
எளிமை இனிமை

நூடுல்ஸ் ஸ்டஃப்டு பரோட்டா
தேவை: மைதா - 2 கப், நூடுல்ஸ் - 2 பாக்கெட், நூடுல்ஸ் மசாலாத்தூள் - 2 பாக்கெட்டிலும் உள்ள அளவு, கரம் மசாலாத்தூள் - 3 டேபிள்ஸ்பூன், தக்காளி – 2 (நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), முட்டை - 3, பட்டை – ஒன்று, கிராம்பு - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: பட்டை, கிராம்பு இரண்டையும் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து பரோட்டா மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.
நூடுல்ஸை வெந்நீரில் போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, பொடித்த பட்டை, கிராம்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். வெங்காயம் வதங்கிவந்தவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் முட்டைகளை உடைத்துச் சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும். பின்னர் இதனுடன் வேகவைத்த நூடுல்ஸ், கரம் மசாலாத்தூள், நூடுல்ஸ் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிவைக்கவும். பின்னர் பிசைந்துவைத்திருக்கும் மாவை வட்டமாகத் தேய்த்து அதன் நடுவில் செய்து வைத்திருக்கும் நூடுல்ஸைவைத்து சுற்றி லும் இருக்கும் மாவை சேர்த்து மூடி நன்றாகத் தேய்க்கவும். அடுப்பில் தோசை தவாவை வைத்து தேய்த்துவைத்திருக்கும் பரோட்டாவை அதில் போட்டு எண்ணெயில் சுட்டெடுக்கவும்.
படம்: தே.தீட்சித்
காஷ்மீர் தம் ஆலு
தேவை: பேபி உருளைக்கிழங்கு – ஒரு கிலோ, சோம்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், கிராம்பு – 4, மிளகு – அரை டீஸ்பூன், ஏலக்காய் – 4, பட்டை – ஒரு துண்டு, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், ஜாதிக்காய் – ஒரு துண்டு, தயிர் – 400 கிராம், காய்ந்த மிளகாய் – 20, காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், கஸூரி மேத்தி, மஞ்சள்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு


செய்முறை: உருளைக்கிழங்கைக் கழுவி தண்ணீர்விட்டு சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். கிழங்குகளில் சிறு சிறு துளையிடவும். அதனுடன் உப்பு, ஒரு டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்துப் புரட்டி விடவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி உருளைக்கிழங்கைப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சோம்பு, சீரகம், கிராம்பு, மிளகு, ஏலக்காய், பட்டை, தனியா, ஜாதிக்காய் ஆகியவற்றை வாசனை வரும்வரை வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். காய்ந்த மிளகாய்களை விதை நீக்கி வெந்நீரில் ஊறவைத்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். தயிருடன் அரைத்த மசாலாப்பொடி, அரைத்த மிளகாய் விழுது மற்றும் சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து வைக்கவும். ஒரு கடாயில் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துப் புரட்டவும். பின்னர் அதனுடன் கலந்துவைத்துள்ள தயிர் மசாலா கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். பின்னர் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை இந்த மசாலாவுடன் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து கஸூரி மேத்தி தூவி இறக்கவும். காஷ்மீர் தம் ஆலு தயார்.
கறிவேப்பிலை சம்பல்
தேவை: கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பூண்டு - 2 பற்கள், சின்ன வெங்காயம் – 5, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சை – பாதி (சாறு எடுக்கவும்), உப்பு - தேவையான அளவு.


செய்முறை: சுத்தம் செய்த கறிவேப்பிலையுடன் பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய்த் துருவல், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பின்னர் இக்கலவையைக் கைகளால் நன்கு பிசைந்து வைக்கவும். கறிவேப்பிலை சம்பல் தயார். இது சாதம், பிரியாணி, புலாவ் ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கேற்ற சைடிஷ்.
கருப்பட்டி உளுந்தங்கஞ்சி
தேவை: உடைத்த உளுந்து – கால் கிலோ, கருப்பட்டி - 150 கிராம், சுக்கு – சிறிதளவு, ஏலக்காய் - 5, துருவிய தேங்காய் - ஒரு கப், பூண்டு - 10 பற்கள்.


