
மெனு கார்டுவெ.நீலகண்டன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

மதுரையின் புதிய அடையாளங்களில் ஒன்று `ஆப்பம் ஹாப்பர்ஸ்.’ தேங்காயால் ஆசீர்வதிக்கப்பட்ட அசல்

இலங்கை உணவுகளை மதுரை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் இருக்கிற `ஆப்பம் ஹாப்பர்ஸ்’ உணவகத்தில் ருசிக்கலாம்.
இலங்கையின் பாரம்பர்ய உணவான ஆப்பங்கள், அதற்கு சைட்- டிஷ்ஷாக பொல் சம்பல், சீனிச் சம்பல், நூல் நூலாகப் பிரிகிற பூப்போன்ற இடியாப்பம்... அதற்கு சைட்- டிஷ், மணக்க மணக்கத் தேங்காய் சொதி: முட்டை ஸ்டஃப் செய்யப்பட்ட அசல் சிலோன் ரொட்டி, திகட்டாத வாழைப்பழ இனிப்பு ரொட்டி, முழு விளை மீன் ஃப்ரை, மொத்தி மொத்தியான இறால் வறுவல், வித்தியசமான நண்டு ஆம்லேட் என ருசி விரும்புபவர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தருகிறது இந்த உணவகம்.
ஆப்பம் ஹாப்பர்ஸ் உணவகத்தின் உரிமையாளர் சுபா, இலங்கை மருமகள். கணவர் கோபால் அங்கு தொழிலதிபர். சமையலில் தீவிர ஆர்வம் கொண்ட சுபா, பிள்ளைகளின் படிப்புக்காக சொந்த ஊருக்கு வந்தார். கூடவே, லங்கா உணவையும் இங்கே கொண்டு வந்து விட்டார். இரவு உணவு மட்டும்தான். இரவு 7 மணிக்குத் தொடங்கி 11 மணிக்கு முடித்து விடுகிறார்கள். 20 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். மிதமான மஞ்சள் விளக்கொளி... சுவர்களில் புன்னகை உதிர்க்கும் புத்தர். சிலோன் மனோகரின் அழுத்தமான குரலில் ‘பட்டு மாமியே...’ பாடல் உறுத்தாமல் ஒலிக்கிறது. சாப்பிட வருபவர்களை வாசலில் நின்று, யாழ்ப்பாணத் தமிழில் இன்முகத்தோடு வரவேற்று அமர வைக்கிறார் சுபா. கிச்சன், சுபாவின் அம்மா திலகம் நிர்வாகத்தில் இருக்கிறது.
``ஸ்ரீலங்காவில் பக்கத்து வீடுகள்ல விசேஷங்கள் நடக்கிறப்போ கூப்பிடுவாங்க. போய் சமைச்சுக் கொடுப்பேன். சின்னச் சின்னதா கேட்டரிங்கும் செஞ்சோம். மதுரை வந்தபிறகு, என் சமையலைச் சாப்பிடுற உறவுக்காரங்க, நீங்க ஹோட்டல் நடத்தினா நல்லாப் போகும்னு சொல்வாங்க... ஒருமுறை, மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில, லங்கா உணவுகள் சமைச்சு ஸ்டால் போடுங்கன்னு கூப்பிட்டாங்க. அதுக்குக் கிடைச்ச வரவேற்புலதான் இந்த உணவகத்தைத் தொடங்கினேன்...” என்கிறார் சுபா.

