மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 15

சோறு முக்கியம் பாஸ்! - 15
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 15

வெ.நீலகண்டன் - படங்கள்: எம்.விஜயகுமார்

பெரும்பாலும் உணவகங் களைப் பொறுத்தவரை, ‘வாய் வார்த்தை’தான் விளம்பரம். சாப்பிட்டு அனுபவித்தவர்களின்  வார்த்தைகள், காற்றைவிட வேகமாகப் பரவி அந்த உணவகத்தின் தலையெழுத்தைத் தீர்மானித்துவிடும். நகருக்கு மத்தியில் இருக்கும் ஓர் உணவகம் காற்றாடினால், ஒதுக்குப்புறமாக இருக்கும் ஓர் உணவகத்தில், அமர இடமில்லாத அளவுக்குக் கூட்டம் நிறையும்.  காரணம்... முதல் வரியைப் படியுங்கள்!

சேலம், செவ்வாய்ப்பேட்டை, வெங்கடப்பன் சாலையில் சற்று உள்ளடங்கியிருக்கும் ‘ஸ்ரீஸ்ரீ பராசக்தி உணவக’த்தில் நிரம்பி வழியும் கூட்டத்தைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. 12 மணிக்குத் தொடங்கி 3 மணிவரை கல்யாண விருந்து மாதிரி பரபரத்துக்கிடக்கிறது உணவகம்.

சில அசைவ உணவகங்களில் சாப்பிட உட்கார்ந்தால்,  சாப்பாடு பரிமாறியதும் பெரிய தட்டில் சைடிஷ் வகையறாக்களை அடுக்கி, நம்  கண் முன்னால் நீட்டுவார்கள். பார்க்கும்போது கொஞ்சம் சபலமாகத் தான் இருக்கும்.  ஆனால், சாப்பிட்டு சில மணி நேரத்திலேயே விளைவுகள் தெரிந்துவிடும். வயிறு கனத்துப்போகும். மறுநாள் வரை அந்த அவஸ்தை மூக்கிலும் நாக்கிலும் நிற்கும்.

சோறு முக்கியம் பாஸ்! - 15

  ‘ஸ்ரீஸ்ரீபராசக்தி உணவக’த்தில் எவ்வளவு ‘ஹெவி’யாகச் சாப்பிட்டாலும் அடுத்த ஐந்து மணி நேரத்தில் வயிறு லேசாகிப் பசியெடுக்கத் தொடங்குகிறது. அதனால்தான் தேடி வந்து சாப்பிடு கிறார்கள். 1979-ல், என்.எம்.நாராயணசாமி என்பவரால் தொடங்கப்பட்ட உணவகம் இது. இப்போது, அவர் மகன் சுதாகரன் நிர்வகிக்கிறார். உணவகத்தில் நுழைந்ததும் கிடைக்கிற வரவேற்பும், கேட்டுக் கேட்டுப் பரிமாறுகிற உபசரிப்பும் மனசுக்கு நெருக்கமாக்கிவிடுகிறது.

சோறு முக்கியம் பாஸ்! - 15


அன்லிமிடெட் மீல்ஸ் 85 ரூபாய்.  மீன்குழம்பு, நாட்டுக்கோழிக்குழம்பு, மட்டன்குழம்பு, ‘தண்ணி’க்குழம்பு, சிக்கன் மசால் குழம்பு என 5 விதமான குழம்புகள் தருகிறார்கள். சங்கரா அல்லது பாறை மீன் கொண்டு செய்த மீன்குழம்பு புளிப்பும் காரமுமாக இருக்கிறது. நாட்டுக்கோழிக் குழம்பில்  மிளகுக்காரம். வாசமாக இருக்கிறது. ‘தண்ணி’க் குழம்பும் நாட்டுக்கோழி சேர்த்துச் செய்யப்படுவதுதான். சூப் மாதிரி இருக்கிறது. குழைய ஊற்றிச் சாப்பிடலாம். மிதமான காரம்... அதிக மசாலா வாசனை இல்லை.  சிக்கன் மசால் குழம்பு காரசாரமாக இருக்கிறது. இவைதவிர,  நாக்கைச் சீண்டும் புளிப்பான தக்காளி ரசம், மோர்.

 ‘ஸ்ரீஸ்ரீ பராசக்தி உணவக’த்தின் ஸ்பெஷலே சைடிஷ் தான். பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி ஃபிரை, சேலத்துக்கேயான தனித்தன்மை மிக்க சைடிஷ். நாட்டுக்கோழியின் ஒரு லெக் பீஸைப் பிய்த்துப்போட்டு, மிளகு சேர்த்து, கருக ஃபிரை செய்கிறார்கள். செம டேஸ்ட்.

அடுத்து, பள்ளிபாளையம் சிக்கன். இது பிராய்லர் கோழியில் செய்யப் படுகிறது. தேங்காய் வாசனையோடு செமி கிரேவியாகப் பரிமாறுகிறார்கள். மட்டனிலும் ‘பள்ளிபாளையம்’ உண்டு. தேங்காய் இருப்பதால் காரம் கட்டுக்குள் இருக்கிறது. வீட்டுச் சுவை.

