மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 52

சோறு முக்கியம் பாஸ்! - 52
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 52

சோறு முக்கியம் பாஸ்! - 52

சோறு முக்கியம் பாஸ்! - 52

ந்த நகரத்தை எடுத்துக் கொண்டாலும் நிரம்பி வழிகின்றன உணவகங்கள். அவற்றில் நல்ல உணவகத்தை எப்படி அடையாளம் காண்பது..?  ஒரு வழி இருக்கிறது. அரசு ஊழியர்கள் தினமும் எந்த உணவகத்தில் சாப்பிடுகிறார்களோ, அங்கு நிச்சயம் சாப்பாடு நன்றாக இருக்கும். தவிர, வயிற்றுக்குத் தொந்தரவும் வராது. அந்த உணவகங்களில் விலை கொஞ்சம் முன்பின் இருந்தாலும் நிச்சயம் அக்கறையோடு சமைப்பார்கள்.

அப்படி, அரசு ஊழியர்களின் தடம்பற்றிச் சென்று ஒரு நல்ல உணவகத்தைக் கண்டறிந்தேன். சிவகங்கை-திருப்பத்தூர் பிரதான சாலையில், மதகுப்பட்டி என்றொரு ஊர். அங்குதான் இருக்கிறது கணேஷ் மெஸ். இந்த மெஸ்ஸை யொட்டி ஏராளமான அரசு வாகனங்களும் அரசியல்வாதிகளின் வாகனங்களும் நின்று கொண்டிருக்கின்றன.

அதிகபட்சம் 300 சதுர அடி இருக்கலாம். முகப்பில், இரும்புக்கம்பிக் கதவு பாதியளவுக்குத் திறந்திருக்கிறது. உள்ளே சூழ்ந்திருக்கும் இருட்டை ஒரு டியூப்லைட் விரட்டிக்கொண்டிருக்கிறது.  மிகச் சாதாரணமான டேபிள், பெஞ்ச் போட்டிருக்கிறார்கள். 12 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும். வெக்கையை விரட்ட இரண்டு காற்றாடிகள் சுழல்கின்றன. வெளியில் பார்சல் வாங்கவும், அமர்ந்து சாப்பிடவும் பத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கிறார்கள். கணேசமூர்த்தி எந்திர வேகத்தில் பார்சல் கட்ட, அவர் அம்மா மீனாம்பாளும் அண்ணன் குமாரும் பரபரப்பாகப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

சாவகாசமாகச் சாப்பிட்டு முடித்து வெளியே வந்த ஒருவரிடம் பேசினேன். அவர் பொதுப் பணித்துறை அதிகாரியாம்.  “காரைக்குடியில இருந்து சிவகங்கையில இருக்கிற ஆட்சியர் அலுவலகத்துக்குப் போனா, மதியச் சாப்பாடு இங்கதான். மீனாம்பா அம்மா சமையல் எல்லா நாளும் ஒரே மாதிரியிருக்கும். வீட்டுச் சாப்பாடு... ஸ்டார் ஓட்டல்ல சாப்பிட்டாலும் இந்த நிறைவும் திருப்தியும் இருக்காது...” என்று சிலிர்த்துக் கொள்கிறார்.

சோறு முக்கியம் பாஸ்! - 52

55 ஆண்டுகளுக்கு முன்னால் மீனாம்பாளின் கணவர் முத்துவால் தொடங்கப்பட்டது. கூரைக்கொட்டகையில் நான்கு பேர் அமரும் வகையில் தொடங்கப்பட்ட அந்த உணவகம் 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கத்துக்காக இடிக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இந்தச் சின்ன இடத்தில் சமைக்க முடியாது என்பதால் வீட்டிலேயே சமைத்து எடுத்து வருகிறார்கள். காலையும் மதியமும் மட்டும்தான். 7 மணிக்குக் காலைச் சிற்றுண்டி. இட்லியும் பொங்கலும் கிடைக்கும். அதற்கும் நிறைய டிமாண்டு. மதியம் 12.30-க்கு சாப்பாடு வந்து சேர்ந்துவிடும். கம்பிக்கதவை முழுமையாக இழுத்து விட்டு, விளம்பரப் பலகையை வெளியில் தூக்கி வைத்ததும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

சாப்பாடு 60 ரூபாய். கூட்டு, பொரியல், செட்டிநாட்டுக்கே உரிய மண்டி, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, சாம்பார், வற்றல் குழம்பு, ரசம், மோர்.  மாங்காயெல்லாம் போட்டு மண்டி பிரமாதமாக இருக்கிறது. மட்டன் குழம்பு `நாட்டுச்சுவை.’  காரம் கொஞ்சம் சீண்டுகிறது. ஆனால் வயிற்றை வன்முறை செய்யும் சேர்மானங்கள் எதுவும் சேராததால் வாசனையே வித்தியாசமாக இருக்கிறது. மீன்குழம்பும் சிறப்பு. அளவில்லாச் சாப்பாடுதான். பார்த்துப் பார்த்துப் பரிமாறுகிறார்கள். வற்றல் குழம்பில் மொத்தி மொத்தியாக மலைப்பூண்டு போட்டு அசத்தியிருக்கிறார்கள். குழம்போடு சேர்த்து சாதத்துக்கு நடுவில் ஒரு கரண்டிப் பூண்டை அள்ளி வைத்துப் போகிறார் மீனாம்பாள். அதுவே சுவையான ஒரு தொடுகறியாக இருக்கிறது.

