தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

சோயா சங்ஸ் கிரேவி

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - ஒரு கப்,  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),   மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்),    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 ,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

அரைக்க:  தேங்காய்த் துருவல் - 3  டேபிள்ஸ்பூன்  பாதாம் - 6.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கிச் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா உருண்டைகள், உப்பு, தேவையான அளவு தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து, குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சோயா ஸ்டப்ஃடு சப்பாத்தி

தேவை- மேல் மாவு செய்ய:  கோதுமை மாவு - ஒரு கப்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. 

ஸ்டஃபிங் செய்ய:  சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) - 15,   உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்), கொத்தமல்லித்தழை - 2  டேபிள்ஸ்பூன்,   மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,   இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்,   பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,   சீரகம் - ஒரு டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை: கோதுமை மாவுடன் எண்ணெய் உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசையவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா சங்ஸ் உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசி வடியவிட்டு,  மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், இஞ்சி விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த சோயா, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிசைந்த கோதுமை மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும். நடுவே சிறிதளவு சோயா கலவையை வைத்துப் பரப்பி, மூடி மீண்டும் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சோயா பீன்ஸ் பருப்பு உசிலி

தேவை:      பொடியாக நறுக்கிய பீன்ஸ் - ஒரு கப்,   காய்ந்த சோயா பயறு, துவரம்பருப்பு - தலா அரை கப்,   காய்ந்த மிளகாய் - 4,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   கறிவேப்பிலை - தேவையான அளவு,   கடுகு - ஒரு டீஸ்பூன்,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     காய்ந்த சோயாவுடன் துவரம்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும். பீன்ஸையும், அரைத்த பருப்புக் கலவையையும் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வேகவைத்த பருப்பை ஆறியதும் உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் உதிர்த்த பருப்பு, வேகவைத்த பீன்ஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சோயா அடை

தேவை:      பச்சரிசி, இட்லி அரிசி - தலா அரை கப்,   கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த சோயா பயறு - தலா கால் கப்,   பாசிப்பருப்பு  - 2 டேபிள்ஸ்பூன்,   காய்ந்த மிளகாய் - 6,   பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,   தேங்காய்த் துருவல் - கால் கப்,   கறிவேப்பிலை - சிறிதளவு,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:    அரிசி, பருப்பு, சோயா பயறு வகைகளுடன் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

சோயா பெசரட்

தேவை:      காய்ந்த சோயா, முளைகட்டிய பச்சைப் பயறு - தலா அரை கப்,   பச்சரிசி - கால் கப்,   பச்சை மிளகாய் - 3,   தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு,   நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,   கேரட் துருவல் - தேவையான  அளவு,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     சோயாவை 4 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சோயாவுடன் அரிசி, முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிதளவு கேரட் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

சோயா பருப்பு வடை

தேவை:      காய்ந்த சோயா பயறு, கடலைப்பருப்பு - தலா அரை கப்,   காய்ந்த மிளகாய் - 4,   சோம்பு - ஒரு டீஸ்பூன்,   கறிவேப்பிலை - சிறிதளவு,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:      சோயாவுடன் கடலைப்பருப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவுடன் சோம்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சோயா தால்

தேவை:      சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப்,   சீரகம், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்,   பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்),   கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   நெய் - ஒரு டீஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:    பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில்  சோயா சங்ஸ் உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசி வடியவிடவும். குக்கரில் சோயா உருண்டைகள், முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, சீரகம், மிளகுத்தூள், பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த சோயா கலவை, உப்பு சேர்த்துக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சோயா கட்லெட்

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்),   வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),   பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்),
 கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு,   சீரகம் - ஒரு டீஸ்பூன்,   பிரெட் தூள் - கால் கப்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:    பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சீரகம் தாளிக்கவும். அதனுடன் சோயா கலவையைச் சேர்த்துச் சுருள வதக்கி இறக்கவும்.  ஆறியவுடன்  சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, விருப்பமான வடிவில் செய்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு கட்லெட்டுகளை வைத்து, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சோயா கார சப்பாத்தி

தேவை:      கோதுமை மாவு, சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்),   அரைத்த விழுது - தலா அரை கப் ,  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:    கோதுமை மாவுடன் அரைத்த சோயா விழுது, மிளகாய்த்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும். அரை மணி நேரம் கழித்து, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி,  சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சில்லி சோயா

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன்,   இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,   கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டீஸ்பூன்,   மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தக்காளி, குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),   சீரகம் - ஒரு டீஸ்பூன்,   கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துத் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். உருண்டைகளை இரண்டாக நறுக்கவும். இதனுடன் தக்காளி விழுது, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்துப் பிசிறவும். இதை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, பிசிறிய சோயா உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பொரித்த சோயா உருண்டைகள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சில நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சோயா பெப்பர் ஃப்ரை

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   கறிவேப்பிலை - சிறிதளவு,   கடுகு - ஒரு டீஸ்பூன்,   மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.  

