தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

தயிர் உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
தயிர் உணவுகள்

இளவரசி வெற்றி வேந்தன்

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

தயிர் ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி

தேவை: தயிர் - ஒரு கப், ஸ்ட்ராபெர்ரி - 4 அல்லது 5 பழங்கள், தேன் - 3 டீஸ்பூன்.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: தயிர், ஸ்ட்ராபெர்ரி, தேன் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்துச் சில்லென்று பரிமாறவும்.

குறிப்பு: தேனுக்குப் பதிலாக சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர் தக்காளிச் சட்னி

தேவை: தக்காளி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 5, புளிக்காத தயிர் – கால் கப், கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியைச் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கி இறக்கவும். பின்னர் வதக்கிய இந்தத் தக்காளிக் கலவையுடன் தயிர், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.மறுபடியும் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, அதைச் சட்னியில் சேர்க்கவும். வித்தியாசமான தயிர் தக்காளிச் சட்னி தயார்.

தயிர் தேங்காய்ச் சட்னி

தேவை: தேங்காய்த் துருவல் - கால் கப், கெட்டித் தயிர் – கால் கப், பச்சை மிளகாய் – 3, கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, இஞ்சித் துருவல் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், உப்பு, தயிர், இஞ்சித் துருவல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து அதைச் சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.

தயிர் அவல் தோசை

தேவை: இட்லி அரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெந்தயம் – கால் டீஸ்பூன், அவல் - ஒரு கப், தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும். மாவு பாதி அரைந்ததும் அதனுடன் அவல், தயிர் சேர்த்து நன்கு வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும். பிறகு மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் எண்ணெய்விட்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்கவும். விருப்பமான சட்னி, சாம்பாருடன் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: தயிர் அவல் தோசை மிகவும் மிருதுவாக இருக்கும். அதேபோல நிலவுகின்ற வெப்ப நிலையைப் பொறுத்து மாவு புளிக்கும் நேரமும் சிறிது மாறுபடும்.

தயிர் உருளைக்கிழங்கு மசாலா

தேவை: பெரிய உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்துத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்), தயிர் - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், கஸூரி மேத்தி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும். பிறகு வதக்கிய இக்கலவையுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தயிர் சேர்க்கவும். தயிர் நன்றாக ஒன்றுசேரும் வரை அடுப்பைக் குறைவான தீயில்வைத்து கலவையைத் தொடர்ந்து கிளறவும். பின்னர் இதனுடன் தேவையான உப்பு சேர்த்து கூடவே வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்க்கவும். கலவையை நன்றாகக் கலந்து, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு கரம் மசாலாத்தூள், கஸூரி மேத்தி மற்றும் கொத்தமல்லியை கலவையில் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: சூடான சாதம் மற்றும் ரொட்டிக்கு இந்த தயிர் உருளைக்கிழங்கு மசாலா மிகவும் பொருத்தமாக இருக்கும்.

தஹி பைகன்

தேவை: நடுத்தர அளவிலான கத்திரிக்காய் – 6, சீரகம் – ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை – ஒன்று, பெருங்காயம் – ஒரு சிட்டிகை, வெங்காயம் – ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், கெட்டி தயிர் – ஒரு கப், கஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: கத்திரிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து முக்கால் பதமாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய்விட்டு சூடாக்கி சீரகம், பிரியாணி இலை, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். பின்னர் கடலை மாவு சேர்த்து ஐந்து நிமிடங்கள் குறைந்த தீயில் வதக்கவும். பிறகு இக்கலவையுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர் இக்கலவையுடன் அரை கப் தண்ணீர், ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை அனைத்தும் ஒன்றுபோலச் சேரும்போது அதனுடன் வதக்கி வைத்த கத்திரிக்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு கலவையை மூடி ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். பின்னர் இதில் கஸூரி மேத்தி மற்றும் கொத்தமல்லியைச் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: தஹி பைகன் சப்பாத்தி, குல்சாவுடன் சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும்.

