மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 17

சோறு முக்கியம் பாஸ்! - 17
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 17

வெ.நீலகண்டன் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

சோறு முக்கியம் பாஸ்! - 17

 ‘சைடிஷ்’ஷுக்கென்றே பெயர்பெற்ற உணவகங்கள் சில இருக்கின்றன. குழம்பு, கிரேவி வகையறாக்க ளுக்கென்றே புகழ்பெற்ற உணவகங்களும் உள்ளன. திருச்சி கன்டோன்மென்ட், வில்லியம்ஸ் சாலையில் உள்ள கார்த்திக் மெஸ், இரண்டாவது வகை.  மீன்குழம்புப் பிரியர்களின் விருப்பத்துக்குரிய உணவகம் இது.

அயிரை மீன்குழம்பு, விறால் மீன்குழம்பு, நெத்திலி மீன்குழம்பு, காரப்பொடிக்குழம்பு என நான்கு வகையான குழம்புகள், வஞ்சிர மீன் வறுவல், நெத்திலி மீன் வறுவல், போன்லெஸ் சில்லி ஃபிஷ் என ரசனையான மீன் சைடிஷ்கள் இங்கே கிடைக்கின்றன. இவற்றுக்காகவே தொலைதூரம் பயணம் செய்தெல்லாம் இந்த உணவகத்தைத் தேடிவருகிறார்கள். 

சோறு முக்கியம் பாஸ்! - 17

கார்த்திக் மெஸ்ஸின் உரிமையாளர் சங்கர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு, ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். கன்டோன்மென்ட்டைச் சுற்றியிருக்கும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்காகத் தன் வீட்டுக்கருகில்  பகுதி நேரமாக இந்த மெஸ்ஸைத் தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் பிசினஸ் பெரிதாகிவிட, விரிவுரையாளர் வேலையை விட்டுவிட்டு உணவகத்தை விரிவுபடுத்திவிட்டார்.   

மதிய உணவுமட்டும்தான். 12 மணிக்குத் தயாராகிவிடுகிறது. ஒன்றரை மணிக்கெல்லாம் இருக்கைகள் நிரம்பிவிடுகின்றன. கொஞ்சம் காத்திருந்துதான் சாப்பிட வேண்டும்.

சாப்பாடு 85 ரூபாய்; அன்லிமிடெட். எலும்புக் குழம்பு, சிக்கன் கிரேவி, மீன் குழம்பு. இவை தவிர, சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், ஊறுகாயும் உண்டு. பொதுவாக, அசைவ உணவகங்களில்  தருகிற குழம்பு வகைகளின் சுவையில் பெரிய வித்தியாசமிருக்காது. பெயரும் நிறமும் வாசனையுமே வேறுபடும். ஆனால்,  இங்கு, மூன்று அசைவக் குழம்புகளையும் ருசித்துச் சாப்பிடலாம். குறிப்பாக, காரப்பொடி மீன்குழம்பு ‘கார்த்திக் மெஸ்’ஸின் ஸ்பெஷல்.

சோறு முக்கியம் பாஸ்! - 17

விரால் மீன்குழம்பு, நெத்திலி மீன்குழம்பு, அயிரை மீன்குழம்பெல்லாம் தனியாகத்தான் வாங்க வேண்டும். விரால் மீன் குழம்பு 120 ரூபாய். நெத்திலி மீன்குழம்பு 90 ரூபாய். அயிரை மீன்குழம்பு 140 ரூபாய். ஒவ்வொன்றும் அதனதன் தனித்துவமான சுவையோடு இருக்கிறது. பெரிய கிண்ணத்தில் தருகிறார்கள். இரண்டு பேர் ஊற்றிச் சாப்பிடலாம். மீன்துண்டுகளும் உள்ளன.

சோறு முக்கியம் பாஸ்! - 17


சாதம் வைத்தவுடனே பெரிய ட்ரேயில் சைடிஷ்களைக் கவர்ச்சியாக அடுக்கிக்கொண்டு வந்து நீட்டுகிறார்கள். பார்த்துவிட்டால், தவிர்க்கவே முடியாது. எலுமிச்சைச் சாறு தெளிக்கப்பட்ட வஞ்சிர மீன் வறுவலைப் பார்த்தால் பசி அதிகரிக்கிறது. சில்லி ஃபிஷ்ஷும் வித்தியாசமாக இருக்கிறது. கொடுவா மீனை, சிக்கன்போல சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மசாலாவில் ஊறவைத்துப் பொரித்துத் தருகிறார்கள்.