 கொங்கு வட்டாரத்தில் மட்டும் ‘ஆசாரி வறுவல்’ என்றொரு சைடிஷ் கிடைக்கிறது.  அந்தப் பெயர் ஏன் வந்தது எனத் தெரியவில்லை. காய்ந்த மிளகாய் சேர்த்து சுள்ளென்று நாக்கைத் தைக்கிற காரம். போன்லெஸ் சிக்கனை சிறுசிறு துண்டுகளாகச் செதுக்கி மசாலாவில் ஊறவைத்து, நன்றாக ஃபிரை செய்கிறார்கள். ஆர்டர் செய்யும்போதே சொன்னால், கொஞ்சம் காரம் குறைவாகத் தருவார்கள். இதுவும் பிராய்லர்  வகையறாதான். ஆனால் வடிவமும் சுவையும் சூப்பர்.

சோறு முக்கியம் பாஸ்! - 15

மட்டன் சுக்காவும் இந்த உணவகத்தில் தனித்துவமாக இருக்கிறது. நிறைய மிளகு சேர்த்து,  கருக ஃபிரை செய்து தருகிறார்கள். மட்டனுக்கேயான சீந்தல் வாசனையை மசாலா மறக்கடித்துவிடுகிறது.

பள்ளிபாளையம் சிக்கன் 170 ரூபாய். ஆசாரி வறுவல் 180 ரூபாய். பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி ஃபிரை 210 ரூபாய். கொஞ்சம் பாக்கெட் கனக்கத்தான் செய்கிறது. ஆனால், மனதுக்கு நிறைவான உணவு. வயிற்றுக்கும் இதமாக இருப்பது கூடுதல் ஸ்பெஷல்.

“சில்லி சிக்கன் தவிர, வேறெந்த உணவுக்கும் நிறமிகள் சேர்ப்பதில்லை. மசாலா எல்லாமே எங்கள் சொந்தத் தயாரிப்புதான். வீட்டில் எப்படி சமைப்போமோ, அப்படித்தான் இங்கேயும் சமைக்கிறோம். அதனால்தான் பலர் தினமும் வந்து சாப்பிடுகிறார்கள்.  பண்ணை நாட்டுக்கோழிகளை நாங்கள் பயன்படுத்து வதில்லை. கிராமத்துச் சந்தைகளில் கொள்முதல் செய்கிறோம். அதனால் நாட்டுக்கோழி சைடிஷ்கள் சற்று விலை அதிகமாக இருக்கின்றன” என்கிறார் உணவகத்தின் உரிமையாளர் சுதாகரன். 

மீல்ஸ் விரும்பாதவர்களுக்கு நாட்டுக்கோழி பிரியாணி இருக்கிறது.  பிரியாணியில் சேலத்துக்கென்று ஒரு டேஸ்ட் உண்டு. அது இங்கே கிடைக்கிறது. ஒரு மீல்ஸ் அல்லது பிரியாணி...  ஒரு பிச்சுப்போட்ட ஃபிரை...  கொஞ்சம் காஸ்ட்லிதான். ஆனால் நிறைவான லஞ்ச்!

- பரிமாறுவோம்    

சோறு முக்கியம் பாஸ்! - 15

உணவகங்களில் தந்தூரி, கிரில்டு சிக்கனுக்கு சைடிஷாக தரும் மயோனைஸ் (Mayonnaise) உடம்புக்கு நல்லதா?

மேனகா, உணவியல் நிபுணர்

“முட்டையின் மஞ்சள் கரு, எலுமிச்சைச்சாறு, வினிகர், உப்பு, எண்ணெயோடு சிறிதளவு மிளகும் பூண்டும் சேர்த்துச் செய்யப்படுவதுதான் மயோனைஸ்.  இதில் 80 சதவிகிதம் வரை கொழுப்பு நிறைந்திருக்கிறது. ஒரு டேபிள் ஸ்பூன் மயோனஸில் 10 கிராம் கொழுப்பு இருக்கிறது. இது, நம் உடலுக்கு  ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்பின் அளவைவிட  15 மடங்கு அதிகம்.  பெரும்பாலும் சோயா அல்லது மக்காச்சோள எண்ணெய்தான் இதில் சேர்க்கிறார்கள். இது இதய நோய்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதோடு, சராசரியாக ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான  எண்ணெயின் அளவைவிட 40 சதவிகிதம் அதிகமாக மயோனைஸ் மூலம் நம் உடலுக்குள் செல்கிறது. இதில், சோடியமும் அதிகம் இருக்கிறது. அது ரத்த அழுத்தத்தை உருவாக்கும். சில இடங்களில்  மைதா, மோனோ சோடியம் குளூட்டமேட் (MSG) கலக்கிறார்கள். இதுவும் உடலுக்கு நல்லதல்ல. மயோனைஸைத் தவிர்த்துவிட்டு, கொழுப்பு நீக்கப்பட்ட தயிருடன் சிறிதளவு மிளகுப்பொடி சேர்த்துச் சாப்பிடலாம்”