மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 57

சோறு முக்கியம் பாஸ்! - 57
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 57

சோறு முக்கியம் பாஸ்! - 57

சோறு முக்கியம் பாஸ்! - 57

மிழகத்தில் முனியாண்டி விலாஸ் மாதிரி, ஆந்திராவில் நாயுடு மெஸ். செட்டிநாடு மாதிரி, ஆந்திராவில் தனித்துவமான வட்டார பாரம்பர்யம் நாயுடு மெஸ்களுக்கு உண்டு.

தமிழக-ஆந்திர எல்லையோர நகரங்களில் உள்ள  பெரும்பாலான நாயுடு மெஸ்களில்  ஆந்திர `வாசனை’ இல்லை. வெறும் வறட்டுக்காரம் மட்டும்தான். அசலான ’குண்டூர் மிளகாய்’  அசைவ சாப்பாட்டைத் தேடி ஒரு பயணம் மேற்கொண்டேன். அது அரக்கோணத்தில் நிறைவுற்றது.

அரக்கோணம், சுவால்பேட்டை சுந்தரம் தெருவில், சுந்தர விநாயகர் கோயிலுக்கு அருகில் இருக்கிறது, குமாரிவிலாஸ் நாயுடு மெஸ். வீட்டின் ஒரு பகுதியை மெஸ்ஸாக்கி யிருக்கிறார்கள். கல்லாப்பெட்டியெல்லாம் இல்லை. காசை வாங்கி ஒரு குழம்புக் கிண்ணத்தில் போட்டுக்கொள்கிறார் மெஸ்ஸின் உரிமையாளர் சந்தானகிருஷ்ணன்.

வேலையாட்கள் என்று யாரும் இல்லை. எல்லாம் உறவுக்காரர்கள். சந்தானகிருஷ்ணனின் மகன் துளசிராமன் மென்பொருள் பொறியாளர். விடுமுறை நாள்களில் அவரும் மெஸ்ஸுக்கு வந்துவிடுகிறார்.  
 
மெஸ்ஸின் முகப்பில் நிறைய புகைப்படங்களை மாட்டியிருக்கிறார்கள். `இவர் முதல் தலைமுறை’, `இவர் இரண்டாவது தலைமுறை’ என, புகைப்படத்தில் இருப்பவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் சந்தானகிருஷ்ணன். சஞ்சீவி நாயுடு என்பவர், 1924-ல் இதே இடத்தில் சிறு கூரைக்கொட்டகையில் இந்த மெஸ்ஸைத் தொடங்கியிருக்கிறார். இப்போது மெஸ்ஸை நிர்வகிக்கும் சந்தானகிருஷ்ணன், நான்காவது தலைமுறை.

சோறு முக்கியம் பாஸ்! - 57

“எங்க பாட்டனார் சஞ்சீவி நாயுடு இந்தப் பகுதியில போஸ்ட் மாஸ்டரா இருந்தவர். பாட்டி நல்லா சமைப்பாங்களாம். ஆந்திராவிலிருந்து வந்து நிறைய தொழிலாளர்கள் இங்கே வேலை செஞ்சிருக்காங்க. அவங்களுக்காக இந்த மெஸ்ஸை ஆரம்பிச்சிருக்காங்க. சஞ்சீவி நாயுடுவுக்குப் பிறகு, தாத்தா வெங்கடாசலபதி நாயுடு... அவருக்கு ரயில்வேயில வேலை. அவர் மனைவி ராஜம்மாள்தான் மெஸ்ஸை நிர்வகிச்சிருக்காங்க. அவருக்குப் பின்னாடி எங்க அப்பா சீதாபதி நாயுடு. அவரும் சப்ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வேலை பாத்தாரு.  எங்க அம்மாதான் சமையலெல்லாம். அவங்களுக்குப் பிறகு  என்கிட்ட முழுசா இந்த மெஸ்ஸை ஒப்படைச்சிட்டாங்க...” சுவாரஸ்யமாகப் பேசுகிறார் சந்தானகிருஷ்ணன்.

