
உணவு நல்லது வேண்டும்!

நுங்கு, பதநீர் ஜூஸ்
நான்கு, ஐந்து நுங்குகளை, சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து பதநீருடன் கலந்து, சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்: பதநீரில் குளூக்கோஸ், கால்சியம் மிக அதிக அளவு இருக்கின்றன. நுங்கில் பொட்டாசியம், சோடியம், தாதுஉப்புகள் இருக்கின்றன. நுங்கை தோலுடன் சாப்பிடுவதால், நார்ச்சத்து உடலில் சேரும். அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. நுங்கு மற்றும் பதநீரை 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், சருமம் பளபளக்கும். சிறுநீரக இயக்கத்தில் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
வெஜிடபிள் சாலட்
தேவையானவை: கேரட், தக்காளி, வெங்காயம் - தலா 1, வெள்ளரிக்காய் கோஸ், வெண்பூசணி, புடலை, பீர்க்கங்காய், சௌசௌ, சுரைக்காய் - சிறிய துண்டுகள், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - இரண்டு டீஸ்பூன், கறுப்பு உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை, தீக்குச்சி வடிவில் சிறிய அளவில் நீளமாக நறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, காய்கறிகளுடன் சேர்த்துக் கலக்கவும். இதில், மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, கறுப்பு உப்பு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் கலந்து சாப்பிடலாம்.
பலன்கள்: செரிமானத்துக்கு மிகவும் நல்லது. நீர்ச்சத்து நிறைவாக உள்ளதால், சிறுநீரைப் பெருக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.
காது- காளான்
காதுகளில் ‘காக்லியா’ (Cochlea) எனும் கேட்கும் திறனுக்கான உறுப்பின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு வைட்டமின் டி அவசியம். அதை, காளானும் சூரிய ஒளியும் தரும். காளானில் வைட்டமின் டி, டி3, டி2 சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியத்தை உடல் கிரகிக்க வைட்டமின் டி தேவை. உள்ளுறுப்புகளின் வளர்ச்சி, ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமாக காளான் இருக்கிறது. மார்பகம், புராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும். அதிகமாக ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சரிசெய்யும். விலங்குகளிடம் இருந்து பெறப்படும் புரதத்தை காளானில் இருந்தும் பெற முடியும்.
காதுகளுக்கான உணவுகள்: காளான், அன்னாசி, கேழ்வரகு, கீரை, வாழை, முழு தானியங்கள்.