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

அரைக்க:      தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு  பச்சை மிளகாய் - ஒன்று  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  முந்திரி - 6.

செய்முறை:     பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.  பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசி வடியவிடவும். உருண்டைகளை இரண்டாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, நறுக்கிய சோயா உருண்டைகள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

சோயா லட்டு

தேவை:      சோயா மாவு - ஒரு கப்,   வெல்லத்தூள் - முக்கால் கப்,   குளுக்கோஸ் பவுடர், பால் பவுடர் - தலா கால் கப்,   நெய் - தேவையான அளவு,   முந்திரி - 10,   ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     வெறும் வாணலியில் சோயா மாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.  சிறிதளவு நெய்யில் முந்திரியை வறுத்தெடுக்கவும். சோயா மாவுடன் வெல்லத்தூள்,  குளுக்கோஸ் பவுடர், பால் பவுடர், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கலக்கவும். நெய்யை உருக்கி மாவுக் கலவையில் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

சோயா ஸ்டஃப்டு பூரி

தேவை: மேல் மாவு செய்ய:   கோதுமை மாவு - ஒரு கப்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

ஸ்டஃபிங் செய்ய:  சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 15,   உருளைக் கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்),   கொத்தமல்லித்தழை - 2  டேபிள்ஸ்பூன்,   மிளகாய்த்தூள், இஞ்சி விழுது - தலா அரை டீஸ்பூன்,   பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,   சீரகம் - ஒரு டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா  உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், இஞ்சி விழுது, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கு, சோயா உருண்டைகள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இதுவே ஸ்டஃபிங். கோதுமை மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்க்கவும். அதன் நடுவே சிறிதளவு சோயா கலவையைப் பரப்பி, மூடி மீண்டும் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, திரட்டிய பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சோயா பர்ஃபி

தேவை:      சோயா மாவு - ஒரு கப்,   பொடித்த வெல்லம் - ஒன்றரை கப்,   நெய் - அரை கப்,   ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,   முந்திரி - 10,   வறுத்த பாசிப்பருப்பு மாவு - 2 டேபிள்ஸ்பூன்.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு அதே பாத்திரத்தில் சோயா மாவைச் சேர்த்து வறுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி நன்கு கரைந்ததும் வடிகட்டவும். அதனுடன் வறுத்த மாவு சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும். கலவைப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது பாசிப்பருப்பு மாவு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி, சற்று ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

சோயா பாயசம்

தேவை:      சோயா மாவு - அரை கப் ,  காய்ச்சி ஆறவைத்த பால் - 3 கப்  , பொடித்த வெல்லம் - ஒரு கப் ,  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,   முந்திரி - 6,   திராட்சை - 6,   ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டுச் சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு அதே பாத்திரத்தில் சோயா மாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். அதனுடன் 2 கப் பாலை ஊற்றி,  அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவிடவும். மாவு வெந்ததும் வெல்லக் கரைசல், மீதமுள்ள பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

சோயா பாலக் கிரேவி

தேவை:       சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   பாலக்கீரை - ஒரு கட்டு,   வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),   தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,   பூண்டு - 10 பல்,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,   ஜாதிபத்திரி - சிறிய துண்டு,   எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:    பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.   பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். மற்றொரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டுச் சூடாக்கி, கொதிக்கும்போது பாலக்கீரையைச் சேர்த்து மூடி இறக்கவும். ஆறியதும் இலைகளை மட்டும் தனியாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சித் துருவல் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா உருண்டைகள், அரைத்த பாலக்கீரை விழுது, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

சோயா குணுக்கு

தேவை:      இட்லி மாவு - ஒரு கப்,   சோயா சங்ஸ் (பவுடராக அரைத்தது) - ஒரு கப்,   பச்சை மிளகாய் - 4  (பொடியாக நறுக்கவும்),   தோல் சீவி, துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்,   கறிவேப்பிலை - சிறிதளவு, 
 பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:    இட்லி மாவுடன் அரைத்த சோயா பொடி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, மாவைக் கரண்டியால் எடுத்து எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுக்கவும்.

சோயா அவியல்

தேவை:      உரித்த சோயா பீன்ஸ் - அரை கப்,   கேரட், வாழைக்காய், முருங்கைக்காய் - தலா ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்),   புளிக்காத தயிர் - ஒரு கப்,   ஓமம் - ஒரு டீஸ்பூன்,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் ,  கறிவேப்பிலை - சிறிதளவு,   தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

அரைக்க:      தேங்காய்த் துருவல் - கால் கப்  பச்சை மிளகாய் - 2  சீரகம் - ஒரு டீஸ்பூன்.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு  விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன்  சோயா பீன்ஸ் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் கேரட் சேர்க்கவும். 2 நிமிடங்கள் கழித்து, முருங்கைக்காய் சேர்க்கவும். பிறகு 2 நிமிடங்கள் கழித்து வாழைக்காய் சேர்த்து நன்றாக வேகவிடவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது, தயிர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே ஓமம், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து மூடி வைக்கவும். தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பரிமாறலாம்.

