
சோறு முக்கியம் பாஸ்! - 60

இப்போதுதான் பிரியாணி யெல்லாம்... பத்தாண்டுகளுக்கு முன்புவரை, நாகூர், பரங்கிப்பேட்டை, காரைக்கால் வட்டார கடலோரப் பகுதிகளில், திருமண வீடென்றால் அஞ்சுகறிச் சோறுதான். அடடா... என்ன வாசனை... என்ன ருசி... சகான் என்கிற பெரிய மரவைத் தட்டுகளில் அஞ்சுகறிச் சோற்றைக் குவித்துவைப்பார்கள். நான்கு புறமும் நான்கு பேர் அமர்ந்துகொள்ள அனுபவம் உள்ள பெரியவர் ஒருவர் பக்குவமாக சாதத்தைப் பிசைந்து நால்வருக்கும் பரிமாறுவார். அன்பு, மரியாதை, பாசம், பகிர்வென சக மனிதர்களுக்குள் அந்நியோன்யத்தையும் வளர்க்கும், அஞ்சுகறிச் சோறு.
நெய்ச் சோற்றையும், ஐந்து துணை உணவுகளையும் கொண்டதுதான் அஞ்சுகறிச் சோறு. பார்க்க, புலாவ் மாதிரியிருக்கும். தளும்ப நல்லெண்ணெய் விட்டு, நிறைய சின்ன வெங்காயம் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பூண்டு, தயிர், உப்பு ஆகியவற்றைக் கலந்து பிரியாணி மாதிரியே தம்போட்டு வேகவைக்கிற பச்சரிசிச் சோறு... இதோடு மட்டன் கொழுப்பும் கத்திரிக்காயும் சேர்த்துச் செய்கிற பாரம்பர்யமான தாளிச்சா; மாங்காயில் வெல்லமும் மிளகாயும் போட்டுச் செய்த புளிப்புப் பச்சடி; மட்டன் குருமா; சிக்கன் வறுவல்; சீனித்தோவை. இதுதான் அஞ்சுகறிச் சோற்றின் உள்ளடக்கம்.

அஞ்சுகறிச் சாதத்தைச் சாப்பிட, ஒரு முறை இருக்கிறது. முதலில் சாதத்தில் தாளிச்சா போட்டுச் சாப்பிடுவார்கள். அடுத்து, சோறு-புளிப்புப் பச்சடி. மூன்றாவதாக மட்டன் குருமா... அடுத்து சீனித்தோவை. சர்க்கரையை நீர்க்க பாகுகாய்ச்சி, ஏலக்காய், கிராம்பு, பட்டை, தயிரெல்லாம் சேர்த்துத் தனியாக வைத்துக் கொள்வார்கள். சுடச்சுடச் சாதம் போட்டு, இந்தச் சீனித்தோவையை ஒரு கரண்டி ஊற்றி ஒரு வாழைப்பழம், கொஞ்சம் தக்காளி ஜாம் போட்டுப் பிசைந்து சாப்பிடுவார்கள். காரத்தில் ஆரம்பித்து இனிப்பில் முடியும் விருந்து!
பிரியாணி மாதிரி அஞ்சுகறிச் சோற்றை எளிதாகத் தயாரிக்க முடியாது. சோறு, தாளிச்சா, சீனித்தோவை என எல்லாவற்றையும் தனித் தனியாகச் செய்யவேண்டும். ஒருநாள் முழுக்க இழுக்கும் வேலை. இந்தச் சிரமம் கருதியே எல்லோரும் பிரியாணிக்கு மாறிவிட்டார்கள். முன்பு, நாகை, காரைக்கால் வட்டாரத்தில் ஒரு சில உணவகங்களில் அஞ்சுகறிச் சோற்றை மெனுவாக வைத்திருந்தார்கள். ஒரு வாய் சாப்பிட்டுவிடலாம் என ஊர் ஊராகத் தேடியலைந்தால், இன்று ஓரிடத்திலும் காணவில்லை.
ஆனால், சென்னையில், அதே பாரம் பர்யத்தோடு அஞ்சுகறிச் சோறு கிடைக்கிறது என்பது இன்ப அதிர்ச்சி. சேலையூரில், வேளச்சேரி பிரதான சாலை, ராஜேஸ்வரி நகரில் உள்ள ‘பெட்டி சோறு’ உணவகத்தில் அஞ்சுகறிச் சோறுதான் பிரதான மெனு.
