உடல் உழைப்பாளிகள் கவனத்துக்கு... மாடல்: அம்மா: பிரேமலதா, மகன்: கோகுல்

##~## |
சுட்டீஸ், உங்களில் எத்தனை பேர் உடல் உழைப்பாளிகளாக இருக்கிறீர்கள்?
'என்ன கேள்வி இது? நாங்கள் பள்ளிக்குச் செல்லும் சுட்டிகள்தானே... எங்களுக்கும் உடல் உழைப்புக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்கத் தோன்றுகிறதா?
பள்ளிக்குச் சில மைல் தூரம் நடந்தே செல்பவர்கள் அல்லது சைக்கிளில் செல்பவர்கள், பேருந்திலோ அல்லது ரயிலிலோ நீண்டநேரம் பயணிப்பவர்கள், மைதானங்களில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விளையாடுபவர்கள், காலையும் மாலையும் பாட்டு, நடனம், நீச்சல், கராத்தே எனப் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்தப் பட்டியலில் ஏதேனும் ஒன்று பொருத்தமாக இருந்தால், நீங்களும் உழைப்பாளிகளே. நீங்கள் சாதாரண உணவுமுறையைப் பின்பற்றினால் நன்மை தராது. உங்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு அவசியம்.
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கு வதற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது புரதச் சத்து. உடல் உழைப்புச் சுட்டிகள், புரதம் மிகுந்த உணவுகளை மிகுதியாக உட்கொள்ள வேண்டும்.
சாமை, தினை, கேழ்வரகு போன்ற தானியங்களில் அபரிமிதமான புரதம் உள்ளது. பருப்பு மற்றும் பயறு வகைகளையும் அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினசரி உணவில் கொண்டைக் கடலை, மொச்சை, பட்டாணி, சுண்டல், பால் அவசியம். அசைவம் சாப்பிடுபவர்கள் எனில், ஆடு மற்றும் கோழி இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளைத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம்.
காலையில் எழுந்தவுடன் சத்துமாவுக் கஞ்சியுடன் பால் கலந்து குடிப்பது, அன்றைய தினத்தின் எனர்ஜிக்கு வழி வகுக்கும்.
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே, ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளைச் சுவைப்பது நல்லது. கைப்பிடி அளவு வேர்க்கடலை, சிறிது பாதாம் பருப்பு, கொஞ்சம் உப்புக்கடலை... இப்படி எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
வீட்டில் இருக்கும்போது விதவிதமான சுவையுடன் சுண்டல் வகைகளைச் செய்து தரச் சொல்லிச் சாப்பிடலாம்.
விருப்பம் எனில் அவித்த முட்டை, முட்டை சாண்ட்விச், ஆம்லெட் சாப்பிடலாம்.

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகு, மாலைப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதற்கு முன்பு, சிறிதளவு டிபன் வகை உணவைச் சாப்பிடலாம். பனீர் அல்லது காய்கறித் தொக்குடன் கூடிய ஒரு சப்பாத்தி, இரண்டு இட்லி, ஒரு குட்டித் தோசை என ஏதாவது ஒரு வகையைச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம்.

மாலைப் பயிற்சி வகுப்புகள் முடிந்து வீட்டுக்குத் திரும்பியதும் வழக்கமான உணவுமுறையைத் தொடரலாம்.
சூரிய ஒளி படும்படியாக அதிக நேரம் இருப்பவர்கள், அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். உள் அரங்குகளில் பயிற்சி செய்பவர்கள், தேவையானபோது தண்ணீர் குடித்தால் போதும்.
தினமும் அதிகமான உடல் உழைப்புக்கு ஆளாகும் மாணவர்கள், அளவில் குறைவாக இருப்பினும், கலோரி மிகுந்த உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.
எந்த நேரமும் ஓடியாடி வேலை செய்யும் நம்மில் பலருக்கு சாப்பிடவே தோன்றாது. ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் உணவைத் தவிர்க்கக் கூடாது. சரியான நேரத்தில் தேவையான உணவைச் சாப்பிடவேண்டும்.
சாப்பிடும் விஷயத்தில் இந்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றினால், சோர்வு இன்றி எல்லா வேலைகளையும் ஜாலியாகச் செய்வதுடன், உடல் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.