ஜோதிடம்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

நவராத்திரி நைவேத்தியங்கள்!

நவராத்திரி நைவேத்தியங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நவராத்திரி நைவேத்தியங்கள்!

படங்கள்: ஹரிபாண்டி

வராத்திரி புண்ணிய காலம் தொடங்கிவிட்டது. வரும் ஒன்பது நாள்களும் கோலாகலம்தான். இந்தக் காலத்தில் ஒப்பற்ற பூஜைகளால், துதிப்பாடல்களால்  அம்பாளை நம் இல்லத்துக்கு வரவேற்று சிறப்பிக்கும் வழிபாடுகளில் ஒன்றுதான் கொலு வைபவம். ‘சகல உயிர்களிலும் ஆதிசக்தியே நிறைந்திருக்கிறாள்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் அற்புதம் வைபவம் அது.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

நம் வீட்டு கொலு வைபவத்தைக் காண அம்பாளே நேரில் வருவாள் என்கின்றன ஞானநூல்கள். இதையொட்டியே கொலு வைபவம் காண வரும் பெண் களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை முதலான மங்கலப் பொருள்களையும் நைவேத்திய பிரசாதங்களும் வழங்குகிறோம். அவ்வகையில் உங்கள் வீட்டு கொலு வைபவத்தில் சமர்ப்பிக்க விதவிதமான நவராத்திரி கொலு நைவேத்திய பதார்த்தங்களைச் செய்ய கற்றுத் தருகிறார் வித்யா பாரதி.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

அக்கார அடிசல்

தேவையானவை:

பச்சரிசி    - அரை கப்
பாசிப்பருப்பு    - ஒரு டீஸ்பூன்
பால்        - ஒரு லிட்டர்
வெல்லம்    -  ஒரு கப்
தண்ணீர்    - கால் கப்
ஏலக்காய்த்தூள்    - அரை டீஸ்பூன்
உப்பு        - ஒரு சிட்டிகை
பச்சைக் கற்பூரம்    - ஒரு சிட்டிகை
முந்திரி        - 10
குங்குமப்பூ    - சிறிதளவு
நெய்         - 4 டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள்    - கால் டீஸ்பூன்

செய்முறை: அடுப்பில் அடிகனமான ஒரு பாத்திரத்தை வைத்துப் பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கரையவிடவும். பிறகு வடிகட்டிக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரியைச் சேர்த்து வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பை ஒன்றாகச் சேர்த்து பச்சை வாசனைப்  போகும் வரை வறுக்கவும். இத்துடன் அரை லிட்டர் பால் சேர்த்துக் கலக்கி மூடவும். ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும். வெந்த கலவையை அடி கனமான வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். இத்துடன் மீதம் இருக்கும் அரை லிட்டர் பால், காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஜாதிக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பால் வற்றி அக்காரை அடிசல் சுருண்டு வரும்போது முந்திரியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

கொண்டைக்கடலை சுண்டல்

தேவையானவை:

வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப்
சுண்டல் பொடி        - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு             - தேவையான அளவு
எண்ணெய்         - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு             - ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு     - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள்      - அரை  டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்     - 1
தேங்காய்த் துருவல்     - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை         - ஒரு கைப்பிடியளவு

சுண்டல் பொடி தயாரிக்க:

மல்லி (தனியா)         - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்     - 5
கடலைப்பருப்பு         - 2 டீஸ்பூன்

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்துச் சுண்டல் பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருள் களைச் சேர்த்து மிதமான தீயில் வறுத்தெடுக்கவும். ஆறியதும் பொடித்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை எட்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் எட்டு விசில் வரும் வரை வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்துக் கிளறவும். இறுதியாகத் தேங்காய்த்துருவல் தூவி இறக்கிப் பரிமாறவும்.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

எள்ளு சாதம்

தேவையாவை:

