க.ராஜீவ்காந்திபடங்கள்: ந.வசந்தகுமார்
##~## |
உங்களுக்கு வடுவூர் ஜோதியைத் தெரியுமா? தெரியாதவர்களுக்கு ஒரு க்ளூ... ''ப்ளட்டி ரா... ஸ்கல். ரெண்டு பொட்டப் புள்ளய பெத்து வெச்சுக்கிட்டு பாலிடாயிலா குடிக்கிற... பாலிடாயில்?'' ஆம். அவரேதான். 'களவாணி’ படத்தில் நாட்டாமையாக வந்து கலக்கியவர்தான் வடுவூர் ஜோதி. இவர் ஒரு பல்துறை வித்தகர் எனக் கேள்விப்பட்டு வீட்டுக் குப் போனால் வீட்டு வாசலில் மனைவியுடன் அமர்ந்து கடலை உடைத்துக்கொண்டு இருந்தார்.
''என்ன சார்... ஊருக்குள்ள உங்க பேரைச் சொன் னதுமே ஜோதி வாத்தியாரானு கேக்குறாங்க. நீங்க கடலை உடைச்சுக்கிட்டு இருக்கீங்க?'' என்று சந்தேகத்துடன் கேட்க... ''உண்மைதான்! நான் வாத்தியார்தான் தம்பி. ஆனா, குஸ்தி வாத்தியார். என்னதான் கலை, வித்தைனு இருந்தாலும் நமக்குப் பொழப்பு விவசாயம்தானே?'' என்று சிரிப்பவர் தொடர்கிறார்.
''எங்க அப்பா நேதாஜியோட இந்திய தேசிய ராணுவத்துல இருந்தவரு. நல்லாதான் படிக்கவெச்சாரு. ஆனா, நமக்கு அஞ்சுக்கு மேல படிப்பு ஏறல. சிறு வயசுல வயல் வேலையோட மட்டும் நின்னுடாம, ஏதாச்சும் கத்துக்கணும்னு சிலம்பம் கத்துக்கிட்டேன். 18 வயசுலயே தனியா சிலம்பு சொல்லித் தர ஆரம்பிச்சேன். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 300 பேர் என்கிட்ட குஸ்தி கத்துக்கிட்டு போயிருக்காங்க.

குஸ்தியிலேயே நமக்கு எல்லாமே அத்துப்படி. என்னோட 35 வயசு வரைக்கும் குஸ்தி பள்ளிக்கூடம் நல்லா போனுச்சு. ஒரு கட்டத்துல குஸ்தி மேல மக்களுக்கு ஆர்வம் குறைய ஆரம்பிச்சிடுச்சு. அதனால நான் நாடக மேடை பக்கம் வந்துட்டேன். ஆர்மோனியம், கீ-போர்டு வாசிக்கவும், நடிப்பு, இசை, பாட்டுன்னு கூத்துக் கட்டவும் கத்துக்கிட்டேன். எல்லாமே கேள்வி ஞானம்தான். இன்னமும் நாடகங்களுக்கு மவுசு குறையல. புராண நாடகமோ, நவீன நாடகமோ மக்கள் ரசிக்கி றாங்க. அதனால நமக்கும் வண்டி அப்படியே ஓடிட்டு இருக்கு.
தை, மாசி, பங்குனி, சித்திரை மாசங்கள்ல கோயில் திருவிழாக்கள் நடக்கும். அப்ப சுத்து வட்டார ஏரியாக்களில் நம்ம கச்சேரி களைகட்டும். மன்னார்குடி நாடக சங்கத்தோட உப தலைவராகவும் இருந்திருக்கேன். இப்ப சுமார் 600 பேர் உறுப்பினரா இருக்கிற மன்னார்குடி நாடக மன்றத்துல என்னை மாதிரி பொட்டி போடுறவங்க (இசையமைப்பாளர்) மட்டும் 10 பேர் இருக்கோம்'' என்றவரிடம், 'களவாணி’ திரைப்பட அனுபவங்களைக் கேட்டோம்.

'' 'களவாணி’ படத்துக்கு நம்ம வடுவூர்லதான் சற்குணம் தம்பி ஆபீஸ் வெச்சிருந்துச்சு. என்னைப் பத்தி கேள்விப்பட்டு வரச்சொல் லிச்சு. மேக்-அப் டெஸ்ட் பண்ணி ஓ.கே. பண்ணிட்டாங்க. சின்ன கேரக்டர்தானேனு நெனைச்சேன். ஆனா, இந்த அளவுக்கு ஃபேமஸ் ஆவேன்னு நான் நெனைச்சுப் பார்க்கலை.

அந்த டயலாக்கை எனக்கு முன்னாடியே சின்னச் சின்ன பசங்க பேசுறதைக் கேட்குறப்ப, சந்தோஷமா இருக்கும். அந்தப் படத்துக்குப் பிறகு இப்ப 'கைல ராங் நம்பர்’, 'கூட்டாளி’, 'அக்கப்போர்’னு மூணு படத்துல நடிச்சுக்கிட்டு இருக்கேன். என்னைப் பார்க்கிற சினிமாக்காரங்க எல்லாருமே, 'வி.கே.ராமசாமியோட இடம் இன்னும் காலியா இருக்கு. நீங்க நினைச்சா அந்த இடத்துக்கு வரலாம்’னு சொல்றாங்க. நமக்கு அவ்ளோ பெரிய ஆசை எல்லாம் இல்லை. கடைசி வரைக்கும் நாடகமோ, சினிமாவோ நடிச்சுக்கிட்டே இருக்கணும்'' என்கிறார் புன்னகையோடு!