
வெ.நீலகண்டன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி
காலம் சக்கரம் மாதிரி சுழன்றுகொண்டேயிருக்கிறது. எவற்றையெல்லாம், ‘வேண்டாம்’ என்று விலக்கினோமோ, அவற்றையெல்லாம் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். எங்கேனும், ‘இயற்கை உணவு’, ‘சிறுதானிய உணவு’ என்று போர்டு தொங்கினால் குவிந்துவிடுகிறார்கள் மக்கள். சர்க்கரை, மாரடைப்பு, சிறுநீரகப் பழுது, ரத்த அழுத்தம் என... தொற்றாத நோய்கள் மனிதர்களை விரட்ட விரட்ட, மக்கள் தங்கள் பழைய வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
சிறுதானிய உணவுகளை ஏனோதானோவென்று சமைக்க முடியாது. ஒவ்வொரு தானியத்துக்கும் ஒரு விகிதத்தில் நெகிழ்வுத்தன்மை இருக்கிறது. தனி ருசி இருக்கிறது. சிறுதானியங்களில் தயிர்சாதம் செய்ய வேண்டுமென்றால், குழைய வேகவைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் என்றால் முக்கால் பதத்தில் இருக்க வேண்டும். சாம்பார் சாதம் மத்திமமாக இருந்தால்தான் ருசிக்கும். பெரும்பாலான சிறுதானிய உணவகங்களில் எந்தச் சாதம் சாப்பிட்டாலும், ஊறவைத்த அரிசி மாதிரி மென்று சாப்பிடவேண்டியிருக்கிறது. எந்தச் சுவையும் சாதத்தோடு ஒட்டுவதில்லை. மருந்து மாதிரிதான் சாப்பிடவேண்டியிருக்கிறது. நுட்பமறிந்து சமைத்தால், பிற தானியங்களில் செய்வதைவிட மிகவும் சுவையாகச் சிறுதானியப் பதார்த்தங்களைச் செய்ய முடியும்.

இதை அனுபவபூர்வமாக உணர, தேனி - மதுரைச் சாலையில் உள்ள மாருதி ரெஸ்டாரென்ட்டுக்குப் போக வேண்டும். முதல் மாடியில், அமைதி சூழ அமைந்திருக்கும் அந்த உணவகத்தில் ‘சிறுதானிய விருந்து’ என்று ஒரு காம்போ வைத்திருக்கிறார்கள். 110 ரூபாய். மிக நிறைவான, அறுசுவை சிறுதானிய விருந்து.
தினை சர்க்கரைப்பொங்கல், காளான் வரகரிசி பிரியாணி, சாமை சாம்பார்சாதம், குதிரைவாலி தயிர்சாதம்... எல்லாம் ஒவ்வொரு கிண்ணம் தருகிறார்கள். லிமிடெட்தான். சைடிஷாக, பாகற்காய் இனிப்புப்பச்சடி. தொட்டுக்கொள்ள, நெல்லிக்காய்த் துவையல்... இறுதியில், ஒரு கிண்ணம் நிறையப் புதினா - மல்லி ஜூஸ்.

