மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 10

சோறு முக்கியம் பாஸ்! - 10
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 10

வெ.நீலகண்டன், படம்: ப.சரவணகுமார்

ஞ்சை வட்டாரத்தில் தாட்டெலைச் சாப்பாடு;  நாஞ்சில் வட்டாரத்தில் தும்பு இலை விருந்து; கொங்கு வட்டாரத்தில் கல்யாணப் பந்தி விருந்து... என தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு தனித்தன்மையான `விருந்து’ உண்டு. அவற்றின் மொத்தக் கலவைதான் `விசேஷச் சாப்பாடு.’ மனதுக்கு இதமான சூழலில்,  மணக்க மணக்க வடை, பாயசத்தோடு பாரம்பர்யமான சைவ சாப்பாட்டைச் சாப்பிட விரும்புபவர்களுக்கு சென்னை, அடையாறிலுள்ள  `கிருஷ்ண விலாசம்’ உணவகத்தின் `விசேஷச் சாப்பாடு’ சரியான சாய்ஸ்.

திருநெல்வேலி பக்கம், `விசேஷச் சாப்பாடு’ சமைப்பதற்கென்றே தனியாக சமையல்காரர்கள் இருக்கிறார்கள். திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழாக்களில் இந்த விசேஷச் சாப்பாடு வாய்க்கும். வண்ணமும் வாசமுமாக இலை நிறைய பதார்த்தங்களைப் பரப்பிவைப்பார்கள். அறுசுவையும் நிறைந்திருக்கும்.

சோறு முக்கியம் பாஸ்! - 10

திருமணப் பத்திரிகைகளிலேயே சமையல்காரர்களின் பெயரைப் போட்டு விடுவார்கள். `சமையல்குல திலகம்’, `சமையல் மன்னன்’... என நடிகர்களைப் போல சமையல் கலைஞர்களுக்குப் பட்டப்பெயர்களெல்லாம் உண்டு.  சிலர், மணமக்கள் பெயரைப் பார்ப்பதற்கு முன்னர் சமையல்காரர்களின் பெயரைத்தான் பார்ப்பார்கள்.  `கிருஷ்ண விலாசம்’ உணவகத்தின் உரிமையாளர் கிருஷ்ணகுமார் திருநெல்வேலிக்காரர் என்பதால், `விசேஷ விருந்து’ என்ற பதத்தை இந்த விருந்துக்குச் சூட்டியிருக்கிறார்.

விசேஷச் சாப்பாட்டில் மொத்தம் 15 வகையான டிஷ்கள். அழகழகான கிண்ணங்களில் எல்லாவற்றையும் பரப்புகிறார்கள். முதலில் கிண்ணம் ததும்பத் ததும்ப சூப் வருகிறது.  `மிளகு துவானி’ சூப். பெயரே வித்தியாசமாக இருக்கிறது. கொத்தமல்லித்தழை, அரிசி, துவரம் பருப்பு சேர்த்துச் செய்தது. வாசனையும் சுவையும் சுகம்.  முருங்கைக்காய்ச் சாறு, நெல்லிக்காய் ரசம் என தினமொரு வெரைட்டியாம்.

சோறு முக்கியம் பாஸ்! - 10


ஒரு கூட்டு, ஒரு பொரியல், ஒரு தீயல். கூட்டு ஆந்திரா ஸ்டைல் என்றால், தீயல் கேரளா ஸ்டைல்.  வெண்டைக்காய் புளிக்கூட்டு வித்தியாசமாக இருக்கிறது. பீட்ரூட் கார்ன் பொரியல், பாகற்காய் சேனைத் தீயல்... இன்று கிடைக்கும் கூட்டுப் பொரியல் அடுத்த 45 நாள்களுக்கு கிடைக்காதாம்... பெரிய பட்டியல் வைத்திருக்கிறார்கள்.

அடுத்து பிரியாணி வருகிறது. திருநெல்வேலி ஸ்டைல். சீரகச் சம்பா அரிசியில் செய்கிறார்கள். ஸ்பைஸியாக இருக்கிறது. இதற்கு சைடிஷ் வெஜ் குருமா. கூடவே ஒரு பருப்பு வடையும் தருகிறார்கள். 

பிறகு பரிமாறப்படும் பொன்னி அரிசி சாதத்துக்கு முதலில் பருப்பு-நெய் ஊற்றுகிறார்கள். அடுத்து, கதம்ப சாம்பார். சகல காய்கறிகளும் போட்டு,  அரைத்துவிட்ட சாம்பார்.  வீட்டில் செய்வதுபோல தண்ணீராகத்தான் இருக்கிறது. டேஸ்ட்  சூப்பர். தாளித்த மோரில் சிறு சிறு உருண்டைகளை ஊறப்போட்டு, ஸ்பெஷல் குழம்பும் தருகிறார்கள். புளிப்பு, காரம் மிதமாக இருக்கிறது. `குத்தி வொங்காய கூரா’ என்றொரு குழம்பும் உண்டு. பக்கா ஆந்திரா டிஷ். முழுக் கத்திரிக்காயை நான்காக வகுந்து மசாலா ஸ்டஃப் செய்து, குழம்பில் போட்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக ரசம். லெமன் ரசம், மிளகு ரசம், சீரக ரசம்... என நிறைய வெரைட்டிகள் உள்ளன. தயிர் ஸ்பெஷலாக இருக்கிறது. சொந்தத் தயாரிப்பாம். பேரீச்சை பாயசம், பருப்புப் பாயசம், கோதுமை குருமா பால் பாயசம் என பாயசத்திலும் நிறைய வகைகள்.  இறுதியில் ஐஸ்க்ரீம். மனதுக்கும் வயிற்றுக்கும் நிறைவான லஞ்ச்.