நான்கு விதமான தொடுகறிகள்தாம்.  மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி கிரேவி, குழம்பு மீன், அவித்த முட்டை. மட்டன் சுக்காவைக் கடலை எண்ணெயில் ப்ரை செய்து தருகிறார்கள். செமி கிரேவியாக இருக்கிறது. அறுபது ரூபாய்தான். சிறு தட்டு ஒன்றில் எடுத்துவந்து பரிமாறுகிறார்கள். இஞ்சியும் பூண்டும் மணக்கிறது. நாட்டுக்கோழி கிரேவி செம ருசி. எழுபது ரூபாய். சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம். மீனைப் பொறுத்தவரை முரல் மீன் கிடைத்தால் மட்டுமே சமைப்பார்களாம். பெரிய பெரிய சைஸில் பாம்பனிலிருந்து வாங்குவார்களாம். முள் தொந்தரவு இல்லாமல் கேக் மாதிரி எடுத்துச் சாப்பிடமுடிகிறது. மீனை உடைத்ததும் அதில் கொஞ்சம் குழம்பும் கொண்டுவந்து ஊற்றுகிறார்கள். பெரிய துண்டு மீன் அறுபது ரூபாய். இவைதாம் ரெகுலர்  மெனு. எப்போதும் இது மாறுவதில்லை.

“உடம்புக்கு ஆகாத எதற்கும் எங்கள் உணவகத்தில் இடமில்லை” என்கிறார் மீனாம்பாள். அதிக எண்ணெய் சேர்க்க வேண்டியிருக்கும் என்பதற்காகவே மீன் வறுவலைத் தவிர்க்கிறார் களாம். உப்பு, புளி, மிளகாய், மல்லி தவிர நவீன சுவைச் சேர்மானங்கள் பற்றியெல்லாம் மீனாம்பாள் அறிந்திருக்கவில்லை. எண்ணெயிலும் பாக்கெட் வகையறாக்களை வாங்குவதில்லையாம். அவர்களே ஆட்டிவைத்துக் கொள்வார்களாம். மசாலாக்களும் தேவைக்கேற்ப மீனாம்பாளே கூட்டி அரைத்துக்கொள்வாராம்.

சோறு முக்கியம் பாஸ்! - 52

எவ்வளவு சமைக்கிறார்களோ அவ்வளவு தான். மீண்டும் அந்த வேளைக்கு அடுப்பு பற்ற வைப்பதில்லை. 3 மணிக்கெல்லாம் சாப்பாடு தீர்ந்துவிடுகிறது. நான்கு மணிக்குப் பாத்திரத்தை அள்ளிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் இவர்களும் விடுமுறை விட்டு விடுகிறார்கள்.

“அம்மா ரொம்பப் பக்குவமா சமைப்பாங்க. காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர்ல இருந்தெல்லாம் சாப்பிடுறதுக்குன்னே வருவாங்க. வீட்டுச் சாப்பாடு மாதிரி... கூடக்குறைச்சுப் பரிமாறுவோம். எப்பவும் சாப்பாடு ஒரே மாதிரியிருக்குன்னு சொல்லுவாங்க. வேலையாள் வச்சுக்கலே. எங்க சக்திக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவுதான் செய்வோம். தினமும் நிறைய பேர் சாப்பாடு இல்லேன்னு திரும்பிப் போவாங்க. அவங்களைத் திருப்திப்படுத்துறதுக்கு ஆள் வச்சு சமைச்சோம்னா, இந்தத் தரத்தோட செய்ய முடியுமான்னு யோசனையா இருக்கு. பெரிசா சம்பாதிக்கணும், ஓட்டலை விரிவு படுத்தணும்னு எல்லாம் ஆசையில்லை... குடும்பத்துல எல்லாருக்கும் மூணுவேளை சோறு கிடைக்குது. செலவுக்குக் காசு கிடைக்குது. கொஞ்சம்போல நல்ல பேரு இருக்கு... இதைக் கடைசிவரைக்கும் காப்பாத்துனா போதும்” என்று அடக்கமாகப் பேசுகிறார்  குமார்.

கூடாரம் மாதிரி இடம்... ஆனால் அவ்வளவு அன்பு, அவ்வளவு ருசி... அவ்வளவு அக்கறை... கணேஷ் மெஸ்ஸில் சாப்பிடுவதற்கென்றே ஒருமுறை சிவகங்கைப்பக்கம் போய்வரலாம்!

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

சோறு முக்கியம் பாஸ்! - 52
சோறு முக்கியம் பாஸ்! - 52

பூண்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?”

“கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளலாம். நாளொன்றுக்கு மூன்று முதல் ஐந்து பல் வரை எடுத்துக்கொள்ளலாம். பூண்டை தினமும் சேர்த்துக் கொள்வதால் கெட்ட கொழுப்பு, ரத்தச் சர்க்கரை குறையும். கால் வீக்க பாதிப்பு சரியாகும். பாலுட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகப்படுத்தவும் பூண்டு உதவும். அவர்கள் நாளொன்றுக்கு ஆறு பல்வரை எடுத்துக்கொள்ளலாம். குழம்பு, ரசம், சட்னி, தொக்கு ஆகிய வற்றில் பூண்டு சேர்த்துக்கொள்ளலாம். தவிர, பூண்டைப் பாலில் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். சிலருக்கு, பூண்டு சேர்த்த உணவைச் சாப்பிட்டால் அல்சர், நெஞ்செரிச்சல், ஒற்றைத் தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அவர்கள் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவேண்டும். ரத்த ஓட்ட பாதிப்புள்ளவர்கள், சீரான ரத்த ஓட்டத்துக்காக மருந்து மாத்திரைகள் (ஈகோஸ்ப்ரின், ஆஸ்பிரின்) எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையோடு சேர்த்துக்கொள்ளலாம்...”