என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

வலையோசை - மு.சிவகுருநாதன்

வலையோசை - மு.சிவகுருநாதன்

வலையோசை - மு.சிவகுருநாதன்

மிச்சம் இருக்கும் அடிமைச் சின்னம்!

##~##

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் பேருந்தில் பயணிக்கும்போது ஒருவேளை நீங்கள் இதை கவனித்திருக்கக்கூடும். திருவாரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாவூர். அங்கே ஒரு பெரிய குளத்தின் நடுவே, ஒரு சிறிய பங்களாவும் அதைச் சென்றடைவதற்கு இலகுவாக இரு பக்கமும் நீண்ட பாலமும் இருப்பதைப் பார்க்கலாம். அதுதான் மாவூர் சர்மா பங்களா!

தஞ்சை மாவட்டந்தோறும் இது மாதிரியான நிலப் பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்களை ஏதேனும் ஒரு வடிவில் ஆங்காங்கே நாம் காண முடியும். அதுவும் கீழத் தஞ்சை என்றழைக்கப்படுகிற தற்போதைய திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், பல பண்ணையார்களின் நிலப் பிரபுத்துவ ஆதிக்கத்துக்கு ஆட்பட்டு இருந்தன. மாவூர் சர்மாவுக்கு வேண்டுமானால் அந்தக் காலத்தில் இது பகட்டாகவும் ஆடம்பரமாகவும் இருந்திருக்கலாம். சாதீய, பண்ணை அடிமைக் கொடுமைகளை அனுபவித்த அடித்தட்டு மக்களுக்கு, இது ஓர் அடிமைச் சின்னமே.

வலையோசை - மு.சிவகுருநாதன்

சில மாதங்களுக்கு முன்பு இந்த மாவூர் சர்மா பங்களாவின் சில பகுதிகள் இடிக்கப்பட்டன. பங்களாவின் நடுவில் உள்ள சொகுசான அறை மட்டும் இன்னமும் இடிக்கப்படாமல் எஞ்சி உள்ளது. இந்த அடிமைச் சின்னத்தின் மிச்சங்களும் கூடிய விரைவில் இடிக்கப்படுவது நம் மனதுக்கு மகிழ்வளிக்கும் விஷயமாக இருக்கும்!

 தேர்வில் காப்பியடிக்கும் கலாசாரம்... ஒரு ஃப்ளாஷ்பேக்!

தேர்வு முறைகள் தொடங்கியதில் இருந்தே காப்பி அடிக்கும் பழக்கமும் தொடங்கி இருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறும் சிறு நிகழ்வுகள் இப்போது பூதாகரமாக உருவெடுத்து இருக்கின்றன. மாணவர்கள் பார்த்து, கேட்டு எழுதுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, மாணவர்களுக்கு பிட் சப்ளை செய்வது, நன்றாகப் படிக்கும் மாணவனின் விடைத்தாளைத் தேர்வு அறையில் உள்ள அனைவருக்கும் வழங்குவது, அறைக் கண்காணிப்பாளர்களே சொல்லித் தருவது, குறிப்பிட்ட பாட ஆசிரியரிடம் இருந்து குறுஞ்செய்தி மூலம் விடைகள் அனுப்பப்பட்டு அவற்றை மாணவர்களுக்கு அளிப்பது எனக் காப்பி அடிக்கும் கலாசாரம் கல்வித் துறையில் வெகு வேகமாக வளர்ந்துள்ளது.  சமீபத்தில் 10-ம் வகுப்பு கணித வினாத்தாளுக்கு உரிய விடைகள் நகல் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட நிகழ்வு, திருவண்ணாமலை மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடந்து உள்ளது.

வலையோசை - மு.சிவகுருநாதன்

அடிக்கடி மறதி நோய்க்கு ஆட்படும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் இதே திருவண்ணாமலை மாவட்டத்தில் 2008-ல் நடந்த நிகழ்வை நினைவுபடுத்துவது மிகப் பொருத்தமாக இருக்கும். முன்னாள் அமைச்சர் ஒருவர் நடத்திவரும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு, நூற்றுக்கு நூறு தேர்ச்சி நிலையைப் பெற்றுவந்தது. 2008 மார்ச் நடைபெற்றப் பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கந்தசாமி, நேர்முக உதவியாளர் சக்கரபாணி உள்ளிட்டோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், தேர்ச்சி நிலை  67 சதவிகிதமாகக் குறைந்தது. இதனைத் தொடர்ந்து அப்போது இருந்த தி.மு.க. அரசு முதன்மைக் கல்வி அலுவலர் கந்தசாமியைத் தூத்துக்குடிக்கும், நேர்முக உதவியாளர் சக்கரபாணியை ராமநாதபுரத்துக்கும் தூக்கி அடித்தது. மற்றவர்களை ஒட்டப்பிடாரத்துக்கும், நாமக்கல்லுக்கும் இடமாற்றம் செய்து பழி தீர்த்துக்கொண்டது!

 இது யார் தவறு?

திருவாரூர் மாவட்டம் விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கௌசிகன் மதிய உணவு இடைவேளையின்போது பீர் பாட்டில்கள் வாங்கிக்கொண்டு சைக்கிளில் செல்லும்போது, அந்த பாட்டில்கள் வெடித்துச் சிதறி மாண்டு போயுள்ளான். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதெல்லாம்

1 லிட்டர், 2 லிட்டர் என பிளாஸ்டிக் பாட்டில்களில் கோக், பெப்ஸி ஆகியவை வராத காலம் என்று நினைக்கிறேன். கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு 300 மி.லி. பெப்ஸி பாட்டில்களை 10-க்கு மேல் குடித்தவுடன், ஓர் மாணவர் மயங்கி விழுந்து இறந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.

வலையோசை - மு.சிவகுருநாதன்

நமது உடலில் ரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு குறிப்பிட்ட அளவைவிட தாண்டக்கூடாது என்ற பாலபாடம்கூட கல்லூரி மாணவர்களுக்குத் தெரியாமல் போனதுதான் வேதனை. நம்முடைய கல்வி முறை ஏட்டுக் கல்வியையும் நடைமுறை வாழ்க்கையையும் இணைக்காமல் போனதும் ஒரு காரணம்.

இதைப் போலவே சோடா, பீர் போன்ற பானங்களில் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிக அழுத்தத்தில் இருக்கும் என்பது தெரியாமல் போனது ஏன்? கிரிக்கெட் மோகத்துக்கு அடிமையாக இருக்கும் நம்முடைய இளைய சமுதாயம் கிரிக்கெட் மைதானங்களில் பீச்சி அடிக்கப்படும் புட்டிகளுக்கும் அடிமையாக மாறி இருக்கிறது. இவர்களுக்கு ஏன் அவ்வாறு பீய்ச்சி அடிக்கிறது என்பதற்கான அறிவியல் காரணங்கள்தான் எட்டுவது இல்லை!