ஆர்டர் செய்து குறைந்தது 20 நிமிடங்கள் கழித்துத்தான் உங்கள் மேசைக்கு உணவு வரும். ஆனால், சுடச்சுட வரும். வடையிலிருந்து பாயசம் வரை எல்லாவற்றிலும் ஆவி பறக்கிறது. அதுவே வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

சோறு முக்கியம் பாஸ்! - 10


சரி... விலை?  444 ரூபாய். கேட்க மலைப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், ஸ்டைலிஷான  ஃபைன் டைனிங்கில், ஆற அமர, நமது பாரம்பர்ய உணவைச் சுடச்சுட ருசித்து அனுபவித்த பின்னர் மலைப்பு விலகிவிடுகிறது.

விசேஷச் சாப்பாடு, அதிக விலையென்று நினைத்தால், `கிருஷ்ண விலாசம் ஸ்பெஷல் சாப்பாட்டை’த் தேர்வு செய்யலாம். பிரியாணி, குருமா, வடை, ஐஸ்க்ரீம் தவிர மற்றவையெல்லாம் உண்டு.  அது, 306 ரூபாய். 

கிருஷ்ண விலாசம் உணவகத்தை இப்போது நிர்வகிக்கிற ராஜி கிருஷ்ணகுமார், அபுதாபி எம்.ஐ.டி-யில் சீனியர் சயின்ட்டிஸ்ட்டாக இருந்தவர். பெரும் கனவுகளோடு உணவகத் தொழிலைத் தொடங்கிய கணவர் கிருஷ்ணகுமார் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவரது கனவை நிறைவேற்ற, தான் பார்த்த வேலையை உதறிவிட்டு, உணவகத்துக்கு வந்துவிட்டார் ராஜி.  கிச்சன் முழுவதும் இவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது...  மசாலாக்கள் தருவதிலிருந்து சாதத்தைப் பதம் பார்ப்பதுவரை எல்லாம்! 

``உடம்புக்குச் சேராத ரசாயனங்கள் எதையும் அனுமதிக்கிறதில்லை. அடுத்த ஒரு மணி நேரத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் தயாரிச்சுவெச்சிருப்போம். எதிலெல்லாம் வாய்ப்பிருக்கோ, அதையெல்லாம் உடனுக்குடன் செஞ்சு பரிமாறுவோம். அதனால சின்னதா காலதாமதம் ஆகலாம். நிறைய பெரியவர்களும் குழந்தைகளும் எங்க உணவகத்துக்கு வருவாங்க. அவங்களுக்கு எந்தச் சங்கடத்தையும் தரக் கூடாது. அதைத்தான் வரம்பாவெச்சுக்கிட்டு சமைக்கிறோம்’’ என்கிறார் ராஜி கிருஷ்ணகுமார்.

சிந்தாமணி அல்வா, சிந்தாமணி ரவா இட்லி, கலந்த தானியங்களால் செய்யப்படும் வாசனை தோசை என்று கிருஷ்ண விலாசத்துக்கே உரிய சில வித்தியாசமான டிஷ்களும் உண்டு. ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியத்தைக் குடும்பத்தோடு கிருஷ்ண விலாசத்தில் செலவிடலாம்.

- பரிமாறுவோம்

சோறு முக்கியம் பாஸ்! - 10

பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லதா... ஜூஸாக்கிச் சாப்பிடலாமா?

மருத்துவர் என். மணவாளன்,

சோறு முக்கியம் பாஸ்! - 10முதல்வர், அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி. 

``சத்துகள் முழுமையாகக் கிடைக்க வேண்டுமென்றால், பழங்களைக் கடித்துத்தான் சாப்பிட வேண்டும். கடித்துச் சாப்பிடும்போதுதான் அதிலுள்ள நார்ச்சத்துகள், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்  (Micronutrients) ஆகியவை அப்படியே கிடைக்கும். பெரும்பாலும் ஜூஸ் மேக்கர் அல்லது மிக்ஸியில்தான்  ஜூஸ் பிழிகிறார்கள். அது, அதிவேகத்தில் சுழலும்போது பழங்களிலுள்ள மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் கரைந்துபோகும். அரைத்த ஜூஸை வடிகட்டும்போது அதிலுள்ள நார்ச்சத்துகளும் போய்விடும். பழங்களை நன்றாகக் கடித்து, மென்று உமிழ்நீரோடு கலந்துதான் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட முடியாதவர்கள், எந்திரங்களை நாடாமல் கைகளில் சாறு பிழிந்து குடிக்கலாம். சாப்பிட்ட பின்னர் பழங்கள் சாப்பிடக் கூடாது. பழங்கள் சாப்பிடுவதற்கும், உணவு சாப்பிடுவதற்கும் குறைந்தபட்சம் ஒருமணி நேர இடைவெளியாவது இருக்க வேண்டும்.”