மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 18

சோறு முக்கியம் பாஸ்! - 18
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 18

வெ.நீலகண்டன் - படம்: தி.குமரகுருபரன்

தென்மாவட்ட உணவகங்களில் அசைவ உணவு சாப்பிடும்போது ஒரு வித்தியாசத்தை உணரலாம். அன்னாசிப் பூ, கரம் மசாலா, பட்டை போன்ற அந்நிய வாசனையே இருக்காது. மல்லி, மிளகு, சீரகம் என அஞ்சறைப்பெட்டி வாசனையே மிகுந்திருக்கும். அதிலும்,  குழம்புகளில் மல்லி வாசனை. சாப்பிட்டு சில மணி நேரம் வரை நம் மூச்சுக்காற்றில் அந்த வாசனை சுற்றிக்கொண்டேயிருக்கும்.  இந்த அஞ்சறைப் பெட்டி மசாலாக்களோடு நமக்குத் தலைமுறைத் தொடர்புகள் இருப்பதால் செரிமானம் உள்ளிட்ட எல்லா உள்வேலைகளையும் இந்தப் பொருள்களே  செய்துவிடும். கூடுதலாக நமக்குகந்த சுவையையும் தந்துவிடும்.

சமீபகாலத்தில், ஏராளமான தென்மாவட்ட உணவகங்கள் சென்னைக்கு வந்துவிட்டன.  ஆசையோடு உள்நுழைந்தால் பெரும்பாலான உணவகங்களில் உள்ளூர் வாசனை கொஞ்சம்கூட இல்லை. எல்லாம்,  சென்னையின் பொதுத்தன்மைக்கு மாறிவிடுகின்றன.  தென்மாவட்ட காரசார அசைவ உணவுகளை அதன் அசல் தன்மையோடு டேஸ்ட் செய்ய விரும்புபவர்கள், விருகம்பாக்கம், ஆற்காடு சாலை,  சந்திரா மெட்ரோ மாலின் உள்ளே இருக்கும் கருப்பையா மெஸ்ஸுக்குப் போகலாம்.

சோறு முக்கியம் பாஸ்! - 18

மாலின் முதல் தளத்தில் உள்ளது மெஸ். விசாலமான டைனிங். ஒவ்வொரு டேபிளுக்கும் ஓர் உபசரிப்பாளர் இருக்கிறார். டக்-இன் செய்த சூபர்வைசர்கள் மெஸ்ஸின் எல்லா திசைகளிலும் நிறைந்திருக்கிறார்கள். எல்லோரின்  வார்த்தைகளிலும் தென்மாவட்டத் தமிழ்.

சோறு முக்கியம் பாஸ்! - 18


12 மணிக்கெல்லாம் லஞ்ச் ரெடியாகி விடுகிறது. சைடிஷ் தனியாக வாங்க வேண்டியதில்லை. சாப்பாட்டோடு வந்துவிடும். மட்டன் சாப்பாடு, சிக்கன் சாப்பாடு, நாட்டுக்கோழி சாப்பாடு, காடை சாப்பாடு, நண்டு சாப்பாடு, மட்டன் கோலா உருண்டை சாப்பாடு, விரால் மீன் குழம்பு சாப்பாடு என  12 வகையான சாப்பாட்டு வெரைட்டிகள் வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கோழி சாப்பாடும், நண்டு சாப்பாடும் சர்ப்ரைஸ். நாட்டுக்கோழி சாப்பாடு 280 ரூபாய். இரண்டு கூட்டு, ஒரு பொரியல்,  அப்பளம், ஊறுகாய், மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு. கூடவே, நான்கு பெரிய நாட்டுக்கோழித் துண்டுகளும் கிண்ணம் நிறைய கிரேவியும் தருகிறார்கள்.  கிரேவியையும்கூட சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம். நாட்டுக்கோழி ரோஸ்ட் பஞ்சுபோல வெந்து அஞ்சறைப்பெட்டி மசாலாவில் ஊறியிருக்கிறது.  இறுதியில்,  ரசமலாய் அல்லது பாசந்தி இனிப்போடு நிறைவுறுகிறது விருந்து. 

நாட்டுக்கோழி விரும்பாதவர்கள், நண்டு சாப்பாடு தேர்வு செய்யலாம். ஒரு பெரிய முழு நண்டு,  கிரேவியோடு தருகிறார்கள். இரண்டு பேர் பகிர்ந்துகொள்ளலாம்.  பொதுவாக, நண்டு சாப்பிட ஒரு கை போதாது. ஓட்டை உடைத்து, சதையை சிதைவுறாமல் லாகவமாக எடுப்பதெல்லாம் ஒரு கலை. பழகியோருக்கே சாத்தியம். அருகிலிருப்பவர்கள்வேறு விசித்திரமாகப் பார்ப்பார்கள்.  அந்த சங்கடம் கருதியே உணவகங்களில் பலர் நண்டு சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். கருப்பையா மெஸ்ஸில் ஒவ்வொரு டேபிளுக்கும் கணிசமான இடைவெளி இருப்பதால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் சாவகாசமாகச்  சாப்பிடலாம். காரசாரமாக இருக்கிறது.