தயிர் வெஜ் சாலட்

தேவை: முட்டைகோஸ் - கால் கப், கேரட் - கால் கப், பீன்ஸ் – கால் கப், குடமிளகாய் - பாதி அளவு, கெட்டி தயிர் – ஒரு கப், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: காய்கறிகளைச் சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் தேவையான உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில்வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வதக்கி எடுத்து ஆற வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் காய்கறிகள் மற்றும் தயிரைச் சேர்க்கவும். பிறகு இதனுடன் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பின்னர் பரிமாறவும்.

தயிர் சப்பாத்தி

தேவை: கோதுமை மாவு – ஒரு கப், தயிர் - தேவையான அளவு, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - 2 சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: கோதுமை மாவில் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின்னர் தண்ணீருக்குப் பதிலாக தேவையான அளவு தயிரை இதனுடன் சேர்த்து மிருதுவாக சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து அரை மணிநேரம் வைத்திருக்கவும். பின்னர் இதை உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை சப்பாத்தியாகத் தேய்க்கும்போது அதன்மேலே சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி தூவி தேய்த்து கொள்ளவும். பின்னர் தவாவில் எண்ணெய்விட்டு சூடாக்கி சப்பாத்திகளைச் சுட்டெடுக்கவும். விருப்பமான கிரேவியுடன் பரிமாறவும்.

பிஹாரி காதி பாடி

தேவை: தயிர் – ஒன்றரை கப், கடலை மாவு - ஒரு கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், ஓமம் – ஒரு டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நறுக்கிய வெங்காயம் – ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: தயிரை அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கடைந்து கொள்ளவும். பின்னர் தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் உப்பு, அரை டீஸ்பூன் ஓமம், நறுக்கிய வெங்காயம், தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பணியாரக்கல்லைச் சூடாக்கி, கரைத்துவைத்துள்ள கடலை மாவை சிறு சிறு பணியாரங்களாக ஊற்றியெடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி அரை டீஸ்பூன் ஓமம், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தாளித்து அதில் கரைத்துவைத்துள்ள மோர் கலவையை ஊற்றவும். மோர்க்கலவையில் நுரை கூடியதும் இறக்கிவைக்கவும். பரிமாறும் போது கடலை மாவு பணியாரங்களை மோர்க்கலவையில் சேர்த்து உடனடியாகப் பரிமாறவும்.

தஹி பிந்தி

தேவை: தயிர் - ஒன்றரை கப், வெண்டைக்காய் – கால் கிலோ, கடலை மாவு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, நறுக்கிய வெங்காயம் – ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: தயிருடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கடைந்துகொள்ளவும். பின்னர் இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, வெறும் வாணலியில் வதக்கி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அரை டீஸ்பூன் ஓமம், சீரகம், காய்ந்த மிளகாயைச் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். பிறகு இதில் வதக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கி பின்னர் அதில் மோர்க்கலவையைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துக்கு தஹி பிந்தி மிகப் பொருத்தமாக இருக்கும்.

தயிர் சேமியா

தேவை: சேமியா - 100 கிராம், புளிக்காத தயிர் – ஒரு கப், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை – சிறிதளவு, விருப்பமான பழத்துண்டுகள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 5 முதல் 7, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் இதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். பின்னர் சேமியாவைச் சேர்த்து வேகவிடவும். சேமியா நன்கு வெந்த பின்னர் கலவையைக் கீழே இறக்கி வடிகட்டவும். பின்னர் குளிர்ந்த நீரில் சேமியாவை அலசி தண்ணீரை மீண்டும் வடிகட்டி சேமியாவை மட்டும் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் ஆகியவற்றுடன் சேர்த்து தாளிக்கவும். பின்னர் இந்தத் தாளிப்பை தயிருடன் கலக்கவும். பிறகு, இதனுடன் தேவையான உப்பைச் சேர்க்கவும். பிறகு, இந்தத் தயிர்க்கலவையை வேகவைத்த சேமியாவில் சேர்த்துக் கலக்கவும். அதன்மீது பழத்துண்டுகள், வறுத்த முந்திரிப்பருப்பு தூவிப் பரிமாறவும். இந்தத் தயிர் சேமியாவை ஃப்ரிட்ஜில் குளிரவைத்தும் பரிமாறலாம்.