செய்முறை: உளுந்தை மணம் வரும்வரை வாணலியில் வறுத்துக்கொள்ளவும். கருப்பட்டியைத் தட்டி சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி எடுத்துவைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காய், ஏலக்காய், சுக்கு இவற்றை சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த இந்த விழுதைப் பிழிந்து பால் எடுத்துக்கொள்ளவும். வறுத்துவைத்துள்ள உளுந்துடன் பூண்டு சேர்த்து குக்கரில் சாதம் வேகவைப்பது போல் மூன்று முறை விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்பு இதை நன்கு மசித்துவைத்துக் கொள்ளவும். மசித்த இந்த சாதக் கலவையில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக்கலந்து கலவையை சூடாக்கவும். பின்பு இதனுடன் எடுத்துவைத்துள்ள சுக்கு - ஏலக்காய் - தேங்காய் சேர்த்த பாலைக் கலக்கவும். பின்னர் வடிகட்டிய கருப்பட்டிப் பாலையும் இதனுடன் ஊற்றி, குறைவான தீயில் சிறிதுநேரம் வைத்து பின்னர் எடுத்து விடவும். சுவையான கருப்பட்டி உளுத்தங்கஞ்சி ரெடி.
புலுசு பிண்டி
தேவை: புழுங்கல் அரிசி - 2 கப், தேங்காய் - ஒரு மூடி (துருவவும்), காய்ந்த மிளகாய் - 6, புளி - எலுமிச்சை அளவு, வெல்லம் – 2 டீஸ்பூன், ஊறவைத்த கடலைப்பருப்பு – ஒரு பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: புளியைச் சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து புளித் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புழுங்கல் அரிசியை வெந்நீரில் ஊறவைக்கவும். குறைந்தது நான்கு மணி நேரமாவது அரிசி ஊறியிருக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த புழுங்கல் அரிசியுடன் தேங்காய், காய்ந்த மிளகாய், உப்பு, வடிகட்டிவைத்திருக்கும் புளித்தண்ணீர் மற்றும் வெல்லத்தைச் சேர்த்து கொரகொரவென அரைத்தெடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் அரைத்துவைத்திருக்கும் மாவை இதனுடன் சேர்த்துக் கிளறவும். அரை மணிநேரம் நன்கு கிளறக் கிளற உப்புமா பதத்தில் கையில் ஒட்டாத புலுசு பிண்டி தயாராகிவிடும்.
முந்திரி முருங்கை அவியல்
தேவை: முந்திரிப்பருப்பு - அரை கப், முருங்கைக்காய் – 2 (நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நறுக்கவும்), தேங்காய் - ஒரு மூடி (துருவவும்), சின்ன வெங்காயம் - 5, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைச் சேர்த்துத் தாளிக்கவும். அதில் நறுக்கிய தக்காளியையும் முருங்கைக்காயையும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். காய் வெந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலவையைக் கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்து நீர் வற்றி கிரேவி பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: முருங்கைக்காய் மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளையும் இந்த அவியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
கருப்பட்டிப் பணியாரம்
தேவை: பச்சரிசி - 2 ஆழாக்கு, வெல்லம் - 2 ஆழாக்கு, எண்ணெய் - தேவையான அளவு, பாசிப்பருப்பு - கால் ஆழாக்கு, ஏலக்காய் - 2 துண்டுகள்.


செய்முறை: பச்சரிசியைத் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் ஊறிய அரிசியை வடிதட்டில் போட்டு சிறிது நேரம் உலர்த்தவும். உலர்ந்த அரிசியை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை சல்லடையில் சலித்துக்கொள்ளவும். பொடித்த வெல்லத்துடன் அரை டம்ளர் தண்ணீர் மற்றும் இரண்டு ஏலக்காய் துண்டுகள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்து பாகு சற்று கெட்டியானவுடன் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். பாகு நன்றாக ஆறியவுடன் மாவில் தேவையான பாகைச் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். தேவை போக மீதமுள்ள பாகை தனியே வைக்கவும். வேறு ஒரு கடாயில் பாசிப் பருப்பைத் தண்ணீர்விட்டு முக்கால் பதத்துக்கு வேகவைத்துக் கொள்ளவும். பிறகு பிசைந்துவைத்துள்ள மாவில் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் மீதமுள்ள பாகைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து அடை மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். பணியாரக் கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி மாவைப் பணியாரங்களாகச் சுட்டெடுக்கவும்.
புரோட்டீன் குருமா
தேவை: காய்ந்த பட்டாணி - 250 கிராம், வெங்காயம் (பெரியது) - ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பட்டாணியை ஊறவைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவைத் தேவையான அளவு தண்ணீரில் கரைத்து இக்கலவையில் சேர்த்துக் கிளறவும். கலவை நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பட்டாணியைச் சேர்க்கவும். ஒரு கொதிவந்தவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
வாழையிலை சாஃப்ட் கொழுக்கட்டை
தேவை: பச்சரிசி - ஓர் ஆழாக்கு, இளந்தேங்காய் - ஒரு மூடி, வெல்லம் - 100 கிராம், நெய் - அரை டீஸ்பூன், வாழையிலைத் துண்டுகள் – தேவையான அளவு.


