
ஹெல்த்தி & டேஸ்ட்டி

தக்காளி ஜாம்
தேவை: தக்காளி – 4, சர்க்கரை – ஒரு கப், வெண்ணிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியை அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு கடாயில் ஊற்றி, அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை நன்கு கொதித்ததும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நிறுத்தாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து இறக்கினால் தக்காளி ஜாம் தயார்.
தக்காளி ஊறுகாய்
தேவை: தக்காளி – ஒரு கிலோ, நல்லெண்ணெய் – 100 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, புளி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 20, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளியைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெறும் வாணலியில் கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவை வறுத்து எடுத்துப் பொடித்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி மிளகாயை அதில் வறுத்து எடுக்கவும். அடுத்து தக்காளித் துண்டுகளை அதில் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு வதக்கிய தக்காளி நன்கு ஆறியவுடன் இதோடு புளி, வறுத்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். இதனுடன் அரைத்துவைத்துள்ள மிளகாய், தக்காளி விழுது, தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கிளறவும். தக்காளி, மிளகாய் விழுது நன்றாகச் சுருண்டு எண்ணெய் மேலே வரும்வரை அவ்வப்போது கிளறி நன்கு கொதிக்க விடவும். பின்னர் வறுத்துவைத்துள்ள கடுகு, வெந்தயம், சீரகப்பொடியை இதனுடன் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: தக்காளி, மிளகாய் விழுது கொதிக்கும்போது மேலே தெறிக்கும். எனவே அடுப்பைக் குறைவான தீயில் வைக்கவும்.
தக்காளி சின்ன வெங்காயம் கொத்சு
தேவை: நறுக்கிய தக்காளி - கால் கிலோ, நறுக்கிய சின்ன வெங்காயம் – 100 கிராம், நல்லெண்ணெய் – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 10, பூண்டு – 5 பற்கள், இஞ்சி – சிறிய துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், கிராம்பு – 2, கடுகு – ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன், பொட்டுக்கடலை – 3 டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி மிளகாயை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அந்த எண்ணெயிலேயே கடுகைப் போட்டுப் பொரிய விடவும். பின்னர் இதனுடன் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதன் பிறகு தக்காளியையும் இதனுடன் சேர்த்து, கூடவே தேவையான உப்பையும் போட்டு நன்றாக வதக்கவும். தேங்காய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கிராம்பு, பொட்டுக்கடலை ஆகியவற்றுடன் வறுத்த மிளகாயைச் சேர்த்து தண்ணீர்விட்டு மைய அரைத்துக் கொள்ளவும். பிறகு இந்த விழுதைக் கடாயில் வதங்கிக்கொண்டிருக்கும் வெங்காயம், தக்காளியுடன் சேர்க்கவும். கூடவே நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து, கலவையை நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
தக்காளி சாலட்
தேவை: தக்காளி – 2, வெள்ளரிக்காய் - ஒன்று, கேரட் – ஒன்று, ஆலிவ் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப.

செய்முறை: சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி, வெள்ளரி மற்றும் கேரட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு ஆலிவ் எண்ணெய், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கலந்துவைத்தால் தக்காளி சாலட் தயார்.
தக்காளி தோசை
தேவை: கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – 2 டீஸ்பூன், தக்காளி – 2, காய்ந்த மிளகாய் – 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், பூண்டு – 2, நறுக்கிய புதினா – ஒரு கைப்பிடி, நறுக்கிய வெங்காயம் - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறிது தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோம்பு, மிளகுத்தூள், உப்பு மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், புதினாவை இதனுடன் சேர்க்கவும். பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை தோசை மாவுப் பதத்தில் கலந்து தோசைகளாக வார்த்தெடுக்கவும்.