மிகச்சிறிய உணவகம். நின்றுகொண்டுதான் சாப்பிட வேண்டும். அதுவும் பத்துப்பேர் மட்டுமே நிற்கமுடியும். உணவுகள் வைக்க, எடுக்க சிறுபகுதியைத் தடுத்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தச் சின்ன இடத்தை ரசனையாக உள்ளழகு செய்தியிருக்கிறார்கள். பனை மரங்கள், பனையோலைப் பெட்டிகள் செய்யும் படங்கள் அழகாக பிரேம் செய்து மாட்டப்பட்டுள்ளன. பத்துப்பேர் சாப்பிட, இன்னும் பத்துப்பேர், பெஞ்சில் அமர்ந்து காத்திருக்கிறார்கள். கிச்சன், வேறொரு இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து, அடுத்தடுத்து வந்து இறங்குகின்றன பாண்டங்கள்.

நிறைய மெனுவெல்லாம் கிடையாது. அஞ்சுகறிச் சோறு சிக்கன், அஞ்சுகறிச் சோறு மட்டன், அஞ்சு கறிச் சோறு சைவம்... அவ்வளவுதான். பாக்கு மட்டைத் தட்டு, அதன்மேல் மந்தாரை இலையைப் போட்டு நெய்ச்சோறு பரிமாறுகிறார்கள். மாங்காய்ப் பச்சடி, வறுவல்கள் தொன்னைக் கிண்ணத்தில். தாளிச்சா, குழம்பெல்லாம் மண் டம்ளரில் தருகிறார்கள். இந்த ‘காம்போ’வே அலாதியாக இருக்கிறது.
அஞ்சுகறிச் சோறு சிக்கன், 130 ரூபாய். நெய்ச் சோறு, தாளிச்சா, சிக்கன் குழம்பு, மாங்காய்ப் பச்சடி, சிக்கன் வறுவல். செமி கிரேவியாக இருக்கிறது வறுவல். எல்லாமே நெய்ச் சோற்றுக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறது. அஞ்சுகறிச் சோறு மட்டன், 160 ரூபாய். சிக்கன் குழம்புக்குப் பதில் மட்டன் குழம்பு, சிக்கன் வறுவலுக்குப் பதில், மட்டன் வறுவல். ‘போதும் போது’மென்கிற அளவுக்கு நெய்ச்சோறு வைக்கிறார்கள். தாளிச்சா, மாங்காய்ப் பச்சடி, மட்டன், சிக்கன் குழம்புகள் எல்லாமே நெய்சோற்றுக்கு அம்சமாகப் பொருந்துகின்றன. சைவ அஞ்சுகறிச் சோறு, 80 ரூபாய்தான். சைவக் குருமா, பச்சடி மட்டும் தருவார்கள். பாரம்பர்யமான அஞ்சுகறியில் சீனித்தோவை மட்டும் மிஸ்ஸிங்.
நிறமிகள் இல்லை. அஞ்சறைப்பெட்டி மசாலாக்கள் தவிர வேறெந்த ரசாயனங்களும் இல்லை. விறகடுப்பில்தான் சமைக்கிறார்கள். மண் ஜக்கில் தண்ணீர் தருகிறார்கள். தவிர, பார்சல் கேட்டால் ஓலைப்பெட்டியில் வைத்துத் தருகிறார்கள். அதுவும் ‘நாகூர், நாகப்பட்டினம், காரைக்கால்’ ஸ்டைல்தானாம்.
ஓலைப்பெட்டியில் சோறு போட்டு, நடுவில் குழி பறித்து ஒரு மண் டம்ளரை வைத்து அதில் குழம்பு ஊற்றுகிறார்கள். அதன்மேல் தொன்னை வைத்து மாங்காய்ப் பச்சடி, இன்னொரு தொன்னையில் சிக்கனோ மட்டனோ வைத்துப் பெட்டியை மூடி ரப்பர் பேண்ட் போட்டுத் தருகிறார்கள். பார்சல் வாங்கினால் சிக்கன் சோற்றுக்கு 50 ரூபாய், மட்டன் சோற்றுக்கு 60 ரூபாய் கூடுதல்.
ஏன் இந்த ஓலைப்பெட்டி பேக்கிங்..?