தயிர் ஃப்ரூட் சாலட்

தேவை: விருப்பமான பழத்துண்டுகள் – ஒரு கப், கெட்டித் தயிர் - ஒரு கப், தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: தயிருடன் தேன் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பின்னர் பழத்துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். இதை ஃப்ரிட்ஜில் குளிரவைத்தும் பரிமாறலாம்.

தயிர் மாங்காய்ப் பச்சடி

தேவை: மாங்காய் – ஒன்று, தயிர் – அரை கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கல் உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: மாங்காயைச் சுத்தம்செய்து கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் மாங்காய், பச்சை மிளகாய், சீரகம், கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். தயிரில் மஞ்சள்தூள் மற்றும் அரைத்த மாங்காய் விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அத்தனை மாங்காய்ப் பச்சடியில் சேர்க்கவும்.

குறிப்பு: சாம்பார், புளிக்குழம்பு ஆகியவற்றுக்கு இந்தப் பச்சடி சிறந்த தொடுகறியாக இருக்கும்.

தயிர் பச்சைப்பட்டாணிக் கூட்டு

தேவை: பச்சைப்பட்டாணி – ஒரு கப், தயிர் – ஒரு கப், தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, முந்திரிப்பருப்பு – 6, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: பச்சைப்பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை சிறிதளவு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் இதனுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். பிறகு தயிரில் தேவையான உப்பு, தேங்காய், முந்திரி விழுது, வேகவைத்த பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து தயிர்க்கலவையில் சேர்க்கவும். தயிர் பச்சைப்பட்டாணிக் கூட்டு தயார்.

தயிர் சாதம் லாலிபாப்

தேவை: சாதம் - ஒரு கப், தயிர் – முக்கால் கப், பச்சை மிளகாய் – ஒன்று, கேரட் துருவல் - 3 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப், கார்ன் மாவு - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: சாதத்தை மசித்துக்கொள்ளவும். பின்னர் இதனுடன் தயிர், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கேரட் துருவல், இஞ்சித் துருவல், சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இதை தேவையான அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். கார்ன் மாவில் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கவும். தயாரித்துவைத்த சாத உருண்டைகளை கார்ன் மாவில் முக்கியெடுத்து பிரெட் கிரம்ப்ஸில் நன்றாகப் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

குறிப்பு: தயிர் சேர்த்து சாதத்தைக் கலக்கும்போது சாதம் தளர்வாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

தயிர் அல்வா

தேவை: புளிக்காத தயிர் - அரை கப், ரவை – அரை கப், நெய் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 5 முதல் 7, உலர் திராட்சை – 5, வெள்ளை சர்க்கரை – ஒரு கப்.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் நெய்யில் முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்தெடுத்து வைக்கவும். மீதமுள்ள நெய்யை அதே வாணலியில் ஊற்றி சூடாக்கி அதில் ரவையைச் சேர்த்து மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி ரவையை ஆற வைத்துக்கொள்ளவும். ரவை நன்றாக ஆறிய பின்னர், அதனுடன் தயிரைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கலந்துகொள்ளவும். பின்னர் அடுப்பைக் குறைவான தீயில் வைத்து தயிர் - ரவை கலவையை நான்கு முதல் ஆறு நிமிடங்கள் கிளறவும். தயிரும் ரவையும் நன்றாகச் சேர்ந்த பின்னர் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்து கலவையானது அல்வா பதத்துக்கு வரும்வரை கிளறி இறக்கவும். பிறகு, இதில் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை சேர்த்துப் பரிமாறவும். தயிரின் மணத்துடன் இந்த அல்வா வித்தியாசமாக அருமையாக இருக்கும்.

தயிர் வெள்ளரிக்காய் சூப்

தேவை: தயிர் - ஒரு கப், வெள்ளரிக்காய் - ஒன்று (சிறியது), வெங்காயம் - ஒன்று (சிறியது), பச்சை மிளகாய் – ஒன்று, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கார்ன் மாவு, உப்பு - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: தயிருடன் தேவையான உப்பு சேர்த்து நன்றாக அடித்துஎடுத்துக்கொள்ளவும். வெள்ளரிக்காயைத் தோல் சீவி சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். வெண்ணெய் உருகியதும் அதனுடன் வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். பின்னர் வெள்ளரிக்காய், பச்சை மிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். கார்ன் மாவில் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் கார்ன் கரைசலைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் குறைவான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் அடித்துவைத்த தயிரைச் சேர்த்துக் கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கவும். பிறகு இதை வதக்கிவைத்திருக்கும் காய்கறிகளுடன் சேர்த்துக் கலந்து மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.

