மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 5

சோறு முக்கியம் பாஸ்! - 5
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 5

வெ.நீலகண்டன், படங்கள்: எம்.விஜயகுமார்

சோறு முக்கியம் பாஸ்! - 5

சுடச்சுட, மணக்க மணக்க கேழ்வரகுக் களி, தொட்டுக்கொள்ள நாட்டுக்கோழிக் குழம்பு, மட்டன் குழம்பு, தலைக்கறிக் குழம்பு, மீன் குழம்பு... விரும்பினால் கீரைக்கடைசல், பொட்டுக்கடலைச் சட்னியும் தருகிறார்கள்.  நினைத்தாலே நாவில் நீர் ஊறுகிறது அல்லவா?  சேலம், ஜங்ஷன் மெயின் ரோட்டில் இருக்கும்  `கலியுகா உணவக’த்தில்தான் இந்த அதகள, அமர்க்கள களி விருந்து.

ஒரு காலத்தில் களி, கூழ் எல்லாம் ஏழைகளின் உணவுகள். இன்றோ ஐந்து நட்சத்திர விடுதிகளில் களி பிரதான உணவு. கர்நாடகத்தில் களி - பஸ்ஸாரு இல்லாத உணவகங்களே இல்லை. பஸ்ஸாரு என்றால் கீரைக்குழம்பு. தட்டின் மத்தியில் பெரிய களி உருண்டையை வைத்து, தளும்பத் தளும்பக் கீரைக்குழம்பை ஊற்றித்தருவார்கள். தொட்டுச் சாப்பிடலாம், கரைத்தும் குடிக்கலாம்.

சர்க்கரை, இதயநோய் என விதவிதமான நோய்கள் துரத்த துரத்த, மக்கள் தாங்கள் இழந்த பாரம்பர்யங்களை நோக்கி ஓடுகிறார்கள். `கலியுகா உணவக’த்தில் கூடுகிற கூட்டம் அதைத்தான் உணர்த்துகிறது.

மதியம் 12:30 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை இடைவிடாமல் களி கிண்டிக்கொண்டே இருக்கிறார்கள். நவீன சமையல் மாஸ்டர்களுக்கெல்லாம் களி கைவராது. ஒரு நொடி கவனக்குறைவாக இருந்தாலும் கட்டிபட்டுப்போகும். முதிர்ந்த கிராமத்துத் தாய்களான வசந்தா, மாது, தங்கம்மாள் மூவரும்தாம் களி மாஸ்டர்கள். இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள்.

சோறு முக்கியம் பாஸ்! - 5

ஐம்பதைத் தாண்டியவர்கள் மட்டுமல்ல... கல்லூரி மாணவர்களும் களியை நாடி வருகிறார்கள். சைவ விரும்பிகளுக்கு களி-கீரைக்கடைசல் காம்போ.  கடலையெண்ணெய் வாசனை... நாக்கில் பட்டவுடன் கரைகிறது களி. எல்லாம் தாய்மார்கள் கைவண்ணம். முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை என தினமொரு கீரைக்கடைசல். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், தக்காளி போட்டுக் குழைய வேகவைத்துக் கடைகிறார்கள். களிக்கு இணக்கமான சைட்-டிஷ்.

கொஞ்சம் காரசாரமாக அசைவ மணத்தோடு சாப்பிட விரும்புபவர்களுக்கு சைட்-டிஷ்ஷாக நாட்டுக்கோழிக் குழம்பு, மட்டன் குழம்பு, தலைக்கறிக் குழம்பு, மீன் குழம்பு தருகிறார்கள்.  எதுவுமே வேண்டாம் என்றால் கடலைச்சட்னி. ஒரு பிளேட் களி 40 ரூபாய். கூடவே, இந்த சைட்-டிஷ்கள். ஆனால், இவை எல்லாவற்றையும்விடக் களிக்கென்றே அவதரித்த சைட்-டிஷ் ஒன்று இருக்கிறது. அதுதான் கருவாட்டுக் குழம்பு.