சோயா பயறு பூசணி விதை இட்லி மிளகாய்ப் பொடி

தேவை:      காய்ந்த சோயா பயறு - அரை கப்,   பூசணி விதை - ஒரு டேபிள்ஸ்பூன்,   காய்ந்த மிளகாய் - 15,   உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,   பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,   எண்ணெய் - 2 டீஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை: வாணலியில்  எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மிளகாயை வறுத்தெடுக்கவும்.  பிறகு சோயா, பூசணி விதை, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் வறுத்த பொருள்களை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து பவுடராக அரைத்தெடுக்கவும்.

சோயா வடகறி

தேவை:  காய்ந்த சோயா பயறு, கடலைப்பருப்பு - தலா அரை கப்,   காய்ந்த மிளகாய் - 4 ,  சோம்பு - ஒரு டீஸ்பூன்,   கறிவேப்பிலை - சிறிதளவு,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   சோயா உருண்டைகள் - 20 ,  சீரகம் - ஒரு டீஸ்பூன்,   குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),   மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க:  தேங்காய்த் துருவல் - கால் கப்  பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்  முந்திரி - 10  தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா  உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். சோயா பயறுடன் கடலைப்பருப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்க
வும். அதனுடன் காய்ந்த  மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம் சேர்த்து கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதனுடன் சோம்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய், அரைத்த விழுது, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும்.  அதனுடன் வடைத் துண்டுகள், சோயா உருண்டைகள் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சோயா பீன்ஸ் கூட்டு

தேவை:      சோயா பீன்ஸ் (உரித்தது) - ஒரு கப்,   வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

அரைக்க:      தேங்காய்த் துருவல் - கால் கப்,   பச்சை மிளகாய் - 2,   சீரகம், பூசணி விதை - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:       கடுகு - ஒரு டீஸ்பூன்,   உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,   காய்ந்த மிளகாய் - 2,   கறிவேப்பிலை - சிறிதளவு,   பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,   எண்ணெய் - 2 டீஸ்பூன்.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:    அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் சோயா பீன்ஸுடன் 2 கப் தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து, சோயாவுடன் வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துக் கூட்டுடன் கலந்து பரிமாறவும்.

சோயா உருண்டை புலாவ்

தேவை:       பாசுமதி அரிசி - ஒரு கப்  சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,   ஜாதிபத்திரி - சிறிய துண்டு,   பிரியாணி இலை - ஒன்று,   வெங்காயம், தக்காளி, கேரட் - தலா ஒன்று,   இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,   மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,   மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) - தலா ஒரு டீஸ்பூன்,   கொத்தமல்லித்
தழை - சிறிதளவு,   எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் கேரட், பச்சைப் பட்டாணி, சோயா உருண்டைகள், அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சோயா இட்லி

தேவை:      இட்லி அரிசி - 2 கப்,   உளுத்தம்பருப்பு - கால் கப்,   காய்ந்த சோயா - கால் கப்,   வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     அரிசியைத் தனியாகவும், உளுத்தம்பருப்பு, சோயா, வெந்தயம் ஆகியவற்றைத் தனியாகவும் 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தனித்தனியாக அரைத்தெடுக்கவும். மாவுகளை  ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டுக் கரைத்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். மறுநாள் மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சோயா அல்வா

தேவை:      சோயா மாவு – ஒரு கப்,   பொடித்த வெல்லம் - முக்கால் கப்,   நெய் – அரை  கப்,   ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் ,  முந்திரி – 6.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, நன்கு கரைந்ததும் இறக்கி வடிகட்டவும். அடிகனமான வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரியைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு சோயா மாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். இதனுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். மேலே வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சோயா ஓட்ஸ் பான் கேக்

தேவை:       சோயா மாவு, ஓட்ஸ் மாவு - தலா அரை கப்,   கோதுமை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,   பொடித்த வெல்லம் - முக்கால் கப்,   கனிந்த வாழைப்பழம் - ஒன்று,   முந்திரி -10 (ஒன்றிரண்டாக உடைக்கவும்),  ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,   பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன் ,  தேங்காய்த் துருவல் -  2 டேபிள்ஸ்பூன்,   நெய் - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில்  சோயா மாவுடன், ஓட்ஸ் மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழம், முந்திரி, ஏலக்காய்த்தூள், பால் பவுடர், தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் சேர்த்து, கெட்டியாகக் கரைக்கவும் (தோசை மாவு பதத்தைவிடக் கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்).   தோசைக்கல்லைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவைக் கரண்டியில் எடுத்துச் சற்று கனமாக ஊற்றி, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சோயா சன்னா மசாலா