வெரைட்டிகள் அதிகமில்லை. ஆப்பத்தில் நான்கு வகை... பிளைன், முட்டை, சிக்கன், சீஸ் ஆப்பங்கள். வெள்ளை வெளேரென அரைவட்டத்தில் ஆப்பங்கள் ஈர்க்கின்றன. நடுவில் முட்டையோ, சிக்கனோ, சீஸோ. பொல் சம்பல், சீனிச் சம்பல், சைட்-டிஷ். துவையல் மாதிரிதான். ஆனால், ஆப்பத்துக்குத் தகுந்த தனித்துவ டேஸ்ட். உதிரி உதிரியாக இருக்கிறது. தேங்காய்த் துண்டுகள், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கல்லுரலில் போட்டு இடித்துச் செய்வதுதான் பொல் சம்பல்... சீனிச்சம்பலில் கொஞ்சம் சர்க்கரை சேர்க்கிறார்கள். இனிப்பும் காரமும் சரிவிகிதத்தில் இருக்கின்றன.
``பல பண்பாட்டு வேறுபாடுகள் இருந்தாலும், லங்காவுல எல்லாப் பகுதிகளுக்கும் இருக்கிற பொதுவான அம்சம் உணவுதான். கொழும்புல என்ன சாப்பிடுவாங்களோ, அதைத்தான் யாழ்ப்பாணத்துலயும் சாப்பிடுவாங்க. மசாலாவுல மட்டும் சின்ன வித்தியாசம் இருக்கும். கொழும்புல மல்லி, காய்ந்த மிளகாய் அதிகம் சேர்ப்பாங்க. யாழ்ப்பாண மசாலாவுல சீரகம், மிளகு அதிகம் மணக்கும். நிறத்துக்கு எந்தக் கூடுதல் பொருளும் சேர்க்கிறதில்லை. காரம், வாசனை, மென்மை... இது மூணுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஏலக்காய், பட்டை, ரப்பை இலையும் மசாலாவுல இருக்கும். எங்களோடது யாழ்ப்பாணம் ஸ்டைல். ரப்பை இலை மாதிரி மசாலாவுக்குத் தேவையான பொருள்களை அங்கிருந்து கொண்டு வர்றோம்” என்கிறார் சுபா.
முழு விளைமீன்... மிளகு, பூண்டு, இஞ்சி சேர்த்து பேக்கிங் ஸ்டைலில் ‘ஃப்ரை’ செய்கிறார்கள். இயல்பான நிறம்.. கைகளில் ஒட்டாத அளவுக்குத்தான் எண்ணெய் சேர்க்கிறார்கள். மிதமான காரத்தில் கேக் மாதிரி உள்ளிறங்குகிறது. தூத்துக்குடியிலிருந்து வருகிறது சிங்கி இறால். அரைவேக்காடாக வேகவைத்து மிதமான மசாலாவில் பரப்பி வைக்கிறார்கள். லேசான இனிப்பு, மெல்லிய உறைப்பு என வெரைட்டி டேஸ்ட்.

சிலோன் ரொட்டி, அப்படியே மதுரை லாப்பாவின் மறு அவதாரம். பரோட்டாவுக்கு நடுவில் முட்டை மசாலாவை ஸ்டஃப் செய்து முக்கால் வேக்காட்டில் வேகவைக்கிறார்கள். . சைட்-டிஷ் தேவையில்லை. பெரும்பாலான இளைஞர்கள் இதற்காகவே, ஆப்பம் ஹாப்பர்ஸ் வருகிறார்கள்.
ஆனால், டின்னர்தானே என்று பர்ஸில் வெயிட் இல்லாமல் போனால் சிரமம்தான். சீனிச்சம்பல், பொல் சம்பல், மீல்மேக்கர் கிரேவியோடு 2 ப்ளெய்ன் ஆப்பம் 135 ரூபாய். கிரேவி நான்வெஜ்ஜாக இருந்தால் 185 ரூபாய். குறைந்தது ஐந்தாவது சாப்பிட்டால்தான் வயிறு நிறையும். மூன்று பீஸ் இடியாப்பம் காம்போவும் ஆப்பம் விலைதான். சிங்கிள் மீன் ஃப்ரை 300 ரூபாய். சொதி, தேங்காய்ப்பாலெல்லாம் ருசிக்க விரும்பினால் தனியாகத்தான் வாங்க வேண்டும்.
`‘விலையெல்லாம் ஒரு விஷயமா... வெரைட்டிதான் வேண்டும்’’ என்ற தேடல் கொண்டவர்களுக்கு ஆப்பம் ஹாப்பர்ஸ் சூப்பர் சாய்ஸ்!
- பரிமாறுவோம்
``சர்க்கரை நோயாளிகள் தேங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?’’
டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்
``தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகளும் தேங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய் தூய சத்துணவு. குறிப்பாக, குழந்தைகளுக்குத் தேவையான எல்லா சத்துகளும் தேங்காயில் உள்ளன. ‘தேங்காய் பயன்படுத்தினால் இதயநோய் வரும், கொழுப்பு அதிகரிக்கும்’ என்பது மூடநம்பிக்கை. தேங்காயில் இருப்பது உடலுக்கு நன்மை பயக்கும் Hdl (high density lipoprotein) கொழுப்பு. இது கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும். சிறுநீரகம், இதயம், கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகளையும் கேடயமாக நின்று காக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கும் தேங்காய் நல்ல மருந்து. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அன்றாட உணவில் தேங்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.”