95 ஆண்டுக்காலத் தடம். இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் பேக்கரிகள், உணவகங்களுக்கெல்லாம் கோட்டா வைத்து அரிசி, சர்க்கரை வழங்கியிருக்கிறார்கள். அதை வாங்க சரியாக வருமான வரி, தொழில் வரியெல்லாம் கட்டிப் பதிவு செய்திருக்க வேண்டும். அந்தப் பதிவு ஆவணங்களையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.

சோறு முக்கியம் பாஸ்! - 57

காலைச் சிற்றுண்டி இல்லை. மதியமும் இரவும்தான். கூட்டம் அள்ளுகிறது. 11 மணிக்கெல்லாம் தயாராகிவிடுகிறார்கள். 1 மணிக்கு கல்யாண வீடு மாதிரி ஆகிவிடுகிறது. அதிக மெனுவெல்லாம் கிடையாது. சாப்பாடு, சிக்கன் வறுவல், மட்டன் வறுவல், மீன் வறுவல், முட்டை. அவ்வளவுதான். 

சாப்பாடு 65 ரூபாய். அளவில்லாச் சாப்பாடுதான். 2 கூட்டு, 1 பொரியல், சாம்பார், ரசம், மோர், மட்டன் குழம்பு, மீன்குழம்பு...  சைவம் விரும்பினால், அசைவக் குழம்புகளைத் தவிர்த்துவிட்டு கெட்டியான காரக்குழம்பு வாங்கிக்கொள்ளலாம்.

குண்டூர் மிளகாயின் கார்ப்பு, கூட்டு, பொரியல், குழம்புகளில் தனியாகத் தெரிகிறது. மீன்குழம்பு வித்தியாசமாக இருக்கிறது. நெய் மத்திமீன் போட்டுக் கெட்டியாக வைத்திருக்கிறார்கள். கறுப்பு நிறத்தில் இருக்கிறது. புளி தனியாக நாவைச் சீண்டுகிறது. முள்ளும் மீனுமாக அள்ளிப்போடுகிறார்கள். மட்டன் குழம்பும் நன்று. 

தொடுகறிகளைத் தாராளமாகச் சிலாகிக்கலாம். சிக்கன் வறுவல் செமையாக இருக்கிறது. 70 ரூபாய்தான். பட்டை, கிராம்பெல்லாம் போட்டு கெட்டியான கிரேவி பதத்தில் இருக்கிறது. சிக்கன் வாங்கினால், அதே அளவுக்குத் தனியாக கிரேவி தருகிறார்கள். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். மட்டன் வறுவலும் நன்றாக இருக்கிறது. கடலை எண்ணெய் விட்டு கருக ஃப்ரை செய்திருக்கிறார்கள். 120 ரூபாய். நல்லி, ஈரல் எனக் கலவையாக இருக்கிறது.

மீன்வறுவலில் இரண்டு வகை இருக்கின்றன. சங்கராமீன், விறால்மீன். நல்லெண்ணெய் விட்டு தாவாவில் போட்டு வறுப்பார்களாம். விறால் மீன் நன்றாக இருக்கிறது. 2 பீஸ் 120 ரூபாய்.

மீல்ஸும், சிக்கன் வறுவலும் பொருத்தமான இணை. போதாதென்றால், விறால்மீன் வாங்கிக்கொள்ளலாம். ஆக, 250 ரூபாயில் மிக நிறைவான ஆந்திராவின் குண்டூர் மிளகாய் சாப்பாடு. நல்ல அனுபவம்தான்.

3 மணி வரை சாப்பாடு கிடைக்கும். அதோடு மூடிவிட்டு, திரும்பவும் மாலை 6.30 மணிக்குத் திறக்கிறார்கள். 9.30 வரை சிற்றுண்டி. சைவம் மட்டும்தான். தோசை, சப்பாத்தி வகையறாக்கள்.

