மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 54

சோறு முக்கியம் பாஸ்! - 54
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 54

வெ.நீலகண்டன்

சாப்பிட்டு முடித்து, வயிறும் மனமும் குளிர்ந்த மனிதர்கள் உதிர்த்துவிட்டுப் போகும்

சோறு முக்கியம் பாஸ்! - 54

வாய்வார்த்தைகளாலேயே பிரபலமான உணவகங்கள் நிறைய உண்டு. அப்படி, லாரி ஓட்டுநர்களின் வாய் வார்த்தைகளால் பிரபலமான ஓர் உணவகம்தான், அக்கா கடை. 

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்,  252-வது கிலோ  மீட்டரில் இருக்கிறது தொழுதூர்.  வளைந்து நீண்டு ஊடாடிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஊருக்கு மேலே ஒரு மேம்பாலத்தில் ஏறி இறங்கும். மேம்பாலம் ஏறுமிடத்தில் இருபுறங்களிலும் வரிசையாக லாரிகள் அணிவகுத்து நிற்கும். அதுதான் அடையாளம், அக்கா கடைக்கு. வசந்தி அக்கா, உணவகத்துக்கு வைத்த பெயர், ரெட்டியார் மெஸ். ஆனால், அக்காவின் அன்பாலும் உபசரிப்பாலும் நெகிழ்ந்துபோய் ‘அக்கா கடை’ என்று மாற்றி விட்டார்கள் மக்கள். 

1999-ல் தொடங்கப்பட்ட உணவகம். முதலில் வீட்டுக்கு மேல்  தார்ஷீட் போட்டு, சிறிய அளவில் தொடங்கியிருக்கிறார்.

சோறு முக்கியம் பாஸ்! - 54

“வெளியுலகம் தெரியாம வீட்டுக்குள்ளயே கிடந்தவ நான். திடீர்னு ரெண்டு பிள்ளைகளோட தனிச்சு நிக்கிற நிலை. அதுவரைக்கும் பசியை உணராம வாழ்ந்துட்டோம். அடுத்த வேளைக்கு என்ன செய்றதுன்னு தெரியாத ஒரு சூழல். நமக்குத் தெரிஞ்ச ஒரே வேலை சமைக்கிறது மட்டும்தான். பக்கத்துல இருக்கிற கல்லூரியில  படிக்கிற பிள்ளைங்க சாப்பாட்டுக்குச் சிரமப்பட்டுக்கிட்டிருந்தாங்க. நாலைஞ்சு பேருக்குச் சமைச்சுக் கொடுக்க ஆரம்பிச்சேன். பத்து நாள்ல எண்பது பிள்ளைகளுக்கு மேல வந்துட்டாங்க. அப்படித் தொடங்கினதுதான், இங்கே வந்து நிக்குது...” என்று உணவகத்தின் வளர்ச்சி குறித்துச் சொல்கிறார் வசந்தி அக்கா.

எல்லோரிடமும் ஒரே மாதிரி கனிவு. சாப்பிட வருகிற எல்லா முகங்களும் அக்காவுக்கு அறிமுகமான முகங்களாகவே இருக்கின்றன. எல்லோரையும் நலம் விசாரிக்கிறார். அவர்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை அவர்கள் கேட்காமலே பரிமாறுகிறார்.

அதிக மெனுவெல்லாம் இல்லை. அன்றைய மனநிலையில், என்ன செய்ய முடியுமோ அவற்றை மட்டுமே செய்கிறார். ஆனால் யாருக்கும் சாப்பாடு இல்லை என்று சொல்வதில்லை. குறைந்தபட்சம் சப்பாத்தியாவது செய்து கொடுத்துவிடுவாராம்.

காலை 7.30-க்கெல்லாம் உணவகத்தைத் திறந்துவிடுகிறார்கள். இட்லி, பூரி, கட்டதோசை... கல் தோசையைத்தான் ‘கட்டதோசை’ என்கிறார்கள். தொட்டுக்கொள்ள எலும்புக் குழம்பு. முதல்நாள் வைத்து மிஞ்சுகிற மீன் குழம்பையும் கருவாட்டுக் குழம்பையும் அடுப்புத் தணலில் வைத்து மூடிவிடுகிறார்கள். மறுநாள் காலை, இந்தக் குழம்புகளுக்காகவே சிற்றுண்டி சாப்பிட வருபவர்கள் இருக்கிறார்கள்.

