
சோறு முக்கியம் பாஸ் - 63
நகரத்துக்கு வெளியே, ஒதுக்குப்புறமாக இருக்கிறது அந்த உணவகம். முகப்பில் கூரையும், உள்ளே சிமென்ட் சீட்டும் போர்த்தியிருக்கிறார்கள். வெளியில் விறகுக் கட்டைகள் ஒழுங்கின்றிச் சிதறிக்கிடக்கின்றன. கைகழுவும் தண்ணீர் வளைந்து நெளிந்து சற்றுத் தள்ளியி ருக்கும் கால்வாய்க்குள் ஓடுகிறது. உள்ளே இரண்டு பேர் வியர்க்க விறுவிறுக்க பரோட்டா போட்டுக்கொண்டிருக் கிறார்கள். ஒரு பக்கம், குழம்பு தாளிக்கும் ஓசை. 20 பேர் அமரலாம். சிமென்ட் சீட் இறக்கும் வெப்பம் ஒரு பக்கம், அடுப்பிலிருந்து கிளம்பும் புகை ஒரு பக்கமெனக் கண்கள் காந்துகின்றன. ஆனால், இந்த அவஸ்தைகள் எவையும் யாரையும் பாதிக்கவில்லை. சுவாரஸ்யமாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘பெப்பர் சிக்கன்’, ‘ஆனியன் சிக்கன்’ என ஆர்டர்கள் பறக்கின்றன.

மேலூரில் சிவகங்கை சாலையில் இருக்கிறது இந்த உணவகம். 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த உணவகத்துக்குப் பெயரென்று எதுவும் இல்லை. கூரை வேய்ந்திருப்பதால் சிலர் ‘கூரைக்கடை’ என்கிறார்கள். சிலர், உரிமையாளர் பெயரை வைத்து ‘மைதீன் ஹோட்டல்’ என்கிறார்கள்.
மைதீன் வார்த்தைகளால் பேசமாட்டார் போல. புன்னகைதான். நான்கைந்து இளைஞர்கள் உள்ளே பம்பரமாகச் சுழல்கிறார்கள். பார்த்துப் பார்த்துப் பரிமாறுகிறார்கள்.
இந்தக் கூரைக்கடையின் ஸ்பெஷலே, தயிர்சாதம் + பெப்பர் சிக்கன்தான். வேறெங்கும் இப்படியொரு ‘காம்போ’வை ருசிக்க முடியாது. காலை 10 மணிக்கெல்லாம் சுடச்சுட தயிர்சாதம் தயாராகிவிடுகிறது. கொத்தமல்லித் தழைகளை வெட்டித்தூவித் தாளித்து, பெரிய பாத்திரத்தில் வைத்திருக்கிறார்கள். இலையில் அள்ளி வைத்து, தலையில் கொஞ்சம் தயிர்விட்டுப் பரிமாறுகிறார்கள். தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டால் தொட்டுக்கொள்ளத் தக்காளி-இஞ்சித் தொக்கு மட்டும்தான். பெப்பர் சிக்கன் வாங்கி னால், கூடவே கொஞ்சம் காடைத் தொக்கும் தருகிறார்கள். சிக்கன் லெக் பீஸை மிளகு, கறிவேப்பிலை போட்டு வதக்கி, கறுகறுவெனக் கொண்டுவந்து வைக்கிறார்கள். தயிர்சாதத்துக்குக் காடைத்தொக்கும் பெப்பர் சிக்கனும் ஏகப் பொருத்தமாக இருக்கிறது. 30 ரூபாய் தயிர்சாதம். 70 ரூபாய் பெப்பர் சிக்கன். 100 ரூபாயில் நிறைவான மதிய உணவு.

தயிர்சாதம் விரும்பாதவர்கள் குஸ்கா சாப்பி டலாம். எவ்வித நிறமிகளும் சேர்க்காமல், அசல் நிறத்தில் சீரகச்சம்பா அரிசியில் செய்கிறார்கள். 11.30 மணிக்கெல்லாம் குஸ்கா ரெடியாகிவிடும். ஒரு கப் குஸ்காவைத் தோசைக்கல்லில் கொட்டி ஒரு முட்டையை உடைத்து ஊற்றிப் பிரட்டி அள்ளித் தருகிறார்கள். இது 40 ரூபாய். குஸ்காவுக்குக் காடை கிரேவி மிகப்பொருத்தம். முழுக்காடையையும் மசாலாவில் தோய்த்து செமி கிரேவியாகத் தருகிறார்கள். காடை+முட்டை குஸ்கா 110 ரூபாய்.
தொடுகறிகளில் ஆனியன் சிக்கன் என்று ஒன்றுண்டு. சிக்கனைப் பிய்த்துப்போட்டு நிறைய வெங்காயம் சேர்த்து செமி கிரேவியாக ஃப்ரை செய்து தருகிறார்கள். இது தயிர்சாதத்துக்கும் சரி, குஸ்காவுக்கும் சரி, செம பொருத்தம். முட்டை சிக்கனும் அருமை. சிக்கனைத் தூளாக்கி முட்டை ஊற்றிக் கொத்தித் தருகிறார்கள். சிக்கனை மிதமான மசாலாவில் தோய்த்துக் கருக வறுத்து சுக்காவாகவும் வாங்கிக்கொள்ளலாம்.
தயிர்சாதம், குஸ்கா விரும்பாதவர்கள் சிற்றுண்டிப் பக்கம் செல்லலாம். பரோட்டாதான் இந்த உணவகத்தின் பிரதான அடையாளம். மேலூர்வாசிகள், தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு ‘மைதீன் கடை பரோட்டா’ வாங்கித்தராமல் அனுப்பவே மாட்டார்கள்.