“வழி வழியா வந்த தொழில், இப்போ என் கைக்கு வந்திருக்கு. பையன் ஐ.டி கம்பெனியில மேனேஜரா இருக்கான். என்னால முடியாதபோது, அவனைக் கூப்பிட்டு கையில ஒப்படைச்சிருவேன். தாத்தா, அப்பா, மகன்னு தலைமுறையா சாப்பிட வர்றவங்க இருக்காங்க. வாடிக்கையாளரா இல்லாம, குடும்ப உறவு மாதிரி ஆயிடுச்சு.  சாப்பாட்டை சுவையா கொடுக்கணுங்கிறது முக்கியம்தான். அதைவிட, சாப்பாடு மருந்தா இருக்கணும். கூடுதலா ஒரு பிரச்னையை உருவாக்கிடக் கூடாது. எங்க வீடு பக்கத்துலதான் இருக்கு. வீட்டுக்குத் தனியா, மெஸ்ஸுக்குத் தனியா சமைக்கிறதில்லை. இங்கே சமைக்கிறதைத்தான் நாங்களும் சாப்பிடுறோம். பாமாயில், கலர் பவுடர்னு உடம்புக்கு ஆகாத எதையும் சேர்க்கிறதில்லை.  எங்க மூதாதைங்க ஓடியாடி வேலை செஞ்ச இடம் இது. அவங்க பேரைக் காப்பாத்துற மாதிரி நல்ல விதமா செஞ்சா போதும்...”- பக்குவமாகப் பேசுகிறார் சந்தானகிருஷ்ணன்.

சென்னை சென்ட்ரலிலிருந்து மின்சார ரயிலில் ஏறினால் இரண்டு மணி நேரத்தில் அரக்கோணம் போய்விடலாம். காரசாரமான, பாரம்பர்யமான ஆந்திரச் சாப்பாடு சாப்பிட விரும்புபவர்கள் ரயிலேறலாம்!

- பரிமாறுவோம்

-வெ.நீலகண்டன்

படங்கள்: ப.சரவணகுமார்

கோடைக்காலத்தில் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?

 தெ.வேலாயுதம், சித்த மருத்துவர்.

சோறு முக்கியம் பாஸ்! - 57
சோறு முக்கியம் பாஸ்! - 57

”கரும்பு, உடலுக்கு  உடனடி ஆற்றல் தரும் இயற்கை டானிக்.  இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் என உடலுக்கு அத்தியாவசியமான பல சத்துகள் நிரம்பியிருக்கின்றன. வெயில் காலத்தில் ஏற்படும் நீரிழப்பு, உடல் சூடு போன்ற பிரச்னைகளுக்கு அது நல்ல தீர்வு. நோய் எதிர்ப்புச் சக்தியையும் வலுப்படுத்தும்.  சிறுநீர் நன்றாகப் பிரியும். உடலிலுள்ள  நச்சுகளை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்கவும் உதவும். பற்கள், எலும்புகளை வலுவாக்கும். சாப்பிட்ட பிறகு கரும்புச் சாறு அருந்தினால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமடையும். கரும்புச் சாற்றில் எலுமிச்சை, இஞ்சி சேர்ப்பது கூடுதல் பலன்தரும். ஆனால், ஐஸ் சேர்த்துக் குடிப்பது நல்லதல்ல. அது உடலில் சூட்டை மேலும் அதிகரித்துவிடும். அனைவரும் கரும்பு ஜூஸ் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள்,  அரை டம்ளர் வீதம் வாரத்துக்கு இரண்டு முறை  குடிக்கலாம். சாலையோரங்களில் நிறைய கரும்பு ஜூஸ் கடைகள் முளைத்திருக்கின்றன.  அங்கு கரும்பும் கரும்பைப் பிழியும் இயந்திரமும் திறந்தவெளியில் இருக்கும்.  அதை முறையாகச் சுத்தம் செய்து பராமரிக்கிறார்களா என்பதை அறிந்துகொண்டு குடிப்பது நல்லது. சிலர் கரும்பு ஜூஸில் தண்ணீர், சாக்கரின் போன்றவற்றைக் கலந்து விற்கிறார்கள். அதனால், கண்முன் பிழிந்துதரச்சொல்லிக் குடிப்பது நல்லது.’’