தக்காளி பரோட்டா
தேவை: கோதுமை மாவு – 2 கப், தக்காளி - 3, மிளகாய்த்தூள் – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 100 கிராம், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி தக்காளியை வதக்கவும். பின்னர் வதக்கிய தக்காளியின் சூடு ஆறியவுடன் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து அதில் அரைத்துவைத்துள்ள தக்காளி, சிறிதளவு மிளகாய்த்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்திக்குப் பிசைவது போல பிசைந்துகொள்ளவும். இதை அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் மாவை வட்டமாகத் தேய்த்துக்கொண்டு அதில் எண்ணெய் தடவி விசிறிக்கு மடிப்பது போல முன்னும், பின்னுமாக மடித்து உருண்டையாகச் செய்து பிறகு மெதுவாக மறுபடியும் வட்டமாகத் தேய்க்க வேண்டும். பின்னர் அடுப்பை சிறு தீயில்வைத்து தவாவில் போட்டு எண்ணெய்விட்டுச் சுட்டெடுக்கவும். சுட்டெடுத்த பரோட்டாவைத் தட்டி பிறகு பரிமாறவும். அப்போதுதான் பரோட்டா லேயர் லேயராகப் பிரிந்துவரும்.
தக்காளி குழிப்பணியாரம்
தேவை: தக்காளி - 2, தோசை மாவு – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – ஒன்று, நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளியை விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, அரைத்துவைத்துள்ள தக்காளி விழுது, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் குழிப்பணியாரக்கல்லில் எண்ணெய் தடவி, கலந்துவைத்துள்ள மாவை ஊற்றி சுட்டெடுத்தால் தக்காளி குழிப்பணியாரம் தயார்.
தக்காளி பேபிகார்ன் சூப்
தேவை: தக்காளி – 2, வேகவைத்த பேபிகார்ன் – 3, மிளகுத்தூள் – ருசிக்கேற்ப, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சோம்புத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு குக்கரில் தக்காளியைப் போட்டு வேகவைத்து நான்கு விசில் வந்தவுடன் இறக்கவும். பிறகு வேகவைத்த தக்காளியைத் தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் அரைத்த இந்த விழுதை ஊற்றி தேவையான உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர் இதில் சோம்புத்தூள் மற்றும் வேகவைத்த பேபிகார்ன் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
தக்காளிப்பொடி சாதம்
தேவை: தக்காளி – அரை கிலோ, பாஸ்மதி அரிசி - 2 டம்ளர், எண்ணெய் – 100 கிராம், நறுக்கிய பூண்டு – 10 பற்கள், கடுகு – ஒரு டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் – 3, நறுக்கிய சின்ன வெங்காயம் – 4, நெய் – 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளியைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் ஐந்து நாள்கள் காய விடவும். தக்காளித் துண்டுகள் நன்றாகக் காய்ந்தவுடன் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, சோம்பு தாளிக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும், பின்பு பொடி செய்து வைத்துள்ள தக்காளியையும் அதில் சேர்க்கவும். கூடவே பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் 3 டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு ஊறவைத்த அரிசியை அதில் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவைக்கவும். சாதம் வெந்தவுடன் இறக்கி, நெய்விட்டு கலந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
தக்காளி பட்டாணி பிரியாணி
தேவை: நறுக்கிய தக்காளி – கால் கிலோ, பச்சைப் பட்டாணி – 100 கிராம், பாஸ்மதி அரிசி – 3 டம்ளர், எண்ணெய் – 150 கிராம், அன்னாசிப்பூ, பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, சோம்பு - ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 2 துண்டு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, பிரியாணி மசாலா – ஒரு டீஸ்பூன், தயிர் – அரை கப், காஷ்மீர் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 3 (பெரியது), நெய் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி அன்னாசிப்பூ, லவங்கம், பட்டை, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்துத் தாளிக்கவும். பின்பு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அதில் பட்டாணி, தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி - பூண்டு விழுது மற்றும் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர், தயிர், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கலவையைக் கொதிக்க விடவும். பின்பு இதில் பாஸ்மதி அரிசி சேர்க்கவும். குக்கரை மூடி இரண்டு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பின்னர் அதில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் நெய் சேர்த்துக் கலந்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
தக்காளித் தொக்கு