சோறு முக்கியம் பாஸ்! - 18

கோலா உருண்டை இந்த உணவகத்தின் ஸ்பெஷல். ஒரு உருண்டை 30 ரூபாய்தான். ஸ்பைஸியாக, நாக்கில் கரைகிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ‘டே ஸ்பெஷலாக’  நாட்டுக்கோழி சாப்ஸ் தனியாகக் கிடைக்கிறது. ‘பாக்கெட்’ கனமாக இருந்தால் ட்ரை பண்ணலாம். நாட்டுக்கோழியின் இரண்டு பெரிய லெக் பீஸ்களை அப்படியே ஃப்ரை செய்து தருகிறார்கள்.  4 பேர் சாப்பிடலாம்.

மீன் ஐட்டங்களும் சிறப்பு. நெத்திலி மீன், விறால் மீன் குழம்புகள், வஞ்சிரம் ஃபிஷ் கறி மூன்றும் ஆஸம்.  கிச்சன் முழுவதும் பெண்களே நிரம்பியிருக்கிறார்கள். பொதுவாக, ஆர்டர் கொடுத்துவிட்டு உணவகத்தில் காத்திருப்பது பெரும் எரிச்சல்.  அதுவும் குழந்தைகளோடு போய்க் காத்திருந்தால் தர்மசங்கடமாகிவிடும்.  அடுத்த டேபிளில் சாப்பிடுபவர்களையே பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்தத் தொந்தரவும் இங்கில்லை. ஆர்டர் கொடுத்த வேகத்திலேயே சுடச்சுடக் கொண்டுவந்து பரிமாறிவிடுகிறார்கள்.

கருப்பையா மெஸ்ஸின் உரிமையாளர் கருப்பையா, பெரும் உணவுப்பிரியர். நல்லுணவைத் தேடித்தேடிச் சாப்பிடுபவராம். அந்த அனுபவத்தில்  சிவகங்கையில் ஒரு சைவ உணவகம் தொடங்கியிருக்கிறார். அது கொடுத்த வெற்றியின் விளைவே இந்தக் கருப்பையா மெஸ். 

பார்க்கிங் பிரச்னையில்லை.  மால் பார்க்கிங்கில் நிறுத்தலாம். நிறுத்தும்போதே ஒரு மணி நேரத்துக்கு 40 ரூபாய் வாங்கிவிடுகிறார்கள். உணவகத்தில் சாப்பிட்ட பில்லைக் காட்டினால், திரும்பும்போது ரிட்டன் செய்துவிடுகிறார்கள்.

ரிச்சான டைனிங்தான். 2 பேர் சாப்பிட்டாலே  700 ரூபாய்க்கு மேல் ஆகிவிடும். ஆனால்,  ‘நாட்டுச்சுவை’யில் நல்லதொரு அசைவ விருந்தை விரும்புபவர்களுக்கு இதைவிட பெஸ்ட் சாய்ஸ் இல்லை!

சோறு முக்கியம் பாஸ்! - 18

“கடைகளில் விற்கப்படும் தக்காளி சாஸ் பயன்படுத்தலாமா?”

பத்மினி - ஊட்டச்சத்து நிபுணர்

சோறு முக்கியம் பாஸ்! - 18“சாலையோரக் கடைகள் தொடங்கி நட்சத்திர உணவகங்கள் வரை எல்லா இடத்திலும் பயன்பாட்டில் இருக்கிறது தக்காளி சாஸ்.  பீட்சா, பர்கர், சாண்ட்விச், ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளுக்கு இதுவே சைடிஷாக இருக்கிறது. தக்காளியில் நன்மைதரும் சத்துகள் நிறைய உள்ளன.  சாஸ் தயாரிக்க தக்காளியை அதிகநேரம் தண்ணீரில் வேகவைப்பார்கள். அதனால் பல சத்துகள் நீங்கிவிடும்.  சாஸிஸ் சுவைகூட்டுவதற்காக அதிகளவில் சர்க்கரை, உப்பு சேர்ப்பார்கள்.  சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குச் சேராது.  தக்காளியில் அதிகளவில் பொட்டாசியம் இருக்கிறது. இதை, பிற காய்கறிகளோடு சேர்த்துச் சாப்பிடுவதில் பிரச்னையில்லை. சாஸாக சாப்பிடும்போது தக்காளி கன்டென்ட் மட்டுமே அதிகமிருக்கும். அதனால்,  சிறுநீரகத்தில் பிரச்னை வரலாம். ஏற்கெனவே சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக தக்காளி  சாஸைத்  தவிர்க்க வேண்டும். மேலும், சாஸ் கெட்டுப்போகாமலிருக்க, சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதுவும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எப்போதாவது தக்காளி சாஸ் சேர்த்துக்கொள்வதில் பிரச்னையில்லை. அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.”