வேகவைத்த உதிரியான சாதம் - அரை கப்
வெள்ளை எள்    - 4 டேபிள்ஸ்பூன் (வறுத்தது)
உளுத்தம் பருப்பு    - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு    - ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்    - 4
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு        - சிறிதளவு
நல்லெண்ணய்    - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு         - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை     - ஒரு கைப்பிடியளவு
கடலைப்பருப்பு     - ஒரு டீஸ்பூன்
எண்ணெய்     - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்தும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துச் சிவக்க வறுத்து ஆறவிடவும். இத்துடன் எள்ளு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் வடித்த உதிரியான சாதம், பொடித்த எள், உப்பு சேர்த்து உடைந்து விடாமல் மெதுவாகக் கிளறவும். பிறகு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளித்து சாத்தில் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

பட்டாணி சுண்டல்

தேவையானவை:

பச்சைப் பட்டாணி    - அரை கப்
தேங்காய்த்துருவல்    - 2 டேபிள்ஸ்பூன்
மாங்காய்த்துருவல்    - 2 டீஸ்பூன்
உப்பு            - தேவையான அளவு
எண்ணெய்        - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு            - கால் டிஸ்பூன்
கறிவேப்பிலை        - ஒரு கைப்பிடி அளவு
மிளகாய்த்தூள்        - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள்    - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்        - 2

செய்முறை: பச்சைப் பட்டாணியை எட்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு நன்கு கழுவி உப்பு சேர்த்து குக்கரில் எட்டு விசில் வரும் வரை வேகவைத்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த சுண்டலைச் சேர்த்துக் கிளறவும். இறுதியாகத் தேங்காய்த்துருவல் மாங்காய்த்துருவல் தூவி இறக்கிப் பரிமாறவும்.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

அரிசி தேங்காய்ப்பால் பாயசம்

தேவையானவை:

பச்சரிசி - அரை கப்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தண்ணீர் - இரண்டரை கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 10

செய்முறை: முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து தேங்காய்த்துருவல், தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்துப் பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கரையவிட்டு, வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து அரைத்த அரிசி - தேங்காய்த்துருவல் கலவையைச் சேர்த்து பச்சை வாசனைப் போக வேகவிடவும். இத்துடன் வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, வறுத்த முந்திரி தூவி இறக்கவும்.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

நிலக்கடலை சுண்டல்

தேவையானவை:

நிலக்கடலை - அரை கப்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு -  தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
நல்லெண்ணய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை: நிலக்கடலையை எட்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் எட்டு விசில் வரும் வரை வேகவைத்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த நிலக்கடலையைச் சேர்த்துக் கிளறவும். இறுதியாகத் தேங்காய்த்துருவல் தூவி இறக்கிப் பரிமாறவும்.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

புளியோதரை

தேவையானவை:

பச்சரிசி சாதம்        - 1 கப்
நல்லெண்ணெய்        - 8  டீஸ்பூன்
உப்பு             - தேவையான அளவு
கறிவேப்பிலை         - ஒரு கைப்பிடியளவு
கெட்டியான புளிக்கரைசல்     - 2 கப்
மல்லி (தனியா)         - 2 டீஸ்பூன்
வெந்தயம்         - 1 டீஸ்பூன்
மிளகு         - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்     - 3
எள்ளு         - 2  டீஸ்பூன்
கடுகு             - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு         - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு         - கால் டீஸ்பூன்
வேர்க்கடலை        - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்     - 2
பெருங்காயத்தூள்     - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்         - கால் டீஸ்பூன்

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து மல்லி (தனியா), வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய், எள்ளு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து  ஆறவைக்கவும். ஆறிய பிறகு அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஆறு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி  புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்கவிடவும். கரைசலின் பச்சை வாசனை போய், சுருண்டு வரும்போது மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றிக்கிளறவும். புளிக் கரைசல் பேஸ்ட் பதத்துக்கு வந்ததும் இறக்கி சாதத்தில் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

- சூரியகோமதி