தேவை: தக்காளி – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 100 கிராம், எண்ணெய் – 50 கிராம், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சோம்பு – சிறிதளவு, பட்டை, லவங்கம் – தலா ஒன்று, இஞ்சி – 2 துண்டு, பூண்டு – 5 பற்கள், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, சின்ன வெங்காயம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு தாளிக்கவும். பின்பு இதனுடன் நறுக்கிவைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்க்கவும். அது சிறிதளவு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும். இவை அனைத்தும் நன்றாகச் சுருண்டு வரும் வரை கிளறவும். அதன் பிறகு இதில் புளிக்கரைசல் சேர்க்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறவும். பின்னர் இக்கலவையைச் சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை நன்கு கிளற வேண்டும். கலவை தொக்கு பதத்துக்கு வந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
தக்காளி காரச்சட்னி
தேவை: தக்காளி – கால் கிலோ, குண்டு மிளகாய் – 50 கிராம், பூண்டு – 25 கிராம், நல்லெண்ணெய் – 100 கிராம், கடுகு – அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை வேகவைத்து தோலுரித்து மைய அரைத்துக் கொள்ளவும். மிளகாயுடன் தோலுரித்த பூண்டு சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போட்டு பொரிய விடவும். பின்னர் அதில் மிளகாய் - பூண்டு விழுதை சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். பின்னர் தக்காளி விழுதையும் தேவையான உப்பையும் சேர்க்கவும். பிறகு இக்கலவையில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கலவை சிவக்க வரும்வரை கிளறி இறக்கவும்.
தக்காளி வெங்காயச்சட்னி
தேவை: தக்காளி – 6 பெரியது, சின்ன வெங்காயம் – 10, காய்ந்த மிளகாய் – 6, புளி – சிறிதளவு, பெருங்காயம் – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளி, வெங்காயத்தைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். புளி, மிளகாய் இரண்டையும் முதலில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு நறுக்கிவைத்துள்ள தக்காளி, வெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து மைய அரைக்கவும். அடுப்பில் கடாயைவைத்து எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை இதில் ஊற்றிக் கொதிக்க விடவும். கலவை பச்சை வாசனை போக கொதித்தவுடன் இதில் தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இந்தச் சட்னியில் தேங்காய் இல்லாததால் நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.
தக்காளி கொத்தமல்லி பூண்டுச் சட்னி
தேவை: தக்காளி – கால் கிலோ, கொத்தமல்லி – சிறிய கட்டில் பாதி, கடுகு – ஒன்றரை டீஸ்பூன், பூண்டு – 10 பற்கள், புளி – சிறிதளவு, பெருங்காயம் – சிறிதளவு, நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளி, கொத்தமல்லி இரண்டையும் சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி ஒரு டீஸ்பூன் கடுகைத் தாளித்து எடுக்கவும். அதன் பிறகு அதே எண்ணெயில் பூண்டைச் சேர்த்து வதக்கி எடுக்கவும். பிறகு கொத்தமல்லியைப் போட்டு வதக்கி எடுக்கவும். பின்பு புளியைப் போட்டு வதக்கி எடுக்கவும். அதற்கடுத்து தக்காளியைப் போட்டு அதனுடன் பெருங்காயம் சேர்த்து வதக்கி எடுக்கவும். இவை அனைத்தையும் ஆறவிடவும். மிக்ஸி ஜாரில் முதலில் கடுகு போட்டு ஒரு சுற்று சுற்றவும். பின்பு இதனுடன் கொத்தமல்லி சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். அதற்கடுத்து புளி, தக்காளி என்று ஒவ்வொன்றாகச் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை டீஸ்பூன் கடுகைத் தாளிக்கவும். கடுகு பொரிந்தவுடன் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்க்கவும். அதன் பிறகு அரைத்துவைத்துள்ள இந்தத் தக்காளி விழுதையும், தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
தக்காளி பருப்புத் துவையல்
தேவை: நறுக்கிய தக்காளி – 150 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், புளி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 6, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு அதே எண்ணெயில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து தக்காளி அதையும் வதக்கிக்கொள்ளவும். பின்னர் தேங்காய்த்துருவல், புளி, மிளகாய் ஆகியவற்றை சிறிது தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். அதன்பின் தக்காளி, வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகள், பெருங்காயம், உப்பு ஆகியவற்றையும் இதனுடன் சேர்த்து மறுபடியும் மைய அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு தாளித்து அதைச் சட்னியில் சேர்க்க வேண்டும்.
