என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

இலை என்பது ஓரு இயல்பு !

க.ராஜீவ்காந்தி, ர.பாரத்காந்தி படங்கள்: ந.வசந்தகுமார்

##~##

விழாக்களில் இசைஞானி இளையராஜாவைப் பார்ப்பது மிக அபூர்வம். இது பிரபலங்களுக்கும் சென்னைவாசிகளுக்கும் நன்கு தெரியும். அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத அரிய வாய்ப்பு திருவையாறு இசைக் கல்லூரி மாணவர்களுக்குக் கடந்த 20-ம் தேதி கிடைத்தது. ஆம்... மீடியாக்களுக்குக்கூட தெரியாமல் மிக ரகசியமாக வந்து போனார் இசைஞானி. இசைக் கல்லூரியின் ஆண்டு விழாவைக் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தவர், படு உற்சாகமாகப் பேசி, பாடல்கள் பாடி, மாணவர்களுக்கு இசையைப் பற்றி பாடம் எடுத்து எல்லோரையும் பரவசப்படுத்தினார். சில நிமிடங்களே பேசினாலும் முத்தாய்ப்பாக அமைந்த அவருடைய பேச்சு இதோ என் விகடன் வாசகர்களுக்காக!

''ஒரு பொறியியல் படிப்போ, மருத்துவப் படிப்போ ஐந்தே ஆண்டுகளில் முடிந்துவிடும். ஆனால், இசை என்பது இறுதிவரை வரும் படிப்பு. ஒவ்வொரு முறை ராகத்தைத் தேடும்போதும் நாம் கற்றுக்கொண்டேதான் இருக்கவேண்டும். சங்கீதம் என்பது ஒரு தொழில் கிடையாது. அது ஓர் இயல்பு.

நம்முடைய இந்த மானுடப் பிறப்பு நமக்குத் தேவையா? இந்த வாழ்வில் எதிலாவது நாம் திருப்திப்படுகிறோமா? இல்லை. இந்தப் பிறப்பே தேவையில்லை. யாராவது ஒருவர் சந்தோஷமாக இருக்கிறாரா? இல்லை. பிறகு எதற்கு இந்தப் பிறப்பு? ஆனால், நாம் எல்லோரும் சந்தோஷப்படுகிற, திருப்திப்படுகிற ஒரே விஷயம், இசை மட்டுமே. ஒரு நல்ல இசையைக் கேட்கும்போது, 'அடடா...’ என்று ரசிக்கிறோமே... அந்தத் திருப்தியை வேறு எதிலும் கண்டு இருக்கிறீர்களா?

இலை என்பது ஓரு இயல்பு !

நான் இசை அமைத்ததிலேயே மிகக் குறுகிய காலத்தில் உருவான பாடல் எது?  பின்னணி இசை எது? என்ற கேள்வியைத்தான் உங்களில் பலர் கேட்டீர்கள். நேரம் என்பது குறுகுவது கிடையாது. அந்த நேரத்தில் அது நடக்கவேண்டும் என்று இருந்தது. அது தானாக நடந்தது. அவ்வளவுதான். என்னத்தான் சிரமப்பட்டு இசையை உருவாக்கினாலும், அதை ரசிகனிடம் கொண்டுசெல்வதுதான் முக்கியமானது. சமை யல் தயார். ஆனால், இலைக்கு வரவில்லை என்றால் அதில் பயன் இருக்கிறதா? அதனால் எவ்வளவு நேரம் இசையமைக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. அதை எப்படிக் கொண்டுபோய் சேர்க்கிறோம் என்பதுதான் முக்கியம்.

இலை என்பது ஓரு இயல்பு !

உங்கள் குரு பாடுவதைக் கவனமாகக் கேளுங் கள். பிறகு அதை அப்படியே வெளிப்படுத்துங்கள். அது போதும். கல்வி என்பது கற்றுக்கொடுப்பவரை பொறுத்தது அல்ல; அது கற்றுக்கொள்பவரைப் பொறுத்தது. கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால்தான் மனதில் பதியும். இசையைப் பொறுத்தவரை ஆசானின் குரல், மாணவரின் மனம், மாணவரின் குரல் மூன்றும் முக்கியம்.

இலை என்பது ஓரு இயல்பு !

திரும்பத் திரும்பப் பாடுங்கள். கஷ்டப்பட்டால்தான் வரும். மனசுக்குத் தர்மம் கிடை யாது. அது பாட்டுக்கு அலையத்தான் செய்யும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை அமைத்துக்கொண்டு மனசு சிந்தித்தால் மட்டும் தான் லயம் கிடைக்கும். எத்தனையோ மகான்கள் பிறந்து வாழ்ந்த இந்தத் திருவையாறில் வசிப் பதற்கு, நீங்கள் அனைவரும் பெரிய புண்ணியம் செய்து இருக்கணும். இந்தப் பகுதிக்கு வருவதற்காக, திருச்சி ஏர்போர்ட்டில் இறங்கும்போதே சரஸ்வதி வாழும் ஒரு ஊருக்குப் போகிறேன் என்று என் உடல், மனம் எல்லாம் சிலிர்த்தன. எந்த விழாவுக்கும் ஒப்புக்கொள்ளாத நான் இதற்கு ஒப்புக்கொள்ள இரண்டே காரணம். ஒன்று திருவையாறு; மற்றொன்று இசை'' என்று தன் வருகையின் ரகசியத்தைச் சொல்லியதுடன் முடித்தார் அந்த இசை மேதை!