உறவுகளின் உற்சவம்!
தஞ்சையின் பிரபல ஹோட்டல் அது. அந்த அறையில் கிட்டத்தட்ட 50 பேர் அமர்ந்து இருக்கிறார்கள். ''உங்க ளோட சின்ன வயசுக் குறும்பு ஒண்ணைச் சொல்லுங்க பெரியப்பா!''- என்று 80 வயது பெரியவரிடம் மைக் கொடுக்கப்படுகிறது. சிறுவயது குறும்பைச் சொல்ல ஆரம்பிக்கும் அவர், தன்னுடைய பால்ய நண்பனின் நினைவுவந்து கண்கலங்குகிறார். அந்தச் சம்பவத்தைச் சொல்லிவிட்டு, குழந்தையைப் போலச் சிரிக்கிறார். சென்னையைச் சேர்ந்த மகிழவல்லி உஷா ஏற்பாடு செய்திருந்த, 'உறவுகளின் உற்சவம்’ நிகழ்ச்சியில்தான் அந்த நெகிழ்வான காட்சி!
##~## |
அதென்ன உறவுகளின் உற்சவம்? என்கிற கேள்விக்குப் பதில் சொல்கிறார் மகிழவல்லி.
''எங்க தாத்தா கோவை.இளஞ்சேரன், அடிக்கடி என்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்வார். 'இந்த இயந்திர வாழ்க்கைல நம்ம உறவுகளை ரொம்பவே இழக்கிறோம். சொந்தக்காரங்களோட வீட்டு விசேஷத்துக்குக்கூடப் போகமாட் டேங்குறோம். ஒண்ணு, ரெண்டுனு குழந்தைகளோட எண்ணிக்கைக் குறைஞ்சதால, சொந்தங்களும் சுருங்கிப் போயிருச்சு. உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்கிறதைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கணும்மா!''னு வருத்தப்படுவார்.
1999-ம் ஆண்டு அவர் இறந்ததுக்குப் பிறகு அந்த வார்த்தைகள் என் மனசுல எதிரொலிச்சுக்கிட்டே இருந்துச்சு. அதனால, சொந்தக்காரங்கக்கிட்டப் பேசி முடிவு பண்ணியதுதான் இந்த 'உறவுகளின் உற்சவம்’. 'வருஷத்துல ஒருநாள் எல்லா உறவினர்களும் ஒண்ணாச் சேர்ந்து கலந்துப் பேசணும்; பெரியவர்கள்ல இருந்து குழந்தைகள் வரைக்கும் எல்லாரும் அவங்களோட அனுபவங்களைப் பகிர்ந்துக்கணும்’னு முடிவு பண்ணினோம். முதல் வருஷம் சென்னையிலயும், ரெண்டாவது வருஷம் பெங்களூருவுலயும் நடத்தினோம். மூணாவது வருஷ உற்சவத்தைத் தஞ்சாவூர்ல நடத்துறோம்.
இந்த நிகழ்ச்சியோட திட்டம் முழுவதும் உறவுகளுக்கு மரியாதையும் முக்கியத்துவமும் தர்ற மாதிரியே இருக்கும். சின்னப் பசங்களுக்கு யாரு சித்தி, யாரு அத்தைனுகூட தெரியல. எல்லாரையும் அங்கிள், ஆன்ட்டினு கூப்பிட்டுப் பழகிடறாங்க. அதனால அவங்களுக்கு உறவுகளை முக்கியமாக் கத்துக்கொடுக்கிறோம். விதவிதமான போட்டிகள் நடத்துறோம். முக்கியமான கண்டிஷன்... யாரும் மீட்டிங் ஹாலைவிட்டு வெளியே போகக்கூடாது. வெளியூர்ல இருந்து வந்தவங்க ஊரைச் சுத்திப் பார்க்கணும்னா மறுநாள் போகலாம். விழா நடக்கிற இந்த நாள் முழுக்க இங்கேதான் இருக்கணும்.
இந்த ஒருநாள் நிகழ்ச்சிக்காக அஞ்சு மாசத்துக்கு முன்னாடியே திட்டம் போட்டு ஒருங்கிணைக்க ஆரம்பிச்சிருவேன். இங்கே மொத்தம் 15 குடும்பங்கள் இருக்காங்க. சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் குடும்பத்துக்குள்ளேயும், உறவுகளுக்குள்ளேயும் வர்றது சகஜம். ஆனா இங்கே வர்றதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் மறந்துடச் சொல்லிடுவேன். சொன்னா நம்பமாட்டீங்க... வயசானவங்க எந்த அளவுக்கு இதை விரும்புறாங்களோ, அதே அளவுக்குச் சின்னப் பசங்களும் விரும்பி சந்தோஷப்படுவாங்க.
இதைப் பத்திக் கேள்விப்பட்ட வெளிநாட்டுல இருக்கிற எங்க சொந்தக்காரங்க, அவங்களும் கலந்துக்கணும்னு ஆசைப்படறாங்க. கடவுள் கருணை இருந்தா... அடுத்த வருஷம் கண்டிப்பா அவங்களும் வருவாங்க. இங்கே வர்ற எல்லாரோட பிறந்தநாள், திருமண நாட்களின் தேதிகளை வாங்கி வெச்சுக்கிட்டு, அந்த நாட்களில் அவங்களுக்கு வாழ்த்துச் சொல்லி சந்தோஷப்படுத்துறோம். இதைக் கேள்விப்பட்ட எங்க நண்பர்களும் இது மாதிரியே ஏற்பாடு பண்ணப்போறதாச் சொல்லி இருக்காங்க.
நாம் எல்லாருமே பணத்தைக் குறிவெச்சுதான் ஓடுறோம். அது தப்பில்லை. ஆனா நம்ம உடம்புக்கு முடியலைனா வெறுமனே மருந்து, மாத்திரைச் சாப்பிட்டாப் பத்தாது. ஆறுதல் சொல்ல நாலு உறவினர்கள் இருந்தாத்தான் சீக்கிரம் குணமாவோம். அதற்கான முயற்சிதான் இது!'' என்கிறார் மகிழவல்லி.
சொந்தக்காரர்களின் செல்போன் எண்ணையே தெரியாதவர்கள் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இதைப்போன்ற முயற்சிகள்தான் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்!
-க.ராஜீவ்காந்தி,
படங்கள்: கே.குணசீலன்