மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 12

சோறு முக்கியம் பாஸ்! - 12
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 12

வெ.நீலகண்டன் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

ஹாட் வெஜ் ஃபிஷ், மங்கோலியன் வெஜ் லாம்ப், ஆரஞ்சு வெஜ் சிக்கன், டிம் சம் வெஜ் லாம்ப், வெஜ் சிக்கன் லாலிபாப்,  வெஜ் எக் போண்டா,  வெஜ் ஃபிஷ் ஃபிங்கர், வெஜ் சிக்கன் ரைஸ், வெஜ் கோலா உருண்டை, தந்தூரி வெஜ் சிக்கன் ரோல்...  திருச்சி,  தில்லைநகர் இரண்டாவது கிராஸில் உள்ள ஏழாம் சுவை ‘சைவ’ உணவகத்தின்  மெனு  வித்தியாசமாக  இருக்கிறது.    எல்லாம் சுத்த சைவ பதார்த்தங்கள். பெயர்கள், வடிவங்கள், ருசி   எல்லாம் அசைவ உணவுப் பிரியர்களையும் கவரும் வண்ணம் இருப்பதுதான் ஸ்பெஷல். 

சோறு முக்கியம் பாஸ்! - 12

வித்தியாசமாகச் சாப்பிட விரும்பும் அசைவப் பிரியர்களுக்கு பறப்பன, நடப்பன, ஊர்வன, நீந்துவனவென்று நிறைய சாய்சஸ் உண்டு. ஆனால், சைவம் விரும்புபவர்களுக்கு...  அதிகபட்சம் பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், மஷ்ரூம் ஃப்ரை...  அவ்வளவு தான்.  ‘ஏழாம் சுவை’க்குள் நுழைந்தால் அந்த அலுப்பு மாறிவிடும்.  ரசனையான, ரகளையான  ‘வெஜ் ஃப்யூஷன் டிஷ்’கள் இருக்கின்றன.

அரிசி கேக்கில் மசாலா தடவி மொறுக ஃப்ரை செய்திருக்கிறார்கள். ‘ஹாட் வெஜ் ஃபிஷ்’சைப் பார்க்கவும் ருசிக்கவும் மீன்போலவே இருக்கிறது. மீல்மேக்கரை நன்கு ஃப்ரை செய்து மங்கோலியன் சாஸ் சேர்த்து சோளமாவில் பொரித்தெடுக்கப்பட்ட ‘மங்கோலியன் வெஜ் லாம்ப்’பை, கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால் மட்டன் ஃப்ரை சாப்பிடுவது போலவே இருக்கிறது.   14 பீஸ் 99 ரூபாய். உருளைக்கிழங்கு பீன்ஸ், கேரட், பேபி கார்ன் அனைத்தையும் சேர்த்து அரைத்து, உருண்டை பிடித்து, கேரட்டை ஸ்டிக்காக்கி, பொரித்து சிக்கன் லாலிபாப் போலவே கிண்ணத்தில் அடுக்கிப் பரிமாறுகிறார்கள். காளான், பன்னீர், மீல் மேக்கர், பேபிகார்ன், முட்டைக்கோஸைப் பக்குவமாக்கி  சப்பாத்தியில் ஸ்டஃப் செய்த தந்தூரி வெஜ் சிக்கன் ரோலும்  உன்னதம். 

சோறு முக்கியம் பாஸ்! - 12

‘ஏழாம் சுவை’யின் இன்னொரு ஸ்பெஷல், ஜெயின் மீல்ஸ். பூமியைக் கீறி விவசாயம் செய்தால் உள்ளே இருக்கும் புழு, பூச்சிகளுக்குப் பாதகமாகிவிடுமே என்கிற அளவுக்கு ஜீவகாருண்யம் காப்பவர்கள் ஜெயின் மக்கள். பூமிக்குக் கீழே விளையும் கிழங்குகள், வெங்காயம், இஞ்சி, பூண்டு எதையுமே உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.  அவர்களது இயல்புக்கேற்ற  மிதமான காரம்,  இயல்பான சுவையைக் கொண்டிருக்கும் உணவு. காரசாரமாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தரும்.

அன்லிமிடெட் ஜெயின் மீல்ஸ்,  159 ரூபாய். முதலில் சுடச்சுட ஹெர்பல் சூப் தருகிறார்கள். முருங்கைக்காய் சாறெடுத்துச் செய்தது. வாழைத்தண்டு, மல்லித்தழை,  புதினா என தினமொரு சூப் தருவார்களாம். அடுத்து ஒரு சப்பாத்தி... சைடிஷாக பன்னீர் பட்டர் மசாலா. பீட்ரூட் சப்பாத்தி, வெந்தயக்கீரை சப்பாத்தி, கேரட் சப்பாத்தி, தேங்காய் சப்பாத்தி என அதிலும் தினமொரு வகை. இஞ்சி, பூண்டு வாசனையில்லாமல் மிதமான காரத்தோடு குழைய வெந்த கீரைக்கூட்டு, முட்டைக்கோஸுக்கு இணையாகத் தேங்காய்ப்பூ சேர்க்கப்பட்ட பொறியல், வாழைக்காய் காரக்கறி... கூடவே ஒரு கிண்ணத்தில் சீரகச் சாதம்... சுடச்சுட ஒரு மைசூர் போண்டாவும் வெள்ளரிப் பச்சடியும் நிறைவாக இருக்கின்றன.