க்ரீமி தயிர் சாண்ட்விச்

தேவை: நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் – கால் கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட் – கால் கப், நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ் – கால் கப், குடமிளகாய் – பாதி (நீளவாக்கில் நறுக்கவும்), கெட்டி தயிர் - ஒரு கப், மயோனைஸ் - 4 டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், பிரெட் துண்டுகள் - 6, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கவும். பின்னர் அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். பிறகு இதனுடன் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வதக்கியெடுத்து ஆறவைத்துக்கொள்ளவும். தயிரை மெல்லிய துணியில் வடிகட்டி அதிலுள்ள தண்ணீரை எடுத்துவிடவும். பின்னர் தண்ணீர் நீக்கப்பட்ட தயிரை ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்திருந்து எடுக்கவும். பின்னர் தயிருடன் மயோனைஸ், உப்பு, மிளகுத்தூள், காய்கறிகள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பிரெட்டை எடுத்து அதன்மீது 3 டீஸ்பூன் தயிர் - காய்கறிக் கலவையை வைக்கவும். பின்னர் இதன் மேலே இன்னொரு பிரெட்டை வைத்து மூடவும். பின்னர் சரி பாதியாக நறுக்கிப் பரிமாறவும்.

தயிர் பைட்ஸ்

தேவை: பிரெட் ஸ்லைஸ் – 6, தயிர் - அரை கப், துருவிய சீஸ் - 4 டீஸ்பூன், மயோனைஸ் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு பிரெட்டை விருப்பமான வடிவங்களில் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பவுலில் தயிர், சீஸ், மயோனைஸ், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர் இக்கலவையை ஒரு பிரெட்டின் மேலே தடவிக்கொள்ளவும். பின்னர் மற்றொரு பிரெட்டால் இதை மூடிப் பரிமாறவும்.

தயிர் பிரெட் இட்லி

தேவை: பிரெட் ஸ்லைஸ் – 2, ரவை – அரை கப், புளித்த தயிர் – அரை கப், புளிக்காத தயிர் - ஒரு கப், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கவும். பிறகு மிக்ஸியில் பிரெட் துண்டுகளைச் சேர்த்துத் தூளாக்கிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் ரவை, பிரெட் தூள், உப்பு, புளித்த தயிர், சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வரை அப்படியே வைக்கவும். பின்னர், இதை இட்லித்தட்டில் இட்லிகளாக வார்த்தெடுக்கவும். பின்னர் பரிமாறும் தட்டில் இட்லிகளை வைத்து, அதன் மேலே உப்பு சேர்த்த புளிக்காத தயிரை ஊற்றி, அதன் மேலே மிளகாய்த்தூள் தூவிப் பரிமாறவும்.

தயிர் புட்டிங்

தேவை: தயிர் – ஒரு கப், கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப், நெய் - சிறிதளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: தயிரை மெல்லிய துணியில் ஊற்றிக்கட்டவும். ஒரு பாத்திரத்தின் மேல் வடிகட்டியை வைத்து அதில் கட்டிவைத்த தயிரை ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். தயிரில் இருந்த தண்ணீர் நன்றாக வடிந்து தயிர், பனீர் போல நமக்குக் கிடைக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நீக்கிய தயிர், கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான அளவில் இருக்கும் சில்வர் பாத்திரத்தில் உட்புறமாக நெய் தடவி எடுத்துக்கொள்ளவும். அதன் மேலே தயிர்க் கலவையை ஊற்றவும். பின்னர் அதன் வாய்ப் பகுதியை அலுமினியம் பாயில் பேப்பர் வைத்து இறுக்கமாக மூடவும். இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு கேக் ஸ்டாண்ட்டை வைக்கவும். பிறகு தயிர் பாத்திரத்தை அதன் மேலே வைக்கவும். பின்னர் இட்லிப் பாத்திரத்தை மூடி 20 முதல் 25 நிமிடங்கள் மிதமான தீயில் கலவையை வேகவிடவும். பின்னர் தயிர்ப் பாத்திரத்தை எடுத்து வெளியே வைக்கவும். நன்கு ஆறியபின் இதை ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்திருந்து பின்னர் பரிமாறவும்.

