என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

புது உலகம் திறந்த புத்தகங்கள் !

எஸ்.சுமன் படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

 ##~##

''மரணப் படுக்கையில் இருந்த புத்தர் இறப்பதற்கு முன் தன் சீடர்களைப் பார்த்து, தன்னுடைய வாழ்க்கையில் இதுவரை கற்றுக்கொண்டதாகச் சொன்னது என்ன தெரியுமா?'' -திருச்சி- தில்லை நகரில் இருக்கும் தன்னுடைய வேலைவாய்ப்புக் கல்வி நிறுவனத்தில் குழுமி இருக்கும் மாணவ-மாணவியரிடம் கேள்வியைக் கேட்கிறார் சிவக்குமார். மாணவர்கள் தங்களுக்குள் பலவிதமாக விவாதிக்கிறார்கள். சிலர் விழிக்கிறார்கள். கடைசியில் சிவக்குமாரே விடையைச் சொன்னதும், வெடித்துச் சிரிக்கிறார்கள். காரணம், புத்தர் சொன்ன பதில்... ''விழிக்கக் கற்றுக்கொண்டேன்!'' என்பதுதான். மாணவர்கள் இயல்புக்கு வந்ததும், புத்தர் சொன்னதன் சாராம்சத்தை சீரியஸாக விளக்குகிறார் சாவித்திரி. 10 நிமிடங்களில் வழக்கமான பாடம் ஆரம்பிக்க... மாணவர்கள் உற்று கவனிக்கிறார்கள்.

திருச்சியில் கல்லூரி மாணவர்கள் தொடங்கி கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் வரை கல்வி, வேலைவாய்ப்பு, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை எனப் பயிற்சிகள் தரும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை 'திருச்சி ப்ளஸ்’ என்கிற ஒரு குடையின் கீழ் நடத்திவருபவர்கள்தான் சிவக்குமார் - சாவித்திரி தம்பதியினர். படிப்பின் பொருட்டோ, வேலைவாய்ப்புக்கோ, பொழுதுபோக்குக்கோ புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பவர்கள் மத்தியில், புத்தகங்களால் வாழ்க்கையையே புரட்டிப் போட்டவர்கள்தான் இந்தத் தம்பதியினர். இவர்களின் அலுவலகத்திலும் வீட்டிலும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் குவிந்துக்கிடக்கின்றன. இந்தத் தம்பதியினரின் புத்தகக் காதல் வியப்பூட்டவே... உலகப் புத்தகத் தினத்தன்று அவர்களைச் சந்தித்துப் பேசினோம். ஒரு சிலிர்ப்பான ஃப்ளாஷ்பேக்கில் அவர்களின் ஆரம்ப அத்தியாயம் எட்டிப் பார்க்கிறது.

''எங்களுக்குப் பூர்வீகம் திருச்சி. இருந்தா லும் ரெண்டு தலைமுறைக்கு முன்னாடியே வட மாநிலங்களுக்குப் பிழைப்புத் தேடி போய்ட்டோம். நான் இன்ஜினீயரிங் டிகிரி முடிச்சுட்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. சேர்ந்தப்பதான், சாவித்திரியைச் சந்திச்சேன். காதல், திருமணம், நல்ல சம்பாத் தியம்னு வாழ்க்கை நல்லா போய்ட்டு இருந் தது. அப்போதான் நாசிக்கில் ஒரு பயங்கர மான விபத்தில் சிக்கினேன். இடுப்பு எலும்பு முறிஞ்சு எதிர்காலமே கேள்விக்குறி ஆகிடுச்சு'' என்ற சிவக்குமாரைத் தொடர்ந்தார் சாவித்திரி.

புது உலகம் திறந்த புத்தகங்கள் !

''திருமணமான புதுசு. விபத்தால வருஷக்கணக்குல ஹாஸ்பிட்டல்ல இருந்தோம். வீடு திரும்பின பின்னாடி அவரால நடமாட முடியலை. தரையில் தவழ்ந்துதான் போவார். இருந்த வேலையும்போச்சு. கையில் இருந்த சேமிப்பைவெச்சு காலத்தை ஓட்டுனோம். அப்போ எங்களுக்கு ஆதரவா இருந்தது புத்தகங்கள் மட்டும்தான்.

அவர் நிறைய புத்தகங்கள் படிப்பார். இதுதான்னு இல்லாம எல்லாமே வாசிப்பார். அவருக்கு வாசிச்சுக் காட்டினதுல எனக்கும் புத்தகம் படிக்கிற பழக்கம் வந்துடுச்சு. சாப்பாட்டுக்குக் காசு இல்லாதப்ப கூட, புத்தகங்களை வாங்கி வாசிச்சோம். நிறைய விவாதிச்சோம். முடங்கிக்கிடந்த எங்க வாழ்க்கைக்குப் புத்தகங்கள்தான் புத்துணர்வு கொடுத்துச்சு. இடையில் பூர்வீக வீட்டை நம்பி திருச்சிக்கு வந்திருந்தோம். இருவரும் மாறி மாறி வாசித்த தன்னம்பிக்கைப் புத்தகங்கள் அவரை எழுந்து நடமாட வெச்சுது.

புது உலகம் திறந்த புத்தகங்கள் !

'எப்பப் பார்த்தலும் மாங்கு மாங்குன்னு புருஷனும் பொண்டாட்டியுமா எதையாவது வாசிச்சிக்கிட்டு இருக்கீங்களே... பசங்களுக்கு டியூஷன் மாதிரி எடுக்கலாமே’னு பக்கத்து வீட்டுக்காரர் யதேச்சையா சொல்ல, அதுதான் எங்க வாழ்க்கையை மாத்திடுச்சு. எந்த அறிவிப்போ விளம்பரமோ இல்லாம டியூஷன் வகுப்புகளை ஆரம்பிச்சோம். பாடப் புத்தகத்தில் உள்ளது மட்டும் இல்லாம, அது தொடர்பான பல விஷயங்களைப் புத்தகத்தில் படிச்சு, சுவாரஸ்யமா சொன்னதால மாணவர்கள் ஆர்வமாத் தேடி வந்தாங்க. மாணவர்களின் மேற்படிப்பு, வேலை வாய்ப்புன்னு அவங்களோட எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செஞ்சதால, இன்னைக்கு 10 பயிற்சி நிறுவனங்கள், 40 ஊழியர்கள்னு வளர்ந்து நிக்கிறோம். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்த நாங்க, இன்னைக்கு கிளாஸ் எடுக்க ஃபாரினுக்குப் போறோம். இதுக்குக் காரணமான புத்தகங்களை மறக்க முடியுமா? அதனாலதான் ஒவ்வொரு கிளாஸுக்கு முன்னாடி புதுசா ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துறோம்!'' என்று சாவித்திரி சொல்ல, நெகிழ்ச்சியாகச் சிரிக்கிறார் சிவக்குமார்.