செய்முறை: பச்சரிசியை மூன்று மணி நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். அரிசி நன்கு ஊறினால்தான் மிக்ஸியில் அரைக்கும்போது மாவு, வெண்ணெய்ப்போல வழுவழுப்பாக வரும். தேவையான அளவுக்கு வாழையிலையை நறுக்கிவைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்துக்கொள்ளவும். வாணலியில் நெய்யைவிட்டு சூடாக்கி தேங்காய்த் துருவலை வதக்கி பின்னர் இதனுடன் பொடித்த வெல்லத்தையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். நறுக்கிவைத்த வாழையிலைகள் ஒவ்வொன்றையும் அடுப்பில்காட்டி வாட்டிக்கொள்ளவும். அப்போதுதான் இலை கிழியாமல் மடிக்க வரும். இப்போது வாட்டிய வாழையிலை ஒன்றை எடுத்து அதன்மேல் அரைத்த அரிசி மாவை மெலிதாகத் தட்டவும். பின்னர் அதன் நடுவில் சிறிது தேங்காய்ப் பூரணத்தை வைத்து இலையை இரண்டாக மடிக்கவும். இதேபோல எல்லா இலைகளிலும் செய்துகொள்ளவும். பின்னர் இவற்றை இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.
பிளாக் அண்டு வொயிட் பூரி
தேவை: மைதா மாவு – முக்கால் கப் + முக்கால் கப், கோக்கோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, சாக்லேட் சிரப் அல்லது பொடித்த சர்க்கரை – அலங்கரிக்க தேவையான அளவு.


செய்முறை: முக்கால் கப் மைதா மாவுடன் அரை சிட்டிகை உப்பு, வெனிலா எசென்ஸ், அரை டேபிள்ஸ்பூன் ரவை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதை தனியே வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முக்கால் கப் மைதா மாவுடன் கோக்கோ பவுடர், அரை சிட்டிகை உப்பு, அரை டேபிள்ஸ்பூன் ரவை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய வைக்கவும். வெள்ளை மாவில் ஒரு சிறு உருண்டையும், கோக்கோ மாவில் ஒரு சிறு உருண்டையும் எடுத்துச் சேர்த்து உருட்டி பூரி வடிவில் திரட்டவும். இதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்த பூரியின் மேலே பொடித்த சர்க்கரை அல்லது சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறவும்.
கேசர் பிஸ்தா குல்ஃபி
தேவை: காய்ச்சிய பால் - ஒரு லிட்டர், கண்டன்ஸ்டு மில்க் - அரை கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பிஸ்தா - 2 டேபிள்ஸ்பூன், பாதாம் - 4 டேபிள்ஸ்பூன்.


செய்முறை: பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து, தோலுரித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். குங்குமப்பூவைச் சிறிது சூடான பாலில் ஊறவைத்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடவும். பால் பாதியாகக் குறைந்தவுடன், அதில் சர்க்கரை, பாதாம் விழுது, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு அதில் பாலில் ஊறவைத்த குங்குமப்பூவைச் சேர்க்கவும். பிறகு நறுக்கிய பிஸ்தா, ஏலக்காய்த்தூள் கலந்து கலவையை இறக்கி சிறிதுநேரம் ஆறவிடவும். இதை குல்ஃபி மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் எட்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். கேசர் பிஸ்தா குல்ஃபி தயார்.
மில்லட் இனிப்பு தோசை
தேவை: ராகி – ஒரு கப், பச்சைப்பயிறு - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், சாமை - ஒரு கப், கம்பு - ஒரு கப், திணை - ஒரு கப், பொட்டுக்கடலை - ஒரு கப், பார்லி - ஒரு கப், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி - சிறிதளவு, நெய் – சுட்டெடுக்க தேவையான அளவு, பொடித்த வெல்லம் – அரை கப்.


செய்முறை: அனைத்து சிறுதானியங்களையும் தனித்தனியாக வறுத்து ஒன்றாகச் சேர்த்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் மாவு எடுத்து அதனுடன் அரை கப் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கலவையை தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். இந்த மாவை தோசை ஊற்றுவதுபோல தோசைக்கல்லில் ஊற்றித் தேய்க்காமல் அப்படியே ஒரே இடத்தில் மெதுவாக ஊற்றி சிறிய சிறிய தோசைகளாக ஊற்றி நெய் சேர்த்துச் சுட்டெடுக்கவும்.
நாசிலமா (தேங்காய்ப்பால் சாதம்) – பனீர் சம்பல்
நாசிலமாவுக்கு... தேவை: பச்சரிசி, தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், லெமன் கிராஸ் இலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியைத் தண்ணீரில் களைந்துகொள்ளவும். இதனுடன் தண்ணீர், தேங்காய்ப்பால், தட்டிய இஞ்சி, லெமன் கிராஸ், நெய், உப்பு சேர்த்து குக்கரில் வைக்கவும். ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான நாசிலமா தயார்.


