
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ ` 100
காரக் குழம்பில் காரம், உப்பு கூடிவிட்டதா..? ஒரு தக்காளியை அரைத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி குழம்பில் சேர்த்துவிடுங்கள். காரம், உப்பு சரியாகிவிடும்.

- சு.நவீனா தாமு, பொன்னேரி
துணிகளில் எண்ணெய்க் கறை பட்டுவிட்டால்... கோதுமை மாவை நீரில் கரைத்து, கறைபட்ட இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து அலசினால் கறை போய்விடும்.

- எஸ்.நிர்மலா, மதுரை
சுத்தமான பேரீச்சம்பழம், ரோஜா இதழ்களை தேவையான அளவு எடுத்து இரவில் ஊறப்போடவும். மறுநாள் காலையில் அதை அரைத்து, சக்கையை நீக்கி, வடிகட்டி அதில் சிறிதளவு கல்கண்டு, பொடித்த முந்திரிப்பருப்பு கலந்தால்... சுவையான ரோஜா கீர் ரெடி. இதை அருந்தினால், உடலுக்குப் பொலிவுடன் சத்தும் கிடைக்கும்.

- வே.ராமலக்ஷ்மி, திருநெல்வேலி
தயிர் சாதத்துக்கு கடுகுக்குப் பதிலாக ஓமத்தை தாளித்தால், வாசனையாகவும் இருக்கும்; ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

- ஆர்.அஜிதா, கம்பம்
இட்லி மிகுந்துவிட்டதா..? கவலையை விடுங்கள். ருசியான பொங்கலாக மாற்றலாம். ஆறு இட்லி இருந்தால், அரை கப் பாசிப்பருப்பைக் குக்கரில் வேகவைக்கவும். இட்லிகளை உதிர்த்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி 4, கீறிய பச்சை மிளகாய் 2, அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் ஒன்றிரண்டாகத் தட்டிய மிளகு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, உதிர்த்த இட்லித் துண்டுகளைப் போட்டுக் கிளறவும். பின்னர், வேகவைத்த பாசிப்பருப்பு, கால் டீஸ்பூன் உப்பு (இட்லியில் ஏற்கெனவே உப்பு உள்ளதால் சிறிதளவு போதும்) சேர்த்துக் கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால், அரை அங்குல நீளமுள்ள இஞ்சியைப் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

- சி.எஸ்.சித்ரா, கோயம்புத்தூர்
தண்ணீரை முதலில் கொதிக்கவைத்து, பிறகு காய்கறிகளைப் போட்டால், அவை சீக்கிரம் வெந்துவிடும்.

- ஆர்.பிரகாசம், கோவிலூர்
பனை நுங்கு நீர் எடுத்து, அதில் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து, வியர்க்குரு மீது தடவி வர... வியர்க்குரு மறையும்.

- விஜயா சீனிவாசன், திருச்சி