மீன் மட்டுமன்றி, நண்டு, இறாலிலும் வித்தியாசமான டிஷ்கள் வைத்திருக்கிறார்கள். நண்டைப் பொது இடத்தில் உடைத்துச் சாப்பிடுவது சற்று சங்கடம் தரும். நண்டு ஆம்லேட்டை அந்தச் சங்கடமில்லாமல் சாப்பிடலாம்.  நண்டு சதையைத் தனியே எடுத்து முட்டை சேர்த்து தோசையாக ஊற்றித் தருகிறார்கள். அடடா. ஆஸம்..! இறாலை மசாலாவில் ஊறவைத்து சுக்காப் பதத்துக்கு  ஃப்ரை செய்து சுடச்சுடப் பரிமாறுகிறார்கள். அதுவும் நன்று!

‘சிக்கன் முட்டைக் கொத்து’ என்று ஒரு சைடிஷ் இருக்கிறது. கொத்து பரோட்டா மாதிரி. சிக்கனை உதிர்த்துப்போட்டு, முட்டை சேர்த்து, கிரேவியில் ஊறவைத்து சிறுகக் கொத்தி  இலையில் குவிக்கிறார்கள். சைடிஷ்ஷா, மெயின் டிஷ்ஷா... எப்படிக் கொள்வதென்று தெரியவில்லை. இரும்புச்சட்டியில் மிளகு சேர்த்துக் கிளறித்தருகிற கடாய் சிக்கனும் சூப்பர்.

சோறு முக்கியம் பாஸ்! - 17

சைவமோ, அசைவமோ... உணவகத்தில் தினமும் சாப்பிடுவது சில விளைவுகளை ஏற்படுத்தத்தான் செய்யும். அவ்வளவு எளிதில் ‘செட்’ ஆகாது. ஆனால், கார்த்திக் மெஸ்ஸில்  தின வாடிக்கையாளர்கள் நிறையபேர்  இருக்கிறார்கள்.

``பொதுவா, உணவகம் நடத்துற சிலபேர், சாப்பிட வீட்டுக்குப் போயிடுவாங்க.   நடத்துறவங்களாலேயே தினமும் உணவகத்துல சாப்பிட முடியாது. ஆனா, இந்தப் பகுதியில வேலை செய்யுற நிறைய பேர் இங்கே தினமும் வந்து சாப்பிடுவாங்க. அவங்களுக்குச் சின்ன பாதிப்பைக்கூட உருவாக்கிடக் கூடாதுங்கிற பொறுப்புணர்வோடதான் சமைக்கிறோம். எதை எப்படிச் சமைக்கணுங்கிறதுலதான் உணவோட சுவை இருக்கு. நான் படிச்சுப் பட்டம் வாங்கினதே அதைப்பத்திதான். இதே துறையில வேலையும் செஞ்சிருக்கேன். அதனால, ருசிக்காக எந்த இடுபொருளும் சேர்க்கிறதில்லை...’’ என்கிறார் உணவகத்தின் உரிமையாளர் சங்கர்.    

அரசு ஊழியர்களே பிரதான வாடிக்கை யாளர்கள் என்பதால், ஞாயிற்றுக்கிழமை மெஸ் விடுமுறை.   காத்திருந்து சாப்பிடப் பொறுமை யில்லாதவர்கள் ஒரு மணிக்கு முன்னதாக உணவகத்துக்குச் சென்றுவிடுவது நல்லது. பெரிதாக பாக்கெட்டைப் பதம் பார்க்காத நிறைவான உணவு. திருச்சிப் பக்கம் செல்பவர்கள் மதிய உணவுக்கு இங்கு இறங்கலாம்!

- பரிமாறுவோம்

கடல் மீன், நன்னீர் மீன்... எது நல்லது?

சோறு முக்கியம் பாஸ்! - 17

சங்கீதா நடராஜன்,  உணவியல் நிபுணர்

சோறு முக்கியம் பாஸ்! - 17



``நன்னீரில் வளரும் மீன்களில், கால்சியமும், உடம்புக்குத் தேவையான நல்ல கொழுப்புகளும் நிறைந்திருக்கின்றன. பார்வையை மேம்படுத்தும் வைட்டமின் ஏ,  ரத்தச்சோகை வராமல் தடுக்கும் வைட்டமின் பி-9,  தாதுச்சத்தான சோடியம் போன்றவையும் நன்னீர் மீன்களில் நிறைய உள்ளன.  ஆனால் நன்னீர் மீன்களைவிட கடல்  மீன்களில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இந்த அமிலம், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய்கள் வராமல் தடுக்கும். இதய நோயாளிக்கும் கடல் மீன்கள் நல்லது. சுவையிலும் நன்னீர் மீன்களைவிட, கடல் மீன்கள் மேம்பட்டதாக இருக்கும். அதேநேரம், கடல் மீன்களில் பாதரசம் அதிகமாக இருக்கும். ஆனால், நன்னீர் மீன்களில் பாதரசத்தின் அளவு குறைவாகவே இருக்கும். பாதரசம் நரம்பு மண்டலத்தை  பாதிக்கும் என்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள் கடல் மீன்களைத் தவிர்க்கலாம்.’’