பனீர் சம்பலுக்கு... தேவை: பனீர் - 200 கிராம், தக்காளி - 2 (நறுக்கவும்), பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்), பூண்டு - 8 பற்கள், இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் – 12, வெல்லம் – சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: பனீரை வெதுவெதுப்பான நீரில் கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பின்னர் மிதமான சூட்டில் அடுப்பை வைத்து பனீர் துண்டுகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரிக்கும்போது எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து காய்ந்த மிளகாயை வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய்விட்டு சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் விழுது, இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
கலவையிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது அதனுடன் பொரித்த பனீர் துண்டுகள், உப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். இதனுடன் சிறிது பொடித்த வெல்லம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து இறக்கவும். நாசிலமாவுடன் சேர்த்துச் சாப்பிட சுவையான பனீர் சம்பல் தயார்.
கேரட் கோலா உருண்டை
தேவை: கேரட் - கால் கிலோ, பொட்டுக்கடலை - 100 கிராம், சின்ன வெங்காயம் – 6, சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - இரண்டு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: கேரட்டைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கவும். மிக்ஸியில் கேரட் துண்டுகள், பொட்டுக்கடலை, உரித்த சின்ன வெங்காயம், சோம்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விடாமல் அரைக்கவும். பின்னர் கலவையை சிறு சிறு வட்டங்களாகத் தட்டவும். பின்னர் இவற்றை தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கலாம் அல்லது எண்ணெயில் போட்டு, பொரித்தும் பரிமாறலாம்.
இளநீர் சாக்லேட் புட்டிங்
இளநீர் புட்டிங் செய்ய... தேவை: தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சிய பால் - இரண்டு டம்ளர், இனிப்பான இளநீர் – ஒன்று, சர்க்கரை - மூன்று டேபிள்ஸ்பூன், கண்டன்ஸ்டு மில்க் - கால் டின் (அதாவது சிறிய டப்பாவில் கால் பகுதியை எடுத்துக்கொள்ளவும்) சோள மாவு - 5 டீஸ்பூன், கோக்கோ பவுடர் அல்லது சாக்லேட் - இரண்டு டீஸ்பூன் அல்லது 2 துண்டுகள், பாதாம், பிஸ்தா துருவல் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.


செய்முறை: அரை டம்ளர் இளநீருடன் ஓர் இளநீரில் இருக்கிற பாதி வழுக்கையைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஓரு டம்ளர் பாலுடன் அரைத்துவைத்த இளநீர் கலவை, இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, மூன்று டீஸ்பூன் சோள மாவு, நான்கு டீஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றை கலந்து அடுப்பில் வைக்கவும். சோள மாவு பாலைக் கெட்டியாக்கும் தன்மை உடையது. எனவே, கலவை நன்றாகக் கெட்டியாக வரும்வரை அடிப்பிடிக்காதபடி கலவையை மிதமான சூட்டில் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை கெட்டியானதும் கீழே இறக்கி லேசாக ஆறவிடவும். ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் நெய் தடவி தயாரித்து வைத்த இந்தக் கலவையைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் இளநீர் புட்டிங் தயார்.
சாக்லேட் புட்டிங் செய்ய... சிறிதளவு கோக்கோ பவுடர், ஒரு டம்ளர் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் சோள மாவு மற்றும் இரண்டு டீஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதை அடுப்பில்வைத்து அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் இறக்கி ஆறவைக்கவும். ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்த இளநீர் புட்டிங்கை எடுக்கவும். அதன் மேல் தயாராக வைத்துள்ள சாக்லேட் புட்டிங்கை ஊற்றவும். கலவை இரண்டும் ஒன்றோடு ஒன்று கலக்காது. மீண்டும் இதை ஃப்ரிட்ஜில் ஏழு மணி நேரம் வைக்கவும். பின்னர் வெளியே எடுத்தால் இக்கலவை ஜெல்லி பதத்தில் வந்திருக்கும். பின்னர் ஒரு கத்தியால் இதன் ஓரங்களை லேசாக எடுத்துவிட்டு கண்ணாடி டம்ளரை தலைகீழாகக் கவிழ்த்தால் ஜெல்லி ஜம்மென்று வெளியே வரும். பின்னர் இதன்மீது பாதாம், பிஸ்தா துருவல்களைத் தூவிப் பரிமாறவும்.
கஜிரா
தேவை: சர்க்கரை - அரை கப், மைதா (அ) கோதுமை மாவு - ஒரு கப், ரவை - 2 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - 2 சிட்டிகை, உப்பு - 2 சிட்டிகை, முட்டை – ஒன்று, ஏலக்காய் - 4, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: சர்க்கரையை நன்கு பொடித்து எடுத்துக்கொள்ளவும். அதில் உடைத்த முட்டை, பொடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, அரிசி மாவு, பேக்கிங் சோடா, உப்பு, நெய் மற்றும் அடித்துவைத்திருக்கும் முட்டைக் கலவை ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு இந்தப் பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான கஜிரா தயார்.
செட் தோசை - பாலக் சட்னி
செட் தோசைக்கு... தேவை: புழுங்கல் அரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், அவல் - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், உப்பு – தேவையான அளவு.


செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்ந்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அவலை நன்கு அலசி சிறிது நேரம் ஊறவைத்துப் பின் இதனுடன் ஊறவைத்த அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் அனைத்தையும் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அரைத்த மாவுடன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு கலந்து குறைந்தது 12 மணி நேரம் மாவை அப்படியே புளிக்க வைக்கவும். பின்னர் மாவை ஊத்தப்பமாகச் சுட்டெடுக்கவும். இதற்கு பாலக் சட்னி வித்தியாசமான ஒரு தொடுகறியாக இருக்கும்.
பாலக் சட்னிக்கு... தேவை: பாலக்கீரை – அரை கட்டு (ஆய்ந்து எடுக்கவும்), துருவிய தேங்காய் - ஒரு கப், பொட்டுக்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி - ஒரு துண்டு, எலுமிச்சை – பாதி (சாறு எடுக்கவும்), உப்பு - தேவையான அளவு, எண்ணெய் – சிறிதளவு
செய்முறை: பாலக் கீரையை நன்கு கழுவி சிறிது எண்ணெயில் வதக்கி எடுத்துக்கொள்ளவும். வதக்கிய கீரை ஆறிய பிறகு இதனுடன் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத் தெடுக்கவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து செட் தோசையுடன் பரிமாறவும்.
பனீர் கிரேவி
தேவை: பனீர் - 200 கிராம், வெங்காயம் – 2 (ஒன்றை மட்டும் நறுக்கிக்கொள்ளவும்), தக்காளி – 2 (ஒன்றை மட்டும் நறுக்கிக் கொள்ளவும்), நறுக்கிய குடமிளகாய் – ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை, கிராம்பு – தலா 2, கஸூரி மேத்தி - அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 50 கிராம், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: பனீரை சிறு துண்டுகளாக்கி நெய் அல்லது எண்ணெயில் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். முந்திரிப்பருப்பைச் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு வெங்காயம், ஒரு தக்காளியை ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதில் அரைத்த வெங்காயம் - தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் பொரித்துவைத்த பனீர் மற்றும் அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். கஸூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
ரிப்பன் பூரி ஸ்டஃப்டு மாங்காய்
தேவை: துருவிய மாங்காய் - அரை கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6 (ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்), கோதுமை மாவு - 2 கப், ரவை – ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கோதுமை மாவு, ரவை, உப்பு ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் துருவிய மாங்காயைச் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், மஞ்சள்தூள், முந்திரிப்பருப்பு மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். கலவையை இறக்கியவுடன் மிளகுத்தூள் சேர்த்துக் கிளறிவைக்கவும். பிறகு பிசைந்துவைத்துள்ள மாவை குலோப் ஜாமூனுக்கு உருட்டுவதுபோல சிறிய உருண்டைகளாக உருட்டவும். பிறகு ஒவ்வோர் உருண்டையையும் நீள வடிவத்தில் திரட்டிக் கொள்ளவும். நீள வடிவத்தில் திரட்டிய ஒன்றின்மீது நீள வடிவத்தில் திரட்டப்பட்ட மற்றொன்றைக் குறுக்காக வைத்து கூட்டல் குறி போல வைத்துக் கொள்ளவும். இப்போது இந்தக் கூட்டல் குறியின் நடுவில் தயாரித்து வைத்துள்ள மாங்காய் கலவையை சிறிது வைக்கவும். பின்னர் இந்தக் கூட்டல் குறியின் நான்கு பக்கங்களையும் மடிக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி இதைப் பொரித்தெடுக்கவும். இதேபோல எல்லா உருண்டைகளையும் செய்யவும்.
புரொக்கோலி கிரேவி
தேவை: புரொக்கோலி – ஒன்று (துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்), நறுக்கிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 8 (இரண்டாக நறுக்கியது), கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 5, பாதாம்பருப்பு – 5 (தண்ணீரில் ஊறவைத்தது), பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம் – தலா 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பொட்டுக்கடலை ஆகிய மூன்றுடன் தேவையான தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாயை அதில் வதக்கியெடுத்துக் கொள்ளவும். பின்னர் வதக்கி எடுத்த பச்சை மிளகாயுடன் ஒரு தக்காளி சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்பு புரொக்கோலி துண்டுகளைச் சேர்த்து வதக்கி, அடுத்ததாக தக்காளி - பச்சை மிளகாய் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலவையைக் கிளறவும். பின்பு தேவையான உப்பையும் அரை டம்ளர் தண்ணீரையும் சேர்த்து கலவையை நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் கடைசியாக முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பொட்டுக்கடலை விழுதையும் சேர்த்து கலவை கெட்டியாகும் வரை கிளறவும். கொத்த மல்லி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
ஆலு 65
தேவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தனியாத்தூள் - 3 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், தயிர் – கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பூண்டு - 4 பற்கள், காய்ந்த மிளகாய் - 2, நறுக்கிய வெங்காயம் – ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து எடுக்கவும். பிறகு அத்துடன் மைதா மாவு, கடலை மாவு, சோள மாவு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பின்பு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் இதில் தயிர் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை கொதித்ததும் பொரித்த உருளைக்கிழங்கை இதனுடன் கலந்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
கறிவேப்பிலைக் குழம்பு
தேவை: உருவிய கறிவேப்பிலை - 2 கிண்ணம், புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 4, குழம்பு மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், பூண்டு - 10 பற்கள், சின்ன வெங்காயம் – 6, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.