தக்காளி திடீர்ச் சட்னி
தேவை: தக்காளி – 6, குண்டு மிளகாய் – 6, பூண்டு – 3 பற்கள், புளி – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளி, இஞ்சியைச் சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவிடவும். பின்பு மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றையும் எண்ணெயில் வதக்கவும். வதக்கிய இரண்டுடனும் தேவையான உப்பு சேர்த்து மைய அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு தாளிக்கவும். பின்னர் அதை அரைத்த சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.
தக்காளி பஞ்சாபி குருமா
தேவை: தக்காளி – 6 (பெரியது), சின்ன வெங்காயம் – 50 கிராம், பெரிய வெங்காயம் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம் – தலா ஒன்று, தேங்காய்த்துருவல் – 4 டீஸ்பூன், கசகசா – ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 5, இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தேங்காய், கசகசா, முந்திரி ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைச் சிறிது எண்ணெயில் வதக்கவும். பிறகு பச்சை மிளகாயுடன் தக்காளி, பெரிய வெங்காயத்தையும் சேர்த்து மைய அரைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, லவங்கம், சோம்பு போட்டுத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் அரைத்துவைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்க்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுதையும் சேர்க்கவும். கலவை பச்சை வாசனை போகும்படி நன்கு வதங்கியதும், தேவையான உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்ததும் தேங்காய் விழுதையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும்.
தக்காளி ஆந்திரா பருப்பு மசியல்
தேவை: துவரம்பருப்பு – 150 கிராம், நறுக்கிய தக்காளி - 8, நறுக்கிய சின்ன வெங்காயம் – 5, காய்ந்த மிளகாய் – 8, பெருங்காயம் – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – சிறிதளவு, சீரகம் – சிறிதளவு, புளிக்கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 3 பற்கள், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: துவரம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் 6, பெருங்காயம், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். பிறகு அவற்றை நன்றாக மசித்துக்கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தாளிக்கவும். பிறகு அதில் அதில் 2 காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். கூடவே தட்டிவைத்திருக்கும் பூண்டையும் இதில் சேர்க்கவும். கடைசியாக, தயாரித்துவைத்திருக்கும் பருப்பு விழுதையும் தேவையான உப்பையும் இதில் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
தக்காளி ரசம்
தேவை: நன்றாகப் பழுத்த தக்காளி – 5, காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 3 பற்கள், பெருங்காயம் – சிறிதளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: முதலில் தக்காளியில் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து தேவையான தண்ணீர்விட்டுக் கரைத்துக்கொள்ளவும். 4 காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு தாளிக்கவும். அதனுடன் 2 காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு அதில் பெருங்காயம், மஞ்சள்தூள் மற்றும் பொடித்துவைத்திருக்கும் பொடி ஆகியவற்றை போட்டுக் கிளறவும். பின்னர் இதில் கரைத்துவைத்திருக்கும் தக்காளிக் கரைசலை ஊற்றவும். கலவை சிறிது நுரை கட்டியவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கீழே இறக்கவும்.
தக்காளிப் பச்சடி
தேவை: தக்காளி – 3 (பெரியது), கேரட் – ஒன்று (சிறியது), வெள்ளரிக்காய் – அரை துண்டு, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, தயிர் – ஒரு கப், உப்பு – தேவைக்கேற்ப, எலுமிச்சைச்சாறு – சிறிதளவு.

