
வெ.நீலகண்டன் - படங்கள்: நா.ராஜமுருகன்
‘உணவே மருந்து' என்பதுதான் நம் பாரம்பர்ய மருத்துவத்தின் கொள்கை. இனிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளுக்கும் நம் உடலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. வாதம், பித்தம், கபம் என உடலின் தன்மைகளை மூன்றாகப் பகுத்து, ஒவ்வோர் உடலின் தன்மைக்கும் ஏற்ப உணவு முறை இலக்கணங்களை உருவாக்கிவைத்திருக்கிறார்கள். அந்த இலக்கணப்படி சாப்பிட்டுத்தான் நோய்நொடி இல்லாமல் முழு ஆயுளையும் வாழ்ந்து தீர்த்தார்கள் நம் தாத்தா, பாட்டிகள்.
இன்று, அந்த உணவுப் பண்பாடு குலைந்துவிட்டது. மனிதகுலத்துக்குச் சவாலாக நின்று மிரட்டும் பெரும்பாலான நோய்களுக்கு உணவுதான் காரணமாக இருக்கிறது. வீதிக்கு வீதி உணவகங்கள் இருக்கின்றன. விதவிதமான உணவுகள் கிடைக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், உடலுக்குப் பாதகம் செய்யாத, தூய நல்லுணவுகளைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது. அப்படியொரு தேடலில் கிடைத்ததுதான், `நளன் உணவகம்.’ கரூர் உழவர் சந்தைக்கு அருகில் பழைய பைபாஸ் சாலையில் இருக்கிறது.

`சுத்த சித்த உணவு' என்று பெயர்ப்பலகையில் போட்டிருக்கிறார்கள். உள்ளே, நான்கு பக்கச் சுவர்களிலும் காய்கறிகள், சிறுதானியங்களின் நன்மைகளைச் சொல்லும் போஸ்டர்கள். அமைதியான, நாகரிகமான டைனிங். இடையூறு இல்லாமல் நிம்மதியாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தள்ளித்தள்ளி டேபிள் போட்டிருக்கிறார்கள். 30 பேர் அமர்ந்து சாப்பிடலாம். வாரத்தின் ஏழு நாள்களுக்குமான மெனுக்களைப் பிரசுரித்துவைத்திருக்கிறார்கள். அது மாறவே மாறாதாம்.
காலை 6 மணிக்குச் சுடச்சுட அறுகம்புல் சூப், மிளகு-தக்காளி-கீரை சூப். அப்படியே வேகவைத்து, நீரை வடித்து உப்பு மிளகு போட்டுக் கிண்ணம் நிறையத் தருகிறார்கள். அதனதன் சுவையும் வாசனையும் அப்படியே இருக்கின்றன. கூடவே ஒரு கஞ்சி. கோதுமைக் கஞ்சி, ராகிக் கஞ்சி, சத்துமாவுக்கஞ்சி என தினமொன்று. காபி, டீக்கு பதில் வித்தியாசமான சுடுபானம்.
7 மணிக்கெல்லாம் டிபன் ரெடி. பொங்கல். சாமை, திணை, வரகு, குதிரைவாலி, பனிவரகு என தினமொரு தானியத்தில் பொங்கல் கிடைக்கிறது. பாசிப்பருப்பு தோசை, முருங்கைக்கீரை தோசை, சோள தோசை... எனச் சொல்லும்போதே நாவூற வைக்கும் தோசை வகைகள் இருக்கின்றன. தூதுவளை சட்னி, பீர்க்கங்காய் சட்னி, கேரட் சட்னி, வேர்க்கடலை சட்னி, இஞ்சி சட்னி என தினமொரு வித்தியாசமான சட்னியும் கிடைக்கிறது.
12 மணிக்கெல்லாம் மீல்ஸ் தயாராகிவிடுகிறது. 75 ரூபாய். சாதம், புடலங்காய் சாம்பார், மொச்சைக்குழம்பு, வெற்றிலை ரசம், அவரைக்காய்ப் பொரியல், சௌசௌ கூட்டு, பச்சரிசிப் பாயசம், சுட்ட அப்பளம், வாழைப்பூ வடை, சைவ மோர்...
தினமொரு கீரை, ஏதேனும் ஒரு வடிவத்தில் மீல்ஸுக்குள் வந்துவிடும். அரைக்கீரை, முளைக் கீரை, தொய்யக்கீரை, குமுட்டிக்கீரை, பாலக் கீரை... எனப் பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறார்கள். தூதுவளை, பிரண்டை, வல்லாரை, வெற்றிலை, துளசி, அகத்தி, நெல்லி... என தினமொரு மூலிகை ரசம். அவ்வளவு ருசியாக இருக்கிறது.
புளி, மிளகாய், மசாலாப் பொருள்கள், பால், கெட்ட கொழுப்புள்ள எண்ணெய்... இவை எவற்றையும் பயன்படுத்துவதில்லை என்பது சிறப்பு. மதிய உணவில், பாலில் தயாரிக்காத சைவ மோர் தருகிறார்கள்; சோயாவில் செய்தது. கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாம் போட்டுத் தாளித்து வைத்திருக்கிறார்கள். `சுளீரெ'ன்று புளிக்கிறது. சாதத்துக்கு மெத்தப் பொருத்தம். வாழைப்பூ வடை பிரமாதம். வாழைப்பூவோடு இஞ்சி, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உப்பு சேர்த்து முக்கால் பதத்தில் அரைத்துச் செய்திருக்கிறார்கள்.