செய்முறை: உருவிய கறிவேப்பிலை, பூண்டு, புளி, உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் வழுவழுப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்பு கடாயில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்த கலவையை இதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும். இக்கலவையில் உள்ள பச்சை வாசனை நீங்கியதும் குழம்பு மிளகாய்த்தூளைச் சேர்த்துக் கிளறவும். பின்பு இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். (குழம்பு நீர்த்துப்போய்விடாமல், அதேநேரம் மிகவும் கெட்டியாக இல்லாமலும் சாதத்தில் ஊற்றி பிசையும் அளவுக்கு இருப்பதற்குத் தகுந்தாற்போல தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்). கலவை நன்றாகக் கொதித்தபின், இதில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை அணைத்துவிடவும்.
பீட்ரூட் வடை
தேவை: பீட்ரூட் துருவியது - ஒரு கப், ஊறவைத்த துவரம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் – 5, சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், பொடித்த பொட்டுக்கடலை - கால் கப், பூண்டு - 4 பற்கள், நறுக்கிய வெங்காயம் - அரை கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: ஊறவைத்த துவரம்பருப்புடன் காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த இந்த விழுதுடன் பீட்ரூட் துருவல், தேங்காய்த்துருவல், பொடித்த பொட்டுக்கடலை, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேவையான உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு இவற்றை சிறிய உருண்டைகளோடு உருட்டி வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பிரெட் லட்டு
தேவை: பிரெட் - 7 ஸ்லைஸ், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய் – 3 (பொடிக்கவும்), வெள்ளை சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை - 3 டீஸ்பூன், காய்ச்சிய பால் - 3 டீஸ்பூன்.


செய்முறை: மிக்ஸியில் பிரெட்டைத் துண்டுகளாக்கிப் பொடித்துக்கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பொடித்த பிரெட் மற்றும் பொடித்த சர்க்கரையைச் சேர்க்கவும். பின்னர் அதில் பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு பாலை இதில் தெளித்துப் பிசைந்து உருண்டையாகப் பிடித்தால் பிரெட் லட்டு தயார்.
தர்பூசணி பாயசம்
தேவை: தர்பூசணி சாறு - 2 கப், காய்ச்சிய பால் - அரை கப், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 4, டேபிள்ஸ்பூன், பாதாம்பருப்பு - 10, முந்திரிப்பருப்பு - 4, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: முழு பாதாமை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் இதன் தோல் நீக்கி, முந்திரிப்பருப்பு மற்றும் தேங்காய்த்துருவலுடன் சேர்த்து நீர்விட்டு கெட்டியாக மைய அரைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் அரைத்த விழுது, சர்க்கரை, காய்ச்சிய பால் ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு கொதிவிடவும். பின்னர் இதனுடன் தர்பூசணி சாற்றையும் சேர்த்து மேலும் இரண்டு கொதிவிடவும். பிறகு இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: இந்தப் பாயசத்துக்கு சர்க்கரை அதிகம் சேர்க்கத் தேவையில்லை. இந்தப் பாயசத்தில் தர்பூசணியைச் சேர்த்து கொதிக்கவைப்பதால் குளிர்ச்சியை விரும்பாதவர்கள்கூட இந்த பாயசத்தை அருந்தலாம். இதை ஃப்ரிட்ஜில் குளிரவைத்தும் பரிமாறலாம். நெய் சேர்க்கத் தேவையில்லை.
இட்லி மஞ்சூரியன்
தேவை: இட்லி – 4, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு, இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று, சதுர வடிவில் நறுக்கிய குடமிளகாய் – ஒன்று, சில்லி சாஸ் – ஒன்றரை டீஸ்பூன், தக்காளி சாஸ் - 3 டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சோள மாவு – ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கிய குடமிளகாயையும் சேர்த்து வதக்கவும். கலவை நன்கு வதங்கியவுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு சோள மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்க்கவும். கடைசியாக, பொரித்த இட்லியையும் இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மலாய் லட்டு
தேவை: பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – அரை கப் (அல்லது தேவைக்கேற்ப), எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன், குங்குமப்பூ – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.


