தென்னிந்திய தேயிலை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நீலகிரி மாவட்டத்தில் 40 டன் கலப்படத் தேயிலைத் தூள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தொழிற்சாலையில் கலப்படத் தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுவதாக குன்னூரில் உள்ள தேயிலை வாரியத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு உத்தரவின் பேரில் தேயிலை வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையில் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்த தேயிலை வாரிய அதிகாரிகள் மலை மலையாய் டன் கணக்கில் தேயிலைத் தூளில் ரசாயன கலப்படம் செய்திருப்பதைக் கண்டு திகைத்துப்போயினர். சுதாரித்துக்கொண்ட தொழிற்சாலை உரிமையாளர் தப்பி ஓடித் தலைமறைவானார். அறை முழுக்க பேரல்களில் உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தும் ரசாயன செயற்கை நிறமூட்டிகள், கலப்பதற்கான உபகரணங்கள் சிதறிக்கிடந்தன. அருகில் ரசாயனக் கலப்படம் செய்த 8 டன் தேயிலைத் தூள் இருப்பதையும் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்தனர்.
செயற்கை சாயமும், சர்க்கரைத் தூள் சேர்த்து தேயிலையில் சாயம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களும் தேயிலை வாரிய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன. தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட 8 டன் மட்டுமல்லாது, குன்னூரில் உள்ள தேயிலை சேமிப்புக் கிடங்கில் இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 32 டன் சாயம் கலந்த தேயிலைத் தூள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 40 டன் தேயிலைத் தூளை அழிக்கத் தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு கூறுகையில், ``ஊட்டி அருகேயுள்ள சோலூர் பகுதியில் எம்.ஜி. என்ற தனியார் தொழிற்சாலையில் கலப்படத் தேயிலைத் தூள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சாயம் கலந்துள்ள சுமார் 40 டன் தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சீல் வைக்கப்பட்ட தொழிற்சாலை குன்னூர் அருகே உள்ள ஹைபீல்டு தொழிற்சாலையை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து அதன் பெயரில் தேயிலையை ஏலத்தில் விற்கத் தயாராக வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கலப்படம் செய்யப்பட்ட தேயிலைத் தூள் சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
உதகை நகர விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில் ``நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் கலப்படம் என்பது பல காலமாக தொடந்து நடைபெற்று வருகிறது. அவ்வப்போது சோதனை செய்து பறிமுதல் நடவடிக்கை உள்ளது. ஆனாலும் எந்தப் பயனும் இல்லை. உடலுக்கு மிக மோசமான தீங்கை ஏற்படுத்தும், சிறுநீரகத்தைப் பாதிக்கும் அளவுக்குச் செயற்கை ரசாயன நிறமூட்டிகள் கலப்படம் செய்யப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும் எனில் தனிக்குழு அமைத்துப் பல கட்டங்களில் சோதனை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.