“எங்க பகுதியில, குழந்தை பிறந்த விசேஷங்கள், அன்னதான வேண்டுதல்களுக்கு மக்களை வீட்டுல அழைச்சு சாப்பிட வைக்கிறதுக்குப் பதிலா, ஓலைப்பெட்டியில கட்டி வீடு வீடா கொண்டுபோய்க் கொடுக்கிறது எங்க ஊர் வழக்கம். ஓலைப்பெட்டியில நெய்ச்சோற்றை பேக் செய்ற விதமே அலாதியா இருக்கும். முதல்ல ஒரு லேயர் சோறு, அடுத்து தாளிச்சா, அடுத்து கொஞ்சம் சாதம், அடுத்து பச்சடின்னு லேயர், லேயரா பேக் போட்டுப் பண்ணுவாங்க. ஓலையோட சாறு சாதத்துல இறங்கி வித்தியாசமான சுவையும் வாசனையும் சேர்ந்திடும்...” என்கிறார் அபய் ரியாஸ்.
நிரவியைச் சேர்ந்த ரியாஸ், பி.டெக் படித்தவர். சினிமாவில் கிரியேட்டிவ் துறையில் பணியாற்றியவர்.
“சொந்தமா ஏதாவது தொழில் செய்யணும்னு யோசிச்சப்போ உணவகம்தான் நினைவுக்கு வந்துச்சு. சென்னையில எந்தப்பக்கம் திரும்பினாலும் பிரியாணி. அதுக்கு மாற்றா, அஞ்சுகறிச் சோற்றை அறிமுகம் செய்யலாமேன்னு தோணுச்சு. என் நண்பன் மணிகண்டன் உதவி செய்ய முன்வந்தார். ஊர்ல கல்யாண வீடுகளுக்குச் சமையல் செய்ற அசலான சமையல்காரர்களை அழைச்சுக்கிட்டு வந்து உடனே ஆரம்பிச்சுட்டோம்...” என்கிறார் ரியாஸ்.
செவ்வாய்க்கிழமை விடுமுறை. மற்ற தினங்களில் 12.30-க்கு உணவகத்தைத் திறக்கிறார்கள். 3.30-க்கெல்லாம் மதிய சாப்பாடு நிறைவடைந்துவிடும். பிறகு இரவு 7 மணிக்குத் திறந்து 10 வரை வைத்திருக்கிறார்கள். சின்ன இடம்... நின்றுகொண்டே சாப்பிடுவது கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது.
மற்றபடி, வித்தியாசமான, பாரம்பர்யமான உணவைத் தேடிச் சுற்றுபவர்கள், கண்டிப்பாக ஒருமுறை பெட்டிச்சோறு உணவகத்துக்குச் சென்று கைநனைக்கலாம்! வீட்டுக்கும் ஒரு பெட்டி வாங்கிச்செல்லலாம்!
- பரிமாறுவோம்
-வெ.நீலகண்டன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
சிறுநீரக நோயாளிகள் கீரை சாப்பிடக்கூடாது என்கிறார்களே, உண்மையா?
- கு.சிவராமன், சித்த மருத்துவர்

“உண்மைதான். கீரைகளில் சோடியம், பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துகள் நிறைந்திருக்கின்றன. இவை, அத்தியாவசியமான சத்துகளாக இருந்தாலும், சிறுநீரக நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் ‘கிரியாட்டின்’ அளவு, 1.1 மில்லி கிராமுக்கு மேல் தாண்டக்கூடாது. அப்படித் தாண்டினால், சிறுநீரகம் பாதிக்கும்மேல் பாதிப்படைந்துவிட்டது என்று பொருள். இவர்கள் கண்டிப்பாக கீரைகளைத் தவிர்க்கவேண்டும். கீரையில் உள்ள கனிமங்கள், பழுதடைந்த சிறுநீரகத்துக்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்தி, செயல்பாட்டை மேலும் மோசமாக்கிவிடும். கீரைகள் சாப்பிட்டே ஆகவேண்டுமென்றால், இருமுறை நீரில் வேகவைத்து, அந்தத் தண்ணீரை நீக்கிவிட்டுச் சாப்பிடலாம். ‘கிரியாட்டின்’ அளவு 3 மி.கி என்ற அளவுக்குமேல் இருந்தால், கீரையை எந்த வகையிலும் உணவில் சேர்க்கக்கூடாது.