குறிப்பு: சுவை நிறைந்த இந்தத் தயிர் புட்டிங் பால்கோவாவின் சுவையை நினைவூட்டும்.

ஸ்வீட் தயிர்

தேவை: பால் – அரை லிட்டர், நாட்டுச் சர்க்கரை - 6 டீஸ்பூன், தயிர் - 2 டீஸ்பூன், குங்குமப்பூ - சில இதழ்கள், பிஸ்தா - 2 டீஸ்பூன்.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: குங்குமப்பூவை 2 டீஸ்பூன் பாலில் ஊறவைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். பின்னர் ஊறவைத்த குங்குமப்பூவைக் காய்ச்சிய பாலில் சேர்க்கவும். இதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து, பாலை இறக்கி ஆறவைக்கவும். பால் நன்கு ஆறிய பின்னர் இதனுடன் தயிர் சேர்க்கவும். கலவை தயிராக உறைந்த பின்னர் இதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருக்கவும். பின்னர் பிஸ்தாவை லேசாக இடித்து இதன் மேலே தூவிப் பரிமாறவும்.

தயிர் சர்பத்

தேவை: தயிர் - ஒரு கப், சப்ஜா விதை - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், நன்னாரி சர்பத் - 4 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் – சிறிதளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: சப்ஜா விதையைச் சிறிதளவு தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். தயிரை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடிக்கவும். ஒரு டம்ளரில் சர்பத்தை ஊற்றி அதனுடன் சப்ஜா விதை, தயிர், ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

கம்பு தயிர் சாதம்

தேவை: கம்பு - ஒரு கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - 5, நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, தயிர் – ஒரு கப், எண்ணெய் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, பெருங்காயத்தூள் - சிறிது, கறிவேப்பிலை - சிறிது.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கம்பைக் கழுவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். (அதிக நேரம் ஊறினாலும் பரவாயில்லை). பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக உடைத்துக்கொள்ளவும். உடைத்த கம்புடன் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்னர் இந்தக் கலவையை ஒரு வாணலியில் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவைத்து இறக்கவும். கலவை சூடு ஆறிய பின்னர் இதனுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். கடாயை எண்ணெய்விட்டு சூடாக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இதை தயிர் சாதத்தில் கலந்து பரிமாறவும்.

தயிர் பூசணிக்காய் அவியல்

தேவை: பூசணிக்காய் - 2 கப் (நறுக்கியது), தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், தயிர் - அரை கப், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: பூசணிக்காயை உப்பு சேர்த்து தண்ணீரில் குழையாமல் வேகவைத்து கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடித்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். வேகவைத்த பூசணிக்காயுடன் தேங்காய் விழுது, தயிர் மற்றும் உப்பு சேர்க்கவும். அடுப்பில்வைத்து கொதிவந்தவுடன் இறக்கவும். பிறகு தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

கஸ்டர்டு தயிர் சாலட்

தேவை: தயிர் - ஒரு கப், காய்ச்சிய பால் - 3 டேபிள்ஸ்பூன், கஸ்டர்டு பவுடர் – ஒன்றரை டீஸ்பூன், வெள்ளை சர்க்கரை - 5 டீஸ்பூன், பழத்துண்டுகள் - அரை கப்.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: கஸ்டர்டு பவுடரை 3 டீஸ்பூன் பாலில் கரைத்துக்கொள்ளவும். மீதியுள்ள பாலை மிகக் குறைவான தீயில் கொதிக்கவிடவும். பால் கொதித்ததும் இதனுடன் கஸ்டர்டு கரைசல், வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறி இறக்கி வைக்கவும். கலவை நன்கு ஆறியதும் அதைத் தயிரில் நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் குளிர்வித்து சிறியதாக நறுக்கிய பழத்துண்டுகளுடன் சேர்த்துப் பரிமாறவும்.

