரிசிச் சோறா இருந்தாலும், பரோட்டாதான் இவனுக்குக் கனவு, உணவு எல்லாமே! தாய்மாமன் தந்த காசுல திருவிழாக் கடையில பரோட்டா சாப்பிட்டு, வருஷம் பூரா அந்த ருசியை அசைபோட்டவன், கொஞ்ச வருஷமா ஃப்ரைடு ரைஸ் பக்கம் சைடு ஸ்டாண்டு போட்டிருக்கான். உலகத்துக்கே டூப்ளிகேட் போடுறவன் சைனாக்காரன். அவனையே அசரவெச்சு, `சைனீஸ் ஃபிரைடு ரைஸ்', `சைனீஸ் நூடுல்ஸ்' போடுறான் பாரம்பர்ய பச்சைத் தமிழன். அதையும் தாண்டி இப்போ முக்குக்கு முக்கு பிக்கப்பாகி வருது பிரியாணி கடை. திண்டுக்கல், ஆம்பூர், ஹைதராபாத், வாணியம்பாடி என ஊரு பேர்ல சோறு போட்டு, சோற்றுக்குள்ள பீஸை வெச்சு, அந்த மசாலா வாசத்துலயே மயங்கிக்கிடக்கிற தமிழனின் பிரியாணி தாகம் தாறுமாறா எகிறுது. `இயற்கை உணவு சாப்பிட்டா இதயத்துக்கு நல்லது ப்ரோ'னு பத்து பேர் சொல்றதைக் கேட்டுட்டு, பதினோரு கடை ஏறி இறங்கி விலை விசாரிப்பான். `கேப்பை 200 ரூபாய், குதிரைவாலி 300 ரூபாய்'னு அங்க சொல்ற விலையைக் கேட்டு, `ஒரு சிக்கன் பிரியாணி பார்சேல்...'னு க்யூவில் வந்து நிற்பான்.

தமிழன் 2.0

உடை

அஞ்சு ஜீன்ஸ் பேன்ட்டும், பத்து ரவுண்டு நெக் டி-ஷர்ட்டும்தான் ப்ரோ தமிழனின் வார்ட்ரோப். உள்ளாடை தெரிய பேன்ட் போட்ட பயல், இப்போ வெல்குரோ வேட்டியில் பண்பாடு காக்கிறான். ஆனால், இந்த `ஒட்டிக்கோ கட்டிக்கோ' வேட்டிக்கு அலுவலகங்களில் ஆண்டுக்கு ஒருமுறைதான் என்ட்ரி பாஸ். பொங்கல் சடங்கு முடிந்ததும், `வேட்டிக்கு வேலிடிட்டி முடிஞ்சிருச்சு... மடிச்சுக்கோ வெச்சுக்கோ' என பாரம்பர்யத்தில் பஞ்சர் போடுகின்றனர். `கோயிலுக்கு ஜீன்ஸ் போட்டு வராதீங்க.

லெகிங்ஸ் போட்டா உள்ளே விடாதீங்க' எனச் சொன்னால், `அப்போ அர்ச்சகர், மேல்சட்டை போடலியே, அது பரவாயில்லையா?' என ட்விட்டடித்துத் திணற வைக்கிறார்கள். `செல்ஃபி வித் வேட்டி' என விதவிதமாக ஒளிப்படம் எடுத்த இவன்தான், `அது லெகிங்ஸோ, லுங்கியோ... என் உடை என் உரிமை' என உறுதியாக நிற்கிறான்.

தமிழன் 2.0

பொழுதுபோக்கு

தமிழனின் தன்னிகரற்ற ஒரே பொழுதுபோக்கு, டாஸ்மாக். பண்டிகையா, சாவா, திருமணமா, சுற்றுலாவா... நாலு பேர் கூடினால் போதையில் பொங்கல் வைப்பதே இவனது ஒரே பொழுதுபோக்கு. தியேட்டருக்குப் போனாலும் போதையே கதியாகக் கிடக்கிறான். போதை இல்லாத காலங்களில் வாட்ஸ்அப் குரூப்களில் நாட்டுக்கு நல்ல செய்தி சொல்கிறான். ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் உக்கிரமாக வெடிக்கிறான்.

