என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

”கண்ணாமூச்சி ரே... ரே!”

இது காவிரி கலகல

லைக்கோட்டைக்கு அடுத்து திருச்சியின் மிகப் பெரிய லேண்ட் மார்க்... அகன்ற காவிரி ஆறு. ரூம் போட்டு யோசித்தார்களோ என்னவோ... காவிரி ஆற்றை இப்போது 'பீச்’ ஆக மாற்றிவிட்டார்கள்!

”கண்ணாமூச்சி ரே... ரே!”
##~##

காவிரி ஆற்றின் வடக்குக் கரையில் ஃபோகஸ் லைட்டுகள், டியூப் லைட்டுகள் ஆகியவற்றை மாநகராட்சி அமைத்துக்கொடுக்க... குழந்தைகளோடு மாலை நேரங்களில் காவிரி ஆற்றின் 'சம்மர் பீச்’சில் மக்கள் ஆஜராகிவிடுகிறார்கள்.

அலைதான் இல்லை. ஆனால், அலை அலையாக மக்கள் கூட்டம் இருக்கிறது. கடலை, மிளகாய் பஜ்ஜி, மாங்காய், சுண்டல் என உணவுப் பொட்டலங்களோடு குடும்பம் குடும்பமாக உட்கார்ந்திருக்கிறார்கள் மக்கள். மாலை 6 மணிக்கு எல்லாம் கூடிவிடும் கூட்டம் கலைய, இரவு 11 மணி ஆகிறது. மெரீனா பீச்சைப் போலவே காதல் ஜோடிகளின் லூட்டிகளும் ஆங்காங்கே தலைகாட்டுகின்றன!

பெரியவர்கள் கதைப் பேச... குட்டீஸ்கள் மணலில் கோபுரம் செய்தும், கிச்சுக் கிச்சுத் தாம்பலம் (இன்னும் இந்த விளையாட்டு இருக்குதுங்க!), கண்ணாமூச்சி எனப் பல விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். சில இடங்களில் பெற்றோரும் சேர்ந்து கண்ணாமூச்சி ஆட... ஒரு மினி விக்ரமன் படம் பார்த்த உணர்வு!

இளைஞர்களோ... ஆற்றுக்குள்ளேயே டே நைட் 20-20 மேட்ச், கபடி, த்ரோ பால் என ஆட்டம்போடுகிறார்கள். இது ஒருபுறம் என்றால், கொஞ்சம் தள்ளி ஆற்றுக்குள்ளே மினி ரயில் ஓடுகிறது.

திருச்சிக்குப் புதுசு என்பதால், 'துப்பாக்கியால் பலூன் சுடுதல்’ விளையாட்டுக்குத்தான் ஏகபோக வரவேற்பு. புதிதாகத் திருமணமான கணவர் ஒருவர் துப்பாக்கியைத் தோளில் சாய்த்து டெரர் ஃபேஸ் லுக்குடன் குறிபார்க்க, இரு கைகளையும் குவித்து நெஞ்சில் வைத்துக்கொண்டு குலதெய்வத்தை வேண்டுகிறார் அந்தப் புது மனைவி. எல்லாக் குண்டுக்கும் பலூன் தப்பிக்க... கணவன் முகத்தில் கலவரம். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், ''பலூன்காரர் ஏதோ ஏமாத்துறாரு'' என முகம்சுளித்து கணவரைக் காப்பாற்றி அழைத்துச்செல்கிறார் அந்த அன்பு மனைவி.  

”கண்ணாமூச்சி ரே... ரே!”

பீச் முழுவதும் தள்ளுவண்டிக் கடைகள், பளிச் விளக்குகள் எனத் திருவிழா எஃபெக் டில் இருக்கிறது. ''பீச்னு சொல்றாங்களே... என்னன்னு பார்க்கலாம்னு குடும்பத்தோட வந்தேன். சும்மாச் சொல்லக்கூடாது சார். சூப்பரா ஏற்பாடுகளை செஞ்சு இருக்காங்க. திரும்பத் திரும்ப வரணும்னு ஆசையா இருக்கு!'' -சந்தோஷம் பொங்கச் சொல்கிறார் குழந்தைகளோடு மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டு இருந்த ராமன்.

”கண்ணாமூச்சி ரே... ரே!”

பேசிக்கொண்டே நகர்ந்தால் பின்னால் இருந்து ஒரு குரல்... ''அங்கிள்... கொஞ்சம் தள்ளிப் போங்க. இங்க நாங்க கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருக்கோம்!'' -இடுப்பில் கைவைத்து ஆர்டர் போட்டுவிட்டு, ''அஜய், பால் போடுடா!'' என பேட்டிங் செய்ய ஆரம்பிக்கிறாள் ஒரு சிறுமி.

காவிரியின் தென் கரையில் நீரோட்டம் இருப்பதால், சிலு சிலுவென காற்று முகத்தில் அறைகிறது. திடலின் ஒரு மூலையில் மைக் செட், ஸ்பீக்கர் கட்டி 'அன்றாட வாழ்வில் யோகா’ என 10,15 பேர் யோகா செய்துகொண்டு இருக்கிறார்கள்.

கையில் ஒரு சுண்டல் பாக்கெட்டுடன் காவிரி பீச்சுக்குள் இறங்கினால், நிறைய சந்தோஷமும் நிம்மதியும் வாங்கி வரலாம்!

”கண்ணாமூச்சி ரே... ரே!”

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ப்ரீத்தி’ கார்த்திக், ஜெ.வேங்கடராஜ்