தேவை:       சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   வெள்ளைக் கொண்டைக்கடலை - ஒரு கப்,   தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்),  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் ,  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   புளிக்கரைசல் - அரை கப்,   பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,   ஜாதிபத்திரி - சிறிய துண்டு,   எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில்  சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய்,  ஜாதிபத்திரி தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு சோயா உருண்டைகள், வேகவைத்த கொண்டைக்கடலை, உப்பு, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும் (நீர்க்க இருந்தால் சிறிதளவு கொண்டைக்கடலையை மிக்ஸியில் அரைத்தும் சேர்க்கலாம்). மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சோயா வெஜ் குருமா

தேவை:       சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று (சதுரத் துண்டுகளாக்கவும்),   பீன்ஸ் – 10,   வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),   இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்,   மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   எண்ணெய், உப்பு – தேவையான அளவு.  கொத்தமல்லித் தழை - சிறிதளவு,   பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,   ஜாதிபத்திரி - சிறிய துண்டு ,  பிரியாணி இலை - ஒன்று.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

அரைக்க:  தேங்காய்த் துருவல் - கால் கப்  முந்திரி – 5  பச்சை மிளகாய் – 2  பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு  அரைத்த விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சோயா மட்டர் கிரேவி

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) 20,   பச்சைப் பட்டாணி - ஒரு கப்,   வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),   பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்),   இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,   சீரகம் - ஒரு டீஸ்பூன்,   கொத்தமல்லித்
தழை - சிறிதளவு,   எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில்  சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். பச்சைப் பட்டாணியை வேகவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சோயா உருண்டைகளைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி  தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, அதே எண்ணெயில் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மேலும் வதக்கவும். பிறகு சோயா உருண்டைகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சோயா பக்கோடா

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) – 20,   கடலை மாவு - அரை கப்,   வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) ,  பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),   தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,   கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். பிறகு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி மாவைப் பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

சோயா புளிக்குழம்பு

தேவை:       சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) – 20,   சின்ன வெங்காயம் – 15 (தோல் உரிக்கவும்),   பூண்டு – 10,   கறிவேப்பிலை – சிறிதளவு,   தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்),   பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்),   சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்,   புளி – எலுமிச்சை அளவு,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:       வெந்தயம், மிளகு – தலா 5  கடுகு - ஒரு டீஸ்பூன்  சீரகம், ஓமம் – தலா அரை டீஸ்பூன்  பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்  நல்லெண்ணெய் - தேவையான அளவு.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

செய்முறை:     புளியைக் கரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு வெந்தயம், மிளகு, கடுகு தாளிக்கவும். அதனுடன் சீரகம், ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பிறகு பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி,  மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி, புளிக்கரைசல், சோயா உருண்டைகள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி கொதிக்கவிடவும்.  எண்ணெய் பிரிந்து வரும்போது  இறக்கவும். 

குடும்பத்தினரை குஷியில் ஆழ்த்த..!

`பசி எடுக்கும்போது வயிற்றை நிரப்பத் தேவைப்படுவது உணவு’ என்கிற எளிய எண்ணத்தை மீறி, உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன, அவை நம் உடல் இயக்கத்துக்கு எவ்வாறு பயன்படுகின்றன, எத்தகைய உணவுகள் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் போன்ற கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களின் அடிப்படையில் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் போக்கு, சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

உடல் இயக்கத்துக்கு இன்றியமையாதது புரதம். இது இறைச்சியில் அதிகம் உள்ளது. சைவ உணவுகளைப் பொறுத்தவரை சோயாவில்தான் புரதம் மிக அதிக அளவில் இருக்கிறது.  அத்துடன் கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் உள்படப் பல்வேறு சத்துகளும் உள்ளன. இத்தகைய தனிச்சிறப்புமிக்க சோயாவில் இட்லி, சப்பாத்தி, கிரேவி, வடை, பாயசம், லட்டு, புலாவ், பான்கேக் என விதவிதமான ரெசிப்பிகளை இங்கே வழங்கும் மதுரையைச் சேர்ந்த சமையல் கலைஞர் பிருந்தா இரமணி, ``அளப்பரிய பெருமைகள் கொண்ட சோயாவில், சுவையான சத்துமிக்க ரெசிப்பிகளை வழங்கியுள்ளேன். இவற்றையெல்லாம் செய்து பரிமாறி, குடும்பத்தினரை குஷியில் ஆழ்த்துங்கள்’’ என்று அன்புடனும், அக்கறையுடனும் கூறுகிறார்.

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்