தயிர் மக்ரோனி

தேவை: மக்ரோனி – ஒரு கப், தயிர் - 2 கப், லேசாக வேகவைத்த ஸ்வீட்கார்ன் - ஒரு டேபிள்ஸ்பூன், சில்லி ஃபிளேக்ஸ் – ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: மக்ரோனியை 3 கப் கொதிக்கும் நீரில் சேர்த்து வேக வைக்கவும். மக்ரோனி நன்றாக வெந்த பின்னர் அவற்றை வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி மறுபடியும் தண்ணீரை நன்றாக வடித்து எடுத்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் தயிர், உப்பு, ஸ்வீட்கார்ன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். சில்லி ஃபிளேக்ஸ் தூவிப் பரிமாறவும்.

தயிர் அவல்

தேவை: அவல் – ஒரு கப், புளிக்காத தயிர் - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, விருப்பமான பழத்துண்டுகள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு – 5 முதல் 7, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: அவலில் தயிர், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். இதை ஊறவைத்த தயிர் அவலில் சேர்த்து உடனடியாகப் பரிமாறவும்.

கேரட் மோர்க்குழம்பு

தேவை: கேரட் - கால் கிலோ, தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, சீரகம் – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், அரிசி – ஒரு டீஸ்பூன், மோர் - 2 கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, பெருங்காயம் – சிட்டிகை, மோர் மிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: கடலைப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 2 மணிநேரம் ஒன்றாக ஊறவைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கேரட்டைத் துருவி வேகவைத்து, ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் மோரில் கேரட் விழுது, அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து மோர்க்கரைசலை அதில் சேர்க்கவும். கலவை நுரைத்து வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.

தயிர் பிரெட் வித் கிரீன் சாஸ்

தேவை: பிரெட் துண்டுகள் – 6, தயிர் – ஒரு கப், குட மிளகாய் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லி – சிறிதளவு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

செய்முறை: குட மிளகாய், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக நன்கு அரைத்துக்கொள்ளவும். தயிரில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அடித்து எடுத்துக்கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கவும். பிறகு ஒரு பிரெட்டின் மேலே தயாரித்து வைத்த கிரீன் சாஸை தடவி இன்னொரு பிரெட்டினால் மூடவும். பரிமாறும் தட்டில் இதை வைத்து தயிரை அதன் மேல் ஊற்றி வெங்காயம், தக்காளி, குட மிளகாய் தூவிப் பரிமாறவும்.

மனதுக்கும் உடலுக்கும் இதம்!

‘‘நம்முடைய உணவுப் பட்டியலில் தயிருக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக இந்தக் கோடைக்காலத்தில் உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள உதவும் மிக முக்கிய உணவு தயிர். தயிரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. கால்சியத்தின் சுரங்கமான தயிரில் குடலுக்கு நன்மை விளைவிக்கும் புரோபயாட்டிக் பாக்டீரியாக்கள் அபரிமிதமாக இருக்கின்றன.

கோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்!

தயிர் நல்ல ஜீரண சக்தியைத் தரும். இதில் உள்ள புரோட்டீன் பாலில் உள்ள புரோட்டீனைவிட சீக்கிர மாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவிகிதம் பால்தான் ஜீரணமாகியிருக்கும். தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், விடுமுறை நாள்களில் வெரைட்டியான உணவைத் தேடும் குட்டீஸ்களை தயிர் சாதம் சாப்பிட வைப்பதென்பது அத்தனை எளிதான காரியமில்லை. அதனால், குழந்தைகளுக்கு தயிர் சாதமாக மட்டுமே சாப்பிடக் கொடுக்காமல் லஸ்ஸி, தயிர் மசாலா, தஹி பைஹன், தயிர் சாண்ட்விச், தயிர் சாதம் லாலிபாப் என்று விதவிதமாகச் சமைத்துக்கொடுக்கலாம்’’ என்கிறார் எர்ணாகுளத்தில் வசிக்கும் சமையற் கலைஞர் இளவரசி வெற்றி வேந்தன்.

இதோ... அவர் அளிக்கும் வெரைட்டி கலக்கல் தயிர் உணவுகள் உங்களுக்காக...