என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

உடம்புக்குக் குளிர்ச்சி பிரம்பு!

Trichy
News
Trichy

உடம்புக்குக் குளிர்ச்சி பிரம்பு!

கொளுத்தும் வெயிலின் தாக்கத்தைத் தணித்துக்கொள்ள மக்கள் குளிர்ச்சியான இடங்களையும் பொருட்களையும் தேடிக்கொண்டு இருக்க, ''தஞ்சை சுத்துவட்டார மக்கள் குளிர்ச்சிக்காகப் பிரம்பினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்க, சீர்காழிக்குப் பக்கத்துல இருக்கிற தைக்காலுக்கு வர்றாங்க''- என்று புதுத் தகவலை வாய்ஸ் ஸ்நாப்பில் சொல்லி இருந்தார் நம் வாசகர் முத்து குமார்.

உடம்புக்குக் குளிர்ச்சி பிரம்பு!
##~##

தைக்காலில் அப்படி என்ன விசேஷம் என்று விசிட் அடித்தேன். மூன்று தலைமுறைகளாகப் பிரம்புப் பொருட்களைத் தயாரித்துவரும் முகம்மது அப்பாஸ் வீட்டில் நுழைந்தேன். மதிய வெயில் கொளுத்தி எடுக்க, பரபரவென பிரம்புக் கைவினைப் பொருட்கள் தயாராகிக்கொண்டு இருக்கின்றன. வீட்டின் முற்றத்தில் பிரம்பைச் சூடு காட்டி ஒரு டீம் வளைத்துக்கொண்டு இருக்க, அந்தப் பிரம்புகளை வரிசைப்படுத்தி இறுக்கிக்கட்டி ஆணி அடிக்கும் பணி, வீட்டின் மாடியில் நடந்துகொண்டு இருக்கிறது. முழு உருவம் பெற்ற பிரம்புப் பொருட்களை, உப்புத்தாள் மூலம் வளவளப்பாகத் தேய்த்து, வார்னிஷ் அடித்துக்கொண்டு இருந்தது இன்னொரு டீம்.  

வாடிக்கையாளரிடம் பேரம் பேசிவிட்டுத் திரும்பிய அப்பாஸ், ''பக்கத்துல ஓடுற கொள்ளிடம் ஆற்றின் நீர் வளத்தால, இங்கே ஒரு காலத்துல பிரம்புக் கொடி தானாவே வளர்ந்திருக்கு. இங்க விளையுற மெல்லிய பிரம்புக் கொடியவெச்சு எங்க தாத்தா 1905-ல் பிரம்புத் தொழிலை தொடங்கிட்டார். தாத்தாவுக்கு அடுத்து எங்க அப்பாவும் பிரம்புத் தொழில் செஞ்சாங்க. அது என் தலைமுறைக்கும் தொடருது.

எங்க தாத்தா, அப்பா எல்லாரும் மெல்லிய பிரம்புக் கொடியவெச்சுதான் ஜாடி, கூடை, முறம், அர்ச்சனைத் தட்டு, நெல் மற்றும் உளுந்து விதைக்கும் பெரிய கூடை எல்லாம் செஞ்சாங்க. ஆனா, இப்ப மக்களோட வாழ்க்கை முறை மாறிட்டதால, விதவிதமாகப் பொருட்களை எதிர்பார்க்குறாங்க. அவங்க விரும்புற வகையில் பொருட்கள் செய்யணும்னா, இங்கு விளையுற மெல்லிய பிரம்பு பயன்படாது. ஏன்னா மெல்லிய பிரம்பு, ரொம்ப வளைஞ்சுக் கொடுக்காது. அதனால கடினமான, தரமான பிரம்புகளை பீகார்ல இருந்து இறக்குமதி செய்யுறோம். பிரம்பைவெச்சு 30-க்கும் மேற்பட்ட பொருட்கள் செய்யுறோம்.

உடம்புக்குக் குளிர்ச்சி பிரம்பு!

பிரம்பு ரொம்பக் குளுமை தரும். இதுல உட்கார்ந்தாலோ, படுத்தாலோ உடம்புச் சூடு தணியும். நாங்க செய்யுற பொருட்களுக்கு கலர் கொடுக்குறது இல்ல. இயற்கையான நிறத்துலேயேதான் விற்பனை செய்யுறோம். அதனாலேயோ என்னவோ... யாரும் பேரம் பேசாம சொல்ற விலைக்கு வாங்கிட்டுப் போறாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தவர்கூட, எங்க அப்பா காலத்துல இருந்தே எங்களுக்குப் பழக்கம். அவர் மகன் புது வீடு கட்டினப்பகூட எங்கக்கிட்ட வாங்கின பிரம்புப் பொருட்களைக் கொண்டுதான் வீட்டை அலங்கரிச்சார். இப்ப அவர் மகனுக்குக் குழந்தைப் பொறந்து இருக்கு. பேரக் குழந்தைக்காகத் தொட்டில் வாங்கிட்டுப் போறார்'' என்றபடியே அடுத்த வாடிக்கையாளரை எதிர்கொள்ள தயார் ஆகிறார் முகம்மது அப்பாஸ். கரன்டே இல்லாத வீட்டில் ஏ.சி. வைத்துக்கொண்டு இருப்பதைவிட, பிரம்புப் பொருட்களை வாங்கிக் கோடையில் குளிர்ச்சிப் பெறுவது நல்ல விஷயம்தானே!  

உடம்புக்குக் குளிர்ச்சி பிரம்பு!

- மா.நந்தினி
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்