சோறு முக்கியம் பாஸ்! - 12

சாதமும் குழைய வெந்திருக்கிறது.  மாங்காய், முருங்கைக்காய், பீன்ஸ் சேர்த்த சாம்பார். திக்கான சுண்டைக்காய் வற்றல் குழம்பு, சோம்பு மணக்கிற ரசம் தருகிறார்கள். சீரக வாசனை ததும்ப, ரோல் வடிவிலான சுட்ட  பப்படம் ஸ்பெஷலாக இருக்கிறது. வடகமும் உண்டு. இனிப்புக்கு குலோப் ஜாமூன், ஒரு கிண்ணம் பாயசம்.  உறுத்தலில்லாத ருசியாதலால்  நிறைய சாப்பிடலாம்.  எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு லேசாக  இருக்கிறது.

சோறு முக்கியம் பாஸ்! - 12கொஞ்சம் காரசாரமாகத் தென்னிந்திய சைவ உணவுகளை ருசிக்க விரும்புவோருக்கு ‘பிளாட்டினம் பிளாட்டர்’ என்றொரு காம்போ இருக்கிறது. மோர் மிளகாய், துவையல், மாங்காய் ஊறுகாயோடு கூடிய கம்ப்ளீட் மீல்ஸ்.

‘வாழைப்பூ ஃப்ரைடு ரைஸ்’ இந்த உணவகத்தின் இன்னொரு ஸ்பெஷல். 99 ரூபாய். வித்தியாசமாக இருக்கிறது.

லஞ்ச், 12 மணிக்குத் தொடங்கி  4 மணிக்கு நிறைவடைந்து விடும். இரவு 7 மணிக்குப் போனால் ஸ்பெஷல் டின்னர் தாளி சாப்பிடலாம். தந்தூரி நான், பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர், தால் ஃப்ரை, காய்கறிக் கூட்டு, சூப், சாதம், சாம்பார், ரசம் என  அன்லிமிடெட் தாளி. 189 ரூபாய்.

சோறு முக்கியம் பாஸ்! - 12

‘ஏழாம் சுவை’ உணவகத்தின் உரிமையாளர்கள்,  செந்திலும், சதீஷூம் கேட்டரிங் படித்தவர்கள். செந்தில், அமெரிக்காவில் குக்காகப் பணியாற்றினார். ஜெயின் உணவுகள், வெஜ் ஃப்யூஷன் நுட்பங்கள் எல்லாம் அங்குதான் கற்றிருக்கிறார்.

“ஜெயின் உணவு மனதுக்கும் உடலுக்கும் நல்லது. அமெரிக்காவில் ஜெயின் மக்களை விட பிற மக்கள் இந்த உணவை விரும்பிச்  சாப்பிடுவார்கள். இங்கும் பலர் அதை விரும்புகிறார்கள்.  சைவ உணவை ரசனையாகச் சாப்பிடச் செய்யும் நோக்கத்தோடுதான் , வித்தியாசமான ஃப்யூஷன் டிஷ்களை  உருவாக்கினோம். அதுவே எங்கள்  அடையாளமாக மாறியிருக்கிறது” என்கிறார்  செந்தில்குமார்.

வணிகத்தினூடாக சில நல்ல பணிகளையும் செய்கிறார்கள்.  ஆசிரியர் தினத்தன்று உணவகத்துக்கு வரும் அத்தனை ஆசிரியர்களுக்கும் இலவச உணவு. குழந்தைகள் தினம், பெண்கள் தினம், தந்தையர் தினத்தன்றும் இதைக் கடைப்பிடிக்கிறார்கள். 

பார்க்கிங் வசதியில்லை... சில தருணங்களில் காத்திருக்கவும் நேரலாம்... இவற்றைத் தவிர்த்து, உபசரிப்பு, விதவிதமான உணவுகள், அழகான சூழல் என ‘ஏழாம் சுவை’ வசீகரிக்கிறது.

சோறு முக்கியம் பாஸ்! - 12

உணவில் நெய் சேர்ப்பது நல்லதா?

சோறு முக்கியம் பாஸ்! - 12

டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ்

“நெய்யில் வைட்டமின் ஏ நிறைவாக இருக்கிறது. தினமும் சிறிதளவு நெய் உணவில் சேர்த்துக் கொண்டால், கண் பார்வை மேம்படும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.  சருமத்துக்கும் மிகவும் நல்லது. உடலில் ஏற்படும் வீக்கங்களை நெய்யில் உள்ள ‘புயூட்ரிக் ஆசிட்’ (Butyric Acid) குறைக்கிறது. குழந்தைகளுக்கு நெய் மிகவும் அவசியம். மூளை வளர்ச்சிக்கு  உதவும். அதற்காக அனைத்து உணவுகளையும் நெய்யில் சமைத்துக் கொடுக்கக் கூடாது. ஒரேவேளையில், நெய்யில் சமைத்த உணவுகளையும் ஆடை நீக்காத பால், மில்க் ஸ்வீட்ஸ், பன்னீர், தயிர்  ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. சிலருக்கு, உடலில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். அதனால்,  மன அழுத்தம், தற்கொலை எண்ணம், மறதி நோய் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக உணவில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். சிலருக்கு பால் ஏற்றுக்கொள்ளாது, அவர்களும் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.  இதயநோய், சிறுநீரகப் பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தப் பாதிப்புள்ளவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து நெய் சேர்த்துக் கொள்ளலாம்.