சரிவிகிதத்தில் இனிப்பு கலந்த தினை சர்க்கரைப் பொங்கல் அற்புதம். இன்னும் கொஞ்சம் தர மாட்டார்களா என்றிருக்கிறது. வெல்லமும் நெய்யும் தினையும் கலந்த வாசனை இதம். காளான் வரகரிசி பிரியாணி உதிரி உதிரியாக இருக்கிறது. கேட்டால், வெங்காயப் பச்சடி சைடிஷாகத் தருவார்கள். சாமை சாம்பார் சாதத்தில் கச்சிதமான மசாலா மணம். காய்கறிகளும் நிறைந்திருக்கின்றன. குதிரைவாலி தயிர்சாதம் குழைந்து நாவில் உருகியோடுகிறது. உப்பும் புளிப்பும் கச்சிதம். பாகற்காயில் வெல்லம் சேர்த்துச் செய்யப்பட்டிருக்கும் பாகற்காய் இனிப்புப் பச்சடி வித்தியாசமாக இருக்கிறது. நெல்லிக்காய்த் துவையலின் துவர்ப்பு தயிர்சாதத்துக்கு உவப்பாக அமைகிறது. இரண்டையும் கலந்து சாப்பிடுதல் சுகம். நாட்டு வெல்லம் போட்டுச் செய்த புதினா, மல்லி ஜூஸ் சிறப்பு. நிறைவான, முழுமையான விருந்து.
சிறுதானியம் சேராது என்பவர்களுக்காக மூன்று தொடுகறி, சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர், காளிஃப்ளவர் வறுவல், இனிப்பு, வாழைப்பழத்தோடு ஸ்பெஷல் லஞ்ச் வெரைட்டிகள் வைத்திருக்கிறார்கள். மாலைநேரத்தில் சிறுதானிய தோசைகள், சிறுதானிய அடை கிடைக்கின்றன. கோதுமை பரோட்டா, வெஜிடபிள் சுக்கா, காய்கறி தோசை என வித்தியாசமான சிற்றுண்டிகள், தொடுகறிகளும் இருக்கின்றன.

``உணவுத்தொழில் சமரசங்களுக்கு உட்பட்டதுதான். மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதைக் கொடுத்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும். ‘நான் மாற்றத்துக்குத் தயார். ஆனால், நல்லுணவுகள் கிடைக்கவில்லையே’ என்று எவரும் நினைக்கக் கூடாது. அவர்களுக்காகத்தான் இந்த ‘சிறுதானியக் காம்போ.’ வரவேற்பு இருக்கிறதோ, இல்லையோ, 13 ஆண்டுகளாக `இல்லை’ என்று சொல்லாமல் கொடுக்கிறோம். அண்மைக்காலமாக சிறுதானியங்களை மருந்து மாதிரி மக்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதை நாக்குக்கு ருசியாக, இளம் தலைமுறை விரும்பும் விதத்தில் தயாரித்துக் கொடுக்க விரும்பினோம். ஒவ்வொரு தானியத்தின் தனித்தன்மையும் அறிந்து சமைக்கிறோம். இப்போது இதுவே எங்கள் அடையாளமாக மாறியிருக்கிறது’’ என்கிறார் உணவகத்தின் உரிமையாளர் சுரேஷ்.
செம்புக் குவளையில் தண்ணீர்... தலைவாழை இலை... துவையல், அப்பளம், மூலிகை ஜூஸோடு அறுசுவை சிறுதானிய விருந்து... தேனிப்பக்கம் போனால் தவறவிடாதீர்கள்!
- பரிமாறுவோம்

`சிறுதானியங்கள், சிலர் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது, ஒவ்வாமை ஏற்படும்’ என்கிறார்களே... உண்மையா?
கு.சிவராமன், சித்த மருத்துவர்
``சிறுதானியங்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என்பது உண்மையல்ல. ஒவ்வாமை பாதிப்புள்ளவர்கள் , கரப்பான் நோய் உள்ளவர்கள் கம்பு, சோளம், வரகு போன்ற சிறு தானியங்களைச் சாப்பிட்டால் பாதிப்பு அதிகரிக்கக் கூடும். சிறுதானியங்களில் புரதச் சத்து அதிகமாக இருப்பது தான் அதற்குக் காரணம். `தைராய்டு பிரச்னைக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் சிறுதானியங்களைச் சாப்பிடக் கூடாது’ என்றும் சிலர் சொல்வார்கள். அதுவும் தவறு. முழுமையாகத் தவிர்க்கத் தேவையில்லை. குறைந்த அளவேனும் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுதானியங்களைப் புதிதாகச் சாப்பிடும்போது, வயிறு சற்று மந்தமாக இருக்கும். அது குறித்து அச்சப்படத் தேவையில்லை. அவற்றில், `கிளைசமிக் இண்டெக்ஸ்’ குறைவு. அரிசி, கோதுமையைவிட நார்ச்சத்துகள் அதிகம். அதனால், செரிமானம் சற்றுக் காலதாமதமாகும். அவ்வளவுதான்!’’