சினிமா
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 34

சோறு முக்கியம் பாஸ்! - 34
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 34

சோறு முக்கியம் பாஸ்! - 34

பெரும்பாலும் உணவகங்களில்  கறாரான ஆண்களைத்தான் பரிமாறும் வேலைக்கு வைப்பார்கள். சில உணவகங் களில் பரிமாறுபவர்களிடம்  கூட்டு, பொரியல் கேட்கக் கூடச் சங்கடமாக இருக்கும். இப்போது மொழியே தெரியாத வடமாநிலத்தவர்களையும் நேபாளிகளையும் பல உணவகங்களில் காணமுடிகிறது. ரொம்ப வசதி... கேட்டாலும் அவர்களுக்குப் புரியாது. சாம்பார் கேட்டால் ரசம் கொண்டு வருவார்கள். ‘போதுமடா சாமி’ என்று சாப்பிட்டு முடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பெண்கள் பரிமாறும் உணவகங்களில் சாப்பிட்டுப் பாருங்கள்; கேட்கவே தேவையில்லை. பத்துப்பேர் சாப்பிட்டாலும் ஒவ்வொரு இலையையும் தனித்தனியாகக் கவனித்துக்கொண்டிருப்பார்கள். இலையையும் முகத்தையும் பார்த்துப் பரிமாறுவதென்பது பெண்களின் இயல்பு.  

சோறு முக்கியம் பாஸ்! - 34

காஞ்சிபுரம், தேரடிக்கு எதிரே, தும்பவனம் சாலையில், ராஜாஜி மார்க்கெட்டுக்கு அருகில் உள்ள ராமு மெஸ்ஸில்  சாப்பிடுபவர்கள் இதை உணரமுடியும். உணவகம் நடத்துவது, சமைப்பது, பரிமாறுவது என இங்கு எல்லாமே பெண்கள்தாம். மொத்தம் 25 பெண்கள் வேலை செய்கிறார்கள். அன்பும் கனிவுமாக அவர்கள் பரிமாறுகிற நேர்த்தியும் சரி, உணவின் ருசியும் சரி, வேறெங்கும் கிடைக்காத அனுபவங்கள்.

ராமு மெஸ்ஸின் உரிமையாளர் எல்லம்மாள். 45 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் ஒரு டீக்கடை ஆரம்பித்திருக்கிறார். படிப்படியாக அது மெஸ்ஸாக வளர்ந்திருக்கிறது. ஆனாலும் இப்போதும் டீக்கடையை விடவில்லை. வாடிக்கையாளர் திருப்திக்காக இரண்டு மணி நேரம் மட்டும், டீக்கடை செயல்படுகிறது.

அருகருகே இரண்டு வீடுகள். ஒரு வீட்டில் 17 பேர் அமரலாம். இங்கு சாப்பாடு 50 ரூபாய். அடுத்த வீட்டில் ஏசி போட்டு, தனித்தனியே டேபிள் போட்டிருக்கிறார்கள். இங்கு 60 ரூபாய். இரண்டு அறைகளுமே அவ்வளவு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றன. 

சோறு முக்கியம் பாஸ்! - 34

பதினொன்றரை மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராகிவிடுகிறது. மெஸ்ஸின் முகப்பில் ஒரு அம்மா, மிதமாக எண்ணெய் விட்டு மீன் பொறித்துக்கொண்டிருக்கிறார். அந்த வாசனையே ‘உள்ளே வா’, ‘உள்ளே வா’ என்று அழைக்கிறது. பொன்னியரிசிச் சாதம்...  கருவாட்டுக் குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, மோர்க்குழம்பு, சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், ஊறுகாய். உணவின் சுவையே சொல்லி விடுகிறது, எவ்வித சுவையூட்டிச் சேர்மானமும் இல்லையென்று.  மொச்சைக்காய், வாழைக்கருவாடு போட்டுக் கருவாட்டுக் குழம்பு வைத்திருக்கிறார்கள். அபாரம்.   சிக்கன், மட்டன் குழம்புகளும் காரம் குறைவாக, தனித்துவமாக இருக்கின்றன. மிதமான புளிப்புடன் கூடிய மீன்குழம்பும் சிறப்பு.
நெத்திலிக் கருவாடு, குடல் வறுவல், இறால் வறுவல், ஈரல் வறுவல், மீன், மட்டன், சிக்கன் வறுவல்கள், முட்டை ஆகிய தொடுகறிகளும் உண்டு. ஆச்சர்யமூட்டுகிற விலை. ஒரு கிண்ணம் நெத்திலிக் கருவாட்டு வறுவல் 40 ரூபாய். சரிக்குச் சரியாக மொச்சை, வெங்காயம் போட்டு செமி கிரேவியாக வறுத்திருக்கிறார்கள். 60 ரூபாய்க்குச் சாப்பாடு, 40 ரூபாய்க்கு நெத்திலிக் கருவாடு போதும், வயிறும் மனமும் நிறைய.