சோறு முக்கியம் பாஸ்! - 54

11 மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராகிவிடும். 70 ரூபாய். சாதத்தோடு மீன்குழம்பு, நாட்டுக்கோழிக்குழம்பு, மட்டன் குழம்பு, கருவாட்டுக்குழம்பு, ரசம், மோர்... தொடுகறிகளாக கூட்டு, பொரியல். தேவைப்பட்டால் தாளித்த தயிர், மட்டன் தொக்கு வாங்கிக்கொள்ளலாம். தயிர் 10 ரூபாய். மட்டன் தொக்கு ஒரு கிண்ணம் 15 ரூபாய். அக்கா கடையின் சிறப்பு, கருவாட்டுக் குழம்பு. மீன் துண்டுபோலப் பெரிது பெரிதாகக் கருவாட்டை வெட்டிப் போட்டு, நாட்டு மொச்சை போட்டு, கெட்டியாகக் குழம்பு வைத்திருக்கிறார்கள். கருவாடும் மொச்சையுமாக வஞ்சகமில்லாமல் அள்ளி வைக்கிறார்கள் பரிமாறும் சகோதரிகள். நாட்டுக்கோழிக்குழம்பும் வீட்டில் சாப்பிடுவதுபோல பக்குவமாக இருக்கிறது. நெய்மீன், சிலேபிமீன், கட்லா என கடல்மீன், ஏரிமீன் பாகுபாடில்லாமல் எது ப்ரெஷ்ஷாகக் கிடைக்கிறதோ அதைவாங்கி, தலையை வெட்டிப்போட்டுக் குழம்பு வைத்திருக்கிறார்கள். செமையாக இருக்கிறது. இன்னொரு ஸ்பெஷல் மீன்குழம்பும் உண்டு. மீன்துண்டுகளில் மசாலா தடவி ஊறவைத்து, எண்ணெயில் அரைப்பதத்துக்குப் பொரித்தெடுத்து, அதைக் குழம்பில் போட்டு வேக வைத்துச் செய்கிறார்கள். இந்த மீனும் குழம்பும் 40 ரூபாய்.

தனியாக 15 ரூபாய் கொடுக்க வேண்டுமேயென மட்டன் தொக்கைத் தவிர்த்தால் நல்லதொரு அனுபவத்தை இழந்துவிடுவீர்கள். மட்டனை அரைத்து, துவையல் பதத்துக்கு கிரேவியாக்கி வைத்திருக்கிறார்கள். மிகவும் நன்றாக இருக்கிறது.

தொடுகறி வகைகளில் நாட்டுக்கோழி உப்புக்கறி பிரமாதம். 120 ரூபாய். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பிய்த்துப்போட்டு நன்கு பிரட்டி, சிறிய தட்டு நிறையத் தருகிறார்கள். நாட்டுக்கோழி வறுவலும் சாப்பிடலாம். செமி கிரேவியாக இருக்கிறது. மீன்வறுவல் 40 ரூபாய்.  எலும்புக்கறி என்று ஒரு தொடுகறி இருக்கிறது.  எழுபது ரூபாய். நெஞ்செலும்பு, நல்லி எலும்பெல்லாம் போட்டுப் பிரட்டித் தருகிறார்கள். சிறப்பாக இருக்கிறது. 

சோறு முக்கியம் பாஸ்! - 54

அக்கா கடையின் அடையாளமே கரண்டி முட்டைதான். முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, பணியாரக்கல்லில் ஊற்றி வேகவைத்துத் தருகிறார்கள்.  சுடச்சுடச் சாப்பிட வேண்டும்.
சமைப்பது, உபசரிப்பது எல்லாமும் பெண்கள்தாம். சமையலுக்குப் பொறுப்பான சுசிலா, 15 ஆண்டுகளாக இங்கு வேலை செய்கிறாராம். மணி அக்கா, இங்கு வந்து 17 வருடங்களாகிறதாம்.

