என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

ஆறுகள் சிறைப் பிடித்த ஊர்!

ஆறுகள் சிறைப் பிடித்த ஊர்!

ஆறுகள் சிறைப் பிடித்த ஊர்!

ழுத்தாளர் உத்தமசோழன், தான் பிறந்து வளர்ந்த ஊரான வெள்ளங்கால் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

ஆறுகள் சிறைப் பிடித்த ஊர்!
##~##

''திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பழம்பாண்டியாறும் புதுப்பாண்டியாறும் நான்குபுறமும் சுற்றிவளைத்து சிறைப்பிடித்து வைத்திருக்கும் சின்னஞ்சிறிய கிராமம்தான் வெள்ளங்கால்.

பனையும் மூங்கில்களும்தான் எங்கள் மரங்கள். நான்குபுற ஆற்றங்கரைகளிலும் காவல் காக்கும் சிப்பாய்களைப்போல, பனை மரங்கள் அணிவகுத்து நிற்கும். சிறுவர்களின் நுங்கு வண்டி முதல், வீட்டுக் கூரை வரை பனை எங்கள் வாழ்க்கையோடு இணைந்தது. சோழ நாட்டின் மையப் பகுதியில் இருந்தாலும் சோழ மன்னர்களின் பாதம் படாதப் பாவப்பட்ட கிராமம் இது. ஒருவேளை அவர்கள் யாராவது ஒருவர் இந்தப் பகுதியில் வந்திருந்தால், நினைவுக்காக ஒரு சின்னக் கோயிலையாவது கட்டி இருப்பார்கள். அதன் மூலம் வெளியுலக வெளிச்சம் சிறிதளவேனும் விழுந்திருக்கும். பிற்காலத்தில் நாங்களே மழை தருவதற்காக ஒரு மாரியம்மன் கோயிலையும், நோய் நொடி வராமல் காப்பாற்ற காளியம்மன் கோயிலையும் கட்டிக்கொண்டோம்.  

மொத்த ஊரையும் காக்கிறார் அய்யனார். 'எனக்கு யாரும் கோயில் கட்டக்கூடாது’ என, எங்கள் கிராமத்து மனிதர் ஒருவரின் கனவில் அய்யனார் சொன்னாராம். அதனால் கட்டடம் இல்லாத ஆலமரத்தடிதான் இன்றுவரை அய்யனார் கோயில்! பூஜைக் காலங்களில் அங்கே ஈர மண்ணை முட்டுக் கட்டி அதையே அய்யனாராக்கி, அதற்கு அபிஷேக ஆராதனை செய்வோம். சித்திரை முதல் நாள் காப்புக் கட்டி, 10-ம் நாள் திருவிழா முடியும். வேண்டிக்கொண்டவர்கள் புதிய மண் குதிரைகளை முன்னிரவு நேரத்தில் கொண்டுவருவார்கள். அப்போது யாரும் குறுக்கே வரக்கூடாது.

திருவிழா என்றாலே, இரவு களைகட்டும் நாடகங்கள்தான் ஸ்பெஷல்! சுற்றுப்புற மக்களை எல்லாம் ஒரே இடத்தில் காணலாம். வழக்கமாகப் புதுக்கோட்டையில் இருந்தே நாடக கம்பெனிகள் வரும். பவளக்கொடி, வள்ளித் திருமணம் ஆகியவை ரொம்பவே பிரபலம்.

ஊர் முழுக்கச் சிறியதும் பெரியதுமாக, 14 குளங்கள் உண்டு. நீர்த் தேங்கும் காலங்களில் குளம் மணக்கச் செவ்வல்லி, வெள்ளை அல்லி, செந்தாமரை, வெண்தாமரை பூத்திருக்கும். பின்னிக்கிடக்கும் அல்லிக் கொடிகளையும், முள்ளாய்க் குத்தும் தாமரைக் கொடிகளையும் லாகவமாகத் தாண்டி நீச்சல் அடிப்போம். தாமரையின் இதழ்களை விலக்கி உள் இருக்கும் மொட்டைச் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக் கும். பின்னர் அல்லித் தண்டுகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு வானத்துத் தேவதைகள் போலச் சுற்றிவருவோம்.  

ஊரில் பள்ளிக்கூடம் இல்லை. அதனால் புத்தகப் பைகளோடு இரண்டு கி.மீ தொலைவில் உள்ள இடையூருக்கு வயல் வரப்புகளில் நடந்தே செல்வோம். இடையில் ஆற்றையும் மூன்று வாய்க்காலையும் கடந்து போகவேண்டும். ஆற்றில் தண்ணீர்வரும் காலத்தில் புத்தகப் பையை சட்டையில்வைத்துச் சுற்றி தலையில் வைத்துக்கொண்டு, நீச்சல் அடித்துச் செல்வோம். பள்ளிக்கூடம் போவதற்குள் கால்சட்டை காய்ந்துவிடும்!

பள்ளிக்கூடம்விட்டு வந்ததும், நேராக நாங்கள் செல்லும் இடம் நமசி தாத்தா வீடு. அவ்வளவு கதைகள் சொல்வார். நரி பேசும்; கிளி உதவும் என மிருகங்களை எங்களுக்கு நண்பர்கள் ஆக்கியது நமசி தாத்தாதான். வெளி உலகைப்போல அசாதாரண மாற்றங்களை இன்னும் சந்திக்கவில்லை, எங்கள் ஊர் வெள்ளங்கால்!''

ஆறுகள் சிறைப் பிடித்த ஊர்!

- சி.சுரேஷ்,
படங்கள்: கே.குணசீலன்