செய்முறை: தக்காளியைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை தனித்தனியாகத் துருவிவைக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் தக்காளி, கேரட், வெள்ளரி ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். அதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
தக்காளி ரவை இட்லி
தேவை: தக்காளி – 2, இட்லி மாவு – ஒரு கப், ரவை – ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளியை மைய அரைத்துக்கொள்ளவும். ரவையை வெறும் வாணலியில் வறுத்து அதை இட்லி மாவுடன் கலந்து வைக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி கலந்துவைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி இட்லி குக்கரில் வேகவைத்து இறக்கினால் தக்காளி ரவை இட்லி தயார்.
தக்காளி கேரட் ஜூஸ்
தேவை: தக்காளி – 3, கேரட் – 2, நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன், ஐஸ் – தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளி, கேரட் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு, தேவையான தண்ணீர்விட்டு மைய அரைத்துக்கொள்ளவும். இதை வடிகட்டி அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பின்னர் ஐஸ் சேர்த்துப் பருகவும்.
தக்காளி பாஸ்தா
தேவை: தக்காளி – 2, பாஸ்தா – 100 கிராம், நறுக்கிய பூண்டு – 4 பற்கள், பச்சை மிளகாய் – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளியை விழுதாக அரைக்கவும். ஒரு கடாயில் தேவையான தண்ணீர் மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பாஸ்தாவை அதில் போட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் அரைத்துவைத்துள்ள தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியாக இதனுடன் வேகவைத்த பாஸ்தாவையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
தக்காளி நூடுல்ஸ்
தேவை: தக்காளி - 2, நூடுல்ஸ் – 100 கிராம், குடமிளகாய் - பாதி (மெலிதாக நீளமாக நறுக்கவும்), நறுக்கிய பூண்டு – 4 பற்கள், நடுத்தர அளவிலான கேரட் – ஒன்று (மெலிதாக நீளமாக நறுக்கவும்), சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவைக்கேற்ப, உப்பு – சுவைக்கேற்ப.

செய்முறை: தக்காளியை விழுதாக அரைக்கவும். ஒரு கடாயில் தேவையான தண்ணீர் மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் நூடுல்ஸைப் போட்டு வேகவைத்து எடுக்கவும். பிறகு வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி அதில் பூண்டு, குடமிளகாய், கேரட், மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்துவைத்துள்ள தக்காளி விழுது மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றை இதனுடன் சேர்க்கவும். பின்னர் வேகவைத்துள்ள நூடுல்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
தக்காளி பனீர் மசாலா
தேவை: தக்காளி – 3, வெங்காயம் – 1, பனீர் துண்டுகள் – 100 கிராம், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கேற்ப, சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை – ஒன்று, கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு, உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை: வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக விழுதாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, சோம்பு தாளிக்கவும். பின்னர் அரைத்துவைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் தக்காளியை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் மற்றும் பனீர் துண்டுகள், உப்பு ஆகியவற்றை இதனுடன் சேர்த்துக் கிளறி கலவையை நன்கு கொதிக்க விடவும். பின்னர் ஐந்து நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் தக்காளி பனீர் மசாலா தயார்.
தக்காளி பஜ்ஜி
தேவை: கடலை மாவு – 2 கப், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, பெங்களூரு தக்காளி – 5, எண்ணெய் – 250 கிராம், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். தக்காளியைத் தேவைக்கேற்ப வட்ட வடிவம் அல்லது நீளவாக்கில் நறுக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் கரைத்துவைத்துள்ள மாவில் தக்காளியைத் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
தக்காளி காளான் மசாலா
தேவை: தக்காளி – 2, பட்டை, ஏலக்காய் – தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 3, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – தேவைக்கேற்ப, சோம்பு – அரை டீஸ்பூன், காளான் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காளானை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் பட்டை, ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றையும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கலவையை மூடிக் கொதிக்க விடவும். பிறகு இதில் நறுக்கி வைத்திருக்கும் காளான் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். கலவை நன்றாக மசாலா பதத்துக்கு வந்தவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தக்காளி உப்புமா
தேவை: ரவை – ஒன்றரை கப், தக்காளி – 3, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், முந்திரி – 10, எண்ணெய் – 50 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – ஒரு துண்டு, தண்ணீர் - 3 கப், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: கடாயில் நெய்விட்டு சூடாக்கி ரவையை மணல் போல வறுத்துக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் வதங்கியவுடன் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதனுடன் ரவையைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறி நன்கு வேகவிட்டு இறக்கவும்.
