Published:Updated:

சத்து நம் சொத்து !

டயட்டீஜியன் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் படங்கள் : வீ.சிவக்குமார்

##~##

'ஜில்லுனு ஜூஸ் குடிக்கக் கூடாது’, 'மோர் சேர்த்துக்க வேண்டாம்’, 'தயிர் சாதத்தைத் தொடாதே!’ இப்படி ஏகப்பட்ட தடா உத்தரவுகளை அம்மா போடுவார். இப்போது புரிந்து இருக்குமே... ஆம், குளிர்காலத்தில் சாப்பிடும் விஷயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த இதழில் பார்க்கப் போகிறோம்.

குளிர்காலம் வந்துவிட்டாலே ஜூஸ், மோர், பழங்கள், பூசணி, சுரைக்காய், புடலங்காய் முதலான நீர்க் காய்கறிகளை முற்றிலும் தவிர்க்கும் பழக்கம் பரவலாக இருக்கிறது. இது அவசியமே இல்லாத  பயம். குளிர், பனி காரணமாக உணவு முறையில் மாற்றம் தேவையே இல்லை என்பதை அம்மாக்கள் உணரவேண்டும்.

சிலருக்கு ஜூஸ் அருந்துவதால் பிரச்னை என்றால், இந்த சீஸனில் அதிக அளவில் கிடைக்கக் கூடிய திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள் முதலானவற்றை பழங்களாகச் சாப்பிடலாம்.

மூச்சுத் திணறல் பிரச்னை உள்ள குழந்தைகளை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் பொதுவாகவே மூச்சுப் பிரச்னை அதிகமாகக் காணப்படும். தூசி மிகுதியாக இருப்பது, வானிலை மாற்றம், விளையாட்டின்போது அதிக வியர்வை சுரப்பது போன்றவற்றால் மூச்சிறைப்பு அதிகமாகலாம்.

சத்து நம் சொத்து !

உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும்  மூச்சிறைப்புக் கோளாறுக்கும் பெரிய அளவில் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பெரும்பாலான பெற்றோரும் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள். உதாரணமாக, ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு ஆரஞ்சு சாப்பிட்டால், பிரச்னை ஏற்படுகிறது என்றால், வீட்டில் உள்ள எல்லாருக்குமே ஆரஞ்சுக்குத் தடா போட்டுவிடுவார்கள். இது தவறு. மற்றவர்களுக்குத் தாராளமாக ஆரஞ்சுப் பழத்தைத் தரலாம்.

இப்படி வீட்டில் உள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட உணவைத் தவிர்ப்பதால், குளிர்காலத்தில் போதுமான எதிர்ப்புசக்தி கிடைக்காமல் போகலாம். பால் குடிப்பதால் பிரச்னை என்றால், தயிர் சாப்பிடலாம். தயிரும் கோளாறு செய்கிறது என்றால், மோர் அல்லது சோயா மில்க் சேர்க்கலாம்.

எல்லாக் காலத்திலும் சுட்டிகளுக்கு புரதச் சத்தும், வைட்டமின் சி-யும் மிகவும் முக்கியம். எனவே, புரதச்சத்து மிக்க பருப்பு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும். வைட்டமின் சி-க்கு ஆரஞ்சு, சாத்துக்குடி அல்லது நெல்லிக்காயைத் தரலாம். புளிப்பாக இருக்கிறது என்பதற்காக ,இவற்றைத் தவிர்த்திடக் கூடாது. நெல்லிக்காயை ஊறுகாயாகவோ, சாதத்துடன் கலந்தோ ருசித்துச் சாப்பிடலாம்.

மூச்சிறைப்பு பிரச்னை இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கொஞ்சம் சூடான திரவ உணவை அருந்துவது நல்லது. அது தண்ணீர், பால், சூப் என எதுவாகவும் இருக்கலாம். இரவில் மஞ்சள் பொடி, மிளகு சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான பால் நல்லது.

குளிர்காலம் என்றாலே ஜலதோஷம்தான் தலையாய பிரச்னையாக இருக்கும். இதற்காக உணவுமுறையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் ஏழு நாட்களில் சரியாகிவிடும். அதற்கு மேலும் பிரச்னை என்றால், மருத்துவரை நாடலாம்.

பனி அதிகமாக இருப்பதால், காலையில் பழைய சாதம் சாப்பிட விரும்புவோர் அதைத் தவிர்க்க வேண்டியது இல்லை. தாரளமாகப் பழைய சாதத்தை ஒரு பிடி பிடிக்கலாம்.

அசைவ உணவுகளையும், எண்ணெயில் பொரித்த மற்றும் துரித உணவுகள் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடக் கூடாது.  ஏனென்றால், அவை எளிதில் ஜீரணம் ஆகாது.

இந்த சீஸனில் அடிக்கடி சூடாக சாப்பிடத் தோன்றும். அப்படிச் சாப்பிடும்போது அளவுக்கு அதிகம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது உடல் எடையைக் கூட்டிவிடும். இந்த நொறுக்குத் தீனியிலும் உடலுக்குக் கெடுதலான எண்ணெய் வகைகளைத் தவிருங்கள். சூடான சுண்டல், பொரி, வேர்க்கடலை, உப்புக்கடலை, உலர்ந்த பழங்கள் முதலானவற்றைச் சாப்பிடலாம்.

விடுமுறை நாட்களில் நிறைய நொறுக்குத்தீனிகள் உள்ளே போகக்கூடும் என்பதால், மூன்று வேளை மட்டும் சாப்பிட்டால் போதும். பள்ளி நாட்களில் நான்கு வேளை சாப்பிடலாம்.

குளிர்காலத்தில் அதிகமாகச் சாப்பிடுபவர்கள், விளையாடுவதற்கும் உடற்பயிற்சிக்கும் கூடுதல் நேரத்தை ஒதுக்குங்கள். அப்போதுதான் உடல் உறுதியைப் பேண முடியும்.