Published:Updated:

சத்து நம் சொத்து !

டயட்டீஜியன் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் ,கே.குணசீலன் மாடல்: அம்மா: சித்ரா, மகள்: அபிநயாஸ்ரீ

##~##

இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்னைகளுள் ஒன்று, 'ஊட்டச்சத்து குறைபாடு’. குறிப்பாக, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வாழும் சுட்டிகளில் பெரும்பாலானவர்கள் இந்தப் பிரச்னைக்கு ஆளாகின்றனர். இதற்கு, சத்துமிக்க உணவுகளைப் போதுமான அளவில் உட்கொள்ளாததே காரணம்.

மெலிந்த தேகத்துடன் காணப்படும் சுட்டிகள் ஆரோக்கியம் பெற, பெற்றோர் கவனத்தில்கொள்ள வேண்டிய 10 கட்டளைகள்...

1. பள்ளி செல்லும் அனைத்து மாணவர்களும் தினமும் தவறாமல் நான்கு வேளை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒல்லிச் சுட்டிகள், உண்ணும் உணவின் அளவு சற்றுக் கூடுதலாகவும், கலோரியின் அளவு  மிகுதியாகவும் இருக்க வேண்டும்.

2. அன்றாட உணவில் எண்ணெய்ப் பயன்பாட்டை இயன்றவரை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால், உடல் மெலிந்த சுட்டிகளுக்கு இது பொருந்தாது. உணவில் சிறிது கூடுதலாக எண்ணெய் சேர்ப்பது நல்லது. இது கொழுப்புச் சத்துக்கு அவசியம்.

3. காலை எழுந்ததும் பாலுக்குப் பதிலாக கஞ்சியை உட்கொள்ளலாம். கேழ்வரகு  கலந்த சத்து மாவையும் சாப்பிடலாம். பால் அருந்த விரும்புபவர்கள் கொழுப்புச் சத்து மிகுந்த பாலையே அருந்தவும்.

சத்து நம் சொத்து !

4. சாப்பிடும் உணவில் நெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், உலர்ந்த பழங்கள், வேர்க்கடலை முதலானவை  இருக்கவேண்டும். காலை மற்றும் மதிய உணவுக்கு இடையில் சாப்பிடுவதற்கு, ஆரோக்கியம் தரும் பலகாரங்களைக் கொடுத்து அனுப்பலாம்.

5. தற்போதைய சூழலில் ஓட்ஸ் சாப்பிடுவது ஃபேஷனாகவே ஆகிவிட்டது. 'உடல் எடையைக் குறைக்கவே ஓட்ஸ் சாப்பிடுகிறேன்’ என்று சொல்வார்கள். இதே ஓட்ஸை கொஞ்சம் கூடுதலாக உட்கொண்டால், உடல் எடைக் கூடும்.  

6. ஒவ்வொரு வேளை உணவிலும் எல்லாவிதமான காய்கறிகளும் இடம்பெற்று இருக்கவேண்டும். அந்தக் காய்கறிகளைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். குறிப்பாக உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு முதலான கிழங்கு வகைகளை ஒரு பிடி பிடிக்கலாம். காய்கறிகளைத் தவிர்க்கும் சுட்டிகளுக்கு, அவற்றைச் சுவை மிகுந்த வகைகளில் அம்மா சமைத்துக் கொடுக்கலாம்.

7. அன்றாட உணவில் பால் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். கீரை வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் எனில், அவ்வப்போது முட்டை, இறைச்சி, மீன் முதலானவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

8. மதிய உணவுக்கு தக்காளி சாதம், புளிசாதம், லெமன்சாதம் என வெரைட்டிச் சாதங்களைத் தரலாம். அவற்றில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் இருப்பது நல்லது. மேலும், தொட்டுக்கொள்வதற்கு சுண்டல், பருப்பு வகைகளைக் கொடுப்பதும் அவசியம். அப்போதுதான் அவர்களுக்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கும்.

சத்து நம் சொத்து !

9. உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னும், உடற்பயிற்சி செய்த பின்னும் கண்டிப்பாக போதுமான அளவு சாப்பிட வேண்டும். சாயங்கால வேளைகளில் பழங்கள், பால், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றை வயிற்றுக்கு தரலாம்.

10. நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான ஒன்று, 'எந்தக் காரணத்தைக்கொண்டும் உணவைத் தவிர்க்கக் கூடாது. சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.’

'இந்த 10 கட்டளைகளையும் எங்கள் வீட்டில் சரியாகப் பின்பற்றப்படுகிறது. அப்படி இருந்தும் எங்கள் வீட்டுச் சுட்டி இன்னும் சதைபோடவில்லையே’ என்கிறீர்களா? நீங்கள் தரும் உணவின் தரமும் அளவும் சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள். உள்ளது எனில், உங்கள் வீட்டுச் சுட்டியின் உடல் உறுதியாகவே இருக்கிறது.