லாப்பா என்று ஒருவகை இருக்கிறது. முட்டை, சிக்கன் கிரேவி இரண்டையும் நன்றாகக் கலந்து, பரோட்டாவின் இருபுறமும் ஊற்றி முறுக வேக வைக்கிறார்கள். அதை நான்கு பீஸாக வெட்டி, தட்டில் அடுக்கித் தருகிறார்கள். பஞ்சு மாதிரி லேசாக இருக்கிறது. தொட்டுக்கொள்ள சிக்கன் கிரேவி. எது சாப்பிட்டாலும் கூடவே ஒரு லாப்பாவும் சாப்பிடலாம்.
கறிதோசை மாதிரி இவர்கள் ‘முட்டை ஊத்தப்பம்’ வைத்திருக்கிறார்கள். நம்மூரில் தோசை மாவை ஊற்றி மேலே முட்டையை உடைத்து ஊற்றுவார்கள். இவர்கள், தோசை மாவைக் கிண்ணத்தில் எடுத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி இரண்டையும் நன்றாகக் கலந்து குவியலாக ஊற்றி வேகவைத்துத் தருகிறார்கள். வித்தியாசமாக இருக்கிறது.
தலைக்கறி இங்கு மிகவும் பிரபல மான தொடுகறி. ஆனால் மாலை 5 மணிக்கு மேல்தான் கிடைக்கும். செய் முறையே வித்தியாசமாக இருக்கிறது. அதிகாலையே தலைக்கறியை வாங்கி தேவையான அளவுக்கு வெட்டி, அடுப்புத் தகிப்பில் வைத்து விடுகிறார்கள். மாலை வரைக்கும் அது கனலில் வெந்துகொண்டிருக்கிறது.
நான்கு மணிக்கு மேல் எடுத்துச் சமைத்துப் பரிமாறுகிறார்கள். இதற்கு நிறைய டிமாண்டு. மண்ணீரல் வறுவல், ரத்தப் பொரியலெல்லாம் முதல்நாளே சொல்லி வைத்தால் செய்து தருவார்களாம்.
“உள்ளே உக்காந்து சாப்பிட கொஞ்சம் காந்தலாத்தான் இருக்கும். ஆனா, யாரும் அதைப் பெரிய விஷயமா எடுத்துக்கிறதில்லை. நிறைய பேர் குடும்பத்தோட வருவாங்க. அரசியல் தலைவர்கள், நடிகர்கள்கூட வர்றதுண்டு. கூட்டமில்லேன்னா இங்கேயே உக்காந்து சாப்பிடுவாங்க. சாப்பிட வர்றவங்களை வாடிக்கை யாளரா பாக்காம விருந்தினரா பாப்போம்.
அவங்க கேக்குறதுக்கு முன்னாடியே பார்த்துப் பார்த்துப் பரிமாறுவோம். அதனாலதான் பெயரே இல்லாத எங்க உணவகத்துக்கு வெளியூரிலிருந் தெல்லாம் தேடி வந்து சாப்பிடுறாங்க” என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் உணவகத்தை நிர்வகிக்கும் சம்சுதீன்.
நல்லதொரு ‘நாட்டு’ச்சுவை. மேலூர்ப்பக்கம் செல்பவர்கள் இந்த உணவகத்தைத் தவற விடாதீர்கள்..!
- பரிமாறுவோம்
-வெ.நீலகண்டன், படங்கள்: க.சதீஷ்குமார்
ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களைக்
கண்டறிவது எப்படி?
- விக்ரம்குமார், சித்த மருத்துவர்

இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களில் பளபளப்பு இருக்காது. சீரான நிறமும் இருக்காது. இயற்கையாகப் பழுத்த பழம், கொஞ்சம் கொழகொழப்பாகவும், நிறைந்த சுவையோடும் இருக்கும். சீரான மஞ்சள் நிறமின்றி, ஆங்காங்கே பச்சை அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்திருக்கும். சதைப்பகுதி பளீர் சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். மாம்பழத்தைக் கடிக்கும்போதோ, நறுக்கும்போதோ சாறு வடியும். ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களின் சதைப்பகுதி கெட்டியாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். சாறு மிகவும் குறைவாக வரும். சாப்பிடும்போது வாய், உதட்டில் எரிச்சல் ஏற்படும். சாப்பிட்ட பிறகு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படும். அதனால், தீர்க்கமாகப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.”