மெகா சீரியல்களின் கலரோ வேறுமாதிரி மாறிவிட்டது. இளம்பெண்களுக்கு, சப்பை மூக்கு அழகன்களின் கொரியன் சீரியல். இளம் பையன்களுக்கு, இங்கிலீஷ் சீரியல்கள். குழந்தைகளுக்கு மோட்டுபொட்லு என கார்ட்டூன் சீரியல்கள். போக்குவதற்கு மேற்கொண்டும் பொழுது இருந்தால், போனில் கேண்டிக்ரஷ் ஆடுவான். ஆக்ஸிஜனுக்குப் பதிலாக சினிமாவை உள் இழுப்பான். படம் பார்க்கும்போதே சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றுவான். உலக சினிமா பார்த்து உள்ளூர் இயக்குநர்களை அம்பலப்படுத்துவான். `நல்ல சினிமாவை நாமதான் ஓடவைக்கிறோம்' என மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டே ஆன்லைனில் படம் பார்த்து அல்வா கொடுப்பான்.

பெயர்கள்

குஸ்கிதா, நஷ்டிகா, ஜிஷ்டுகா என `இஸ்க்கு புஷ்க்கு’ இல்லாமல் தமிழனால் பெயர்வைக்க முடியாது. காளகேயர்கள் மொழிகூட புரியும், ஆனால் தமிழ்க் குழந்தைகளின் பெயர்களைப் புரிந்துகொள்ள தனி அகராதி தேவை. பிள்ளை பிறந்ததும் அதற்கு `ல, லா, லு, லூ-வில் வருகிற மாதிரி பேர் வெச்சிருங்கோ' என ஜோசியர் ஏதாவது எழுத்தைச் சொல்லிவிட, `ல லா லூவும் வரணும், ஸ், ஷ், ஜ்-ம் வரணும்’ என்றால் பாவம் அவன்தான் என்ன செய்வான்? கடைசியில் `லூஜ்மா’, `லிஜ்பிகா’ என விநோதமாகப் பெயர் வைத்துவிட்டு, `பேர் யுனிக்கா இருக்குல்ல... உலகத்துலயே வேற யாருக்கும் இந்தப் பேர் இருக்காது' என கெத்துகாட்டி முட்டுக்கொடுப்பான். பேரன், பேத்திகளின் பெயர்களை மனப்பாடம் செய்வதற்குள் தாத்தா  பாட்டிகளுக்கு நாக்குத் தள்ளிப்போவது, ட்ராஜடி ஆஃப் தி செஞ்சுரி.

தமிழன் 2.0

உறவுகள்

`ஐயம் இன் ரிலேஷன்ஷிப்'னு ஸ்டேட்டஸ் போடுவான். ஆனா, எந்த ரிலேஷன்ஷிப்பும் யாருனு தெரியாது. அப்பாவைத் தவிர எல்லாருமே அங்கிள்; அம்மாவைத் தவிர எல்லாருமே ஆன்ட்டி. அம்மாவின் அக்கா கணவர் தூரத்துச் சொந்தம், தாத்தாவின் தம்பி பையன் ரொம்பத் தூரத்துச் சொந்தம்... அவ்வளவுதான் உறவு. `கொழுந்தியானா என்ன உறவுமுறை?'னு ட்யூட் தமிழன்கிட்ட கேட்டா, மூஞ்சில பூரான் வுட்ருவான். குடும்பமா உட்கார்ந்து பேச இவனுக்கு நேரமே இல்லை. அதுக்கு ஊரே வெள்ளத்துல மிதக்கணும்; கரன்ட் போகணும்; டி.வி ஆஃப் ஆகணும்.

லைக் போடாததால் கோபப்படும் பாசக்காரத் தங்கைகள், அப்பாவையே பிளாக் பண்ணும் கோபக்கார தனயன்கள் என சமூக வலைதளங்கள் வேறு தமிழன் வாழ்வில் கபடி ஆடத் தவறுவதே இல்லை.

வேலைவாய்ப்பு

நாலு ஏக்கர் நிலத்தை வித்து கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிச்சா, மாசம் எட்டாயிரம் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்கலை. யாருமே வேலை குடுக்காம எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்டா, பாவம் தமிழன் என்ன பண்ணுவான்?

`பேப்பர் போட்டுட்டேன் ப்ரோ'ங்குறான் ஐ.டி தமிழன். உண்மை என்னன்னா... ஐ.டி வேலை கொத்துக்கொத்தாக் காலியாகுது. `வீட்டு டியூ என்ன பண்றது, கார் இ.எம்.ஐ எப்படி அடைக்கிறது?’னு முழி பிதுங்கி நிக்கிறான்.