“ரொம்ப கஷ்டமான சூழல்ல, நமக்குத் தெரிஞ்ச ஒரு விஷயத்தைச் செய்யலாமேன்னு ஆரம்பிச்சேன். இதோ இந்தப் பிள்ளைங்கதான் அப்போ உதவிக்கு வந்து கைகொடுத்துச்சுங்க. இன்னைக்கு வரைக்கும் கூட இருக்காங்க. நாலு மாணவர்களுக்காகத் தொடங்கினேன். இப்போ காலையில இருந்து இரவு வரைக்கும் நிக்க நேரமில்லாம பரபரப்பா இருக்கு. சில கொள்கைகள் வெச்சிருக்கோம். பெரும்பாலும் நாட்டுக்காய்கறிகள் மட்டுமே பயன்படுத்துவோம். புழுங்கல் அரிசியிலதான் சாதம் வடிப்போம். பச்சரிசி பயன்படுத்துறதில்லை. பாக்கெட் பாலும் வாங்கமாட்டோம். அன்னன்னிக்கு மார்க்கெட்ல ப்ரெஷ்ஷா என்ன கிடைக்குதோ அதை வாங்கிச் சமைப்போம். மீன் நிறைய கிடைச்சா மீன்புட்டு செய்வேன். நல்ல ரத்தம் கிடைச்சா, ரத்தப்பொரியல் செய்வேன். கண்டிப்பா செஞ்சே ஆகணும்னு, ஆகாத பொருளைப் பயன்படுத்துறதில்லை. லாரி டிரைவர்கள் நிறைய பேர் வருவாங்க. எவ்வளவு வயசானாவங்களா இருந்தாலும் ‘அக்கா’ன்னுதான் கூப்பிடுவாங்க. அதேமாதிரி, போலீஸ்காரங்களும் நிறைய வருவாங்க. முகம் பார்த்துப் பரிமாறுவோம். யாருக்கும் சாப்பாடு இல்லேன்னு சொல்றதில்லை. எப்பவும் நாலு பேர் சாப்பிடுறமாதிரி இட்லிமாவு எடுத்து வச்சிருப்பேன். அதுவும் தீர்ந்துபோனா, சப்பாத்தி பண்ணி வச்சிருப்பேன். ஏதாவது கொடுத்துப் பசியாத்தி அனுப்பிருவோம்...” என்கிறார் வசந்தி.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க நேர்ந்தால், `அக்கா கடை’ சாப்பாட்டைத் தவறவிடாதீர்கள்!

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன், படங்கள்: செல்வகுமார்

சோறு முக்கியம் பாஸ்! - 54

பயறு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?

“பயறு நல்லது. சந்தேக மில்லை. ஆனால், தினமும் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதல்ல. வாரத்தில் மூன்று அல்லது நான்கு வேளை மட்டும் சாப்பிடலாம். 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்  காலை, இரவு என இரண்டு வேளையும்கூடச் சாப்பிடலாம். ஆனால், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒரு வேளை மட்டும் சாப்பிடுவது நல்லது. அதுவும் மதிய உணவோடு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளைக்கு அதிகபட்சம் முப்பது கிராம் எடுத்துக்கொள்ளலாம். பயறு வகைகளில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. உதாரணமாக, 30 கிராம் பயற்றில் கிட்டத்தட்ட 8 கிராம் புரதம் இருக்கிறது. பயறு வகைகளைச் சரியான அளவில் எடுத்துக் கொண்டால், மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும். கொலஸ்ட்ரால், ரத்த சர்க்கரை, உடல் எடையெல்லாம் கட்டுக்குள் இருக்கும். வாரத்தில் நான்கு வேளைக்கும் அதிகமாக எடுத்துக்கொண்டால் வாய்வுப் பிரச்னை, செரிமானக் கோளாறுகள் ஏற்படும். பாசிப்பயறு, தட்டப்பயறு போன்ற பயறு வகைகள் எளிதாகச் செரிமானம் அடைந்துவிடும். ராஜ்மா, கொண்டைக்கடலை போன்றவை செரிக்க நேரமாகும். உடல்நிலைக்குத் தகுந்தவாறு சாப்பிடுவது நல்லது!