Published:Updated:

சத்து நம் சொத்து !

தாரிணி கிருஷ்ணன்

##~##

'ஊண் மிக விரும்பு’ என்றான் பாரதி. அதாவது, உணவை உண்ண விருப்பம்கொள்ள வேண்டும்.  உணவின் மீது எப்போது விருப்பம் வரும்? அம்மா சுவையாகச் சமைத்தால் வரும். சரி, சுவையோடு சத்தும் தேவை அல்லவா? சுட்டிகளின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் உணவு முறை பற்றி இதழ்தோறும் பார்ப்போம். முதலில், ஐந்தாம் வகுப்பு வரையிலான சுட்டிகளுக்கு உரிய சரியான உணவுப் பழக்கத்தை அறிவோம்.

'நாம இப்ப குட்டிப் பாப்பா கிடையாது; சுட்டிப் பாப்பா.’ அதனால், நமக்கு என்று தனியாகச் சமைக்க வேண்டியது  இல்லை. வீட்டில் பெரியவர்களுக்கு என்ன சமைக்கிறார்களோ அதையே தாராளமாகப் பரிமாறலாம்.

காலையில்...

காலை 8.30 மணி அளவில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய சுட்டிகள், 6.30 மணிக்கு எழுந்து காலைக் கடமைகளை முடித்துவிட்டு, ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். 'பஸ்ஸுக்கு லேட் ஆயிருச்சே’, 'ஆட்டோ பிடிக்கணும்', 'அப்பாவுக்கு நேரமாச்சு’ எனக் காரணங்களைச் சொல்லி, எதுவும் சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்லக் கூடாது.  இரண்டு இட்லி, ஒரு தோசை, கொஞ்சம் சாதம்... இப்படி எந்தவிதமான உணவாவது தேவையான அளவில் சாப்பிட்டுவிட்டுதான் புத்தகப் பையைத் தோளில் ஏற்ற வேண்டும். இரண்டு அல்லது மூன்று துண்டு பழங்களாவது அவசியம் சாப்பிட வேண்டும்.

சத்து நம் சொத்து !
சத்து நம் சொத்து !

மதிய டிபன் பாக்ஸில்...

'என்றைக்காவது ஒரு நாள், அவசரத்துக்கு தயிர் சாதமோ, புளி சாதமோ, எலுமிச்சை சாதமோ கொடுத்தால் பரவாயில்லை. தினமும் டிபன் பாக்ஸில் ஒரேவித ரைஸ் இருந்தால்..?’ இந்தக் கொடுமையை எதிர்த்து, சுட்டிகள் உண்ணும் விரதப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தப்பு இல்லை. விதவிதமான காய்கறிகள், பருப்பு வகைகள், கிழங்குகள் கட்டாயம் இருக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குக் கீரை சேர்க்க வேண்டும். அசைவம் விரும்புவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு நான்-வெஜ் வெரைட்டி தருவதும் நல்லது.  குழந்தை எவ்வளவு சாப்பிடும் என அம்மாவுக்குத் தெரியாதா என்ன? சுட்டிகளின் உடம்புக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற அளவு தரலாம்.

வீட்டுக்கு வந்தவுடன்...

'ஒரு நாளைக்கு மூணு வேளை மட்டும் சாப்பிடணும்' என்ற கட்டுப்பாடு, பெரியவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். சுட்டிகளுக்குக் கிடையாது. ஸ்கூல்விட்டு வீட்டுக்கு வந்த அந்தத் தருணம்... கண்டிப்பாக வயிற்றுக்குத் தீனிபோட வேண்டும். மாலையில் சிறப்பு வகுப்புகள், உடற்பயிற்சி, விளையாட்டு என வெவ்வேறு வேலைகள் உள்ள சுட்டிகள், கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு தங்கள் வேலைகளை முடித்தவுடன் முழுமையாகச் சாப்பிட வேண்டும். நேராக வீட்டுக்கு வருபவர்கள் மதிய உணவுக்காக சமைக்கப்பட்டதை ஒரு பிடி பிடிக்கலாம். அப்படிச் சாப்பிட முடியாதவர்கள் காய்கறிகள், பருப்பு வகைகளுடன் கூடிய டிபன் சாப்பிடலாம்.

இரவில்...

9 மணி அளவில் படுக்கைக்குச் செல்வது நல்லது.  7.30 மணி அளவில் இரவு உணவு சாப்பிட வேண்டும். பெரும்பாலான சுட்டிகள் இரவு உணவைச் சரிவர சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கு எப்படியாவது உணவைக் கொடுக்க வேண்டும். இரவு டிபனுடன் காய்கறிகள் மிகுதியாகச்  சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எல்லாவிதமான உணவுப் பொருட்களையும் சுட்டிகள் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வளரும் சுட்டிகளின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற நல்ல உணவுப் பழக்கம் வரும்.  

(பசித்திருப்போம்...)

தவிர்க்கக் கூடாதவை...

தினமும்: 3 கப் பால், பருப்பு வகை அரை கப் (இரண்டு முறை), காய்கறிகள் அரை கப் (இரண்டு முறை), பழங்கள் - 6 முதல் 8 துண்டுகள். (அரை கப் என்பது 100 கிராமுக்கு சமம்)

வாரம்தோறும்: கீரை (2 அல்லது 3 நாட்கள்), பீன்ஸ் வகைக் காய்கறிகள் (2 அல்லது 3 நாட்கள்), சுண்டல் (2 நாட்கள்), நீர்க் காய்கறி வகை (2 அல்லது 3 நாட்கள்), அசைவ வகைகள் (விருப்பம் எனில் 2 அல்லது 3 நாட்கள்), கிழங்குகள் (3 நாட்கள்).