செய்முறை: இரண்டு அடிகனமான பாத்திரங்களை எடுத்துக் கொள்ளவும். பாலை இரண்டு அரை லிட்டர்களாகப் பிரித்து இரண்டு பாத்திரங்களிலும் நன்றாகக் காய்ச்ச வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் உள்ள அரை லிட்டர் பாலில் எலுமிச்சைச்சாற்றை ஊற்றவும். அடுப்பைக் குறைவான தீயில் வைத்து எலுமிச்சைச்சாறு சேர்க்கப்பட்ட பாலை ஐந்து நிமிடங்கள் ஒரு ஸ்பூனால் நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். பால் நன்றாகத் திரண்டு வரும்போது அடுப்பை அணைத்து விடவும். பின்னர் திரண்டுவந்த பாலை ஒரு வடிகட்டி உதவியுடன் வடிகட்டி அதிலிருக்கும் தண்ணீரை நீக்கிவிட்டு திரட்டுப்பாலை மட்டும் வடிகட்டியில் அப்படியே வைக்கவும். இப்போது வடிகட்டியில் உள்ள திரட்டு பாலை (மலாய்) தண்ணீர் ஊற்றி நான்கு முறை நன்றாகக் கழுவவும். அப்போதுதான் திரட்டுப்பாலில் உள்ள எலுமிச்சை வாசனை நீங்கும்.
பின்பு இன்னொரு பாத்திரத்தில் காய்ச்சி வைத்திருக்கும் அரை லிட்டர் பாலை நன்றாக சுண்டக் காய்ச்சவும். அடுப்பைக் குறைவான தீயில்வைத்து ஒரு ஸ்பூனால் பாலைக் கைவிடாமல் கிளறவும். பால் அடிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். பால் சுண்டி பால்கோவா பதத்துக்கு வரும்போது இதனுடன் குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், எடுத்து வைத்திருக்கும் திரட்டுப்பால் ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து நன்றாக கிளறவும். கலவை உருண்டை பிடிக்கும் பதத்துக்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். கலவை ஆறிய பின்பு உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான மலாய் லட்டு தயார்.
கோதுமை தேங்காய் பிஸ்கட்
தேவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை – அரை கப், வெண்ணெய் – அரை கப், துருவிய தேங்காய் – அரை கப், காய்ச்சிய பால் - சிறிதளவு.