சோறு முக்கியம் பாஸ்! - 34



குடலும் ஈரலும் 60 ரூபாய்தான். அளவு பார்க்காமல் தருகிறார்கள். 3 வறுவல் மீன் துண்டுகள் 60 ரூபாய். ஆறா, சீலா, கிழங்கா மீன்கள் மட்டுமே வாங்குவார்களாம். சிறிய தவாவில் மிதமான எண்ணெய் விட்டு வறுத்தது. மட்டன் வறுவல் 80 ரூபாய். சிக்கன் வறுவல் 60 ரூபாய். எல்லாமே நிறைவாக இருக்கின்றன.

மீன் வறுப்பது தவிர, மற்ற எல்லாமும் விறகடுப்பில்தான். சமையலறையை நிர்வகிக்கும் தேவசேனைக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். 30 வருடங்களாக உடனிருக்கிறாராம். 35 வருடமாக வேலை செய்யும் சரோஜாவுக்கு இப்போது வயது 73. தளர்ந்துவிட்டார். ஆனாலும் வரச்சொல்லி சம்பளம் கொடுக்கிறார்கள். சமையலறையில் ஒரு நாற்காலி போட்டு அமர்ந்து எல்லாவற்றையும் மேற்பார்வையிடுகிறார். 

“மெஸ் ஆரம்பிச்ச காலத்தில இருந்து எல்லாரும் கூட இருக்காங்க. இந்த மெஸ்ஸோட வளர்ச்சியில அவங்க உழைப்பும் இருக்கு. இன்னைக்கு வயசாயிருச்சுன்னு அனுப்பினா அது அறமாயிருக்காதுல்ல...” என்கிற எல்லம்மாள், சாப்பிடும் எல்லோரின் மீதும் பார்வையை வைத்துக்கொண்டே மெஸ் பற்றிப் பேசுகிறார்.

சோறு முக்கியம் பாஸ்! - 34



“என் மாமியார் நாகம்மாகிட்டதான் நான் சமையல் கத்துக்கிட்டேன். வீட்டுக்காரர் நகராட்சியில வேலை செஞ்சார். ‘வீட்டுல ஏன் சும்மா இருக்கணும்’ன்னு இந்த இடத்தை வாடகைக்குப் பிடிச்சு டீக்கடை ஆரம்பிச்சேன். நாப்பது வருஷமா தெனமும் வந்து டீ குடிக்கிறவங்க இருக்காங்க. அவங்களுக்காகவே இப்பவும் ரெண்டுமணி நேரம் நின்னு டீ போடுறேன்.

அரிசி, சரக்குச்சாமான் தவிர எதையும் இருப்பு வச்சுக்கமாட்டோம். அன்னன்னிக்கு வாங்கித்தான் பயன்படுத்துவோம். விறகடுப்புல சமைக்கிறதுல கண்டிப்பா தனி ருசி உண்டு. பச்சைமிளகாய் பயன்படுத்துறதேயில்லை.  மிளகு, சீரகம் எல்லாமே அப்பப்போ அம்மி, ஆட்டுக்கல்ல அரைச்சுத்தான் பயன்படுத்துவோம். இங்கே வேலை செய்ற எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியும். அவங்க வீட்டுல, அவங்க பிள்ளைகளுக்கு எப்படிச் சமைப்பாங்களோ, எப்படிப் பரிமாறுவாங்களோ அப்படித்தான் இங்கேயும் செய்வாங்க. தேவையில்லாத பொருள்கள் சேர்க்காம, எளிமையா சமைச்சா, குறைந்த விலைக்கே நல்ல சாப்பாடு கொடுக்கலாம்” என்கிறார் எல்லம்மாள்.

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன் - படங்கள்: எஸ்.ரவிகுமார்

சோறு முக்கியம் பாஸ்! - 34

பசியெடுக்கும்போது சாப்பிடுவது,  நேராநேரத்துக்குச் சாப்பிடுவது... எது நல்லது?

“பொ
துவாக, பசி இல்லாத நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பசியுணர்வு என்பதே, ‘எப்போது உணவு கிடைக்கும்’ என வயிறு கேட்கும் ஒரு நிகழ்வுதான். பசியுணர்வு எழும் நேரத்தில் வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள் சுரக்கத் தொடங்கும். அப்போது சாப்பிட்டால், உணவு முழுமையாகச் செரிமானமாகி சத்துகளை உடல் கிரகித்துக்கொள்ளும். பசியில்லாதபோது சாப்பிட்டால் இந்தச் செயல் சரியாக நடக்காது. எனவே, நேரத்துக்குச் சாப்பிடுவதைவிடப் பசியெடுக்கும் நேரத்தில் சாப்பிடுவதே நல்லது. தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடப் பழகிவிட்டால், அந்த நேரத்தில் தானாகப் பசியெடுக்கத் தொடங்கிவிடும். பசித்தவுடன் சாப்பிட்டுவிட வேண்டும்; நீண்ட நேரம் கழித்துச் சாப்பிட்டால், வயிற்றிலுள்ள அமிலங்கள் உணவுக்குழாயை பாதிக்கும். இதனால், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போன்ற பிரச்னைகள் வரலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் இது பொருந்தாது. அவர்கள் பசிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை; நேராநேராத்துக்குச் சாப்பிட்டுவிட வேண்டும்.”

-மேனகா, உணவியல் நிபுணர்.