தக்காளி பூண்டுக் குழம்பு
தேவை: தக்காளி – 10 பெரியது, பூண்டு – 5 பெரிய பற்கள், புளிக்கரைசல் – தேவையான அளவு, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, நல்லெண்ணெய் – 50 கிராம், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 5, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: பூண்டை உரித்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு அதில் தக்காளி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான உப்பு சேர்க்கவும். பின்பு இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நான்கு கிளறவும். இவை அனைத்தும் ஒன்றுசேர வதங்கியவுடன் புளிக்கரைசலையும் கறிவேப்பிலையையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும். கலவை கொதித்து நல்ல குழம்பு பதத்துக்கு வந்தவுடன் இறக்கி விடவும்.
தக்காளி பூண்டுத் தொக்கு
தேவை: தக்காளி – கால் கிலோ, பூண்டு – 5 பற்கள், சின்ன வெங்காயம் – 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 50 கிராம், புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி - பூண்டு விழுது, சோம்பு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை சிறிது தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். தக்காளி, சின்ன வெங்காயம் இரண்டையும் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகைத் தாளிக்கவும். பின்பு நறுக்கிவைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்துவைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதில் புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.. பிறகு கலவையில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நன்கு கிளற வேண்டும். கலவை தொக்கு பதத்துக்கு வந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
தகதகக்கட்டும் தக்காளிச் சமையல்!
நம் அன்றாடச் சமையலில் இடம்பெறும் மிக முக்கியமான பொருள் தக்காளி. மருத்துவ நலன்கள் நிறைந்த தக்காளியை அப்படியே சாப்பிடலாம். சட்னி, தொக்கு, கூட்டு, பொரியல், சாம்பார் எனப் பல்வேறு வடிவங்களில் சமைத்தும் சாப்பிடலாம். எப்படிச் சாப்பிட்டாலும் தக்காளியின் குணம் நம்மை வந்து சேரும்.

தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட், சருமம் முதிர்ச்சி அடையாமல் காக்கும் பணியைச் செய்கிறது. இதிலுள்ள லைகோபீன், நச்சுப்பொருள்களை வெளியேற்றவும், புற்றுநோய் பாதித்த திசுக்களுடன் போராடி நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படவும் கூடியது. தக்காளி உணவுகளைப் பெண்கள் சாப்பிடும் போது கருப்பை வாய், மார்பகம் மற்றும் சுவாசப்பை புற்றுநோய்களிலிருந்து தப்பும் வாய்ப்பிருக்கிறது.தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும், பக்கவாதம் வராமல் காக்கும்.
இது தக்காளி சீஸன். கடைகளில் குவிந்து கிடக்கும் தக்காளி கிலோ பத்து ரூபாய்க்கே கிடைக்க ஆரம்பித்துவிட்டதே இதற்கு அடையாளம். ஆகவே, தக்காளி சட்னி, தக்காளி சாதம் என்று மட்டும் நம் கைவண்ணத்தைச் சுருக்கிவிடாமல் தக்காளியில் ஜாம், பரோட்டா, ஆந்திரா பருப்பு மசியல், பஞ்சாபி குருமா, குழிப்பணியாரம் என்று விதவிதமாகச் சமைத்து ஜமாய்க்கலாமே!
இதோ... வெரைட்டியான தக்காளி ரெசிப்பிகளைத் தந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் மனோப்ரியா. இனி நம் சமையலறை சிறப்பான தக்காளி ரெசிப்பிகளால் செக்கச் சிவக்கட்டும்!