கருவாட்டுக் குழம்பில், வாசனையுடன் இணைந்த ஒரு ‘நாட்டுச் சுவை’  உண்டு. அது அப்படியே ‘கலியுகா’ கருவாட்டுக் குழம்பில் இருக்கிறது. ஆனால், கருவாட்டுக் குழம்பைத் தனியாக வாங்க வேண்டும். ஐந்து கருவாட்டுத் துண்டுகள் கொண்ட குழம்பு 30 ரூபாய்.  கொள்ளிக்கட்டை, முதக்கெண்டை, கிழங்கான் கருவாடுகளைப் பயன்படுத்துகிறார்கள்.  40 ரூபாய்க்குக் களி, 30 ரூபாய்க்குக் கருவாட்டுக் குழம்பு போதும்... அந்தப் பொழுதை இனிதாக்க. 

‘கலியுகா’வின் உரிமையாளர்கள் ராஜாராமும் தேவேந்திரனும் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்தவர்கள். சுயமாகத் தொழில் செய்ய விரும்பி  17 வருடங்களுக்கு முன்னர் இந்த உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். `வித்தியாசமாக இருக்கட்டுமே...’ என்று ஆரம்பித்த களி, இப்போது உணவகத்தின் அடையாளமாகவே மாறிவிட்டது. ஜவ்வாது மலையிலிருந்து கேழ்வரகை இறக்கி, அரைத்து இவர்களே பக்குவப்படுத்துகிறார்கள். மாவின் பக்குவம்தான் களியின் சுவைக்கு அடிப்படை. கம்பங்களி, தினைக்களி, சோளக்களியெல்லாம் போட்டார்கள். ஆனாலும், மக்கள் மனம் கவர்ந்தது கேழ்வரகுக் களிதான். தொலைதூரத்தில் இருந்தெல்லாம் இதற்காகவே வருகிறார்கள். கேழ்வரகு ரொட்டியும் கிடைக்கிறது. அதற்கு சைட்-டிஷ் சின்ன வெங்காயம்.

சோறு முக்கியம் பாஸ்! - 5

பொதுவாக, களி என்றாலே பத்திய உணவைப்போலப் பார்ப்பார்கள். கலியுகா, அதைக் கொண்டாட்ட உணவாக மாற்றியிருக்கிறது. பிறந்தநாள் கொண்டாட, விடுமுறையைக் கொண்டாடவெல்லாம் மாணவர்கள்  இங்கு வருகிறார்கள். 20 பேர் அமரலாம். நெருக்கடிதான். கிச்சன் வெப்பம் உணவகத்தைச் சூழ்ந்திருப்பதும் வசதிக்குறைவாக இருக்கிறது. 

புதிது புதிதாக என்னென்னவோ டயட் முறைகள்  வருகின்றன.  ஒருவர் பரிந்துரைக்கும் டயட்டை இன்னொருவர் ‘தவறு’ என்கிறார்.  ஒருவருக்குப் பொருந்தும் டயட் இன்னொருவருக்குப் பொருந்துவதில்லை.  எல்லோரும் ஏற்றுக்கொள்கிற, எல்லோருக்கும் பொருந்துகிற, உலகம் முழுமைக்கும் பொதுவான  டயட் ஒன்று உண்டு. அது, `நம் மண்ணில் எது விளைகிறதோ, அதைச் சாப்பிடுவது.’  சிறுதானியங்களே நம் மண்ணின் உணவுகள். அவற்றைச் செரிக்கும்விதமாகவே நம் உடலின் அமைப்பு இருக்கிறது. கேழ்வரகுக்களி - கருவாட்டுக் குழம்பு சாப்பிட்டுப் பாருங்கள்... அதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

- பரிமாறுவோம்

`கேழ்வரகு சாப்பிட்டால் செரிமானமாகாது’ என்கிறார்களே அது உண்மையா?

உணவியல் நிபுணர் மேனகா

சோறு முக்கியம் பாஸ்! - 5

“அது மூட நம்பிக்கை. குழந்தைகள் முதல்  பெரியவர்கள்வரை அனைவரும் சாப்பிட ஏற்ற  உணவு கேழ்வரகு. அரிசி மற்றும் பிற தானியங்களைவிடக் கேழ்வரகில் அதிகளவு கால்சியம்  உள்ளது. கேழ்வரகு சாப்பிட்டால் பற்கள், எலும்புகள்  வலுவாகும். வயதானவர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் கேழ்வரகைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம். நிறைய நார்ச்சத்து இருக்கிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.  உடல் பருமன் உள்ளவர்களும், இதய நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. உடலுழைப்பு  மேற்கொள்பவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகுக் களியைக் காலை உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. நாள் முழுவதற்குமான ஆற்றலைக் கொடுக்கும்.”