`சித்தம்', `சுத்தம்' என்றெல்லாம் சொல்வதால், `மருந்து மாதிரி இருக்குமோ' என்ற எண்ணம் வரலாம். அம்மாவோ, அக்காவோ அக்கறையோடு செய்து பரிமாறுகிற வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கிறது. பரிமாறுபவர்களும் மலர்ந்த முகத்தோடு பார்த்துப் பார்த்து கவனிக்கிறார்கள். குழம்புகள், கூட்டு, பொரியலில் கச்சிதமான டேஸ்ட். பாயசம்... சிறப்பு. மனமும் வயிறும் நிறைவாகவே இருக்கின்றன.
மாலை நேரத்தில் ராகி பக்கோடா, வெஜிடபிள் போண்டா, பாசிப்பருப்பு வடை, வாழைத்தண்டு சூப், அத்திப்பழ சூப் என வேறொரு அனுபவம் வழங்குகிறார்கள். இரவு சப்பாத்தி. வாழைப்பழ சப்பாத்தி, சுக்கா சப்பாத்தி, வெந்தய சப்பாத்தி, முருங்கைக்கீரை சப்பாத்தி, ஓம சப்பாத்தி... என தினமொரு வெரைட்டி. வித்தியாசமான தோசைகளும் கிடைக்கின்றன.
இந்த உணவகத்தை நடத்துவது, நவயுகம் டிரஸ்ட். இது ஓர் ஆன்மிக அமைப்பு. உணவு ஒரு மனிதனின் மனநிலையையும் செயல்பாடுகளையும் தீர்மானிக்கும் முக்கியக் காரணி. நல்லுணவு, மனிதனின் இயல்பை சாந்தமாக்கும். அப்படியொரு பிரசாரமாகத்தான் 2006-ம் ஆண்டில் இந்த உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இன்று, வேலை நிமித்தம் கரூரில் வசிக்கும் பலரும் இந்த உணவகத்தில் மூன்று வேளைக்குமான ரெகுலர் கஸ்டமர்களாக இருக்கிறார்கள். கரூரின் பரபரப்பான உணவகமாக இது இருக்கிறது.
``வாரத்தின் ஏழு நாள்களுக்கும் இதுதான் மெனு என்று தீர்மானித்துவைத்திருக்கிறோம். தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட மெனுக்கள். எங்கள் வீடுகளிலும் இதையே சமைத்துச் சாப்பிடுகிறோம். புதன்கிழமை, மதிய உணவில் வல்லாரைக் கீரை ரசம் என்றால், கட்டாயம் அது இருக்கும். எந்தச் சூழலிலும் மாறாது. சாப்பிட வருபவர்களிடம், இந்த உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவோம். வீட்டிலும் இது மாதிரியான உணவுகளைச் செய்து சாப்பிட வலியுறுத்துவோம். அதற்கான தானியங்கள், செய்முறைக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களையும் குறைந்த விலைக்கு உணவகத்திலேயே விற்பனை செய்கிறோம். `மக்கள் மீண்டும் மீண்டும் எங்கள் உணவகத்துக்கு வர வேண்டும்’ என்பதல்ல எங்கள் நோக்கம்; எல்லா வீடுகளிலும் இதே மாதிரியான சரிவிகித சத்துள்ள, தூய உணவுகளைச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதுதான். அதற்காக வருடத்துக்கு ஒருமுறை உணவுத்திருவிழாகூட நடத்துகிறோம்...’’ என்கிறார் இந்த உணவகத்தை நிர்வகிக்கும் தனபால்.
கரூர்ப்பக்கம் போனால், வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
சாப்பிடுவதற்கு முன் சூப் அருந்துவது நல்லதா?
அனிதா பாலமுரளி ஊட்டச்சத்து நிபுணர்

"சாப்பிடுவதற்கு முன் சூப் அருந்துவது நல்லதுதான். ஆனால், குறைந்தபட்சம் அரைமணி நேரத்துக்கு முன்பாக அருந்தவேண்டும். மிளகு, சீரகம் போன்ற பொருள்கள் சேர்க்கப்படுவதால் சூப் செரிமானத்தை எளிதாக்கும். காய்கறிகள் சேர்த்துச் செய்யப்படும் `சூப்’களில் நார்ச்சத்து மிகுந்திருக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பும் குறையும். சூப் அருந்திவிட்டு சாப்பிடும்போது வழக்கத்தைவிடக் குறைவாகச் சாப்பிடுவோம். உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு சூப் அருந்தலாம். சிக்கன், மட்டன் `சூப்’களும்கூட நல்லதுதான். கர்ப்பிணிகள், எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் சாப்பிடுவதற்குமுன் ஆட்டுக்கால் சூப் அருந்துவது மிகவும் நல்லது."