செய்முறை: தேங்காயை வெறும் வாணலியில் வதக்கி அதிலுள்ள நீர்ச்சத்தை நீக்கி உலர் தேங்காய் துருவலாக எடுத்துக்கொள்ளவும். (கடைகளில் கிடைக்கும் உலர் தேங்காயைப் பயன்படுத்தினால் அப்படியே பயன்படுத்தலாம். வதக்கத் தேவையில்லை) ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு இதனுடன் கோதுமை மாவையும் சேர்க்கவும். பின்னர் தேங்காய்த் துருவலையும் இதனுடன் சேர்க்கவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சிறிது பால் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். (மாவுடன் தண்ணீர் சேர்த்துப் பிசையக் கூடாது.) பிறகு பிசைந்த மாவை 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். அப்போதுதான் மாவு இன்னும் கெட்டியாக இருக்கும். பின்னர் மாவை சிறு சிறு உண்டைகளாக்கி அவற்றை உங்களுக்குப் பிடித்தமான பிஸ்கட் வடிவத்துக்குச் செய்து கொள்ளவும். இப்போது இட்லி பாத்திரத்தின் அடியில் உப்பைப் பரப்பவும். பின்னர் அடுப்பைக் குறைவான தீயில் வைத்து இட்லிப் பாத்திரத்தை பிரீஹீட் செய்யவும். பிறகு இட்லித் தட்டுகளில் செய்து வைத்திருக்கும் பிஸ்கட்களைத் தனித்தனியாக அடுக்கி, அதை பிரீஹீட் செய்துவைத்துள்ள இட்லிப் பாத்திரத்தில் வைக்கவும். குறைவான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் பிஸ்கட்களை வேகவிட்டு பின்னர் ஆறவிட்டு எடுக்கவும்.
சிவப்பரிசி கொழுக்கட்டை (இனிப்பு + உப்பு)
தேவை: சிவப்பரிசி - ஓர் ஆழாக்கு, புழுங்கலரிசி (இட்லி அரிசி) - ஓர் ஆழாக்கு, பொடித்த வெல்லம் - அரை ஆழாக்கு, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், தேங்காய் துருவியது - ஒன்றரை மூடி, சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒன்றரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை: சிவப்பரிசியையும் இட்லி அரிசியையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு இதில் பாதியை எடுத்து சிறிது உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். மீதம் உள்ள அரிசிக் கலவையை (இனிப்புக்கு) உப்பு சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். பிறகு வெல்லத்தை நன்றாகப் பொடித்து, உப்பு சேர்க்காத மாவில் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி, வெல்லம் கலந்த மாவை அதில் சேர்த்து, நன்றாகக் கிளறவும். கலவையானது கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். பின்னர் அதில் தேங்காய்த் துருவலில் பாதியைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். பின்பு, இவற்றை இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுத்தால் இனிப்புக் கொழுக்கட்டை தயார்.
கடாயில் ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு தாளிக்கவும். இதில் உப்பு சேர்த்த மாவைப் போட்டு நன்றாகக் கிளறவும். மாவானது கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதனுடன் மீதமிருக்கும் தேங்காய்த்துருவல், சீரகத்தூள் சேர்த்து நன்றாகப் பிசையவும். பின்பு இம்மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்து, எடுத்தால் உப்புக் கொழுக்கட்டை தயார்.
சாலையோர காளான்
தேவை: காளான் - 200 கிராம், முட்டைகோஸ் - 200 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 3, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்துாள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மைதா மாவு - ஒரு கப், சோள மாவு – அரை கப் + ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி – அலங்கரிக்க, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும். காளான் மற்றும் முட்டைகோஸை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கழுவி எடுக்கவும். பிறகு அதில் சிறிது மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்துாள், அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். பிறகு இக்கலவையில் மைதா மாவு, அரை கப் சோள மாவு சேர்க்கவும். தேவைப்பட்டால் இதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து ஈரப்பதம் இருக்கும் அளவுக்கு இக்கலவையைப் பிசைந்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் பொரித் தெடுத்து வைத்துக்கொள்ளவும். மற்றொரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கூடவே தக்காளி விழுதையும் சேர்க்கவும். பின்னர் இதில் சிறிது மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் மீதமிருக்கும் ஒரு டீஸ்பூன் சோள மாவுடன் ஒரு டீஸ்பூன் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அதையும் இக்கலவையுடன் சேர்த்துக் கிளறவும். பிறகு பொரித்துவைத்துள்ள காளான் - முட்டைகோஸ் வடைகளைத் துண்டுகளாக்கி இதனுடன் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.
கமகம கொண்டாட்டம்!
பாட்டுக் கச்சேரி, வீணைக் கச்சேரி, வயலின் கச்சேரி என்று தனித்தனியாக இசையைக் கேட்பது ஒருவித சுகம் என்றால் இந்த இசையின் வகைகள் அனைத்தும் ஒருசேர சங்கமிக்கும் ஜுகல் பந்தியை ரசிப்பது இன்னும் ஆனந்த அனுபவமாக இருக்கும்.
இத்தனை நாளும் நமது அவள் விகடனில் ஒவ்வோர் இதழிலும் ஒவ்வொரு சமையற்கலை நிபுணரின் கைவண்ணத்தில் 30 வகை உணவு வகைகளின் ரெசிப்பிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த இதழ் அப்படியில்லை.

நம் வாசகிகளே உங்களுக்காக 30 வெவ்வேறு வகையான உணவுகளை வழங்கியிருக்கிறார்கள். இவற்றில் பல அந்தந்த ஊர்களின் உணவுக் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருப்பது சிறப்பு.
பிறகென்ன... இந்த அற்புதமான உணவு ஜுகல் பந்தியில் நனையத் தயாராகுங்கள் தோழிகளே!