வயக்காட்டை வித்து, படிச்சு, வேலைக்குப் போன காலம் போக, இப்போ ஐ.டி வேலையை விட்டுட்டு ஆர்கானிக் விவசாயம் செய்ய கிராமத்துக்குக் கிளம்புறான் நவீன தமிழன். இன்னொரு பக்கம் கிராமத்தில் களையெடுத்து நாற்று நட்டுக்கொண்டிருந்த விவசாயக் கூலிகள் எல்லாம் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பிஸியாகிவிட, விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் நாக்ரி டாட்காமில் விளம்பரம் கொடுக்கவேண்டிய கட்டாயம். நகரங்களில் செக்யூரிட்டி வேலைபார்க்கிற பாதிப் பேர், விவசாயத்தைக் கைவிட்ட முன்னாள் விவசாயிகள்தான்.

தமிழன் 2.0

பயணம்

`ஏப்ரல்ல குடும்பத்தோட கோவா போகணும் பாஸ்' என்பான். `எந்த ஏப்ரல்?’ என நாமும் கேட்பது இல்லை; அவனும் சொல்வது இல்லை. வீட்டுக்கும் ஆபீஸுக்கும் போய் வருவதுதான் தமிழனின் ஒரே பயணம். குடும்பத்தோடு கூடிக் குழுமி மகிழ்ந்திருந்த காட்சி எல்லாம் 30 வயதிலேயே ஃப்ளாஷ்பேக் ஆகிவிட்டது.

`லீவ் இல்ல பாஸ், சேலரி கட் ஆகிடும், வேலையை யார் பார்க்கறது, குழந்தைங்களை என்ன பண்றது..?’ என பயணம் போகாமல் இருக்க ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கிற இவன், பயணத்துக்கு ஒரு காரணத்தைக்கூட கண்டறிய மாட்டான். வீட்டில் டார்ச்சர் அதிகரித்தால், புளிசாதம், சப்பாத்தியோடு செம்மொழிப் பூங்காவுக்கு ஷேர் ஆட்டோவில் போய் வருவான். வீடு திரும்பி `எவ்ளோ செலவாச்சு?' என கணக்குப்போட்டுக் கவலைப்படுவான். ஆனால், `ஒரு பத்து நாள் எல்லாத்தையும் விட்டுட்டு எங்கேயாவது நிம்மதியா போய்ட்டு வரணும்ங்க' என கடைசிவரைக்கும் சொல்லிக்கொண்டே இருப்பான்.

காதல்

ஜெனிஃபர் டீச்சரைக் காதலித்தவன், இப்போது மலர் டீச்சரின் மீது பிரேமம்கொண்டு அலைகிறான். ஃபேஸ்புக் சாட்டில் ரூட் பிடித்து, வாட்ஸ்அப் சாட்டில் `டபுள் டிக்'கடித்து பவர் பேங்க் உடன் கடலை வறுக்கிறான். தமிழ் தின்று, ஆங்கிலம் கொன்று இவன் டைப் செய்யும் தமிங்கிலீஷ், எப்படித்தான் அந்தப் புள்ளைக்குப் புரியுமோ? ரெண்டு வார்த்தை டைப் செய்ய சோம்பேறித்தனம்.
எமோடிகான்ஸைவெச்சே காலம் தள்றான். `ஆர் யூ ஓ.கே பேபி?' என ஃபீலிங்கில் பிராண்டி, இரண்டாவது விண்டோவில் `ட்ரூலி மேட்லி'யில் வலை வீசுகிறான். டேட்டிங் அழைப்பில்தான் சாட்டிங்கையே தொடங்குவான். ஆனாலும் `வெர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாதுடி' என வாள் சுழற்றுவான். காதல் தோல்விகளை லாங் ஜம்ப் தாண்டுவான். டாஸ்மாக்கில் `இந்தப் பொண்ணுங்க ரொம்ப மோசம்' என சூப் சாங் பாடுவான். `ரீசார்ஜ்லாம் வேண்டாம். எனக்கு ஐந்நூறு எம்.பி டேட்டா ட்ரான்ஸ்ஃபர் பண்ணிவிட்ரு' என்பது சமீபத்திய காதல் சங்கீதம். காதலிக்கும்போது ஜாலியாக எடுத்துக்கொண்ட ஜாயின்ட் செல்ஃபிக்களை, பிரேக்அப்புக்குப் பிறகு பரப்பிவிடுவது புதுவகை காதல் பழிவாங்கல்!